மெரீனா கடற்கரையில் இயற்கை சீற்றம் தணிய வழிபாடு: லட்சுமி பங்காரு அடிகளார் பங்கேற்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைபூச திருவிழாவை முன்னிட்டு இருமுடி சக்தி மாலை அணிந்து செவ்வாடை பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்த்ர்கள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி ஆதிபராசக்தி சித்தபீடத்தில் உள்ள சுயம்புவிற்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாடை பக்தர்களுக்கு லட்சுமி பங்காரு அடிகளார் சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி வழிபாட்டு மன்றங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் நேற்று மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கு கட்டிடத்தின் பின் புறம் ஒன்று கூடி இயற்கை சீற்றங்கள் தணிய கூட்டு வழிபாடு நடத்தினர்
இதையொட்டி கடற்கரையில் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி அன்னை மற்றும் பங்காரு அடிகளார் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னர் கூட்டு வழிபாடு துவங்கியது. மூல மந்திரத்தைத் தொடர்ந்து நாட்டில் இயற்கை வளம், கனிம வளம் பெருகவும், இயற்கை சீற்றங் கள் தணியவும் சங்கல்பம் கூறப்பட்டது.
தொடர்ந்து 108 குரு மந்திரங்களும், 108 சக்தி மந்திரங்களும் அங்கிருந்த பக்தர்களால் தமிழில் கூறி கூட்டு வழிபாடு நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த புனித கலச நீருக்கு பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டு திருஷ்டிகள் எடுக்கப்பட்டன. வழிபாட்டைத் தொடர்ந்து அங்கு அர்ச்சனை செய்யப்பட்ட கலசம் கடலுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டு, அதிலிருந்த புனிதநீர் கடலில் ஊற்றி தீபாராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.
வழிபாட்டின் நிறைவாக லட்சுமி பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு சக்திமாலை அணிவித்தார். முன்னதாக காலை 11 மணிக்கு மாநகராட்சி சார்பில் மெரீனா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை செவ்வாடை பக்தர்கள் மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சென்னை மாநகர், மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
]]>