உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசத்தி. ஆதிபராசத்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே ஆதிபராசத்தி! “சங்கரன் பங்கு உற்ற தையலும் இவள் கூறில் சாற்ற ஓர் ஆயிரமாம்” என்பர் அறிஞர், “சிவனே உன் காலடியில் செத்துக் கிடப்பேன் எனத் திருமறைகள் சாற்றுதம்மா!” என்றார் ஒரு கவிஞர்.
இத்துணை அரிய தெய்வமே இன்று மேல்மருவத்தூரில் – இக்கலியுகக் கேட்டைத் துடைக்க எளிவந்த கோலத்தில் “பேசும் தெய்வ” மாகவும், “நடமாடும் தெய்வ” மாகவும் அருள்பாலித்து வருகிறது. இந்த அன்னை உலக மக்களுக்காக அன்றாடம் ஆற்றி வரும் அற்புதங்கள் ஏராளம்! ஏராளம்! அவற்றில் சிலவற்றைப் பற்றி அன்பர்களின் அனுபவங்களிலிருந்து அறிவோமாக.
எலுமிச்சம்பழம்:
செங்கற்பட்டு – ஆற்றூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர், அன்னையால் “சத்தி அடிமை” எனப்பெயர் சூட்டப்பட்டவர்! இரண்டு ஆண்டுகட்கு முன் அந்த அன்பர் கருவறைத் தொண்டு செய்துகொண்டு இருந்தார். அன்னையிடம் மிகுந்த ஈடுபாடுள்ள சென்னையைச் சார்ந்த குடும்பம் ஒன்று வழிபாட்டிற்கு அர்ச்சனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்தது. ஆற்றூர் அன்பர் அர்ச்சனைத் தட்டைப் பெற்றுக்கொண்டு கருவறைக்குள் சென்றார். அக்குடும்பத்தின் தலைவர் எப்போதும்போல் அல்லாமல் மனச் சஞ்சலத்துடன் காணப்பட்டார். இதனைப் புரிந்துகொண்ட ஆற்றூர் அன்பர், மிகவும் மன உருக்கத்தோடு 108 அர்ச்சனை மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை துவங்கினார். அர்ச்சனை முடிந்து ஆராதனை காட்டி முற்படும் போது அம்மன் சிலையின் இடது கையில் பொருத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் திடீரென்று வலது கைக்கு வந்தது; அது பின்னும் இடது பக்கமாக இடுப்பிற்கு வந்தது; அன்னையின் இடுப்பிலிருந்து பிறகு இடது கால் வழியாகக் கீழே இறங்கிப் பாதத்தில் விழுந்து, சுயம்பின் அடியில் தங்கிவிட்டது. அனைவரும் இந்த அற்புதத்தைக் கண்டு களித்தனர். ஆற்றூர் அன்பர் “தங்கள் குறை தீர இந்தக் கனியை அன்னை தந்து இருக்கிறாள்; உங்கள் குறை நீங்கிவிடும்; கவலை வேண்டாம் என்று கூறினார். மகிழச்சியுடன் பெற்றுச் சென்ற சென்னை அன்பர் மறுவாரம் தன் மனக்குறை நீங்கி அன்னையின் கருணைபற்றிப் புகழ்ந்தார்.
“அன்பர்களின் மனக்குறை போக்கும் மருந்தாக இம்மருவத்தூர் அன்னை உள்ளாள்” என்பதற்கு இது சான்றாகிறது.
ஒரு ரூபாய் நாணயம்:
ஒருநாள் ஆலய வழிபாட்டிற்குச் செங்கற்பட்டு மாவட்டக் கலைக்டர் ஒருவர் வந்தார். அவருடன் ஊராட்சி ஆணையரும் உடன் வந்திருந்தார். அவர்களுடைய அர்ச்சனை வழிபாடு அனைத்தும் முடிந்தது. அவர்கட்கு அர்த்த மண்டபத்தில் ஆலய மரியாதை செய்யப் பெற்றது. அவர்களுடன் அடிகளாரும் அவர்கட்கு ஆலயச் சிறப்புகளை எல்லாம் எடுத்துக் கூறினார். திடீரென்று அடிகளார் மேலே நோக்கிப் பார்த்தவுடன், “ஒரு ரூபாய் நாணயம்” மேலேயிருந்து அடிகளார் முன் விழுந்தது. அதை எடுத்து ஊராட்சி ஆணையரிடம் “இந்தாருங்கள்” என்று தந்தார். அதை ஆணையர் மாவட்டக் கலைக்டரிடம் தந்துவிட்டார். கலைக்டருக்கு இது பெரும் அதிசயமாகப் பட்டது. அவருக்கு அம்மன் சித்தாடலின் பெருமை விளக்கப்பட்டது. சிலருக்குக் கடவுள் நம்பிக்கை ஊட்டவும், சிலருக்கு அருள்பாலிப்பதற்காகவுமே அன்னையால் சித்தாடல்கள் காட்டப்படுவது கண்டு உள்ளம் உருகினார். இன்றும் அவர் அந்த நாணயத்தைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்; தனக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு எல்லாம் மாமருந்தாகவும் அன்னையின் அருட்பாதுகாப்பாகவும் எண்ணிக் கைக்கொண்டு வருகிறார்.
நீலக்கல் மோதிரம்:
சித்து என்பது அருள் மலர்ச்சியால் ஏற்படும் தெய்வீக நிலை எல்லாவற்றையுமே சித்துக்களாக எண்ணி விடுவது தவறு. தெருவில் பொருள்களை இடமாற்றம் செய்துகாட்டும் மோடி வித்தை நடைபெறுகிறதைப் பார்க்கலாம். இது கண்கட்டு வித்தை – மை வித்தை எனப்படும். இதையும் சித்தாடலாகச் சிலர் தவறாக எண்ணுவது உண்டு. வேறுசிலர் சிறுதேவதைகளை (யட்சணி – குட்டிச்சாத்தான் முதலியன) வசியம் செய்து கொண்டு மந்திரவித்தை காட்டுவதும் உண்டு. இதற்கு வசியவித்தை என்று பெயர். மற்றும் சிலர் சிறிய சிவலிங்கம், வேல், சூலம், பழங்கள் மாலை முதலியவற்றை வரவழைப்பார் இவர்ட்குக் கொஞ்சம் அருள் உண்டு. இந்தச் சிறு அருளே எல்லாம் என்றும், இவர்கள் தவறாகக் கருதி நாளடைவில் இதற்காகவே சிலர் வாழ்கிறார்கள். இது சாதாரண அற்ப சித்துக்களே! இதை ஒதுக்கி வைத்துவிட்டு முழு இறையருளையும் அவர்கள் தேட முயல வேண்டும்; இதுவே போதையாகி அலையக் கூடாது. இதற்கு மேலும் ஒரு சித்து உண்டு; அதுவே தெய்வீகச் சித்தூர் வடலூர் வள்ளலார் – குழந்தையானந்தர் சேஷாத்திரி சுவாமிகள் போன்றோர் ஆடியது! இம்மருவத்தூர்ப் பெருமாட்டி ஆடுவதும் இதுவே! அற்பச் சித்துக்களை ஆடுவோர், சிறு சிறு பொருள்களை வரவழைக்க முடியும்;
ஆனால் உயிர்ப் பொருள்களை வரவழைத்துக் காட்ட முடியாது. சில குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே அவர்களால் காட்ட முடியும். ஏறக்குறைய எல்லாப் பொருள்களையும் காட்ட முடியாது. தேங்காய், பூசணிக்காய் போன்ற பெரிய பொருள்களையும் காட்ட முடியாது. ஆனால் தெய்வீக சித்தில் பெரிய பொருள்களையும் காட்டலாம்; அத்துடன் ஒரேபொருள் தம் கண் முன்னால் வேறு ஒரு பொருளாக மாறுவதையும் காட்டலாம். மேலும் உயிர் நீங்கிய ஓர் உடலைக் காட்டி நம் கண்முன்னால் உயிரை அதனுள் பாய்ச்சி, அதை இயங்கவும் வைக்கலாம்; இதன் மேலும் அந்த உயிர்ப் பொருளையும் தன் கட்டளைப்படி இயங்கவும் வைக்கலாம். இத்துணை எல்லா அருள் நுணுக்கங்களும் நிறைந்த ஒன்றே தெய்வீகச் சித்து. இதனால்தான் இதனைத் தெய்வம் ஆட வேண்டும்; அல்லது தெய்வத்தின் திருவருள் முழுதும் பெற்றவர்கள் ஆட வேண்டும் என்ற வரையறையுள்ளது. மருவத்தூர் ஆலயத்தில் அன்னை ஆடும் சித்துக்கள் அனைத்தும் தெய்வீகச் சித்துக்களே. அவற்றில் பொருள் உருவாகும் ஓர் அற்புதச் சித்துப் பற்றிப் பார்ப்போம்.
சென்னையிலிருந்து அடிக்கடி ஆலயம் வரும் இரண்டு நண்பர்கள், அன்னையிடம் அருள் வாக்கிற்குச் சென்றார்கள். அவரில் ஒருவர், குறிப்பிட்ட ஒருவரின் பெயரைச் சொல்லி இவர்போல் உன்னால் சித்துச் செய்ய முடியுமா? என்றார். உடனே அம்மா, “இது என்ன மகனே சித்து? நான் ஒன்று காட்டுகிறேன் பார்!” கொல்லன் உலைக்களம் பார்த்திருக்கிறாயா? என் உள்ளங்கையைப்பார்!” என்று கையைக் காட்டினாள். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது! உள்ளங்கையில் சிறிய வெள்ளிக்கம்பிகள் பாய்ந்தன் உடன் கம்பிகள் வளைந்து வளையமாயிற்று; வளையம் ஆகியதும் ஒரு நீலக்கல் வந்து அமர்ந்தது; முழு மோதிரமும் உருவாகியது! இவ்வளவும் ஒரு சில விநாடிகட்குள்ளேயே! இதனை இரு நண்பர்களும் கண்டதும் பெரிதும் அதிசயித்தனர். அம்மோதிரம் தங்களில் ஒருவருக்குக் கிடைக்காதா? என எண்ணினர். எண்ணம் அனைத்தும் அறியும் தாய் “உங்கட்கு இந்த மோதிரம் இல்லை” என்றாள்; அவர்களில் ஒருவர் “ஏன் தாயே தங்களால் இந்த மோதிரத்தை மறைத்து விடவும் முடியும் அல்லவா? மறைப்பதுதானே!” என்றார். அதற்கு அன்னை “இதை நான் மறைப்பதற்காகப் படைக்கவில்லை மகனே! ஒரு பக்தனுக்காகவே படைத்தேன்; இதை அவனிடம் கொடுக்கப் போகிறேன்” என்று தன் விரலிலேயே போட்டுக் கொண்டாள். நண்பர்கள் வெளியில் வந்து விட்டனர். அடுத்து ஆற்றூரைச் சார்ந்த “சத்தி அடிமை” எனும் அன்பர் சென்றார். அன்னை “மோதிரத்தை கழற்றிப் போட்டுக்கொள் மகனே!” என்று தந்து விட்டாள்! அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை! அன்னை தன் கையில் போட்டு உரு ஏற்றித் தந்த மோதிரம் பற்றிய உண்மை தெரிந்ததும், பெரும் வியப்பு அடைந்தார்.
மோதிரமா? திருவருள் வெளியீடா?
எப்போதும் இதைக் கையிலேயே போட்டுக்கொள் என்று அன்னை தந்த மோதிரம் சாதாரண மோதிரமா அல்ல! அல்ல! நீலக்கல் மோதிரமாக பார்வைக்கு அது தோன்றும்; ஆனால் அதன் ஒளிக்கற்றையில் பல நிறக் கதிர்களும் தோன்றுகிறதே, அது ஓர் அதிசயம்! அதனுள் உற்றுப் பார்த்தால் கருவறைத் தோற்றம் முழுதுமே காணலாம்! ஆம்! அடிகளார், அம்மன், சுயம்பு மூன்று உருவங்களும் இணைந்த தோற்றம் தென்படுகிறதே! இது என்ன சாதாரணமானதா? இந்தக் காலைப் பாpசோதித்தவர்கள் இதன் மதிப்பை அளவிட முடிந்ததா? “இது எப்படிக் கிடைத்தது?” என்பதுதான் அவர்கள் கேட்ட முதற் கேள்வி!
“எல்லாம் வல்ல மருவத்தூர் தாய், கருவறைப் பணியிலும் கண்ணீர் மல்கும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கும் ஒரு பக்தனுக்காகவும், அவன் உயர்வுக்காகவும் விலை மதிக்க முடியாத ஒரு மாய மோதிரத்தைத் தன் அருள் விளக்கம் உலகுக்குப் புலப்பட வேண்டித் தந்தான் என்பதே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளும் உண்மை!
பொன்தாலி மங்கல நாண்:
மருவத்தூர்ப் பெருமாட்டி நீலக்கல் மோதிரத்தை நம் கண் முன்னால் உருவாக்கிக் காட்டியது போல் பொன் தாலி மூன்றையும் ஒரு சமயம் உருவாக்கிச் சித்தாடினாள். ஆலயத்தில் ஒருநாள் சிறப்பு வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து தனி உந்து வண்டியில் சிலர் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். அன்னை அருட் கோலந்தாங்கி வெளியில் வந்தாள். அப்போது அருள்வாக்குக் கருவறையிலேயே நடந்தது. வெளியில் வந்த தாய் தன் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை அசைத்தாள். 6,7 வேப்பிலைகள் உதிர்ந்தன் அவை உதிரும் போதே சிலமட்டும் தங்கத் தகடுகளாக மாறின. கீழே விழுந்த அவை உடனே சுருண்டு தாலிகள் மூன்றாக உடனே மாற்றம் பெற்றன. இவையனைத்தும் நம் கண் முன்னால் நடைபெற்ற காட்சியே! இந்த அரும்பெரும் காட்சியைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அதிசயித்து “ஓம் சத்தி, ஓம் சத்தி” எனக்குரல் எழுப்பினர். இது போன்ற தெய்விகச் சித்தை வேறு எங்கும் யார் மூலமும் நாம் அறிந்ததில்லை அல்லவா? அன்னை அம்மூன்று தாலிகளையும் மூன்று அம்மன் ஆலயங்கட்குக் காணிக்கையாகத் தந்துவிடச் செய்தாள்.
உயிர்ப் பொருளை உருவாக்கல்:
ஓர் உயிர்ப்பொருளை உருவாக்குவது சாதாரணச்சித்தால் நடைபெறாது. அது தெய்வீகச் சித்தால் தான் நடைபெறும் என்று முன்பே கண்டோம். இத்தாய் உயிர்ப் பொருளையும் உருவாக்கிக் காட்டிய நிகழ்ச்சி இது! கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் ஆலயத்திற்கு வந்தார். அருள்வாக்கின் போது அன்னை, ஒரு வேப்பிலையைக் கிள்ளிப் போட்டு தண்டாக உருவாக்கிக் காட்டினாள். “இந்த நண்டை எடுத்து சென்று மூன்று முறை தலையைச் சுற்றி எதிரிலுள்ள குளத்தில் போட்டுவிடு” என்று அன்னை கட்டளையிட்டாள். அவரும் அவ்வாறே செய்தார். அந்த அன்பாpன் தீவினை அனைத்தும் ஆதி பராசக்தியால் நண்டாக மாற்றப்பட்ட நிகழ்ச்சி இது. தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்ததே இத்தீவினைதான்! தனக்குத் துன்பங்கள் வருவதற்குக் காரணமாய் இருந்ததும் இத்தீவினைதான்! உலகமக்களின் துயரங்களையும் யாராலும் மாற்ற முடியாத தீவினையையும் அழிக்கும் தெய்வத்தாய் இவள் அல்லவா? ஆகவேதான் அன்பரின் தீவினையை அழிக்க முற்பட்டு அவருக்கு நன்மை சேர்த்தாள். இந்த நிகழ்ச்சியிலிருந்து அந்த அன்பர்க்கு மன அமைதி, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பவளம் முதலியன சேர்ந்தன.
உயிரற்ற வண்டு:
சாதாரண வேப்பிலை உயிருள்ள நண்டாக உருவாகிய காட்சியைப் பார்த்தோம். தற்போது உயிரற்ற வண்டு உயிர் பெற்று நம் கட்டளைப்படி இயங்கும் அற்புதம் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். சென்னையைச் சார்ந்த அன்னையின் பக்தர் ஒருவருக்குக் கிட்டிய அருமைக்காட்சி இது. சென்னை அன்பர் காளி உபாசகர் ஆவார். மந்திர சித்தியும் கூடியவர் ஆவார். இவருக்கு அன்னையின் சித்தாடல்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை! எல்லாம்வல்ல பராசத்தி சித்துக்களை ஏன் ஆட வேண்டும்? என்பதே இவர் கேள்வி! உயர்ந்த அரசாங்க அலுவலில் உள்ள இவரை அன்னை அழைத்து ஒரு வேப்பிலையைக் கிள்ளிப்போட்டாள். உடனே அது உயிரற்ற வண்டாக உருப்பெற்றது! அந்த அன்பரைப் பார்த்து, ‘மகனே! சாதாரணச் சித்துக்களைப் பார்த்துப் பரம்பொருள் ஏன் சித்தாட வேண்டும்? என்று நினைக்கிறாய் அல்லவா? இதோ பார்! சாதாரண வேப்பிலை எப்படி உயிரற்ற பொருளாக மாறுகிறது! இப்போது என் வல்லமையால் உயிரூட்டப் போகிறேன்” என்று உயிர் ஊட்டினாள். அந்த வண்டு உயிர் பெற்று ஊர்ந்தது. “இந்த வண்டை நீ கையில் வைத்துக்கொள்” என்றாள் அன்னை. அவ்வாறே அன்பரும் கையில் வைத்துக் கொண்டார். “இப்போது நான் இதற்குக் கட்டளையிட்டு இயக்குகிறேன் பார்” என்று அன்னை நான்கு திசைகளிலும் அதை நகர வைத்தாள். பிறகு அவரைக் கட்டளையிட வைத்துக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தாள். அந்த அன்பர் வண்டு பறந்துபோக வேண்டும் என்று நினைத்ததும் பறந்து போயிற்று. உடனே தாய் “மகனே! ஓர் உயிர்ப் பொருளைப் படைத்து அதனையும் நம் எண்ணப்படி இயங்கவும் வைக்க முடியும் என்பதை நீ அறிந்தாய் அல்லவா? இதுதான் தெய்வீகச் சித்து! என்னுடைய அருள் காரணமாகவே அவ்வண்டு, உன் கட்டளைப்படியும் இயங்கியது அல்லவா? இதன் உண்மை புரிவதற்காகவே இதை உனக்குக் காட்டினேன்” என்றாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அன்பர் தெய்வீகச் சித்தின் பெருமையையும், அன்னையின் சர்வ வல்லமைகளையும் புரிந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அன்னை ஆலய அன்பர் ஒருவரிடம் “நான் வண்டினை உருவாக்கி என் ஆற்றலால் அதைக் கட்டளைக்கு கீழ்ப்படிய வைத்தேன் அல்லவா? அந்த மகன் என் திருவருளால் தான் அந்த வண்டு கட்டளையை ஏற்றுச் செயல்படுகிறது என்று புரிந்திருந்தும் ஒன்றை விட்டு விட்டான் மகனே! அவ்வண்டிடம் எதையும் நீ கேட்கலாம் என்று சொன்னேன்! ஆன்மிகத்தாகம் உடைய அவன், “எனக்கு உபதேசம் செய்” என்று கேட்டிருக்க வேண்டும்; அந்த அளவில் அவனுக்கு நல்வினை கூடவில்லை” என்று கூறினாள்.
“வண்டின் மூலம் உபதேசமா”? என்று நம்குக் கேட்கத் துடிக்கிறது. ஆம்! அந்த வண்டில் இயங்கும் சத்தி எது? அது எல்லாம்வல்ல ஆதிபராசத்தியின் சத்திதானே! அவ்உபதேசம் சத்திமூலம் பெறும் உபதேசமாகத்தானே அமையும்.
பாத அபிடேகம்:
சில ஆண்டுகட்கு முன் காஞ்சிபுரம் முதலிய இடங்கட்கு அன்னையின் கருவறைச்சிலை கரிக்கோலம் சென்று வந்த பிறகு ஆற்றூருக்கும் வந்து சேர்ந்தது. அடிகளார் அவர்களும் உடன் வந்தார்கள். ஆற்றூர் “சத்தி அடிமை” என்பவருக்கு ஓர் ஆசை அப்போது ஏற்பட்டது. இதுவரையில் அடிகளார் அவர்கட்குப் பாத பூசை யாரும் செய்யவில்லை. நாம் நம் வீட்டில் முதன் முதலில் பாத அபிடேகமே செய்தால் என்ன? என்பதே அவ்வாசை. உடனே அடிகளாரின் பாத அபிடேகத்திற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டார். அடிகளும் வீட்டின் வாயிலில் தொண்டர்களுடன் வந்து நின்றார்கள். பாத அபிடேகம் எண்ணெய், சீயக்காய் தவிர்த்து எல்லாவற்றுடன் துவக்கப்பட்டது. பாதம் தாம்பாளத்தட்டில் வைத்த உடனே அடிகளாருக்கு அருள்நிலை கூடிவிட்டது. அருள் நிலையில் பாதங்களின் முன் பகுதியும், பின்பகுதியும் மாறி மாறித் தட்டில் ஊன்றுவதால் – தட்டு முன்னும் பின்னும் அசைந்து கொண்டே இருந்தது. அதனுள்ளே உள்ள அபிடேகத் தீர்த்தம் சிறுசிறு அலைகளுடன் அசைவது திருப்பாற்கடல் அலைபோலவும், அடிகளார் உருவிலான அம்மன் பாதம் பள்ளி கொண்ட திருமால் போலவும் தென்பட்டது எனலாம். அத்தீர்த்தத்தை உண்ட அன்பர்கள் இனம் புரியாத மணம் – சுவை இருந்ததை அறிந்து அதிசயத்தனர். இந்தப் பாத அபிடேக நிகழ்ச்சிக்கு பிறகே கரிக்கோல விழாவில் எல்லா ஊர்களிலும் அடிகளாருக்குப் பாதபூசை செய்து பக்தர்கள் பயன்பெற்றனர். பாத அபிடேக நிகழ்ச்சியை கண்ட பக்தர்கள் அனைவரும் இனம் புரியாத மகிழ்ச்சியையும், அமைதியையும் கண்கொள்ளாக் காட்சியையும் கண்டார்கள். இதுவே அடிகளாரின் ஆச்சாரிய அபிடேகத்திற்கும் வித்திட்டது போல அமைந்தது. அபிடேகம் நிகழ்ந்ததிலிருந்து வீட்டின் உள்ளே பூசை அறை வரும் வரையிலும் அன்னை அருட்கோலம் தாங்கி வந்த நிகழ்ச்சி அற்புதமானதாகும்.
தொண்டர்களின் சிறு குறைநீங்க
“நல வேள்விகளை எப்படிச் செய்வது?” என்று அன்னை அதன் அமைப்பினையும் – நன்மைகளையும் கூறி உருவாக்கிய நேரம், பல நல வேள்விகளை ஆலயத்தில் செய்து முடித்த பிறகு, பக்தர்கள் வீடுகளிலும் செய்யலாம் என்று அன்னை உத்தரவு தந்தாள். முதல் நலவேள்வி செங்கற்பட்டைச் சேர்ந்த அன்பர் ஒருவர் வீட்டில் செய்வதற்கு ஏற்பாடாகியது. அப்போது அன்னை, அன்பர் “சத்தி அடிமை”யை வேள்வியில் கலந்துகொள்ளும் ஆலயத் தொண்டர்கட்கு நீ ஆலயத்திலேயே பாதபூசை செய்ய வேண்டும்; அதன் முன் அவர்கட்குச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிடு; பாதபூசை முடிந்தவுடன் அப்படியே வேள்விக்குச் சென்றுவிட வேண்டும்” என்று ஆணையிட்டாள். அவ்வாறே “சத்தி அடிமை” அவர்களால் செய்து முடிக்கப் பெற்றது. ஆலயத் தொண்டர்கட்கு நலவேள்வி செய்வதற்குரிய அருளாற்றலைப் பாதபூசை மூலம் ஊட்டிய நிகழ்ச்சி இது என்பது உண்மை. ஆனாலும் தொண்டர்களிடம் உள்ள சிறு குறைகளும் நீங்க அன்னையே இப்பாதபூசை நிகழ்ச்சிக்குக் கட்டளை தந்ததாகவே எண்ணினர். தொண்டர்கள் தம் பாத பூசைக்குப் பிறகு தங்களிடம் உள்ள சிறு குறைகளையும் களையவே முற்பட்டனர். அதற்குப் பிறகு தொண்டர்களின் பாத பூசைக்கு அன்னை உத்தரவு வழங்கியதே இல்லை.
புதுமையான உடல் வலம்:
ஆற்றூர் வார வழிபாட்டு மன்றத்தில் விழா ஒன்று ஏற்பாடாகியது. ஆலயத் தொண்டர்கள் அனைவரும் ஆற்றூர் சென்றனர். அன்னையின் அன்பர் “சத்தி அடிமை” அவர்கள் வீட்டில் அனைவர்க்கும் சிற்றுண்டி ஏற்பாடாகியிருந்தது. “சத்தி அடிமை” அவர்கள் முன்கூட்டியே அன்னையிடம் புதுமையான முறையில்தான் உடல்வலம் செய்ய அனுமதி பெற்றிருந்தார். தொண்டர்கள் பத்துப்பேர்கள் சென்றிருந்தோம் இருபது பேர்க்குச் சிற்றுண்டி செய்திருந்தார். ஆனால் நாற்பது பேர்கட்கு மேல் வயிறார உண்ட நிகழச்சி அன்னையின் அருளேயாகும். சிற்றுண்டி வளர்ந்து கொண்டிருந்ததே தவிர குறையவில்லை! அந்த வீட்டினர் இன்றும் சொல்லிப் பூரிக்கும் நிகழ்ச்சி இது! தொண்டர்கள் தாயின் பக்தர்கள் உண்ட எச்சில் இலைமேல் சத்தி அடிமை உடல்வலம் வந்தார்! ஏன் இதைச் செய்தார்? யாருக்கும் ஒன்றுமே விளங்கவில்லை! அன்னை இதற்கு எப்படி ஒப்புதல் தந்தாள்? அதுவும் தெரியாது! உணவு உண்ட அனைவரும் எழுந்து நிற்க ஏதோ ஒரு மாயம் அனைவரையும் கவ்வியது போன்று இருந்ததையே அனைவரும் கண்டனர்.
சத்தி அடிமை அவர்கள் வழக்கம் போல் ஆலயத்தில் எப்படி உடல் வலம் வருவரோ – அதைவிடப் பல மடங்கு ஈர்ப்பு விசையோடும் வேகத்தோடுங் உற்றல் உணர்ச்சியோடும் வந்தார்! எங்கோ மூலையில் ஓர் இலை இருந்த இடத்திற்கும் தன்னையும், அறியாமல் உருண்டார், ஆடிப்பூர நாளில், “சித்தாடும் வல்லி பங்காரை யாண்ட பராசத்தி” “சாட்டையிலாப் பம்பரம் போல் அகில உலகங்களையும் ஆட்டிப் படைக்கும் அன்னை” தன் திருமேனி ஆலய மண்ணில்பட உருண்டு வந்து புனித மண்ணை மேலும் புனிதமாக்கச் செய்யும் நிகழ்ச்சியை யாவரும் அறிவர்! அன்னையைத் தொடர்ந்து உடல் வலம் வரும் கோடிக் கணக்கான பக்தர்களின் நிலையும் அனைவரும் பார்த்ததே! நாள்தோறும் எண்ணற்ற அடியார்கள் தம் முன்வினை தீரநோய் தணிய – சத்தி அருள் விஞ்ச என்று உடல் வலம் வருவார்களே அதனையும் அன்பர்கள் அறிவர்! பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இரவு 12 மணிக்குமேல் தேவர்கள் சித்தர்கள் வந்து அன்னையை வழிபடும் நேரத்தில் சிலர் உருள்வலம் வருவார்களே அதனையும் பலர் பார்த்திருப்பார்கள், ஆனாலும் இந்த அற்புத நிகழ்ச்சி அன்னையின் அருளால் ஒரு சிலரே பார்க்க முடிந்தது! இந்த அற்புத நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன? ஆண்டவன் போரில் உள்ள பக்தி அதிகமானால், அது அடியார் பக்தியாகவும் மாறும்! இதையே பெரிய புராணம் நமக்குக் காட்டுகிறது.
நாவுக்கரசரும் “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே என்று கூறினார் அல்லவா? பக்தி மார்க்கத்தின் உச்சி வரையில் சென்றவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் ஆண்டவனைவிட ஆச்சாரியனையும், பாகவதானையும் தான் (திருமால் அடியார்கள்) பெரிதாகவே கொண்டார்கள். இதிலே ஒரு முக்கிய கருத்தும் உண்டு, நாம் நேரடியாக ஆண்டவனிடம் சென்று முறையிட்டு நலம் பெறுதலை விட அடியவர் மூலமாக முறையிடுவது சிறந்தது. மருவத்தூர்த் தாயிடம் முறையிடுவது நல்லது. ஏன்? நம் வேண்டுகோளை நிறைவேற்றத் தாய் காலம் தாழ்த்தினாலும் தாழ்த்துவாள்! ஆனால் அடிகளார் மூலம் வரும் நம் வேண்டுதலைக் காலம் தாழ்த்திச் செய்ய முடியாது. ஆகவே தான் அன்பர் ‘சத்தி அடிமை” அவர்கள், அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமையை அடியவர்களுக்குச் செய்தார் போலும்! அவருடைய அடியார் பக்தியை நினைக்க உள்ளம் நடுங்குகிறது.
அன்பர் “சத்தி அடிமை” அவர்களுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக ரூ.500 தேவை; யார் யாரையோ கேட்டும் பார்த்தார் கிடைக்கவில்லை; நகையை வைத்துப் பணம் வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மருவத்தூர் அன்னைதான் காப்பாற்ற வேண்டும்” என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அவர் வீட்டில் சாப்பாட்டிற்கு என்று வைத்திருந்த நெல் கொஞ்சம் இருந்தது. “அதையாவது விற்று நெருக்கடியைச் சமாளிக்க முடியுமா?” என்று எண்ணினார். ஒருசில மூட்டைகள் தேறும்! “என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தார்; தெருவில் நெல் வியாபாரி வந்தான். அவனை அழைத்து நெல்லை அளந்து விடச் செய்யுமுன் இவரும் இவர் துணைவியாரும் அன்னையை “இந்த இக்கட்டிலிருந்து தாயே நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று உளம் உருகி வேண்டிக் கொண்டு அன்னை விபூதியை எடுத்து நெல் அம்பாரத்தில் தூவி விட்டார்கள்! என்ன ஆச்சரியம்! அளக்க அளக்கக் குறையாமல் இவர்கட்குத் தேவைப்பட்ட பணத்திற்கும் மேலும் நெல் கண்டது! ஏஞ்சிய நெல்லும் ஒரு மூட்டை தேறும் போல் இருந்தது! நெல் வியாபாரிக்கே ஒன்றும் புரியவில்லை. எஞ்சிய நெல்லை அளக்கவிடாமல் தடுத்து விட்டனர். தேவைக்குமேல் அளக்க வேண்டாம் என்று!
“உண்மைப் பக்தியிலிருந்து வழிபட்டால் – நமக்குள்ள துயரம் அனைத்தையும் மருவத்தூர்த் தாய் போக்குவாள்” என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
(தொடரும்)
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 11 (1982)
பக்கம்: 8-16