ஒரு கிலோ கல்லும் – இரும்புத் தகடும்

வாழ்க்கை என்னும் பாதையில் பல இன்ப துன்பமென்னும் மேடு பள்ளங்களைச் சந்திக்கிறோம் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மனின் தொண்டர்களும், தொண்டர் அடிப்பொடிகளும், அம்மனைச் சில நேரங்களில் தொழுபவர்களும், விதிப்பயனால் சில விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

சென்ற “சக்தி ஒளி” இதழில் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆன்மிக விளக்கங்களைப் படித்த போது, குறிப்பாக “விதிப்பயன் என்பது 1 கிலோ கல்லுக்கு ஒப்பாகும்; அம்மாவின் அருளால் 1 கிலோக்கல் தலையில் விழும்போது, இரும்புத்தகடு தடுத்து மனிதர்களைக் காப்பாற்றுகிறது; விதிப்பயனையும் நமக்கு உணர்த்தவும் செய்கிறது” என்ற விளக்கம் படித்தபோது, இது எனக்கு நேர்ந்த நிகழ்ச்சியைப் பற்றியதோ என நினைத்தேன். அந்த நிகழ்ச்சி………..

மேல் மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அம்மாவின் கருணையைப் பற்றி, 81ம் ஆண்டு அருட்பெரும் தொண்டர் ஆத்தூர் உயர் திரு.A.G.கோபாலகிருஷ்ணன் மூலம் கேள்விப்பட்டு எனது நண்பர் குடும்பத்தாரும், என் குடும்பத்தாரும் முதல் முறையாக அம்மன் திருக்கோவிலுக்குச் சென்றோம். 3-11-81ல் அருள்மிகு அம்மன் அபிஷேக வாய்ப்பு கிட்டியது. தென்னகத்தே பல கோயில்களிலும் அடைய இயலாத மன அமைதி, தெய்வீகச் சூழ்நிலை அம்மாவின் நினைவு தவிர, வேறு எண்ணமற்ற நிலை, முதல் முறை மேல் மருவத்தூர் மண்ணை மித்தவுடன் எங்களுக்குக் கிடைத்தது. நண்பர் குடும்பத்தினரும் அதே கருத்தை அறிவித்தனர். அதன் பின்னர் அலுவலகப் பணிக்காக வந்தவாசியில் 4 மாதங்கள் தங்கியிருந்த போது வாரம் ஒரு முறையேனும் அம்மாவை வணங்கும் பெரும் பேறு கிடைத்தது; இருமுறை சக்தி மாலை அணிந்து இருமுடி ஏற்கும் வாய்ப்பும் கிடைத்தது. வந்தவாசியில் பணிகள் நிறைவு பெற்று ஊர் திரும்பிய பின்…..

8-5-82ம் தேதி எனது குடும்பத்துடன் மறுபடியும் அம்மாவை தரிசிக்க, மேல் மருவத்தூர் சென்று கோயில் விடுதியில் இரவு தங்கினோம். 6-5-82 காலை அருள்மிகு அம்மாவிற்கு அர்ச்சனை செய்து, கண் குளிரக் கண்டு, உள்ளம் உருகத் தொழுதுவிட்டு, அம்மாவின் வேப்பிலை மந்தரிப்பும் பெறும் அரிய வாய்ப்பு கிடைத்து.

கோயில் வழிபாடுகள் முடிந்த பின் மதியம் 12 மணிக்கு வந்தவாசி செல்லும் டவுன் பஸ்ஸில் புறப்பட்டோம், என் வாழ்வினை பின் தொடருவதை நான் அறியவில்லை. புறப்பட்ட 15 நிமிடத்தில், ராமாபுரம் கிராமத்தை நெருங்கும் வேளையில், சைகிளில் திடீரென வந்த மனிதர் மேல் மோதாமல் இருக்க, டிரைவர், பஸ்ஸை வலது பக்கம் திருப்பி சரி செய்யுமுன் பெரிய புளிய மரத்தில் மோதியது. அப்போது பஸ் பயணிகள் சுமார் 90 பேர்கள் இருப்போம். சில வினாடிகளில் பஸ்ஸில் அழுகுரல்கள் கேட்டன. என்னைப் பலர் அழுத்துவதாக உணர்ந்தேன். மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது. பாதி மயக்க நிலையில் கஷ்டப்பட்டு கீழே இறங்கினேன். வலது காலை எடுத்து வைத்து நடக்க இயலவில்லை. இறங்கியவுடன் சாலை ஓரமாகப் படுத்துவிட்டேன். உடம்பெல்லாம் வலி; மூச்சுத்திணறல், என் நிலையைக் கண்ட என் துணைவி அழவில்லை, அலறவில்லை. என் தலையை மடிமீது வைத்துக் கொண்டாள். கோயிலில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தத்தை வாயில் ஊற்றி, விபூதி, குங்குமம் இட்டு, போற்றித் திருவுரு கூறினாள். சுமார் 10 நிமிடங்கள் கழிந்தன. எதிர்பாராவிதமாக ஓசூர், திரு.A.R.கிருஷ்ணசாமி ரெட்டியார், தனது குடும்பத்தாருடன், காரில் வந்துகொண்டு இருந்தார். காலையில் தான் அவரை அம்மன் கோவிலில் சந்தித்துப் பேசியிருந்தேன்.

எங்களைக் கண்டு இறங்கி வந்தார். கருணையுள்ளம் படைத்த அவர், தனது குடும்பத்தாரை இறங்கி, பஸ்ஸில் வருமாறு கூறிவிட்டு என்னையும், என் துணைவியையும் ஏற்றிக்கொண்டு விரைந்து வந்தவாசி வந்து அரசு மருத்துவமனையில் உடன் இருந்து டாக்டரை அழைத்து முதல் உதவி அளிக்க ஏற்பாடுகள் செய்தார். ரெட்டியார் அவர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து என்னை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வரும்போது, ஓர் அரிய அற்புத நிகழ்ச்சி நடந்தது. “ரெட்டியார் அம்மனின் திருவுரு போட்டோ ஒன்றைப் பின்புறசீட்டின் மேல் புறம் வைத்திருந்தார். கார் சென்று கொண்டு இருந்தபோது அந்த அம்மன் போட்டோ அப்படியே காற்றில் வந்து அம்மன் திருவுரு என் இடது மார்பின் மீது படியும் வண்ணம் வீழ்ந்தது” அந்தப் பக்கம் 6 மார்பு எலும்புகள் முறிந்திருந்தன. அப்போதே என் மனைவி, அரை மயக்க நிலையில் இருந்த என்னைப் பார்த்து, அம்மா உங்களை நிச்சயம் காப்பாற்றுவாள். நமக்கு வரும் வினைகள் தீரும் என்று கூறினாள்.

எனக்குப் பல இடங்களில் எலும்பு முறிவுகள் இருக்கலாம். என்ற நிலையில் உடனே வேலூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லுமாறு வந்தவாசி டாக்டர் கூறிவிட்டார். நேராக, 9-5-83 மாலை 7 மணிக்கு வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். உடனே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.

1. அதில் எனக்கு இடது பக்கம் 6 மார்பு எலும்புகள் லேசான முறிவுகள். 2. இடது தோள்பட்டை எலும்பு முறிவு (காலர் எலும்பு) 3. வலது பக்கம் இடுப்பு எலும்பு முறிவு. 4. இடது பக்கம் இடுப்பு மூட்டு பிரித்து கூடியது. எனத் தெரிந்தன. இத்துடன் மூச்சுத் திணறல், கடுமையான வலி, முதல் நான்கு, ஐந்து நாட்கள் சரியான நினைவுகள் இல்லை. மயக்க மருத்துகள் கொடுக்கப்பட்டன. சிறு நீர் கழிய குழாய் பொருத்தப்பட்டது. குளுகோஸ் ஏற்றப்பட்டது.

இந்த நிலையிலும் கூட என் மனைவி அசையா நம்பிக்கையுடன் அம்மாவையே நினைத்துத் துதித்துக் கொண்டு இருந்தாள். நான் பஸ்ஸில் அடிபட்டு வீழ்ந்தவுடனேயே “அம்மா என் கணவனை உன்னிடம் விட்டு விட்டேன். இனி நீயே கதி. மறுமுறை வரும்போது என் தாலியை உனக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறேன்” என வேண்டிக் கொண்டாளாம். வேலூர் மருத்துவமனை டாக்டர்களும் எனக்கு சிறுநீர் சரியாக கழியும் வரை, நிச்சயமாகக் கூறுவதற்கில்லை எனச் சொன்னார்களாம். சிறுநீரகமும், சிறுநீர்ப்பையும் பழுது ஏற்பட்டு இருக்குமோ என ஐயப்பட்டார்களாம்.

1 வாரத்தில் சிறுநீர் தானாகவே பிரியும் நிலை ஏற்பட்டது. ஆங்கில மருத்துவம் ஒரு புறம் நடக்க, அம்மன் பிரசாதங்கள் பல கோயில்களில் இருந்து நண்பர்கள் கொடுத்து வந்தனர்.

அம்மாவின் அருளால் டாக்டர்களே வியக்கும் வண்ணம் 1 மாதத்திற்குள்ளாகவே லேசாக நடந்து செல்லும் நிலைக்கு வந்து விட்டேன்.

“அம்மாவின் கருணை, அருள் இரும்புத் தகடு” போல் இருந்து என்னைக் காப்பாற்றி விட்டது. அம்மா எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாள். மறுபிறவி கொடுத்தாள்.

இவ்வளவிற்கும் நான் மிகவும் சாமானியன். அம்மாவின் தொண்டன் எனச் சொல்லக்கூட அருகதை அற்றவன்.

அம்மாவின் கோயிலுக்குச் சில முறைகள் சென்று வணங்கிய சாதாரண மனிதனுக்கே அம்மா இவ்வளவு கருணை கொண்டு அருள்பாலிக்கிறாள் என்றால், அல்லும், பகலும், அணவரதமும் அவள் துதி பாடி வரும் அருள் தொண்டர்களுக்கும் கள்ளமில்லா உள்ளமுடைய பாமர ஏழை மக்களுக்கும், அவள் எவ்வளவு அருள்செல்வம் தருவாள் என்பது அவளுக்கே வெளிச்சம்!

ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி! ஓம் மனங்கனிந்து அருள்வாய் போற்றி! ஓம் மக்களைக் காப்பாய் போற்றி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! ஓம்! ஓம்!

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 39-41

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here