மகான்கள் தரிசனம்”

பாகம் – 2

“மீனாட்சிக் குழந்தைத் தேவே! மீயருள் பூந்த அண்ணால்! “நானா”ட்சி செய்யும் ஞாலம் நாலிடம் சமாதி யூர்ந்தாய்! வானாட்சி செய்யும் மீனாள். “ஏனாட்சி” என்பார் பக்கம் தேனாட்சிச் சித்தன் உன்னைத் திருவருள் பொங்க வைத்தான்!” -“குந்தையானந்தர் துதி”

துவக்கம்:

சித்தர்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள், அவர்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அட்டமா சித்திகள் கிடைக்கப் பெற்றும் தம் பாதுகாப்புக்காக வேண்டிப் பித்தர் போலவும், பேயர் போலவும் இருப்பவர் ஒருவகை.

தாம் பெற்ற அனுபவங்கள் பிறருக்கும் பயன்பட வேண்டும் என்று தெரிவிப்பவர்களும், குறித்து வைப்பவர்களும் ஒருவகை.

பொது மக்களுடைய துன்பங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்கட்கு வாழ்வு தருபவர்கள் ஒரு வகை.

தீயவர்களைத் தண்டிக்கத் தீமையும் செய்பவர்கள் ஒருவகை! இவ்வகைப் பிரிவினருள் மூன்றாவது பிரிவினுள் அடங்கியவரே மகான் குழந்தையானந்தர்.

இவரை அறிஞர்கள், “மீனாட்சியின் குழந்தை” என்றும், “அரசர்கள் வணங்கிய மகான்” என்றும், “பொற்றாமரையில் நடந்து காட்டியவர்” என்றும், உலகில் “நாலிடம் சமாதி கொண்டவர்” என்றும், மந்திரங்கட்குச் சித்தர் நெறிப்படிப் பிரணவ அடைப்புச் செய்தவர் என்றும் சிறப்பிப்பது வழக்கம்.

இவருடைய வாழ்க்கையை நாம் அறிவதால் சித்தர் நெறியின் பல உண்மைகளை அறிவதற்கும், சித்தர் பாடல்களில் சில பூட்டுக்கள் உடைவதற்கும் காரணமாய் இருக்கும். என்றே எழுதப்படுகிறது. இம்மகான் வாழ்க்கைக் குறிப்புகள், இவரது “சரித நூலிலிருந்தும், (ஆசிரியர்) கே.எஸ்.வி.(இரமணி மேல் மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி ஆலய அன்பர் திரு.தருமராசன் B.E. அவர்கள் திரட்டிய குறிப்புக்களிலிருந்தும், பல பெரியோர்கள் வாயிலாக உணர்ந்தவையிலிருந்தும் அறிந்து எழுதப்படுவன. கட்டுரைக்கு உதவிய அறிஞர்கட்கு நன்றி.

ஊரும் பிறப்பும்:

தமிழ் மணக்கும் மதுரைமாநகரம் மீனாட்டசியின் அருள் பொங்கும் புனித நகரம். இதனை அடுத்த சமயநல்லூர் எனும் திருப்பதியே இம்மகான் அவதரித்த புனிதத்தலம். சுமார் 360ஆண்டுகட்கு முன் பரம்பரையாக ஸ்ரீ வித்தை உபாசகராக இருந்து வரும் நற்குடும்பத்தில் இராமசாமி ஐயருக்கும் திரிபுரசுந்தரி அம்மையாருக்கும் பிறந்தவரே இவர். பெற்றோர் இருவருக்கும் “நீண்ட நாட்களாகக் குழந்தைச் செல்வம் இல்லையே” என்ற குறையிருந்து வந்தது. தங்கட்குக் குழந்தைச் செல்வம் கிட்டினால் அக்குழந்தையை மீனாட்சிக்கே தந்து விடுவது என்று வேண்டிக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஒரு வழக்கும் உண்டு ஒருவருக்குக் குழந்தை இல்லாமல் இருந்தாலும், அல்லது பிறந்த குழந்தை நோயுற்று இருந்தாலும், அக்குழந்தையைத் தெய்வத்திற்குத் தத்தம் செய்து கொடுப்பது உண்டு. தத்தம் செய்து கொடுப்பது என்றால் குறிப்பிட்ட தெய்வத்தின் சந்நிதியில் குழந்தையைக் கிடத்தி, “இனிமேல் இக்குழந்தை எங்கள் குழந்தையல்ல: உன்னுடைய குழந்தையே” என்று உறுதி செய்து தெய்வத்திற்குக் கொடுத்துவிடுவது. அப்போதே குழந்தையின் பெயரையும் அத்தெய்வத்தின் பெயராக வைப்பதும் உண்டு. ஆனால் இராமசாமித் தம்பதியினர் குழந்தையைத் தத்தம் செய்து கொடுக்கும் வகையில் வேண்டிக் கொள்ளாமல் தெய்வத்திற்கே தமந்துவிடுவதாக வேண்டிக்கொண்டதே அதிசயம். அவர்களாவா இப்படிச் செய்தார்கள் மீனாட்சித்தாய் செய்ய வைத்தான். அவ்வளவுதான்! சில காரியங்கள் நம்மையும் மீறி நடப்பதற்குத் தெய்வ சங்கல்பம்தான் காரணம் போலும்!

ஆயிரத்தி எட்டுத் தமிழ் மந்திரங்களை மேல்மருவத்தூர் ஆலயத்தில் அம்மன் தொண்டர்கள் எழுதினர். ஒருநாள் அவர்களை அம்மன் அழைத்தான். ஆலயக்குழுவினரைப் பார்த்து “இம் மூன்று பேர்களும் மந்திரங்கள் என்போரில் எழுதினார்களே! அதில் ஒருவனுக்காவது விநாயகத் தோத்திரம் எழுத வேண்டும் என்று தோன்றியதா? இல்லையே! அது ஏன் தெரியுமா? அந்த எண்ணம் தோன்றாமல் நான்தான் மறைத்தேன்: ஏனென்றால் அதை நானே செய்ய வேண்டும் என்று தான்” என்று அன்னை கூறினாள். அப்போதுதான் மந்திரம் எழுதியவர்கட்கு உண்மை விளங்கியது. அப்படி அம்மன் செய்ததுதான் “மூலமந்திரம்” எனும் பெயரால் இரண்டு ஆயிரத்தெட்டுப் போற்றித் தமிழ் மந்திரங்களுக்கும் துவக்கமாக உள்ளது. எல்லாம் வல்ல பராசக்தி அருளால் எழுதப்பெற்ற மந்திரம். அவர்களால் உருக்கொடுக்கப்பெற்ற மந்திரம், அவளால் துவக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்! பெரிய புராணம் எழச் சேக்கிழாருக்கு தில்லைக் கூத்தப்பிரான் “உலகெலாம்” என்று அசரீரியாக அடி எடுத்துக் கொடுத்ததைப் போலவும், கந்தபுராணம் தோன்றக் கச்சியப்பர் சிவாச் சாரியாருக்குத் “திகடசக்கர” எனக் காஞ்சிக்கந்த கோட்ட முருகன் அடிஎடுத்துக் கொடுத்தது போலவும், ஆயிரத்தெட்டுத் தமிழ் மந்திரங்கட்கு அன்னையே மூலமந்திர வடிவில் தோத்திரம் செய்து தாமே மந்திரம் எழுதியவர்கட்குத் தோத்திரம் செய்ய மறக்கும்படிச் செய்தான்.

இதுபோன்று “தன்னுணர்வை” மறக்கடித்த நிகழ்ச்சியே மகானின் பெற்றோரிடத்தும் நிகழ்ந்தது! ஏன்? மீனாட்சி மைந்தனின் திருவ வதாரம் காயில் சங்குசக்கரத்துடன் தோன்ற வேண்டுமல்லவா? அதற்காகவே தான்! மகானின் பெற்றோர்கள் ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் மீனாட்சியை வேண்டிக்கொண்ட சில நாட்களுக்குப் பின் அம்மனுக்குச் சிறப்பான முறையில் அபிஷேகம் ஒன்று செய்ய முடிவு செய்து அதற்குரிய ஏற்பாட்டைத் தொடங்கினர். அபிஷேக தினத்தன்று மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு இராமசாமி ஐயர் முன்கூட்டியே சென்றுவிட்டார். திரிபுரசுந்தரி அம்மாள். நிவேதனப் பொருள்களை (சர்க்கரைப் பொங்கல், வடை முதலியவை) எடுத்துக்கொண்டு பிறகு செல்கிறார்; மேலைக்கோபுர வாயிலும் வந்து விட்டது.

ஏழைகள் உருவில் இறைவி:

கோபுர வாயில் அருகே இரண்டு பிச்சைக்காரக் குழந்தைகள் “அம்மா! தாயே! ரொம்பப் பசிக்கிறது. ரொம்பப் பசிக்கிறது. ஏதாவது கொடுங்களம்மா என்கின்றனர். அதைக் கேட்ட திரிபுரசுந்தரியம்மாள் கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்குப் படைத்த பிறகு எல்லாவற்றையும் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன் என்கிறாள். மீண்டும் அக்குழந்தைகள் இல்லையம்மா! எங்கள் உயிர் இப்போதே போய் விடும்போலே இருக்கிறது! அந்த மீனாட்சியாகவே எங்களை எண்ணிக்கொண்டு தாருங்கள் என்று கண்ணீர் வடித்துக் கொண்டு கேட்டன. அதற்குமேல் அந்த அம்மாளுக்குப் பொறுக்கவில்லை எல்லாவற்றையுமே அக்குழந்தைகட்குத் தந்துவிட்டு உள்ளேயுள்ள தன் கணவற்கு விபரம் கூறுகிறாள். ஆனால் உள்ளத்தில் “தாயே! மீனாட்சி இச்சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்று, நீ உண்மையான தெய்வம் என்றால் என் வீட்டிற்கு உன் பிரசாதம் வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறாள். இச்செய்தி கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம்! விசுவாமித்திரராகவே மாறிவிட்டார்! உடனே அபிடேகம் முடிந்தது பாதி முடியாதது பாதியாக வீட்டிற்கு வந்து விட்டார். அம்மையார்! பிறகுவந்து சேர்கிறார். ஐயர் “அம்மன் பிரசாதம் பிச்சைக்காரிகட்கு” என்று அம்மையாரைப் பார்த்துக் கூறிக் கொண்டு வீட்டு வாயிலிலேயே அமர்ந்து விடுகிறார். திரிபுரசுந்தரி அம்மான் வீட்டுக்குள் வந்துவிட்டார்.

ஏழைக்குத் தந்தது இறைவிக்கு:

சிறிது நேரம்தான் தாமதம்! ஒரு சிறுவன் தட்டு நிறைய அம்மன் பிரசாதங்களை எடுத்துக் கொண்டு வந்து, ஐயரைப் பார்த்து, “இந்தாருங்கள் அம்மன் பிரசாதம்” என்கிறாள். அதற்கு ஐயர், “இது எங்களுக்கு இருக்காது அப்பா! வேறு யாருக்கோ! எங்கள் பிரசாதம் தான் பிச்சைக்காரிகட்கு என்று ஆகிவிட்டதே என்கிறார். பையன், “இல்லை உங்கட்குத்தான் என்கிறான்! வீட்;டு வாயிலில் நடக்கும் நிகழ்ச்சி, உள்ளே உள்ள அம்மையாருக்குத் தெரிந்து விடுகிறது! ஆனந்தக் கண்ணீர் வழியத் தன் கணவரைப் பார்த்து, பிரசாதத்தைத் தட்டாமல் வாங்கிக் கொள்ளுங்கள்; பிறகு எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்கிறாள். ஐயர் வாங்கிக் கொள்கிறார். உடனே பிரசாதம் தந்த பையன் செல்லத் தொடங்குகிறான். அப்போது அம்மையார் தம் கணவனைப் பார்த்து, “நீங்கள் இந்தப் பையன் எங்கே செல்கிறான் என்பதை மட்டும் போய்ப் பார்த்து வாருங்கள்” என்கிறார். அவர் அப்படியே சென்று பார்க்கும் போது கோயிலின் மேலைக்கோபுர வரவில் சென்றதும் பையனைக் காணவில்லை! அதை வந்து அப்படியே சொல்கிறார் ஐயா. “இது ஏதோ தெய்வச் செயலாகத்தான் தோன்றுகிறது என்கிறார். அம்மையார் எல்லா விபரங்களையும் கூறித் தெளிவுபடுத்துகிறார். அது முதற் கொண்டு பத்தாவது மாதம் இராமன், இலட்சுமனன் எனும் பெயர்களோடு இரட்டைக் குழந்தைகள், பிறந்து நானொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்த்த வருகின்றனர்.

தொடர்பு நிகழ்ச்சி:

“ஏழைக்குத் தருவது ஆண்வனுக்குத் தருவதே” என்பதற்கு வேறொரு நிகழ்ச்சியையும் நினைத்துப் பார்த்தால், அடியார்களை ஆண்டவன் எப்படி எல்லாம் சோதிக்கிறான் என்பது விளங்கும். சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி இது. நடராசரிடம் பக்தியுள்ள ஒருவர் நிவேத்தியப் பொருள்களை ஆலயத்திற்கு எடுத்துச் சென்றார். கோபுரவாயிலை அடைந்ததும், இஸ்லாமியப் பக்கிரி ஒருவன் “சாமி பொறுக்க முடியாது சாமி என்னையே அந்த நடராசராக நினைத்துத் தாருங்கள், என்கிறான். அதற்கு அந்தப் பக்கிரி, “சாமி பொறுக்க முடியாது சாமி! என்னையே அந்த நடராசராக நினைத்துத் தாருங்கள், என்கிறாள் வந்தவருக்கு அதிகக் கோபம் வந்து, அவனை வாய்க்கு வந்தபடித் திட்டி விட்டுக் கோயிலுக்குள் செல்கிறார். ஆனால் கருவறையில் அவர்கண்ட காட்சி அவன் மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. நடராசப் பெருமானே அந்தப் பக்கிரியாகக் காட்சியளிக்கிறாள்! உடனே பக்தர், “நடராசா! நடராசா என்று மயங்கி விழுகிறார். இதனால் ஆண்டவன் பந்தனை எந்த உருவத்திலும் சோதனை செய்து பார்க்கலாம் என்பதை உணர முடிகிறது. மருவத்தூர் அரசி, “சொறி நாய்” உருவத்தில் கூட நான் வருவேன். மகனே! என்று தொண்டர் ஒருவர்க்குக் கூறினாள். அவ்வாறு கூறியதன் காரணம் எப்படியும் சோதனை செய்து பார்க்கலாம் என்பதற்குத்தான்.

ஏழைக்குக் கொடுப்பதே ஆண்டவனுக்குச் சேர்கிறது. ஆண்டவனுக்குக் கொடுப்பது ஏழைக்குச் சேர்வதில்லை என்று திருமூலர் சொல்கிறார். ஆகவே “ஏழைகள் உருவில் ஆண்டவன் நடமாடும் கோயிலாக இருக்கிறான்” என்பதை, மகான் குழந்தையனந்தரின் பெற்றோர்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.

தாய்ப்பால் அருந்தாக் குழந்தை:

இராமசாமி தம்பதியினருக்குப் பிறந்த இராமன், இலட்சுமணன் என்ற இரு குழந்தைகளில் இராமன் என்ற குழந்தை மட்டும் பிறந்தது முதல் தாய்ப்பால் அருந்தவே இல்லை. அதனால் அக்குழந்தைக்கு எந்தக் குறையும் தெரியவும் இல்லை. பெற்றோர்கட்கு மட்டும் இது பெருங் குறையாகவே தென்பட்டது. ஏதாவது தெய்வக் குற்றமாக இருக்குமோ? என்று எண்ணிவந்தனர். தாம் செய்துகொண்ட வேண்டுதல் நினைவுக்கு வரவே, “குழந்தையை அம்பாளிடம் எப்படித் தந்துவிடுவது” “தங்கத்தால் குழந்தை செய்து வேண்டுதலை நிறைவேற்றி விடுவோம்” எனும் முடிவுக்கும் வந்துவிட்டனர். ஒருநாள் திரிபுரசுந்தர அம்மாளுக்கு மீனாட்சி கனவில் தோன்றி, “பிரார்த்தனை செய்தபடிக் குழந்தையைச் சந்நிதியில் கொண்டு வந்துவிடு” என்றாள். உடனே தம்பதியர் குழந்தையை அவ்வாறே விட்டுவிட முடிவு செய்தனர். ஆனால் ஒரு பிரச்சனை, எந்தக் குழந்தையை விடுவது என்பதே அது! கோயிலுக்கு சென்று குருக்களிடம் உத்தரவு கேட்கலாம் என்று இரண்டு குழந்தைகளையும் சந்நிதியிலே விட்டனர்.காலில் சங்கு சக்கரமும், நாவில் நாராயண மந்திரமும் உள்ள குழந்தையை விட்டு விட்டுச் செல்லும்படிக் குருக்களுக்கு அருள் வந்து உத்தரவாயிற்று. அதுவரையில் அக்குழந்தைக்குக் காலில் சங்கு சக்கரம் இருப்பது பெற்றோருக்குத் தெரியாது! அது கண்ட எல்லோரும் அக்குழந்தையைத் தெய்விகக் குழந்தை” என்று போற்றி நின்றனர். இராமன் என்ற குழந்தை “அம்மா” என்று அழைத்துக் கொண்டு கருவறை நோக்கிச் சென்றது! பெற்றோர் மண்ணில் ஆனந்தக் கண்ணீர்! பார்த்தவர் நெஞ்சில் அம்மன் பெருமை! பெற்றோர்கள் இராமன் என்ற குழந்தையை விட்டு விட்டு இலட்சுமணன் என்ற குழந்தையைத் திருப்தியுடன் எடுத்துச் சென்று விட்டனர்.

அசரீரி:

இரவு வேளையில் குருக்கள் ஆலயப் பணிகளை முடித்துக்கொண்டு இருந்தார். குழந்தை சந்நிதியில் விளையாடிக்கொண்டிருந்தது. அர்த்த சாமப் பூசையும் முடிந்தது. கருவறை பூட்ட வேண்டிய நேரம்! அப்பொழுதுதான் குருக்களுக்குக் குழந்தை பற்றிய நினைவு வந்தது! “குழந்தையை என்ன செய்வது?” என நினைக்கும் போது, உடனே அசாரீரி, “குழந்தையைக் கோயிலுக்குள்ளேயே விட்டு விட்டுப் பூட்டிச் செல்” என்று கேட்டது! உடனே குருக்கள் அவ்வாறே செய்து விட்டுப் போய்விட்டார், வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் அவ்வாறே நடந்தது. அக்குழந்தைக்கு யார் பாலூட்டுவது, சீர்செய்வது என்பது யாருக்கும் தெரியாது.

(தொடரும்)

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 9 (1982) பக்கம்: 17-22

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here