மனம் என்பது மக்களுக்கே உரித்தான தனிப்பெரும் உடைமை. தனது மனத்தால் மனிதன் உலகப் படைப்பிலுள்ள மற்ற எல்லா உயிர்களிலிருந்தும் விலகித் தனித்து விளங்குகிறான். மனந்தான் மாக்களிலிருந்து மக்களை உயர்த்திக் காட்டுவது. மனம் என்றால் என்ன?
“கடிகாரத்தை நடத்துவதற்கு அதற்குள் இருக்கும் பல்வேறு சக்கரங்கள் போலவே, நமது உடலுக்குள்ளும் மூலாதாரம் முதற்கொண்ட ஆறு இயந்திரங்கள் இருந்தது. பிராண அபான வாயுக்களைச் செலுத்துகின்றன. கடிகாரத்தின் முள் காலங்காட்டிச் செல்வதற்கு அதற்குள் ஒரு சுருள்விசை (ஸ்பிரிங்) இருப்பது போல் நமது உடலுக்குள்ளும் ஒரு இயந்திரம் உள்ளது. அதற்குப் பெயர் மனம்” என்றருளினார்கள் தபோவனம் தெய்வத்திரு ஞனாந்தகிரி சுவாமிகள்.
மனமே நம்மை நடத்திச் செல்லும் ஓட்டுநர். சதா முன்னேறும் உணர்வுடன் இயங்கும் நம் வாழ்வை நடத்திச் செல்லும் மனமெனும் ஓட்டுநர் நல்லவிதமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்ச்சியுற்று, பண்பட்டு இருத்தல் வேண்டும். அதற்கு நல்ல கட்டுப்பாடு தேவை. இல்லையெனில் பெரும் விபத்தை விளைவிக்கும்; ஆபத்தில் நாம் சிக்கிக் கொள்வோம். அமெரிக்கா அரசியல் அமைப்பை நிறுவிய ஜெப்பர்சன். “மனத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவேன். ஆண்டவன் சன்னிதானத்தில் இதைப் பறைசாற்றுகிறேன்” என்று பிரகடனம் செய்தார். ஆம், மனமே நம்மை ஆட்டிப் படைக்கும் சூத்திரதாரி, “மனம்போல் வாழ்வு” என்னும் முதுமொழியை அனைவரும் அறிவோம்.
“மனம் ஒரு குரங்கு. குரங்கிலும் குறும்புமிகு குட்டிக்குரங்கு. யாருக்கும் அடங்காது. ஆத்தாளை மதிக்காது. அப்பனை மதிக்காது. பயம் அறியாது. அதை அடக்கி, அதன் போக்கை ஒரு நிலைப்படுத்த வேண்டும்” என்றருளினார்கள் கருவைப் பேரொளி தெய்வத்திரு பொதிச்சுவாமிகள், உண்மை! கிளைவிட்டுக் கிளைதாவும் குரங்கைப் போல் நம் மனம் சதா அலைந்து கொண்டே இருக்கிறது. அதை ஒரு நிலை நிறுத்தக் கூடுவதில்லை. இன்று நாவற்பழத்தை நாடும் நம் மனம் நாளை நாரத்தம் பழத்தை நாடுகின்றது. நாடியது கிடைத்த பின்னாவது நிம்மடதி உண்டா? அதுதானில்லை. கைக்குக்கிடைத்த பலாப்பழம் கசக்கின்றது. கைக்குக் கிடைக்காத சுளாக்காய் இனிக்கின்றது. இவ்விதம் சதா அலையும் மனத்தின் தன்மையினை நன்கறிந்தே பொpயவர் ஒருவர் , “ஏ! மனமெனும் மூடக்குரங்குப் பயலே” எனக் கடிகின்றார். மற்றொருவர், “யார் அலைந்தாலும் அகப்பேய் நீ அலையாதே”, என்று எச்சரிக்கின்றார்.
ஒரு குரங்கு பனைமரம் ஒன்றில் ஏறி, அங்குள்ள பானையிலிருந்த கள்ளை உண்டதாம். போதை ஏறி, ஆட்டம் போட்டதாம். அதனால் வெருண்ட அங்கிருந்த தேன் அந்தக் குரங்கைக் கொட்டியதாம். கள்ளுண்ட போதையும், தென் கொட்டிய வாதையும் வாட்ட, அக்குரங்கு துள்ளிக் குதித்துக் கதறி அலறியதாம். அது கண்டு அப்பனையில் குடிகொண்டிருந்த பேய் ஆத்திரமடைந்து அக்குரங்கைப் பற்றிப் பிடித்துக் கொண்டதாய். பின்னர் கேட்பானேன் அக்குரங்கின் குறும்புச் சேட்டைக்கும், பேய் ஆட்டத்திற்கும்? அதேபோல், நம் மனக்குரங்கையும் கள் போன்ற மோகமும், தேள்கடி போன்ற சோகமும், தேள்கடி போன்ற சோகமும், பேய் போன்ற பீதியும், ஆட்கொள்ள நாம் விடக்கூடாது. அத்தகைய பாதிப்பு எதுவும் நம் மனத்தைப் பற்றிவிடக் கூடாது. நமக்கு நம் மனமே சுவர்க்கம்; நம் மனமே நரகம்; நம் மனமே நண்பன்; நம் மனமே பகைவன். ஆகவே, மனத்தைச் சரிவர அடக்கிச் சவாரி செய்து பயன் பெறுதல் வேண்டும் கட்டுமீறி அலைகின்ற மனத்தை அடக்கி ஒடுக்கி அமைதிப் படுத்த வேண்டும்.
“அலையும் புலனைப் பின்றொடர்ந்தே அலையுமனதோ நம்மறிவைக் கலக்கி இழுக்கின்றது நீர் மேல் காற்று கலத்தை இழுப்பது போல்”
என்கிறது கீதை. கடல் நீர் மேல் கப்பலைப் புயல்காற்று ஆட்டிப் படைத்து அங்கும் இங்கும் இழுப்பது போல் நிலையற்ற ஐம்புலன்கள் வழியே திரியும் மனதும், நம் அறிவைக் கலக்கிச் சீரழித்து, நிலையின்றி இழுத்தடிக்கின்றது. ஆகவே, அலையும் மனத்தை அடக்குதல் வெகுகடினந்தான்.
இவ்வரிய உண்மையை விளக்க எனது தந்தையார் தெய்வத்திரு பொன்னையா சுவாமிகள் பின்வரும் கதையைக் கூறுவார்கள்.
ஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் ஒரு அன்னசத்திரம் கட்டி, சமயத்தொண்டு புரிவோர்க்கு அன்னதானமிட்டு வந்தார். ஒருநாள் அத்தனவந்தரின் கணக்கர், சத்திரத்திற்கு வந்து வரவு செலவுக் கணக்கைப் புரட்டிப் பார்த்தார்.
ஏட்டில் அன்றாடம் “சும்மா இருக்கிற சாமியாருக்குச் சோற்றுக்கட்டி ஒன்று”, என்று குறிப்பிட்டு இருந்தது.
“அதென்ன சும்மா இருத்தல்? ஏன் அந்தச் சாமியாருக்கு வீண் சோறு போடுகிறீhகள்?” எனச் சத்திர நிர்வாகியிடம் கேட்டார்.
“அதோ மூலையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் சாமியார். அவரையே கூப்பிட்டுக் கேளுங்கள்,” என்றார் சத்திர நிர்வாகி.
உடனே எழுப்பிசாமியார் வரப்பெற்றார். “ஏன் சாமி ஏதாவது சமயத் தொண்டு புரியாது இவ்விதம் சோம்பலாய்ச் சும்மா இருக்கிறீர்? அப்படி இருந்தால், இனி இங்கு உனக்கு அன்னம் கிடைக்காது”, என்றார் கணக்கர் கண்டிப்புடன்.
அச்சாமியார் புன்னகை பூத்து, “அப்பனே! சும்மா இருப்பதென்ன அத்தனை சுலபமா?” என வினவினார்.
“அதென்ன பிரமாதம்? இதோ நான் சும்மா இருந்து காட்டுகிறேன். எவ்வளவு நேரம் சும்மா இருத்தல் வேண்டும்?” எனக் கேட்டார் கணக்கர்.
அதிகம் வேண்டாம், அப்பனே! ஐந்து நிமிடங்கள் ஐம்புலன்களையும் அடக்கிச் சும்மா இருந்தால் போதும் என்றார் சாமியார்.
அதன்படி கணக்கரும் கண்மூடி மௌனமாய் அசைவற்று அமர்ந்திருந்தார். அருகிலிருந்த அனைவரும் அமைதியாய் நடப்பதை ஆர்வத்துடன் கவனித்து நின்றனர்.
“அதுதானே கூடாது, அப்பனே! தீதற்போது உன் கள்ளக்காதலியைப் பற்றி நினைப்பது ஆகாது”, என எச்சரித்தார் சாமியார்.அதைக் கேட்டு அச்சமுற்ற கணக்கர், “இல்லை, இல்லை! இனி நான் எவ்விதச் சிந்தனையுமின்றி சும்மா இருக்கிறேன்”, எனக்கூறி வாளா இருந்தார்.
“அப்பனே! நேற்று நீ தோப்புக் குத்தகைப் பணத்தில் கையாடியதை உன் முதலாளி தெரிந்து கொள்வாரோவென இப்போ ஐயுற வேண்டாம்”, என்றார் கண்டிப்புடன், அதைக் கேட்டதும் கணக்கர் திடுக்கட்டுக் கண்விழித்து, “ஏது நம் திருட்டுத்தனத்தை எல்லாம் சாமியார் அம்பலமாக்கி விடுவாரோ?” என அஞ்சி, சாமிகளே! போதும், போதும், இந்தச் சோதனை! ஐம்புலன்களையும் அடக்கிச் சும்மா இருப்பதென்பது வெகுகடினம். நீங்கள் ஒரு பழுத்த திரிகால ஞானி. என்பிழை பொறுத்து மன்னியுங்கள். நீங்கள் இனி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இச்சத்திரத்தில் தங்கலாம்”, என அனுமதி வழங்கினார்.
பின் சத்திர நிர்வாகியிடம், “சாமிகளுக்கு இனி அன்றாடம் ஒரு சோற்றுக் கட்டிக்குப் பதில், இரண்டு கட்டிகள் கொடுங்கள்”, என ஆணையிட்டார். “வேண்டாம் அப்பனே! நீ உண்மையை உணர்ந்ததே அடியேனுக்குப் பரம திருப்தி! மனம், வாக்கு, காயம் மூன்றையும் அடக்கி, சுனை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் உணர்ச்சிகளை ஒடுக்கிச் சும்மா இருந்த சுகம் பெறுவதென்பது மிக அரிது ஆனால், விடாது முயன்று பாடுபட்டால் பலனுண்டு, ஐம்புலன்கள் எவராலே அடக்கப்படுமோ அவர் மனம் அலையாது, என்றும் நிலைத்திடும். ஆகவே, மனத்தை நிலைநிறுத்தலே மாதவம்,” என அறிவுரை அருளினார் அச்சாமியார். அக்கணக்கருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.
“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?” என வினவுகிறார் பத்திரகிரியார்.
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 12 (1982) பக்கம்: 33-35
]]>