சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவர்; 15 ஆண்டுகளாகத் தவறாமல் சபரிமலை சென்று இருமுடி செலுத்திவிட்டு வரும் வழக்கமுடையவர். அவ்வாறு செல்கிறபோதெல்லாம் நண்பர்கட்கும் உறவினர்கட்கும் அறுசுவை விருந்து அளித்துவிட்டு அதன் பிறகே மலைக்குப் புறப்படுவார். நாமும் அன்னதானம் செய்துவிட்டுத் தான் மலைக்குப் புறப்படுகிறோம் என்பது அவர் எண்ணம்.
அவர் ஒருநாள் அன்னையிடம் அருள்வாக்கு கேட்டபோது அன்னை கூறினாள்.”மகனே! ஆண்டு தோறும் சபரிமலைக்குச் செல்லும் முன்பாக அன்னதானம் செய்வதாகக் கருதிக்கொண்டு புளியேப்பக்காரனுக்கு விருந்து படைக்கிறாய்! இங்கே வந்து பசியேப்பக்காரனுக்கு அன்னதானம் செய்! வரும்போதெல்லாம் இங்கே தியானம் செய்! இங்கே கிடைக்கிற தியான அனுபவங்களை வைத்து என்னைப் புரிந்து கொள்!” என்றாள். அவ்வாறு செய்யத் தொடங்கிய பிறகு அவருக்குத் தியானத்தில் பல அனுபவங்களைக் கொடுத்து வருகிறாள் அன்னை.
]]>