அன்னையின் அருள் இருந்தால் என்ன பயன் என்று அபிராமி அந்தாதி பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“தனந்தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவந்
தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே!”
அன்னையின் கடைக்கண் பார்வை பட்டால் அதாவது அன்னையின் அருள் சிறிதளவு கிடைத்தால் அது செல்வத்தைக் கொடுக்கும்; கல்வியைக் கொடுக்கும்; ஒரு போதும் தளராத மனத்தைக் கொடுக்கும்; நெஞ்சில் வஞ்சகமில்லாத உறவினர்களைத் தரும்.
இன்னும் இந்த அருளைப் பற்றி உங்களுக்குப் புரியவில்லை என்றால் அடிகளார் தோத்திரத்தின் கீழ்க்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள் புரியும்.
“கருத்தரிக்கும் முன்பிருந்தே
“கன்னியவள்” அருளைப் பெற்றாய்!
உருத்தரிக்கும் முன்பிருந்தே
“உத்தமியாள்” உறவைப் பெற்றாய்!
அருள்தரிக்கும் முன்பிருந்தே
“அவள் ” பாம்பாய் ஊரப் பெற்றாய்!
அன்னையின் அருள் பணமுள்ளவர்களுக்குத் தான் கிடைக்கிறது. ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் நான் இத்தனை வருடமாக ஆலயத்திற்கு வருகிறேன்; எனக்கு அம்மா என்ன செய்துவிட்டது ? என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் பதவிகளில் இருப்பவர்களுக்கே அன்னையின் அருள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.
அன்னை ஆதிபராசக்தியையும் அவளது அவதாரமான அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களையும் தரிசித்து அருள் பெற காசு வேண்டியதில்லை; பணம் வேண்டியதில்லை.
“கருவினில் உருகின்ற காட்சியைப்
போலவே
கருத்திலே அமர்ந்த உன்னைக்
காசென்றும் பணமென்றும் வீசென்றும்
ஏதொன்றும்
காட்டாமல் கண்டுகொண்டேன்”
அன்னை ஒரு சிலருக்கு மட்டும் அருள் புரிகிறாள் என்ற ஜயம் சிலருக்கு எழுகிறது. பாகுபாடு இல்லாவிட்டால் அன்னை ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அருள் புரிய வேண்டும்? அன்னையிடம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. அன்னையின் அருள், புண்ணியவான்கள், பாபிகள், ஏழைகள், பணக்காரர்கள் ஆகிய அனைவருக்கும் சமமாக வந்து கொண்டிருக்கிறது. அன்னையின் அருள் ஓயாது அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அன்னை தன் அருளைத் தேவையானபோதெல்லாம் எல்லோருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை தேவையான பொழுதெல்லாம் மழை பெய்ய வைக்கிறது. அதுபோல அன்னையின் அருள்மழை எல்லோருக்கும் பொதுவாக சமமாக எப்போழுதும் பொழிந்து கொண்டே இருக்கிறது.
அன்னையின் அருளை வானத்திலிருந்து பொழியும் மழைக்கு ஒப்பிடலாம். எவ்வளவு பலமாக மழை பெய்தாலும் மழைநீர் மேட்டுப் பகுதியில் தங்காமல் பள்ளமான இடத்திற்குப் போய்விடுகிறது. மேட்டுநிலம் காய்ந்துவிடுகிறது. பள்ளமான இடத்தில் மழைநீர் ஏற்படுத்திய ஈரம் எப்பொழுதும் இருக்கிறது. எனவே பள்ளமான இடத்திலுள்ள மரம் செடி கொடிகள் நன்கு வளர்ந்து விருத்தியடைகின்றன.
அதே போல் அன்னை ஆதிபராசக்தி அவதார புருஷர் அருள் திரு பங்காரு அடிகளார் மூலமாகத் தன் அருள் மழையை யாண்டும் பொழிந்து கொண்டே இருக்கிறாள்.
“கார்மேனிப் பங்காருச் சீர்மைந்தன்
தனையாள
மருவூரில் முளைத்த தேவி”
வீட்டுலகம் எமைச்சேர்க்க மருவூரில்
குடிகொண்ட
வேல்விழிகள் மலர்ந்த குளுவாய்”
தன்னருளைக் காட்டமேல் மருவூரில்
குடிகொண்ட
தாயுன்றன் விழிம லருவாய்”
அருள் மழையாகப் பொழிந்து நம்மைக் கலியுகக் கேடுகளிலிருந்து காக்கவே அன்ன ஆதிபராசக்தியின் அவதாரமாக ஸ்தூல வடிவில் மேல்மருவத்தூரில் அவதரித்துள்ளாள். நம்மில் பலர் காசு வேண்டும் பணம் வேண்டும் என்று கேட்கும் நிலையைத் தாண்டி அருள்டிரு பங்காரு அடிகளார் வடிவிலிருக்கும் அன்னை ஆதிபராசக்தியிடம் அருள் வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலைக்கு முன்னேறியுள்ளோம்.
அன்னை ஆதிபராசக்தி இடைவிடாது அருள்மழையைப் பொழிந்து கொண்டே இருக்கிறாள். அது நம் அனைவருக்கும் கிட்டுவதில்லை. இதற்கு என்ன காரணம்? மழை நீர் மேட்டு நிலத்திற்குப் பயன்படாமல் பள்ளத்திற்குச் சென்று விடுவதைப் போல் அருள்மழை ஆணவ அகங்காரம் பிடித்தவர்களிடத்துப் பயன்படுவதில்லை. ஆணவமும் அகங்காரமும் நிறைந்தவர்களுக்குக் கிடைக்கும் அருள் மேட்டு நிலத்தில் பொழிந்த மழைக்குச் சமம்.
பணிவும் தூய்மையும் வாய்க்கப் பெற்றவர்களுக்கு அன்னையின் அருள் நன்கு பயன்படுகிறது. பணிவின் மூலம் அருளை அடையப் பெறுகிறவர்களிடத்து பக்தியும் ஞானமும் விசுவாசமும் ஆத்ம சாதனமும் நன்கு விருத்தியடைகிறது.
அடுத்த படியாக அகங்காரம் என்றால் என்ன? அகங்காரம் அல்லது ஆணவம் ஒழிய வழி என்ன என்றும் பார்ப்போம்.
ஆணவம் என்ற மலம். (மலம் என்றால் அழுக்கு என்று பொருள்) ஆன்மாவோடு கலந்திருக்கும் பொழுது உடலின் ஆற்றல் ஒடுங்கிவிடுகிறது. ஆணவத்தினால் அறிவு மங்கிவிடுகிறது. மெய்ஞானமும் மறைந்து விடுகிறது. ஆதி பராசக்தியும் மறைந்து விடுகிறாள். அகங்காரம் என்ற மலம் ஒழியும் பொழுது ஆதிபராசக்தியின் அருள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது.
அகங்காரம்
ஸ்தூலமாகத் தென்படுவது இந்த உடல். ஸ்தூலமாக என்றால் கண்ணுக்குத் தெரியும்படியானது என்று பொருள். இந்த ஸ்தூல உடலுக்குள்ளே சூட்சும வஸ்துவாக இருப்பது உள்ளம். சூட்சுமம் என்றால் நுட்பமானது அல்லது கண்ணுக்குத் தெரியாதது என்று பொருள்.
உள்ளத்தை அந்தக்கரணம் என்று பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. அதாவது ஸ்தூல உடலை இயக்குவதற்கு அதனுள் அந்தக்கரணம் என்கிற சூட்சும உடல் ஒன்று இருக்கிறது.
சித்தம் (நினைவு ), மனம், புத்தி (அறிவு), தான் என்ற அகங்காரம் ஆகிய கரணங்களைத் தான் அந்தக் கரணம் என்கிறோம். அந்தக்கரணம் என்றால் உட்கருவிகள் அல்லது அகக்கருவிகள் ஆகும். ஏனென்றால் உடலுக்கு உள்ளே இருப்பது உள்ளம். உள்ளம் என்று சொல்லும் பொழுது அந்தக்கரணம் முழுவதையும் குறிக்கிறது. “அந்த ” என்றால் உள்ளே என்று பொருள். “கரணம்” என்றால் கருவி என்று பொருள். அந்தகரணம் என்றால் உள் உறுப்பு என்று பொருள்.
மனம், புத்தி, அகங்காரம், சித்தம் முதலிய நான்கில் எதையாவது ஒன்றைப் பற்றிச் சொல்லும் பொழுது அந்தக்கரணம் முழுவதைப் பற்றியும் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்தக்கரணம் ஒன்று; செயலுக்கேற்ப அதற்கு நான்கு பெயர்கள் வாய்த்துள்ளன.
1. நினைப்புக்கும் உணர்ச்சிகள் அனைத்துக்கும் அது உறைவிடமாக இருக்கும் போது அதற்குச் சித்தம் என்று பெயர்.
2. சங்கல்ப விகல்பமாயிருக்கும் போது அதற்கு மனம் என்று பெயர். எண்ணமும், ஜயமும் இதைச் சேர்ந்தவைகள், மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது.
3. நல்லது, கெட்டது என்று பாகுபடுத்தும் போது அதற்குப் புத்தி என்று பெயர். அதாவது செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டும் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது. செய்ய வேண்டிய காரியத்தைத் தளர்வுறாது திட்பத்துடன் செய்வது உறுதி என்று பெயர் பெறுகிறது. புத்தி தீர்மானம் செய்யும் தன்மையை உடையது.மஹத் என்ற பெயர் இதற்கு வழங்கப்படுகின்றது. இது அகங்காரத்துக்கு காரணமாயுள்ளது.
4. செயலுக்குத் தன்மை கர்த்தாகவாக உணரும் போது அதற்கு அகங்காரம் என்று பெயர். அகங்காரம் மகாபூதங்களுக்குக் காரணமாகிறது. ஆகாயம், வாயு, அக்கினி, அப்பு, பிருத்துவி ஆகிய ஜந்து பூதங்களும் சூட்சுமமாக எங்கும் நிறைந்துள்ள படியால் அவைகள் மகாபூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. பூதங்கள் காரணமாக ஏற்படுகின்ற இருக்கிறேன் என்ற உணர்ச்சி அகங்காரம் என்று பெயர் பெறுகின்றது. இந்த உடலைத் தான் என்று அபிமானிப்பது அகங்காரம். அப்படி அபிமானம் கொள்ளா திருப்பது அகங்காரமின்மையாகும். ஜம்பூதங்களை வழிபடும் பொழுது அகங்காரம் குறைவதற்கு வழி ஏற்படுகிறது. அன்னை நம்மை எல்லாம் ஜம்பூத வழிபாடு செய்யச் சொல்வதின் நோக்கம் அகங்காரத்தை ஒழிப்பதற்காகத் தான்.
மனம் சங்கல்ப விகல்ப மயனாது என்று மனதுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. சங்கல்பம், விகல்பம் என்பதற்கு இச்சை, சந்தேகம் என்று பொருள். ஆசையோடு கூடிய தீர்மானம் சங்கல்பம் என்பது மனதில் வரும் எண்ணம்.
ஆசையானது மனதுக்கு வேகம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.ஆசை இருக்கும் வரையில் மனதை அடக்க முடியாது. ஆசையை ஆராய்ந்து பார்த்தால் அதற்குப் பிறப்பிடம் அஞ்ஞானம் என்பது வெளியாகும்.
ஞானத்தைக் (நல்லறிவு) கொண்டு ஆசையை அறவே அகற்ற வேண்டும். ஆசை அறுபடுமிடத்து சங்கல்பம் ஒழிகிறது.
முன்பு எத்தனையோ ஜென்மங்களில் செய்த சங்கல்பங்கள் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன.ஆசையின் வேகமில்லாத பொழுதும் அவைகள் தாமாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு விகல்பம் என்று பெயர். விகல்பம் ஓயுமிடத்து அது நிர்விகல்பமாகிறது.
அகங்காரம் ஒழிய வழி
உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையிலிருந்தாலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள். எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்துங்கள். இரவும் பகலும் எல்லா உயிர்களிடத்தும் கருணையான நினைவுடன் இருந்தால் ஆணவமும் அகங்காரமும் விலகி ஆதிபராசக்தியின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.
“என்னுடையது” என்ற எண்ணம் ஏற்படுவதை “மமதை” என்கிறோம். என்னுடைய சைக்கிள், என்னுடைய கார், என்னுடைய வீடு, என்னுடைய தோட்டம் என்ற எண்ணம் ஏற்படும் பொழுது மமதை மேலோங்குகிறது. மமதையினால் பாரபட்சமான முடிவுகளை நம் மனது எடுக்கிறது. அதனால் துன்பங்கள் ஏற்படுகின்றன. மனித வர்க்கத்தின் துன்பங்களுக்கு மூலகாரணமாயிருப்பது மமதை.
“இது அன்னையிட்ட பிச்சை; அன்னை ஆட்டுவிக்கிறாள்; நான் ஆடுகிறேன்; அவள் கர்த்தா; நான் கருவி என்ற எண்ணம் ஏற்பட்டால் மமதை மெதுவாக ஒடுங்க ஆரம்பிக்கும். இந்த மமதையை ஒழித்து அன்னையின் அருளைப் பெற்று ஆன்மிகப் பேரானந்தத்தில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
நாம் நம் உடலைப் பற்றியும் அதனுடைய அகந்தைகளைப் பற்றியும் எவ்வளவு தூரம் ஓயாது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு டாக்டர்; நான் ஒரு எஞ்சினியர்; நான் ஒரு வக்கீல்; நான் ஒரு அதிகாரி.; நான் படித்தவன்; நான் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவன்; நான் புத்திசாலி; நான் தலைவன்; நான் தலைவி; நான் மன்றத் தலைவன்; நான் பிரச்சாரக் குழு தலைவன்;நான் மாவட்டத் தலைவன்; நான் வேள்விக் குழு தலைவன்; நான் எல்லாவற்றையும் அறிவேன்; நான் பலசாலி; நான் கர்த்தா; நான் தான் செய்பவன்; நான் நிறைய தர்மங்கள் செய்திருக்கிறேன்; நான் நிறைய வசூலித்திருக்றேன்; நான் இந்த விழாவை நடத்தினேன்; நான் இந்த மன்றத்தை நடத்துகின்றேன்; நான் தான் தவறாமல் மன்றத்தில் பூஜை செய்திருக்கிறேன்; நான், நான், நான், நான், இந்த “நானு” க்கு ஒரு முடிவே இல்லை. இந்த அளவுக்கு மீறிய கர்வம் அளவுக்கு மீறீத் தன்னைப் பற்றிச் சிந்திப்பது அகந்தை எனப்படும்.
நம்மில் பலரைத் தலைவனாகவும் தலைவியாகவும் பொறுப்புகளில் அன்னை நியமித்துள்ளது நம்முடைய அகங்காரத்தைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாகும். அன்னை கொடுத்துள்ள அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாரவழிபாட்டு மன்றங்களில் நான் தான் செய்வேன் என்று எல்லாவற்றையும் செய்யாதீர்கள். குங்கும அர்ச்சனை செய்வது, திருஷ்டி சுற்றுவது போன்றவற்றிற்கு எல்லோருக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள். மன்றப் பொறுப்பாளர்களிடமுள்ள “நான்” என்பது அழிந்தால் வார வழிபாட்டு மன்றங்களுக்கு கூட்டம் தானாக வரும். அதைவிட்டு விட்டு அன்னையிடம் “தாயே! கூட்டம் வருவதில்லை” என்று முறையிட்டு என்ன பயன்!
வழிபாட்டுக்கு வரும் அனைவருக்கும் அவரவர் கோரிக்கைகளுக்காகச் சங்கல்பம் அர்ச்சனையும் செய்து கொடுக்க வேண்டும். ஒன்றே கால் ரூபாயை வைத்தால் தான் அர்ச்சனை என்ற நிலையை மாற்றுங்கள். முடியாத நிலையில் கஷ்டம் வரும்பொழுது ஒருவன் கடைசி அடைக்கலமாக அன்னையை நோக்கி ஓடிவந்து சரணாகதியடைகிறான். அப்பொழுது அவனிடம் காசில்லை என்ற நிலையைக் காரணம் காட்டி அவனைத் துரத்தியடிக்காதீர்கள். அன்னையை நோக்கி வர வழி விடுங்கள். அதைத் தடுத்த பாவத்திற்கு ஆளாகாதீர்கள். இப்படி நீங்கள் செய்து பாருங்கள். நீங்கள் ஆச்சரியப்படுமளவிக்கு அவன் அன்னையின் பணியில் ஈடுபடுவான்.
“நான்” இத்தனை பாதபூஜைக்கு ஏற்பாடு செய்தேன். நான் இதைச் செய்தேன். நான் அதைச் செய்தேன் என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள். இதைப் போல பலமடங்கு செய்தாலும் நம் பூர்வ வினையைத் தீர்க்க முடியுமா என்ற பாவ புண்ணியக் கணக்கு அன்னைக்குத் தான் தெரியும். உங்களுடைய பூர்வ வினையைக் குறைக்க அன்னை கொடுக்கும் சந்தர்ப்பம் தான் இவைகளெல்லாம் என்பதை நினைவு கூறுங்கள். எல்லாம் அன்னையின் செயல் என்ற எண்ணத்துடன் அனைவரும் பேதமின்றிக் கூட்டாக அன்னையின் பணியில் ஈடுபடுங்கள்.
அகங்காரம் ஒழியும் பொழுது நான் பெரியவன்; நீ பெரியவன்; நான் வேள்விக்குழுத் தலைவன் ; நான் ஏழை; நான் பணக்காரன்; நான் மன்றத்தை நிர்வகிக்கிறேன்; நான் மன்றத்தலைவி என்ற பேதங்கள் ஒழிந்து போகின்றன.
அன்னை ஆதிபராசக்தியைச் சரணடைந்து இந்த “நான்” என்ற அகந்தையை அழித்தீர்களேயானால் துன்பம் உங்களை நெருங்கப் பயப்படும்.
அகங்காரத்தின் வழிகளையும், பழக்கங்களையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த அகந்தை தன்னுடைய முன்னேற்றத்திற்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பதற்காகவும், போகப் பொருட்களை வைத்திருப்பதற்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அகங்காரத்தையும் சுயநலத்தையும் ஒழித்துவிட முயற்சி செய்யுங்கள். உங்களுடைய நம்பிக்கையைத் தியாக உணர்ச்சியிலும், தன்னலமற்ற சேவையிலும் இணைத்து வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். அன்னை கூறிய வழியில் தியாகத்தையும், சேவையையும் வாழ்க்கையின் வழி காட்டும் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள். அன்னை கூறிய வழியில் தொண்டாற்றுங்கள்.உடனே உங்களுக்கு ஒரு வளமான ஆன்மிக வாழ்வு கிடைக்கும்.
கூட்டு வழிபாடு, தியானம், இலவச மருத்துவமனை, தொண்டு செய்தல், சமுதாயப் பணி செய்தல், அன்னதானம் செய்தல், இருமுடி சுமந்து சக்தி மாலை அணிந்து வருதல், அங்கப்பிரதட்சணம் வருதல், பாத பூஜை, செய்தல் இவையெல்லாம் அகங்காரத்தைச் சிறிது சிறிதாக ஒழிக்க நமக்கு நம் ஆன்மிக குரு அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வழிகள். அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது நமது கடமை.
முன்போல் நிறையப் பேர் கூடி கூட்டு வழிபாடு செய்வதில்லை. எனவே இயற்கையின் சீற்றங்களிலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடிவதில்லை. ஏதோ பேருக்கு வார வழிபாடு செய்வதற்குப் பதிலாக அதிக அளவில் நிறையப்பேர் கூடி மன ஒருமைப்பாட்டுடன் கருத்து வேறுபாடின்றி கூட்டு வழிபாடு செய்தோமேயானால் முன்போல் அபரிமிதமான பலன்களை வாழ்க்கையில் நாம் பெறமுடியும்.
அன்னை நம்முடைய அகங்காரத்தைத் தான் காணிக்கையாகக் கேட்கிறாள்.அவள் தன்னுடைய தொண்டர்களின் அகங்காரத்தை ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
“ஆணவம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ” என்று ஞானப்பிழம்பாகிய அந்த ஆதிபராசக்தியைச் சரணடையுங்கள்.
பஞ்சபூதங்களில் மறைந்துள்ள சில அரிய சக்திகள் சிறு தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. அவைகளை வசப்படுத்தி வேலை வாங்குவதற்கான பூஜை விதிகள் அதர்வண வேதத்திலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்விதிகளைச் சரியாகப் பின்பற்றிப் பூஜைகள் போட்டால் அந்தத் தேவதைகள் வசப்பட்டே ஆக வேண்டும். அந்த விதிக்கு விலக்கு கிடையாது. ஆனால் அந்த முறைகளைப் பின்பற்றி அன்னை அதிபராசக்தியை வசப்படுத்த முடியாது. அன்னை ஆதிபராசக்தி தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் எனப்படும் பிரம்மமாகும். குழந்தை தன் தாயைச் சார்ந்திருப்பது போன்று நாம் அன்னை ஆதிபராசக்தியையே சார்ந்திருந்து அவளுடைய அவளுக்குப் பாத்திரமாக வேண்டும்.
“பெருங்கடலாம் பிறவியினில்
பித்தேறி மூழ்கிவிட்ட
மடமாந்தர் எங்களையும் கரைசேர்க்க
வந்தவளே!
படங்கொண்ட பாம்பணிந்து பராசக்தி
ஆனவளே!
மூவர்க்கும் தேவர்க்கும் எட்டா
மறைப்பொருளே!
யாவர்க்கும் அன்புவலைக் கெட்டும்
விழுப்பொருளே!
என்று அன்பு வலையை வீசி அகங்காரத்தையும் ஆணவத்தையும் விட்டொழித்து அன்னை ஆதிபராசக்தியின் கருணையைப் பெற்று “அல்லல் பிறவிதனை” எப்பொழுது அறுத்தெறியப் போகிறோமோ என்பது அந்த ஆதிபராசக்தியின் அவதாரமான அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கே வெளிச்சம். ஜீவாத்மனுக்கு கர்மத்தில் பற்றிருக்கும் வரையில் அவனுக்குத் துன்பம் உண்டு. பரம்பொருள் பற்று ஒன்றே அன்னையின் கருணையைப் பெறுவதற்கும் பிறகு அவனிடத்து வயமாவதற்கும் உற்ற உபாயமாகும்.
“பொய்யான இவ்வாழ்வுப் புன்மை
தவிர்த்திடுவாய்!
மெய்யான நல்வீடு பேற்றை
எமக்களிப்பாய்”
என்றே பணிந்து வந்திருக்கிறோம்; அன்னையே எங்களையெல்லாம் மேலாம் கதிக்கு அழைத்துச் சென்று இப்பிறவிப் பிணியை போக்க வேண்டி, நம் ஆன்மிக குரு அவதார புருஷர் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்கள் காட்டிய வழியில் அன்னையின் பாதங்களில் சரணடைந்து உந்தன் கருணையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம்.
அன்னையே! ஆதிபராசக்தியே! உன்னை நாங்கள் அடைவது எக்காலம்! கர்மத்தில் உழலும் நாங்கள் ஈடேறுவதற்கு உன்னைச் சார்தல் அன்றி வேறு சன்மார்க்கமில்லை. ஆதலால் துன்பம் துய்க்கும் எங்களைக் காப்பாற்றக் கருணை பூணுவாயாக அன்னையே உன்னோடு ஒன்றுபடுவதைத் தவிர வேறு உபாயம் வினைக் கேடர்களாகிய எங்களுக்கு இல்லை.
“எண்ணங்கள் கோடி எழுந்தாடி உனை
நாடி
என்னைக் கடத்து என்றே
இங்காடி நான் வந்தேன்”
“கன்னியுன் வன்னியில் காலோடி
மேல்வீட்டில்
காலத்தை வெல்ல வேண்டும்”
“கலையூறிக் களையாறிக் கன்னியுன்
சொல்லாலே
காலத்தை வெல்ல வேண்டும்”
“மண்ணுக்குள் வாழ்ந்திடும் மற்றை
மனிதர்போல்
மரிக்க நான் எண்ணவில்லை”
“புதுவாழ்வு தனில்வாழ மருவத்தூர்
தனில்மேவும்
பூந்தேவி அருள்செய்குவாய்”
அன்னையே ஆதிபராசக்தியே எங்களுக்கு அருள்புரிவாயாக!
ஓம் சக்தி
நன்றி
சக்தி ஒளி 1996 அக்டோபர்
பக்கம் 54-62.
]]>