மேடும் பள்ளமும்:
பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருளான பகுதிகளும் உண்டு; ஒளி மிகுந்த பகுதிகளும் உண்டு. சுமக்க முடியாத வேதனைகளைச் சுமந்து கொண்டு அழுது வடிந்த காலங்களும் உண்டு; சுமை நீங்கிப் பெருமூச்சு விட்டுக் கவலையின்றித் திரிந்த காலமும் உண்டு. ஒவ்வொருவர் வாழ்க்கைச் சக்கரமும் மேடு பள்ளங்களைக் கடந்துதான் உருண்டோடி வந்திருக்கின்றது.
அவனுடைய வாழ்க்கையிலும் இடர்ப்பாடான கால கட்டம் ஒன்று வந்தது. தற்கொலையின் முடிவுக்கே வந்துவிட்ட நேரம் ஒன்று உண்டு. அதனை யாருக்கும் சொல்லாமல் அம்மாவின் எதிரே வந்து அருள்வாக்குக் கேட்ட போது அவன் வாய் திறந்து எதுவுமே சொல்லாத போது அம்மா சொன்னாள்.
“மகனே! நடப்பது எதுவும் உன்னால் அல்ல் தற்கொலை முடிவு கூடாது. மகனுடைய பிரச்சனைகள் தாய்க்குத் தெரியாதா? பொறு!” என்றாள். நாற்பது நாட்கள் துன்ப அனுபவத்தைக் கொடுத்து அவனுடைய சிக்கல் ஒன்றை அம்மா தீர்த்து வைத்தாள். நடப்பது எதுவும் உன்னால் அல்ல என்று அம்மா சொன்னாளே! அப்படியானால் அவனுக்கு வந்த துன்பத்துக்கு அவன் காரணம் அல்லவா? அவன் விதி காரணமா? அம்மா கொடுத்த சோதனையா? எது என்று புரியவில்லை.
வினைப்பயனால் வந்த துன்பத்திலிருந்து மீட்டாள்:
மதுராந்தகத்தில அன்பர் ஒருவர் மணிகைக் கடை வைத்திருந்தார். ஒரு குமாஸ்தாவை நம்பிக்கையாக வைத்துப் பொறுப்பு கொடுத்திருந்தார். அந்த ஆள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு அந்த அன்பரை ஏமாற்றி விட்டார். பெரிய கடனாளியானார். எல்லாம் விற்றுக் கடனை அடைக்க நினைத்தாலும் முடியாத அளவு கடன் பளு தாங்க முடியாமல் போய்விட்டது. அறிவு பூர்வமாகச் சிந்தித்தபோது ஏற்பட்டு உள்ள கடனை ஆயுள் முழுதெல்லாம் இந்த நிலையிலேயே தீர்க்க முடியாது. நிலமெல்லாம் விற்றாலும் பாதிக்கடன் தான் அடைக்க முடியும். மீதிக் கடனை அடைப்பது எப்படி? மீண்டும் கடை வைத்துத் தொழில் நடத்தித் தலை நிமிர வேண்டுமானால் மூலதனத்துக்கு எங்கே போவது? எதிர்காலமே சூன்யமாகப் போய்விட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு ஏதும் வழி புலப்படவில்லை. அம்மா மருவத்தூரில் அருள்வாக்குச் சொல்வது பற்றி யாரோ அவருக்குச் சொல்லி இருக்கின்றார்கள். வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்று தீமானித்தாகி விட்டது. போவது தான் போகிறோம்; கடைசி முறை அந்த மருவத்தூரையும் பார்த்து விட்டுத்தான் போவோமே என்று கருதி வந்தார்; அம்மாவிடம் சென்றார் அம்மா அருள்வாக்கில் சொன்னாளாம்.
“மகனே! நம்பத் தகாதவனை நம்பி எல்லாம் இழந்துவிட்டு வந்து நின்கின்றாய்! தற்கொலை முடிவோடு வந்து இருக்கின்றாய்! என்னை நம்பிப் பொறுத்திரு! மீண்டும் உன் தொழில் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்கின்றேன்” என்றாளாம். அம்மா இவ்வாறு சொன்னதும் உயிராசை அவருக்குத் தற்கொலை முயற்சியைக் கைவிட வைத்தது. அடிக்கடி ஆலயத்துக்கு வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார். ஆலயத்தை அடிக்கடி நாடி வந்ததால் ஊழ்வினை சிறுகச் சிறுகத் தணிந்தது. அம்மாவின் சந்நிதானம் மன நிம்மதியைக் கொடுத்தது” பணப் பிரச்சினை மட்டும் நீங்கினபாடில்லை. அம்மாவின் போரில் நம்பிக்கை மட்டும் இருந்தது. பல மாதங்கள் கழித்து “மகனே! உனக்குத் தொழில் நடக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடு! வெற்றி தருகிறேன்” என்றாளாம். நல்ல நாளாகப் பார்த்து யாரிடமோ கடனாக ஒரு நூறு ரூபாய்த் தாளை வாங்கி வந்து “அம்மா! நீயே உன் கையால் எனக்குக் கொடுத்து ஆசி கொடுத்து அனுப்பு! என்று முறையிட்டார். அம்மாவே ஆசி கொடுத்து அனுப்பினாள். இன்று அவர் மளிகைக் கடை நடத்தி வருகின்றார். இழந்ததைத் திரும்பப் பெற்றார். செவ்வாய்க்கிழமை மட்டும் கடைக்கு விடுமுறை! அன்று விழுந்தடித்துக் கொண்டு கோயில் தொண்டு செய்ய ஓடி வந்து விடுவார். ஆண்டுக்கு ஒருநாள் அம்மாவுக்கு அபிடேகம் செய்வது வழக்கம். அம்மாவிடம் சென்று எப்படிச் செய்வது என்று கேட்டு அதன்படிச் செய்வது வழக்கம்.
அன்னதானத்தை அம்மா வலியுறுத்துதல்:
அம்மா அருளால் நிமிர்ந்து விட்ட காரணத்தால் தாராளமாகச் செலவு செய்யும் தைரியம் வந்து விட்டது. அம்மாவே அந்த அன்பருக்குச் சொன்னாளாம். “மகனே! தாராளமாகச் செய்! உனக்குக் கொடுக்கப் போவது நான்! சிறப்பாகச் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொள்” என்றாள். அந்த முறை ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்.
கட்சிக்காரர்கட்குச் சோறு போட்ட அன்பர்:
அம்மாவிடம் ஈடுபாடு கொண்ட வழக்கறிஞர் அன்பர் ஒருவர். சென்னைக்கு ஏதோ ஒரு காரணமாக அவர்கட்சித் தொண்டர்கள் பாத யாத்திரையாக நடந்தே சென்றார்கள். வழியில் உள்ள இவர், அவர்களை எல்லாம் அழைத்து, அன்றிரவு ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் தங்க வைத்து உணவு அளித்தார். தன் கட்சித் தொண்டர்கட்குத்தான் உணவளித்தார். ஆனாலும், அம்மா அவரை அழைத்து “மகனே! ஆயிரக்கணக்கான ஏழைத் தொண்டர்கட்கு உணவு கொடுத்தாய்! எனக்குத் திருப்தி மகனே”- என்றாளாம்! அவர் கட்சிக்காரர்கட்குத் தான் உணவளித்தார். பக்தர்கட்கு என்று அன்று உணவளிக்கவில்லை. ஆனாலும், அம்மா ஆயிரம் ஏழைகள் வயிற்றை நிரப்பிய அந்த ஒரு காரணத்துக்காகவே “திருப்தி” என்றாள்! இன்னும் தருகிறேன்:
அம்மா சொன்னபடியெல்லாம் அபிடேகமும், அன்னதானமும் செய்து கொண்டு வரும் அந்த மளிகைக் கடை அன்பருக்கு “மகனே! இன்னும் ஒரு தொழில் நடத்தவும், வியாபாரம் செய்யவும் உனக்கு ஏற்பாடுகள் செய்திருக்கின்றேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபடு” என்றாளாம். இது அம்மா கொடுத்தது; இது அம்மா அருளால் கிடைத்தது என்ற நினைப்பை அழுத்தமாக அவர் பதிய வைத்துக் கொண்டார். ஓரளவு நியாயமான லாபம்! ஏழைகட்கு அன்னதானம்! தெய்வத்திடம் நம்பிக்கை! அந்த நன்றி உணர்ச்சி! எல்லாம் அவருக்கு இருந்தது. அம்மாவே, தானாகக் கொடுக்கிறேன் என்றாள். இன்றைக்கு அவர் நல்ல நிலையிலே இருக்கின்றார்.
சுயநலம் பிடித்த பணக்காரர்கள் – வியாபாரிகள்:
இன்றைக்கு ஒரே மொத்தமாகப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பணக்காரர்கள் சிலர் பொருள்களைப் பதுக்கி வைத்து செயற்கைப் பஞ்சம் உண்டாக்கி அதிக விலை வைத்துக் கொள்ளையடிக்க ஆசைப்படுகின்றார்கள். சிலர் ஏழை எளிய மக்கள் உண்ணுகின்ற பொருளில் கலப்படம் செய்து மக்கள் உடம்பைக் கெடுத்து வருகின்றார்கள். சட்டத்தின் பிடிப்பில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். செல்வாக்குக் காரணமாக இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனாலும், இவர்கள் தாம் செய்கின்ற தீவினையிலிருந்தும் – ஏழை மக்கள் வயிறெரிந்து சாபமிடுகின்ற சாபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது. எப்படியாவது அந்த வினைப்பயன் அவர்களைத் தண்டித்தே தீரும். எந்தப் பிள்ளைகுட்டிகட்காக இவர்கள் விழுந்து விழுந்து பணம் சேர்க்க நினைத்துச் சேர்க்கின்றார்களோ அவர்கட்கே இவாகள் செய்யும் கொடுமையால் பல துன்பங்கள் வந்து சேரும். அந்த நேரத்தில் இவர்கள் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணமும் – வாங்கி வைத்துள்ள சொத்தும் இவர்கள் சந்ததியினரைக் காப்பற்றாது! வேறு வகையில் இவர்களை வினை தாக்கத் தொடங்கும். இது ஆதிபராசக்தியே ஏற்படுத்தி வைத்த சட்டம்! அவனவன் அடிப்படைத் தேவைக்கு உழைக்கலாம் – சம்பாதிக்கலாம் – அறிவாலும் – திறமையாலும் – உழைப்பாலும் கிடைக்கின்ற அபிரிமிதமான செல்வத்தை நியாயமான வழியில் பலரும் பிழைப்பதற்கு ஏற்றவாறு செலவிட வேண்டும். இந்த நியதியைக் கடைப்பிடிக்காமல் சுயநல வெறிமட்டும் ஓங்கும்போது வினை தூக்கும்போது தொழிலில் பெரிய நஷ்டங்கள் எதிர்ப்படும் போது தம் குழந்தை குட்டிகள் கைகால் விளங்காமல் பிறக்கும்போது எல்லா வசதியும் இருந்தும் தன் உடம்பின் ஆரோக்கியமே பாழ்பட்டு கெடும் போது தன் மகனுக்கு நல்ல மருமகள் வாய்க்காத போது தன் மகளுக்கு நல்ல மருமகன் வந்து வாய்க்காத போது பெற்ற பெண் வாழா வெட்டியாய் வந்து கண்கலங்கும் போது எல்லாம் இருந்தும் குடும்பத்தில் நிம்மதி இல்லாதபோது பணத்தாலேயே எல்லாம் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பால் இருந்தவர்களை பணமும் காப்பாற்றாத காலகட்டம் ஏற்படும்போது இவர்கள் வினைப்பயன் இவர்களையே திருப்பித் தாக்கும் போதுதான் தெய்வத்தை நோக்கி வருகின்றார்கள்.
எல்லோரும் கடவுளுக்குக் குழந்தைகளே:
என்ன தவறு செய்தாலும் என்ன பாவம் செய்தாலும் என்ன துன்பம் வந்தாலும் இறுதியில் கவலைகளைப் போக்குகின்ற இடம் தெய்வத்தின் சந்நிதானம்தான் என்ற உண்மையைப் பட்டுப்பட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அம்மாவிடம், எல்லோரும் வருகின்றார்கள். “பணக்காரன் அந்தக் கோயிருக்கு வருகின்றான் அந்தப்பாவி கூடக் கோயிலுக்கு வருகின்றாள். அவன் செய்த அக்கிரமம் எனக்குத் தெரியும், அவன் எல்லாம் கோயிலுக்குப் போகிறான்; என்று விமர்சனம் செய்கின்ற அறிவு ஜீவிகள் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஏசுவின் கதையில் வேசி :
ஏசு பெருமாள் ஓர் ஊருக்குச் சென்று கொண்டு இருந்தார். வழியில் ஒரு பெண்ணைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு பலரும் சேர்ந்து கல்லால் அடிக்கத் தயாராக இருந்தார்கள், குய்யோ முறையோ கதறிக் கதறி ஆதரவு தேடி அலறினால் அந்தப்பெண்! சுற்றியிருந்த எவனுக்கும் இரக்கம் இல்லை. சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்களே தவிரப் பரிதாபப் பட்டவர் எவரும் இல்லை. அங்கே வந்த ஏசுபெருமான் இக்காட்சியைக் கண்டு துணுக்குற்றார்; ஓடிப்போய் அந்தக் கூட்டத்தாரைத் தடுத்து நிறுத்தி, “என்னப்பா இவளை இப்படி அடித்துக் கொல்லுகின்றீர்கள்?” என்று கேட்டார். “பெருமானே! அப்பால் செல்லுங்கள் இவள் ஒரு மோசமான வேசி! இந்த ஊரில் உள்ளவர்களை எல்லாம் கெடுத்தவள். கெடுத்துக் கொண்டு வருபவள். பாவம் செய்தவள்! பாவி! இவளைக் கல்லால் அடித்துத் தான் கொல்ல வேண்டும்” என்று ஒரே குரலாகக் கூச்சல் இட்டார்கள். “அப்படியானால் ஒன்று செய்யுங்கள்” என்றார் ஏசு. “என்ன?” என்று கேட்டது அந்தக் கூட்டம் ‘இந்தக் கூட்டத்தில் மனத்தாலும் பாவமே செய்யாதவர்கள் யாரேனும் இருந்தால் இவளைக் கல்லால் அடியுங்கள்!” அதுதான் சரி என்றார் ஏசு. ஏசுவின் தெய்வீக அற்புதங்களைக் கேட்டறிந்த அந்தக் கூட்டத்தினரின் ஒவ்வொருவனும் பின் வாங்கினான். அவனவன் மனசாட்சி உறுதியதால் அவனவனும் பின் வாங்கினார். அந்த வேசிக்கும் கருணை காட்டினார் ஏசு! அவர் மனிதர் மட்டும் இல்லை; மனித தெய்வம்! பாவப்பட்ட உயிர்களை யெல்லாம் பரம்பொருளே ஏற்றுக்கொள்ளும் போது அவன் கோயிலுக்குப் போகலாமா? இவன் கோயிலுக்குப் போகலாமா? என்கின்றார்கள். தகுதி உடையவள் தான் கோயிலுக்குப் போக வேண்டும் என்றால் தெய்வம் மட்டும் கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான். அவனவன் தகுதியும் நேர்மையும் அவனவன் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயங்கள் “தன் கண்ணில் உள்ள தூணை மறந்து விட்டுப் பிறர் கண்ணில் உள்ள துரும்பைப் பார்க்காதே” என்றார் ஏசு.
நல்லவன் யார்?
“நல்லவன் எல்லாம் தொல்லையும் துன்பமும் படுகின்றானே; அக்கிரமக்காரனும் அயோக்கியனும் உல்லாசமாக இருக்கின்றார்களே உன் படைப்பில் ஏன் இப்படி இருக்கிறது தாயே?” என்று ஒரு நாள் அம்மாவிடமே முறையிட்டுக் கேட்டான். அந்த நாத்திகன்.
அம்மா சொன்னான். “யார் நல்லவன்? நீ நல்லவன் என்று எவன் எவனை நினைக்கின்றாயோ அவனவன் ஆன்ம பரிபக்குவம் எப்படிப்பட்டது என்று எனக்குத் தான் தெரியும். இந்த உலகத்தில் யார் நல்லவன் தெரியுமா? சித்தப் பிரமை பிடித்துப் பித்தனாகித் தெருவில் திரிகின்றானே அவன்தான் நல்லவள் அவன் மனத்தில்தான் எந்த அழுக்கும் படியவில்லை. அவன் மனத்தில் ஆசை இல்லை, பாசம் இல்லை, பாசம் இல்லை, சூது இல்லை, சூழ்ச்சி இல்லை, பொறாமை இல்லை, பகைமை இல்லை, அடுத்துக் கெடுக்கும் எண்ணம் இல்லை. அவன்தான் மகனே எனக்கு நல்லவன்” என்று சொல்லி மேலும் தொடர்ந்தாள்.
“மகனே! முற்பிறவியில் செய்த நல்வினை காரணமாக ஒருவனுக்குச் செல்வத்தைத் தருகின்றேன். அந்தச் செல்வம் காரணமாக அக்கிரமங்கள் பல செய்பவனை எப்படித் தண்டிப்பேன் தெரியுமா? என்று ஆசிரியர் வினாவுவதைப் போலக் கேட்டாள். அவனுக்கு ஆணவம் வருவதற்குக் காரணமாக இருப்பது எது?” என்று கேட்டாள், “செல்வம்தான் காரணம்” என்று அவன் பதில் சொன்னான். “ஆகவே அவனை அழிக்க வேண்டுமானால் என்ன செய்வேன் தெரியுமா. மேலும் மேலும் செல்வத்தைக் கொடுப்பேன்; அவனுடைய ஆணவமும் வளர்ந்து கொண்டே போகும். இறுதியில் அவன் ஆணவத்தைக் கொண்டே அவனை அழித்துப் பாடம் புகட்டுவேன்: என்றாள்.
இப்படி அம்மாவிடம் கேட்டுத் தெளிந்த எத்தனையோ பாடங்கள் உண்டு. அது மட்டும் அல்ல! யாரோ எப்போதோ செய்த தீவினை அடுத்து வருகின்ற சந்ததியையும் தாக்கும் என்ற உண்மையையும் அவன் தெரிந்துகொள்ள உதவியாக ஓர் அனுபவம் ஏற்பட்டது.
தொடரும்…
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 9 (1982) பக்கம்: 9-13
]]>