“மின்னும் புவிக்கெலாம் தண்ணென் துறைக்கெலாம்

மிக நாடு கல்விக்கெலாம்

மேல்வீடு தானாகிக் கால்நாடி நிற்பதும்

மேவிடும் உன்தனருளே!”

அம்மா உன் அருள் இருந்தால் போதும் என்று கேட்குமளவுக்கு சக்திகளாகிய நம்மில் பலர் ஆன்மிகத்தில் முன்னேறியுள்ளோம். அன்னை அருளுக்குப் பாத்திரமாவது எப்படி? அன்னையின் அருளினால் என்ன பயன்? அருள் என்றால் என்ன?

நாம் இன்னும் ஆன்மிக முன்னேற்றமடையவில்லை என்று அன்னை குறிப்பிடுகிறாள். ஆன்மிக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அகங்காரம் குறையவில்லை என்று பொருள். அகங்காரம் என்றால் என்ன? அகங்காரத்தைக் குறைப்பது எப்படி?

அன்னையின் அருள் என்றால் அன்னையின் கருணை, அன்னையின் தயை, அன்னையின் இரக்கம் என்று பொருள் படும்.

சில பூஜா காரியங்களைச் செய்வதாலும், ஆலயத்திற்குச் செல்வதாலும், கழுத்தில் டாலர் அணிந்து கொள்ளுதல், செவ்வாடை கட்டிக் கொள்ளுதல், சமயச் சின்னங்களை அணிந்து கொள்ளுதல் போன்றவற்றைக் கடைப்பிடிப்பதாலும், சாஸ்திர ஆராய்ச்சி பண்ணுவதாலும், சத் சங்கத்திலும் இருப்பதாலும், நமக்குப் பக்தி வந்துவிட்டதாக கூறமுடியாது. சத் சங்கம் என்றால் சான்றோர்கள், முனிவர்கள், யோகிகள், சந்நியாசிகள், மகாத்மாக்கள், சித்தர்கள், அவதார புருஷர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருத்தல் என்று பொருள். பக்தி என்பது முயற்சியின் மூலமாகவோ அல்லது செய்கையின் மூலமாகவோ பெறப்படுவதல்ல. அன்னை ஆதிபராசக்தியினுடைய கருணை அல்லது அருளினால் மட்டுமே பெறப்படுவதாகும்.

ஒரு மனிதப்பிறவி, மீண்டும் ஒரு பிறப்பு வேண்டாம் என்ற ஒரு விடுதலை வேட்கை, ஒரு சத்குருவின் பாதுகாப்பு ஆகிய இந்த மூன்று பொருட்களும் கிடைத்தற்கரியவை. “சத் ” என்ற சொல் உண்மை என்ற கருத்திலும் நன்மை என்ற கருத்திலும் வழங்கப்படுகிறது. முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத, பிரம்மமே “சத்”  என்று சொல்லப்படுகிறது. வேள்வியிலும், தவத்திலும் தாளத்திலும் நிலைத்திருப்பது “சத்”  என்று சொல்லப்படுகின்றது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டுச் செய்யப்படும் கர்மமும் சத் என்றே சொல்லப்படுகிறது. எனவே சத்குரு என்றால் உண்மையான குரு என்று பொருள்படும்.

பிரம்மமாகிய ஆதிபராசக்தி ஸ்தூல ரூபத்தில் அவதாரமாக அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் வடிவில் சத்குருவாக வந்து நமக்குப் பாதுகாப்பாக அமைந்துள்ளது நமது பாக்கியமே. நமக்குக் கிடைத்துள்ள இந்த மனிதப் பிறவியும் நாம் பெற்றுள்ள பாக்கியம் தான். மேல்மருவத்தூரிலே மலர்ந்துள்ள இந்த ஆதிபராசக்தி இயக்கம் அவதார புருஷராகிய அருள் திரு பங்காரு அடிகளார் மூலம், மீண்டும் ஒரு பிறப்பு வேண்டாம் என்ற விடுதலை வேட்கையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தூற்றுவோர் தூற்றட்டும்; போற்றுவோர் போற்றட்டும். ஆனால் இந்த ஓம் சக்தி இயக்கம் பல்லாயிரக்கணக்கான சக்திகளாகிய நமது மனத்தில் இந்த விடுதலை வேட்கையை வித்திட்டு விட்டது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இது இந்த ஓம் சக்தி இயக்கத்தின் முதல் ஆன்மிக வெற்றி. ஆன்மிக முன்னேற்றப் பாதையில் இது ஒரு மாபெரும் வெற்றி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த வெற்றி எங்கிருந்து வந்தது அன்னையின் தூல வடிவிலிருக்கும் அவதார புருஷர் அருள் திரு அடிகளார் ஏற்படுத்திக் கொடுத்துள்ள மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் அன்னையின் கருணையும் இந்த ஆன்மிக முன்னேற்றத்தை நமக்குக்கொடுத்துள்ளன.இப்பொழுது நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னை நமக்கு என்ன செய்திருக்கிறாள் என்று புரியும்.

மனிதப்பிறவி, விடுதலை வேட்கை, சத்குருவின் பாதுகாப்பு இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே நாம் இந்தப் பிறவிப் பெருங்கடல் எனப்படுகின்ற சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெற்று அன்னை ஆதிபராசக்தியுடன் ஜக்கியமாக முடியும். இவைகள் அனைத்தும் அன்னையின் கருணையினால் மட்டுமே கிடைக்கக் கூடியனவாகும்.

“பெருங்கடலாம் பிறவியினில்

பித்தேறி மூழ்கிவிட்ட

மடமாந்தர் எங்களையும் கரைசேர்க்க

வந்தவளே”

ஒருவன் கோடிக்கணக்கான கல்பங்கள் முயற்சி செய்தாலும் கூட அன்னையின் தரிசனம் கிட்டாது. ( ஒரு கல்பம் என்பது 432 கோடி மனித ஆண்டுகளுக்குச் சமம்.)  ஆனால் அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெற்றுவிட்டால் அன்னை ஆதிபராசக்தியின் தரிசனம் இமைப்பொழுதில் கிட்டும். ஆகவே நம்முடைய விருப்பத்தை அன்னையின் பாத கமலங்களில் சரணடையச் செய்து விட்டு அன்னையே எனக்கு அருள்புரிவாயாக என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு அன்னையின் பாதங்களிலே பூரண சரணாகதி அடைய வேண்டும்.

“அன்புருகி நெஞ்சுருகி அமுதே

பணிவார்க்குக்

கல்மனமும் கரைந்துருகக் காட்சி தரும்

காரிகையே”

“மண்ணிலே விண்ணிலே என்னிலே

உன்னிலை

மறித்து நான் அறிய வேண்டும்

குருவாக நீ வந்து வரமாகத் தான் தந்து

கோதை நீ ஆள வேண்டும்”

கஷ்ட தசை, மரணம் போன்ற விபத்துகள் சாதாரண மக்களை மிகவும் துன்புறுத்துகின்றன. ஆனால் அன்னை ஆதிபராசக்தியினுடைய அருளுக்குப் பாத்திரமானவர்கள் உலக விபத்து எதை முன்னிட்டும் தளர்வுறுவதில்லை. ஆதிபராசக்தியிடம் சரணடைந்தவர்களுக்கு வறுமை நோய் கொடியதாகத் தோன்றுவதில்லை. அன்னையின் சாந்நித்தியம் என்ற குறையாத செல்வம் அவர்களுக்கு உண்டு.

அன்னையின் அருளானது எல்லாவிதமான பயத்திற்கும் மருந்தாகும். எவனிடம் அன்னையின் அருள் இருக்கின்றதோ அவனால் இப்பிறவிப் பெருங்கடலைக் கடந்து விட முடியும். எல்லையற்ற பேரானந்த சாம்ராஜ்யத்தினுள் நுழைவதற்கு அன்னையின் அருள் ஒரு அனுமதிச் சீட்டாகும். ஆத்மசரணாதி, தூய அன்பு, வழிபாடு , தூய மனம் ஆகியவற்றின் மூலமாக அன்னையின் அருளைப்பெறுங்கள்.

அம்மா உன் கடைக்கண் பார்வை என் மீது விழாதா என்று ஏங்குகிறோம். அன்னையின் கடைக்கண் பார்வையில் அப்படி என்ன இருக்கிறது? “விழிக்கே அருளுண்டு ” என்று திருக்கடவூர் பட்டர் பாடியுள்ளதிலிருந்து அன்னையின் விழிக்கே அருள் உண்டு என்பது தெளிவாகிறது. நம் மீது அன்னையின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் நமக்கு அன்னையின் அருள் கிடைக்கும்.

அன்னையின் அருள் கிடைக்க உங்களைத் தீ நடுவிலோ, நீரிலோ, ஒற்றைக் காலிலோ நின்று கொண்டு தவம் செய்து காத்திருக்கச் சொல்லவில்லை.

“முன்னூழிக் காலத்தே முனிவோரும்

துறந்தோறும்

தவமாற்றக் காடு சென்றே

அந்நாளில் அன்னையுன்

அருள்வேண்டித் தீ நடுவில்

புனல்மூழ்கித் தவமிருந்தார்

இந்நாளில் கலியூழிக் கேடுகளைப்

போக்கவென்

எளியளென வந்து நின்றாய்”

இக்கலியுகத்தின் கேடுகளைக் களைந்தெறிய அன்னை ஆதிபராசக்தி மிக எளிய வடிவில் அனைவரும் அணுகக்கூடிய வகையில் அருள்திரு பங்காரு அடிகள்அவர்கள் வடிவில் மேல்மருவத்தூர் என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியுள்ளாள்.

“தன்னருளைக் காட்ட மேல் மருவூரில்

குடிகொண்ட

தாயுன்றன் விழிம லருவாய்”

தொடரும்…

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 1996 செப்டேம்பர்

பக்கம் 51-54.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here