பெண்மை உயர்வா? அல்லது ஆண்மை உயர்வா? என்ற வினா இன்று தேவையற்ற ஒன்றாகிவிட்டது. இப்போது ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் விரவி நிற்கின்றன. வடிவ அமைப்பைக் கொண்டு ஆண், பெண் என்று வேறுபாடு கொள்வது இயற்கையின் செயல் பற்றியது.
ஆண்மை என்பது சிவம். பெண்மை என்பது சக்தி. இவ்விரண்டின் ஆற்றலால்தான் வரலாறு படைக்க முடியும்.
“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தாள் – புவி பேணி வளர்த்திடும் ஈசன்” என்று பாரதி பாடினான் என்றால், பாரதி குறிப்பிடும் ஞானம் எத்தன்மையது? வெறும் அரசியல் ஞானத்தையா? இல்லை, அரசியல் ஞானம் நாட்டிற்குத் தலைமை தாங்கப் பயன்படலாம். ஆனால் ஆன்மிக ஞானம், அரசியலையெல்லாம் கடந்த ஆன்மிக உலகில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதோடு அழியா வரலாற்றினைப் படைத்துவிடும்.
மனிதன் தெய்வமாகலாம் என்றார் வள்ளுவர். ஆண்மை பெற்றவர்தான் தெய்வமாக முடியும் என்பதல்ல வள்ளுவர் கருத்து. பெண்மையும் உள்ளடக்கிய மானுடத்தைக் கருத்தில் கொண்டுதான் வள்ளுவர் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். இதனையே “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” – என்று பாடினார். அதன்படி ஆன்மிக ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய முறையோடு, பயன்படுத்த வேண்டிய நேரத்தோடு பயன்படுத்தினால் பெண்ணும் தெய்வமாகலாம்.
கண்ணகி கோவலன் மனைவி, மணிமேகலை கோவலன் மகள், ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண்கள் உலகம் போற்றும் இலக்கிய நாயகிகளாகி விட்டனர். கண்ணகி தெய்வமாகிவிட்டாள். மாரியம்மன் என்ற பெயரில் தமிழகத்திலும், இலங்கையிலும், கோலாலம்பூரிலும் தெய்வவடிவில் காட்சியளிக்கிறாள். கோள எல்லையில் மங்களாதேவி என்ற பெயரில் இருக்கும் கண்ணகி கோவில் இன்று பிரச்சனைக்குரிய கோவிலாக இருப்பதை நாம் அறிவோம்.
வாய்மூடி மௌனியாக, ஒரு குடும்பப் பெண்ணாகச் சோழநாட்டில் காட்சியளித்த கண்ணகி ஈசன் தந்த ஞானத்தைப் பயன்படுத்தி ஆட்சி பீடத்தையே அடிபணிய வைத்துத் தன் ஆன்மிக பலத்தால் மதுரையைத் தீக்கிரையாக்கிக் கோளச் செங்குன்றத்தில் தெய்வ வடிவு பெற்றாள் என்பதைப் பார்க்கும் பொழுது பெண்மை நலம் பெற்றவர்கள் தங்கள் ஆன்மிக பலத்தைப் பயன்படுத்தி உலகிற்கு எத்துணையோ நல்ல காரியங்கள் செய்ய முடியும் என்பதை அறிகிறோம்.
மதுரையைத் தீக்கிரையாக்கியது பெண்மைக்கு முரணானது என்று பலர் நினைக்கக் கூடும். “காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்” என்று சபதம் செய்த கண்ணகி, அந்த ஆவேசத்திலும் பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வண்ணம் நடந்து கொண்டாள். “மதுரை பற்றி எரியட்டும்” என்று விதிவிலக்கு அமைத்து நல்லவர்களைப் பாதுகாக்கிறாள். ஆன்மிகப் புரட்சி செய்யும் அதே நேரத்தில் நல்ல சமுதாயத்துக்குத் தீங்கு நேராவண்ணம் காத்து நிற்கும் ஆற்றலையும் நாம் பார்க்கிறோம்.
1500 ஆண்டுகளுக்குப் பின் அநீதியைத் துடைத்துச் சமுதாயத்தைப் பாதுகாத்த அந்தக் கண்ணகியைப் போல் இன்று ஆயிரம் கண்ணகிகள் தோன்றி உலகெங்கும் தமது ஆன்மிக பலத்தால் சமுதாயக் கொடுமைகளை எதிர்க்க முன்வர வேண்டும்.
சமுதாயத்தில் உருவாகும் கொடுமைகளைத் தகர்த்தெறியும் பொறுப்பு ஆடவர்க்குத்தான் உண்டு என்று பெண் மக்கள் எண்ணக்கூடாது. ஆடவர்க்கு வாழ்க்கைத் துணைவியாக இருப்பது மட்டும்தான் பெண்களின் கடமை என்று தங்கள் எல்லைகளைச் சுருக்கிக் கொள்ளுதலும் கூடாது. கரிகாற் பெருவளத்தான் இமயம்வரை கொடிகட்டி வாழ்ந்தவன் தான். அன்று அவன் கட்டிய கல்லணை இன்றும் அறிவியல் சவாலுக்கு ஓர் வெற்றியாக விளங்குகிறது. இவ்வளவு சிறப்போடு வாழ்ந்தும், காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம் மருமகன் ஆட்டளத்தியைக் காக்கவும் முடியாமல், கண்டுபிடிக்கவும் முடியாமல் திகைக்குங்கால், கரிகாலன் மகள் ஆதிமந்தி அக்காவிரி நீரின் பின்னே சென்று, “மலையை ஒத்த எம் பெருமானே” என்று பன்முறையும் கூவியழ அவளது ஆன்ம சக்திக்கு அஞ்சிய கடல், அவள் கணவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அன்று முதல் இன்றுவரை ஆதிமந்தி மாரியம்மன் கோயில் முன்னே, பக்தினிப் பெண்கள் எழுவரில் ஒருத்தியின் சிலையாக வணக்கப்படுகின்ற காட்சியைப் பார்க்கிறோம்.
மணிமேகலை மாதவியின் மகள், ஆனால் “மணிமேகலை என் மகளல்ல கண்ணகியின் மகள்” என்று சொல்கிறாள் மாதவி. மணிமேகலையும் தன் தாய் கண்ணகி செய்த புரட்சியைப் பின்பற்றி, சமுதாயத்தை அழித்து வந்த பசிப்பிணியைத் தன் ஆன்மிக பலத்தால் போக்கினாள். அன்றைய பசிப்பிணி மருத்துவச்சியாக வாழ்ந்தவள் மணிமேகலை.
சமுதாயப் பணியில் ஈடுபடும் இன்றையப் பெண்கள், இப்படிப்பட்ட பெண்களின் கதைகளை வெறும் செவிச் சுவைக்காக மட்டும் படிக்காமல், இந்தப் பின்னணியில் தங்கள் கல்வி மற்றும் சமூக வசதி மற்றும் திறமைகளை நாட்டுப் பணிகளுக்கு எப்படியெல்லாம் அர்ப்பணித்துக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனை செயல் வடிவம் பெறும்போது, நாம் படைக்கும் வரலாறு நிச்சயம் காலத்தால் போற்றப்படும்.
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 25-26
]]>