பவானி சாகரில் பாம்பாகக் காட்சி தந்த அன்னை

0
2142

பவானி சாகரில் அருள்மிகு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவர் திரு.நஞ்சய்ய செட்டியார் அவர்கள் இல்லத்தில் 17.9.82 புரட்டாசி முதல்நாள் (அமாவாசை நாள்) அருள்மிகு அன்னை பாம்பு உருவத்தில் வந்து காட்சி கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது.

அன்று காலை நான்கு மணி அளவில் செட்டியார் அவர்களின் மனைவியார் வழக்கம்போல் எழுந்து பூஜையறைக்குச் சென்று அன்னையை தொழுவதற்கு நுழைந்தார்கள். அந்த பூஜையறையில் சுமார் 30 பல்வேறு தெய்வப் படங்கள் உண்டு. அன்று கலைந்து காணப்பட்டன! இதென்ன! வரிசையாகவும் ஒழுங்காகவும் இல்லாமல் இப்படிக் கலைந்து கிடக்கின்றனவே என்று அந்த அம்மையார் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தரையில் “புஸ்” என்ற சத்தம் வந்தது. கீழே உற்றுப் பார்த்தபோது அன்னை பாம்பு உருவத்தில் இருக்கக் கண்டார்கள். உடனே வெளியில் வந்து, படுத்துக் கொண்டிருந்த தம் கணவரை எழுப்பி அந்தக் காட்சியை காண்பித்தார்கள். உடனே, செட்டியார் நீராடிவிட்டுச் செவ்வாடை உடுத்துக் கொண்டு விளக்கேற்றித் தீபாராதனை காட்டிக் குடும்பத்துடன் சேர்ந்து வழிபாட்டுப் பாடல்களையெல்லாம் பாடத் துவங்கினார். வழிபாடு துவங்கும் பொழுது பாம்பு உருவத்திலிருந்த அன்னை, அன்னை ஆதிபராசக்தியின் படத்தின் மீது படம் எடுத்த காட்சியோடு படுத்து கொண்டு இருந்தாள். மூலமந்திரம், வேண்டுதற்கூறு, 1008 போற்றித் திருவுரு, 108 மந்திரம் முடித்துச் சக்தி கவசம் பாடும் பொழுது அன்னை தன் முழு உடலைப் படத்தின் மேலே கிடத்தி, சுவரில் மாட்டியிருந்த சடாட்சர முருகன் படத்தில் இருந்த சக்கரத்தில் தலையைத் திருப்பிக் காட்சி தந்தாள்.

இவ்வாறு சுமார் ஒருமணி நேரம் காட்சி தந்தாள். இச்செய்தி மன்ற உறுப்பினர்கட்கும், ஊர் மக்கட்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மன்றச் செயலாளரும் மற்றவர்களும் பூசையறையுள் நுழைந்தனர். அப்போது அன்னையின் படம் படுக்க வைத்த நிலையில் காணப்பட்டது. அப்படத்தை நிமிர்த்தி வைத்து, விளக்குகள் ஏற்றி, கற்பூர ஆராதனை காட்டப்பட்டபோது அங்கிருந்த பீரோவிற்கு அடியில் இருந்து அன்னை வெளிப்பட்டுக் காட்சி தந்தாள். இக்காட்சியை அக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கண்டு களித்தனர். சுமார் மூன்றுமணி நேரம் வரை அன்னையின் காட்சி பொதுமக்கட்குக் கிட்டியது.

“எங்கெல்லாம் மனங்கலந்த பக்தி விளங்குகின்றதோ அங்கெல்லாம் அன்னையின் தரிசனம் கிடைக்கும்” என்பது இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத்தெரிகின்றது.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 11 (1982)
பக்கம்: 17

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here