ஓம் சக்கி! பராசக்தி!
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பொங்கல் என்பது விழா மட்டுமல்ல அது ஒரு வழிபாடு. இயற்கை வழிபாடு. மனித நேயத்தைக் கொண்டாடும் ஒரு சமூக விழா. பொங்கலோ பொங்கல் என்று சொல்லும் போது ஆன்மா திருப்தியாகும். அமுது திருப்தியாகும்.
தெய்வத் தத்துவமும் தாயின் பாசத் தத்துவமும் கலந்ததுதான் பொங்கலோ பொங்கல் என்பது. பொங்கல் பானையில் சிறிதளவு பாலையே ஊற்றுவோம். அது எப்படிப் பெரியதாகப் பொங்கி வருகிறதோ அதுபோல நீங்கள் செய்யும் தா்மம் சிறியதாக இருந்தாலும் அன்பாகவும் பாசமாகவும் அது பொங்கி வரவேண்டும். பாசத்தோடு தா்மம் செயல்படும் போதுதான் பொங்கல் எனும் விழாவிற்குப் பெருமை சேரும்.
மின்சாரங்களும் இயந்திரங்களும் இந்தக்காலத்தில் வந்துவிட்டன. ஆனால் ஆதிகாலத்திலிருந்து நம்மோடு இணையாகவும் பாசமாகவும் நமக்கு உதவியாக இருந்து எருதுகள் ஏரோட்டவும் பசுக்கள் பால் கொடுக்கவும் பயன்பட்டு வருகின்றன. அந்தப் பசுவின் குணம் போன்று தாயின் குணம் போன்று பாசத்தோடு இருக்க வேண்டும். மனிதனுக்கு அழகு கொடுப்பது தோல். அந்தத் தோலைச் செம்மையாகவும் அழுக்குப்படாமலும் பண்பு கெடாமலும் பாதுகாக்க வேண்டும். தேவையான பொருட்களை விட்டு விட்டு நாகரிகம் என்ற பெயரில் தேவையற்ற பொருட்களை அணியும் போது நோய்கள் பலவிதமாகவும் உண்டாவது உண்டு.
மின்சாரம் கொண்டு விளக்கு எரிந்தாலும் அவைகளை இணைக்கும் கம்பிகளை நோ்த்தியுடன் பாதுகாப்பாக அமைத்து வைக்கின்றோம். அதுபோல் உடலுக்குள் இயங்கும் அவயங்களின் இயக்கமும் தோல் கொண்டு மூடி அழகுபடுத்தப்பட்டுள்ளது. அந்ததோலுக்கு எந்தவித தீங்கு இல்லாமலும் எந்தவித அசுத்தம் இல்லாமலும் தோலைப் பாதுகாத்துப் பக்குவப்படுத்த வேண்டும். அதுபோல உள்ளத்தையும் பக்குவப்படுத்த வேண்டும். உள்ளம் பக்குவப்படும்போது தோலும் பக்குவப்படுவது உண்டு. படிப்பு தேவைதான். தனக்கு என்ன அறிவு தான் செல்லும் திசை என்ன என்று புரிந்துகொள்ள படிப்பு மிகவும் உதவும்.
கடலில் செல்லும் கப்பலுக்கு ஒரு திசைமானி உண்டு. இது வடக்கு இது கிழக்கு இது தெற்கு இது மேற்கு என்று எப்போதும் காட்டிக்கொண்டிருக்கும். அதுபோல வாழ்க்கையிலும் நம் வாழ்வுப் பாதை எந்தத் திசையில் செல்கிறது என்று திசை பார்த்துச் செல்ல வேண்டும். குழந்தைக்கு என்ன தீங்கு வருகிறது? ஏன் அழுகிறது? என்ன காரணம்? பசியா? அல்லது வயிற்றுப் போக்கா? வயிற்று வலியா? அல்லது வேறு ஏதுமா? என்று தாய் தெரிந்து சரி செய்வது உண்டு.அதைப் போலவே எதிர்வரும் காலத்தைத் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்டால் அதைத் தெய்வம் பார்த்துக்கொள்ளும்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல நமக்குக் கிடைக்கும் நல்லது சிறியதாக இருந்தாலும் அதைப் பெரியதாகப் பார்க்க வேண்டும். பொங்கலோ பொங்கல் என்று கூறுவது மட்டும் போதாது. நம்மிடம் எந்த அளவிற்குப் பொருள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் தர்மத்தைச் செயல்படுத்தினால் போதும். அதைச் செயல்படுத்தும்போது அன்பாகப் பேச வேண்டும். அழகாகப் பேச வேண்டும். பிறருக்கு வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும்.
வருடந்தோறும் பொங்கலும் தீபாவளிப் பண்டிகைகளும் வருடப்பிறப்புகளும் வருவது உண்டு. திருமணம் என்று வரும்போது வீட்டைச் சுத்தப்படுத்துவது அழகுபடுத்துவது விரிவுபடுத்துவது போன்று பொங்கல் என்று வரும்போது நமது வீட்டைச் சுத்தப்படுத்தி நமக்கு உதவியாக இருப்பவைகளையும் சுத்தப்படுத்தி வழிபாடு செய்து அழகுபடுத்துவது மனித நேயத்திற்கும் மனிதப் பண்பாட்டிற்கும் முக்கியமானது.
நாம் செய்கிற தா்மம் நாம் காட்டும் அன்பு நம்முடைய உள்ளம் இதையெல்லாம் நம் கூடவே உள்ள நிழல் பார்த்துக்கொண்டே இருக்கிறது. நம் கூடவே அது வந்துகொண்டிருக்கிறது. அதே போல இயற்கை அன்னை நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. புரிந்து கொண்டிருக்கிறது. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. படித்தவா்களும் சரி படிக்காதவா்களும் சரி இரண்டு பேருமே ஒரே நிலையில் இருக்கிறார்கள். பணம் என்று வரும் போது ஒரே மாதிரி ஆகிவிடுகிறார்கள். அந்தப் பணம் தா்மமாக மாறிவிட்டால் அந்த அன்புக்கு எல்லையே கிடையாது. உலகமே வாழ்ந்துவிடும்.
தீயசக்திகளையும் அவற்றால் வரும் தீவினைகளையும் ஒற்றுமையால்தான் அடக்க முடியும். ஒடுக்க முடியும். ஒற்றுமையை வளா்க்கவும் அதை உறுதிப்படுத்தவும் உண்மையான உழைப்புத் தேவை. உண்மையான மன உழைப்புத் தேவை. உண்மையான மன உழைப்பு இல்லாவிட்டால் மன உளைசச்சல்தான் மிஞ்சும். வேற்றுமையில் ஒற்றுமை தேடும் போது அதற்கான உண்மையான உழைப்பே ஒற்றுமையைத் தரும். அது போல உண்மையான உடல் உழைப்பே உயா்வைத் தரும்.
ஒவ்வொருவருக்கும் மனசாட்சிதான் குரு. உயிர்தான் மனிதனுக்கு இயங்குகிற சக்தி. உயிர்தான் கட்டளை இடுகிறது.
மனசாட்சி….அது குருவாக மாறுகிறது. இதைச் செய் அதைச் செய் என்று கட்டளையிடுகிறது. உயிரையும் காப்பாற்ற வேண்டும். மனதையும் பக்குவப்படுத்த வேண்டும்.
புளிப்பு என்ற சுவைக்காகப் புளியை நன்றாகக் கரைத்து எடுக்கிறார்கள்.அதைக் கொஞ்சம் எடுத்து புளிப்பு உள்ளதா என்று வாயில் ஊற்றிப் பார்க்கிறார்கள். புளி என்று தெரிகிறது. அதைக் கரைத்து நேராகக் குழம்பு வைக்க வேண்டியதுதானே!அது புளிக்குதா இல்லையா என்று ஏன் வாயில் ஊற்றிப் பார்க்க வேண்டும்?
அதுபோல் தர்மம் செய்யும் போதும் பலன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதில்லை. செய்யும் தர்மம் செலுத்துகின்ற அன்பிற்கும் சொல்லுகின்ற பேச்சிற்கும் ஏற்ற நிலையில் அமையும்.இல்லாதவர்க்கு இருக்கப்பட்டவன் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் போது அன்பாகப் பேச வேண்டும்.
சென்ற ஆண்டு போதும் போதும் என்று கூறுமளவு மழை உண்டு. வெள்ளம் உண்டு என்று சொன்னோம். அதன்படியே நடந்தது. இதை உணர்ந்து செயல்படுவது வருங்காலத்திற்கும் நல்லது. வருகிற எதிர்காலம் மோசமான காலம். தொழில் துறையிலும் எல்லாத் துறையிலுமே அன்பாகப் பேசி நடத்த வேண்டும். எந்தத் துறையிலும் அமைதி இருக்காது. நிம்மதி இருக்காது.
ஆனால் மழை உண்டு. செழுமை உண்டு. ஆற்றுப் போக்கு உண்டு. ஒரு பக்கம் சுனாமி என்ற அலையும் உண்டு. காற்று என்ற அலையும் உண்டு. ஒரு பக்கம் புகம்பம் என்ற நிலமை உண்டு. அழிவும் உண்டு.அதைக் கட்டுப்படுத்துவதற்குத் தர்மமும் தெய்வ பக்தியும் மனித நேயமும் விட்டுக் கொடுக்கின்ற தன்மையும் இருந்து அமைய வேண்டும்.
பொருள் இருந்துவிட்டால் மட்டும் போதாது. அந்தப் பொருளைக் கொண்டு உணவை ஆக்கவும் சக்தி தேவை. உணவு இருந்துவிட்டால் மட்டும் போதாது. அதை உண்ணவும் சக்தி தேவை. அந்த சக்தியை மனிதனுக்குத் தருவது இயற்கைதான். உங்கள் தாய் தந்தையர்க்குச் சக்தியைத் தந்ததும் இயற்கைதான். அந்த இயற்கையை வணங்கும் விழா பொங்கல் விழா.
பொருளாதாரம் பற்றியும் தீவிரவாதம் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அதற்கு அடித்தளம் என்ன என்று பார்க்க வேண்டும். மனித நேயமும் பாசமும் வற்றியதால் வந்த வினைதான் இது. குடும்பத்திலேயே ஒன்றி இருந்து செயல்படும் போது பாசம் குறையாமல் இருக்கும்.
பாராட்டுக்களும் தத்துவங்களும் பேச்சளவிலும் மேடை அளவிலும் ஏட்டளவிலும் தொலைக்காட்சி அளவிலும் மட்டும் இருந்தால் போதாது. ஊருக்கு உபதேசம் எனும் சொல் முறை இருந்தால் போதாது. அதே பாதையில் பயணம் செய்யும் செயல் முறையும் வேண்டும். தன் மீதும் தாயின் மீதும் தன் இனத்தின் மீதும் இயற்கையாகவே ஒரு அன்பு சுரப்பது போல அனைத்து மனித இனத்தின் மீதும் அன்பு சுரக்க வேண்டும்.
இயற்கை தரும் சக்தியை மனசாட்சி எனும் குருவின் துணையைக் கொண்டு அன்பை வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் அன்பு நிலைக்கும். பண்பு நிலைக்கும். பாசம் நிலைக்கும். நாடு செழிக்கும். பொற்காலம் நிலைக்கும். பரம்பரை செழிக்கும்.
அத்தகைய பொற்காலம் நிலை பெற மனம் பொங்கட்டும்! அன்பு பொங்கட்டும்! அறிவு பொங்கட்டும்! ஆற்றல் பொங்கட்டும்! என்று இந்தப் nபொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகின்றோம்.
செவ்வாடைத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அம்மாவின் ஆசி!
ஓம் சக்தி! ஆதிபராசக்தி!
நன்றி சக்தி ஒளி பிப்ரவரி 2009 பக்கம் 5 -10
]]>