அன்று திருச்சியில் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு. அடிகளார் அவர்களைத் தரிசிக்கவும், பக்தர் வெள்ளைத்தைக் காணவும், அறிஞர் பெருமக்களின் ஆன்மிகப் பேச்சைக் கேட்கவும் ஆவல் கொண்டு, நானும், என் கணவரும் மறுநாள் காலை நான்கு மணிக்கே தஞ்சையிலிருந்து புறப்பட முடிவு செய்தோம். முதல்நாள் இரவு ஒன்பது மணி அளவில் எங்கள் பூஜை அறையில் உள்ள பீரோவில் மறுநாள் எங்களுக்குத் தேவையான செவ்வாடை முதலியவற்றை எடுத்து அடுக்கு சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 1/2 மணி நேரத்திற்குள் வீட்டிலுள்ள மின்சார பண்புகள் அனைத்தும் மின்சாரக் கோளாறு காரணமாக அணைந்து விட்டன. பூஜை அறையிலிருந்து வெளியில் வர முடியா வண்ணம் இருள் படர்ந்திருந்தது.

எங்கள் பூஜை அறையின் நடுவில் நம் மருவூர் அன்னையின் படத்தின் இரு வரிசைகளிலும் வெவ்வேறு உருவங்களுடன் கூடிய பல்வேறு அம்மன்களின் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. முன் வரிசையில் தாழ்வான ஒரு சிறு மேஜை மீது விபூதி, குங்குமத் தட்டுகள், தீபாலங்கார கரண்டி, ஒலிக்கும் மணி, பித்தளை உருவத்தாலான ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை, லெட்சுமி விளக்குகள் போன்றவைகளுடன், தீப்பெட்டியும் இருந்தது.

வெகு நேரம் வரை வெளிச்சம் வராததால், தீப்பெட்டியை எடுத்து லெட்சுமி விளக்குகளை ஏற்ற நினைத்து, நிதானத்துடன், தாழ்வான மேஜை அருகில் வந்து தீப்பெட்டியை எடுக்க முயற்சி செய்தேன். தீப்பெட்டி இருக்கும் இடம் இருளில் சரியாகத் தெரியாததால் கைவைக்கும் இடத்தில் உள்ள பொருள்கள் சரிய ஆரம்பிக்கும் நேரத்தில், என்ன சோதனையோ என்று அஞ்சி, நான் மிக்க உள்ளத் தூய்மையுடனும், பயபக்தியுடனும் நம் அன்னை மருவூர் அரசியை மனத்தில் நினைத்து இருகூரம் கூப்பி மூலமந்திரத்தை மௌனமாக உச்சரித்தேன். மூலமந்திரத்தின் கடைசி வாக்கியமான “ஓம் பங்காரு காமாட்சியே” என்று கூறி முடித்தேன்.

என்ன ஆச்சரியம்!! நம் அன்னை மருவூர் அரசியின் படத்திலிருந்து ஒரு “ஒளிப் பிழம்பு” கண்ணைப் பறிக்கும் விதத்தில் கீழிலிருந்து மேல் கிளம்பியது. இரண்டு நிமிடம் எனக்கு அன்னை “ஜோதி தரிசனம்” தந்தாள்! அந்த ஒளிப்பிழம்பில் சரித்து போன பொருள்களைச் சரிசெய்து தீப்பெட்டியை எடுத்து விளக்குகளை ஏற்றிவைத்து அன்னையின் காலடியில் விழுந்தேன்.

பிறிதொரு சமயம் அன்னையிடம் அருள்வாக்குக் கேட்கும் போது “மகனே! நீயும், உன் கணவனும் என்னையே நம்பியிருப்பதால், உனக்கு அன்று உன் பூஜை அறையில் நானே ஜோதி தரிசனம் தந்தேன்” என்று கூறியதைக் கேட்டு கண்ணீர் மல்கினேன். அக்காட்சியை இன்று நினைத்தாலும் உள்ளம் பூரிக்கிறது. என்னே நம் அன்னையின் அருட்சிறப்பு!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here