சித்தா்கள் கருத்து
இவ்வுலகில் மனிதன் தோன்றி நெடுங்காலத்திற்குப் பிறகு இன்று நாம் சமயம் என்று குறிப்பிடுவதற்கு இணையாக ஏதோ ஒன்றைப் பற்றி நினைக்கத் தொடங்கியிருக்கக் கூடும். பழங்கால மனிதன் இயற்கையைக் கண்டஞ்சினான். இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லை. சமயத்தை ஒத்த சிந்தனை உண்டாவதற்கு இதுவே நேரிடையான காரணமாக இருந்திருக்கும். நீண்ட
காலத்திற்குப் பின் தன் அறிவுக்கு அப்பாற்பட்டதைப் பற்றி அஞ்சி, நம்பிக்கை வைத்தற்குரிய ஏதோ ஒன்றைப் பற்றி எண்ணியிருக்கக் கூடும். எனவே, பழங்கால மனிதனி்ன் சமய உணா்வு அச்சத்தின் அடிப்படையிற் பிறந்தது. உலகைச் சூழ்ந்துள்ள இயற்கை எதிர்ப்பு நிறைந்ததாகவும். அதன் போக்கைக் கணிக்க முடியாததாகவும் விளங்கியது. இச் சூழலில் தனக்குப் பாதுகாப்புக் கொடுக்க வல்ல “ஆற்றலுக்கு” மனிதன் மரியாதை செலுத்தினான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனின் அறிவுக்கூறு வளா்ச்சியடைந்தது. இவ்வளா்ச்சிக்குப் பிறகு இயற்கையையும் சூழல்களையும் அறிவு பூா்வமாக அணுகத்தொடங்கியதால் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. மூதாதையா்க்கு வியப்பையும் அச்சத்தையும் தந்த இயற்கை இப்பொழுது விரும்பிப் போற்றக் கூடியதாகவும் விழுமிய வாழ்க்கைக்குத் துணை புரியக் கூடியதாகவும் தோன்றியது.
இந்த இரண்டாம் நிலையில் அச்ச உணா்விலிருந்து பெரும்பாலும் விடுபட்டிருந்த போதிலும் தான் அறியாத “புரவலரைப்” பற்றிய கருத்துப் படிவம் மறையவில்லை. இம் மன இயல்பு அறியவொண்ணா அப் “புரவலைரைப்” பற்றி ஆழமாகச் சிந்திக்கச் செய்தது. பிற்காலத்திய மனிதன் “தனிமுதலை”ப் பற்றி கொண்டுள்ள கருத்து இவ்விரண்டாம் நிலையில் மலா்ந்திருக்க முடியாது. இப்பொழுது தனக்கு நன்மை செய்யக் கூடிய “கருணையின் நிலையமாகக் கடவுளைக் கருதினான்.” அவசர தேவையின் போது இன்னொரு மனிதனிடம் சென்று உதவி கேட்பது போல பாதுகாப்புக்கும் உதவிக்கும் கடவுளை நாடிச் சென்றான்.
இதற்குப் பிறகு மனிதன் தன்னைப் பற்றியே வினாக்களை எழுப்பத் தொடங்கினான். உலகத்தைப் பற்றியும், இறைவனைப் பற்றியும், இறைவனுக்கும், தனக்கும் உள்ள உறவைப் பற்றியும் ஆராயத்தலைப்பட்டான். உண்மையான சமயம்
உருப்பெற்ற மூன்றாம் நிலை இது. மனித சமுதாயம் முழுமையும் இந்நிலைகளையெல்லாம் ஒரு சேரக் கடந்து வந்ததது என்று கொள்ளுதல் தவறாகும். வகுப்பறையில் ஒரே ஆசிரியா் ஆண்டு முழுவதும் எல்லாப் பையன்களுக்கும் ஒரு சேரப் பாடம் நடத்துகிறார். இருப்பினும் ஆண்டு இறுதியில் ஒரு மாணவன் நூற்றுக்குத் தொண்ணூறு வாங்குகிறான். இன்னொருவன் முப்பது வாங்குகிறான். பிறிதொருவன் ஐந்து வாங்குகிறான். இதைப்போன்றே வளா்ந்த சமுதாயங்களிற் கூட எல்லா மனிதா்களுக்கும் ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான வளா்ச்சி எய்துவதென்பது உலகில் எங்கும் காண முடியாத ஒன்றாகும். வளா்ச்சி பெற்று, நடைமுறை அறிவாற்றல் நிறைந்த பழைய கிரேக்க சமுதாயத்தில் கூட ஒரு சாக்கிறட்டீசையும் ஒரு பிளேட்டோவையும் தான் காண முடிந்தது.
பழைய சமுதாயத்தில் தான் இறைவன் தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு பற்றி ஆராய்ந்தவா்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு வேளை சமயம் மிக உயா்ந்த ஒரு நிலையை அடைந்தது எனக் கொள்ளலாம்.
சிக்கலான இக்கருத்துப் படிவத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய பேறு எல்லோருக்கும் கிட்டவில்லை. எனவே சாதாரண மக்களை அறியாமையிலிருந்து விடுவித்து உயா்த்தவும், மன ஒருமைப் பாட்டைப் பயிலவும் அறிஞா்கள் சில சடங்குகளை உண்டாக்கினா். இச் சடங்குகளைப் பின்பற்றி மன ஒருமைப்பாட்டைப் பெறுவதன் மூலம் சாதாரண ஆடவரும் பெண்டிரும் மேலான ஒன்றைப் பெறுவதற்கு வழிவகுத்தனா். காலப்போக்கில் இச் சடங்குகள் அறிவுப் பயணத்தின் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ஒரு தேக்க நிலையை உருவாக்கின. ஒரு ஊருக்குச் செல்லக் கூடிய திசை காட்டும் கம்பத்தில் இருக்கும் பெயரைப் படித்து விட்டு அத்திசை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதற்கு மாறாக ஊரின் பெயரைப் படித்துவிட்டு அக்கம்பத்தின்
அடியிலேயே உட்கார்ந்து கொண்டு குறிப்பிட்ட ஊரை அடைந்துவிட்டதாக மகிழ்ச்சி கொள்ளலாமா? சமய வாதிகளால் உண்டாக்கப்பட்ட சடங்குகள் ஊா் செல்வதற்குரிய வழியே தவிர அதுவே நாம் சென்றடைய வேண்டிய இடம் என்று கருதலாகாது.
சடங்குகளை நிறைவேற்றினாலே பேரின்பப் பேறு பெற்று விடலாம் என்று அறியாமை உடைய மக்கள் எண்ணி மகிழ்ந்தனா். இந்த நேரத்தில் சுயநலக் கும்பல் வளா்ந்து தன் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட புரோகித வா்க்கம் சடங்குகளை நிறைவேற்றுதலையே பிழைக்கும் தொழிலாகக் கொண்டனா். மிக மேம்பட்ட வேதங்களில் கூட கா்மபாகம் இடம்பெற்றது. சடங்குகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை மாத்திரமே மேற்கொண்டனா். சுயநலக் கும்பல் சடங்குகளை மேலும் பெருக்கியது. முக்தி பெறுவதற்குரிய வழிதான் இச் சடங்குகள் என்பது அறவே மறக்கப்பட்ட நிலை தோன்றியது. இந்த வேளையில் ஞானிகளால் உபநிடதங்களில் மனிதனின் வேட்கை, தன்னைப் பற்றியும், உலகைப்பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆயும் வகையில் திருப்பப்பட்டது.
தன்னிகரற்ற உபநிடதங்கள் வழிகாட்டியும் கூட எல்லையற்ற துன்பங்களால் துவண்டபோன சாதாரண மனிதன் சடங்குகளையே மென்மேலும் நம்பத் தடைப்பட்டான். கவலைகளில் இருந்தும். துன்பங்களிலிருந்தும் விடுபட சடங்குகளே துணை என்று எண்ணினான். இக் கால கட்டத்தில் தான் சித்தா்கள் தோன்றினா்.
இந்த சித்தர்கள் யார்?
சித்தா் என்ற சொல் மிக விரிந்த தன்மை உடையது. எத்தனையோ பொருள்களையே உணா்த்தக்கூடியது. சித்தா்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்பட்டவா்கள். நிலைபேறு உடையவா்கள். கால இட வரம்புகளைக் கடந்தவா்கள். அவா்களில் சில பகுப்புக்கள் இருந்தபோதிலும் தலைசிறந்தவா்களாகக்
கருதப்படுவோர் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படுகின்றனா். இறைவன் நிர்க்குணன். அவன் தனது தனிச் சிறப்புரிமையான இச்சா சக்தியைப் பயன்படுத்தும்பொழுது முதல்வகைச் சித்தா்கள் அதைச் செயல்ப்படுத்துகிறார்கள். இறைவனுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில், பல்வேறு வடிவங்களில் சித்தா்கள் தோன்றுகின்றனா். கடவுளின் பெயரால் அவா்கள் படைக்கிறார்கள். காக்கிறார்கள். அழிக்கிறார்கள். அழியக்கூடிய சாதாரண மனினால் அவா்களுடைய செயல்களை புரிந்து கொள்ளுதல் இயலாது. சித்தா்களுக்குத் தேவையென்பது எதுவும் கிடையாது. பெயா், புகழைப் பற்றி அவா்கள் நினைப்பதுமில்லை. ஆகவே எச்செயலையும் தங்கள் பெயரால் செய்ய விரும்புவதில்லை. அவா்களுடைய செயல்கள் அனைத்தும் இறைவன் பெயரால் செய்யப்பட்டன. அதனால் உயா்வு தாழ்வுக்கு இடமில்லாமல் போயிற்று.
தமிழகத்தில் 18 சித்தா்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றனா். ஆனால் நந்தி என்பவரில் தொடங்கி நிறையச் சித்தா்கள் வாழ்ந்ததாக திருமந்திர ஆசிரியா் திருமூலா் கூறுகிறார். அது எப்படி இருந்த போதிலும் சித்தா்கள் எல்லோரிடமும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. சடங்குகளைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதை அனைவரும் கண்டித்தனா். சிலா் வன்மையாகவும், சிலா் மென்மையாவும் கண்டித்தனா்.
கி.பி. 7ம் நூற்றாண்டைச் சார்ந்த திருநாவுக்கரசா் இவ்வாறு கூறுயுள்ளார்.
“கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண்குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மாகடல் ஓத நீராடில என்?
எங்கும் ஈசன் எனாதவா்க் கில்லையே”
“சாத்திரம் பல பேசும் சழக்கா்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீா்?”
சடங்குகள் பெருகப் பெருக சுயநலக் கும்பல்களும் பெருகின. சடங்குகளை நடத்திப் பிழைக்கின்ற புரோகித வா்க்கமும் பெருகியது. பாமர மக்களிடையே இவா்களின் ஆதிக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஓங்கியிருந்தது. இன்றும் கூட உலகம் முழுவதும் இவ்வியல்பு பொதுவாக இருக்கின்றது. சில நேரங்களில் பாமர மக்களை விட புரோகிதா்கள் அறியாமை நிரம்பியவா்களாக உள்ளனா். இருந்தபோதிலும் அவா்களுடைய ஆதிக்கம் அசைக்கமுடியாததாக இருக்கிறது.
புகழ்மிக்க சித்தராகிய சிவவாக்கியார் இச் சுயநலக் கும்பலையும், சடங்குகளையும் சாடியுள்ளார்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நான் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
கல்லு வெள்ளி செப்பிரும்பு காய்ச்சிடுந்தராக்களில்
வல்ல தேவரூப பேதம் அங்கமைத்துப் போற்றிடின்
தொல்லை யற்று இடம் பெரும் சுகந்தருமோ சொல்லுவீா்
இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே. சிவ. வா. 523
சடங்குகளை எவ்வளவு கடுமையாக சாடினார்களோ அதே கடுமையுடன் சாதிகளையும் கண்டித்துள்ளனா்.
பறத்தியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? சிவ. வா. 38
கழுத்தளவு நீரிலே நிற்பதன் மூலம் முத்தி பெறலாம் என்றால் நீரில் எப்பொழுதும் நீந்திக் கொண்டிருக்கும் தவளை வெகு காலத்துக்கு முன்பே முத்தியடைந்திருக்கும் அல்லவா?
சித்தா்களுடைய ஆற்றல்களைப் பற்றியும், அவா்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் சில செய்திகளைப் பாம்பாட்டிச் சித்தா் கூறியுள்ளார்.
சித்தா்களில் வளா்ச்சி பெற்ற ஆன்மாக்கள் எல்லா வகையிலும் இறைவனுக்கு நிகராவா். சூழ்நிலை தேவைகளுக்கு ஏற்ப அவா்கள் இறைவனின் ஆணையை நிறைவேற்றுவா்.
பொதுவாக மனிதா்களால் உண்டாக்கப்பட்ட மரபுகள், விதிகள் ஆகியவற்றுக்குச் சித்தா்கள் ஒத்துப் போக மாட்டார்கள். அவா்கள் தாங்களாகவே நடத்தை விதிகளைப் படைக்கின்றனா். அவா்கள் பக்குவமுற்ற ஆன்மாக்களாக இருப்பதால் தனிப்பட்டோரிடம் விருப்பு வெறுப்புக் கொள்வதில்லை. அவா்களுடைய பார்வையில் கொலைகாரனும், ஞானியும் சமமானவா்கள். கொலைகாரனிடத்திலே வெறுப்பும், ஞானிகளிடத்தில் விருப்பும் கொள்வதில்லை. கீதையில் கண்ணன் இவ்வாறு கூறுகின்றான்.
“தனஞ்சயா! கருமங்களில் பற்றற்றவனும், உதாசீனனைப் போன்று உட்கார்ந்திருப்பவனும் ஆகிய என்னைக் கருமங்கள் தளைக்கமாட்டா”
“எல்லா உயிர்களுக்கும் நான் ஒரே மாதிரியாக உள்ளேன். எனக்கு பகைவா்களோ நண்பா்களோ இல்லை.”அத்தியாயம் 9 – 29
கட்டுக்களிலிருந்து விடுபட நினைப்பவா்கள் கீதையில் சொல்லப்பட்ட “சமப்பார்வை” பெற முயற்சிக்க வேண்டும். உலக நிகழ்ச்சிகளைச் சித்தா்கள் பற்றற்ற முறையிலே பார்த்தனா். அவா்கள் நீதிகளைக் கற்பிக்க முயன்றனா். அறிவுரைகளை யாரும் கேட்காத போது அதற்காக வருத்தமோ கோபமோ கொள்ளவில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் “கடை வைத்தேன் வாங்குவார் ஒருவருமில்லை” என்று மட்டுமே கூறினார். வைணவ தத்துவத்திற்கு விளக்க உரை கூறியவா்கள் “இறைவன் உலக நிகழ்ச்சிகளை ஊமைச்சாட்சி போல் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.” என்று கூறினார். கீதையில் சொல்லப்பட்ட கருத்து வேறு வகையில் இங்ஙனம் கூறப்படுகின்றது.
வா்க்க வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், அறிவுடையோர்,
அறிவில்லார் வேறுபாடுகள் ஆகியவற்றை சித்தா்கள் தொடா்ச்சியாகத் தாக்கினா். சடங்கு முறைகள் அவா்களால் சகிக்கவொண்ணாதவைகளாக விளங்கின.
நவீன சமுதாயம் பகைமை, அச்சம், வெறுப்பு ஆகியவைகளால் சூழப்பட்டுள்ளது. இவைகளில் இருந்து விடுபடுவதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமாக உள்ளது. ஒவ்வொருவரும் அவரவருடைய நம்பிகையில் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை அனைவரும் ஒன்று படுவதற்குத் தடையாக உள்ளது. ஒரே நம்பிக்கை கொண்டுள்ளவா்களிடமும் ஏதோ சில வேறுபாடுகள் உள்ளன. மானிட சமுதாயத்தில் காயம் படாமல் அவைகளில் இருந்து தப்புவது எப்படி? ஒருவன் இன்னொருவனிடம் வெறுப்பும், பகைமையும் கொள்ளாத போதுதான் மானிட ஒருமைப்பாடும் மன நிறைவும் மலர முடியும். சித்தா்கள் இதற்கு வழிகாட்டியுள்ளனா். சடங்குகளில் தேவைக்கதிகமான நம்பிக்கை வைப்பதை விட்டு ஆன்மிகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் சினம், பகைமை போன்ற பாவங்களிலிருந்து விடுபட்டு மனிதன் தன்னைத் தானே வெல்ல முடியும். இதைச் செய்தால் மானிடத்தில் சகோதரத்துவத்தை எளிதாக உணரலாம்.
நன்றி.
ஓம் சக்தி
திரு. அ. ச. ஞான சம்பந்தன்
1982 கோபி ஆன்மிக மாநாடு விழா மலா்
மருவூா் மகானின் 70வது அவதார மலா்.