தமிழக வரலாறும், நாகரிகமும் தலை மயங்கிக் கிடந்த பொழுது சேக்கிழார் அவதரித்தார். அவர் காலத்தின் மாமருந்தெனத் தோன்றித் தமிழ் நாகரிகத்திற்கு அரண் அமைத்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய பெரியோர் வரலாற்றைப் பெரிய புராணம் எனும் மகாகாப்பியமாகச் செய்து, தமதிழகத்தின் கருத்து, உணர்வு, சமுதாயம் வளர்த்து வாழ்ந்த இயல்பு ஆகியவற்றை அறிவுறுத்தினார்.

‘‘செழுந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறை வெல்ல வேண்டும்”, என்பதே சேக்கிழாரின் குறிக்கோள். “திசையனைத்தின் பெருமையெலாம் தென் திசையே வென்றே வேண்டும்” என்பது அவர்தம் ஆர்வம். “செழுந்தமிழ் வழக்கு”, என்பது சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முற்பட்டே சிறந்து, விளக்கமுற வளர்ந்து இருக்கிறதென்பது அவரது சித்தாந்தச் செந்நெறி. சேக்கிழார் காட்டும் சமுதாயத்தில் பிரதானமானது அன்பு நெறி. “அன்பே சிவம்” என்பதை அறிவுறுத்துகிறார். அன்பு தவத்திலும் சிறந்தது. அன்பிலும் உயர்ந்த சீலம் உலகத்திலேயே இல்லை. இறைவன் திருவருளை அடைவதும் அன்பால்தான். அன்பு தூய்மையானது. வணிக நோக்கில்லாதது. அன்பு உயிரின் உணர்வு; உயிரின் ஒழுக்கம், பகைக்கு மாறானது. வாழ்க்கையின் முதலாக, மையமாக, முடிவாகப் பரிணமிக்க வேண்டியது அன்பே என்பது சேக்கிழாரின் தத்துவம். அன்பே அவரது சமுதாயக் கொள்கை. அன்பு நெறியே கோட்பாடு. சேக்கிழாரின் சிந்தனையில் அன்பு நெறியினை அடுத்து வருவது தொண்டு நெறி. தூய அன்பில் ஒப்புரவு நெறி தோன்றும்; திருத்தொண்டில் அந்நெறி மலரும். அன்பின் விளைவு தொண்டு. அன்பின் பயன் தொண்டு, தொண்டு என்பது புலன்களில் ஒன்றிய பொறிகளின் வாயிலாகச் செய்யப்படும் பணி. பணிகளின் வகையையும், தரத்தையும் விட, பணி செய்யும் மனப்பாங்கே முக்கியம். மனத்தால்வாக்கால் செய்யும் தொண்டு உயர்ந்தது. ஆயினும், அவற்றைவிட உயர்ந்தது கைகளால் செய்யும் தொண்டு என்கிறார்.

சமுதாயத்தில் சேக்கிழார் அடுத்து நமக்கு வலியுறுத்துவது குறிக்கோள் கொண்ட வாழ்க்கை, பெரிய புராணத்தில் வருகிற அடியார்கள் அனைவரும் குறிக்கோள் உடையவர்கள். தமது குறிக்கோளில் உறுதியாக நின்றவர்கள். தம் உயிரிலும் குறிக்கோள் உயர்ந்ததாக எண்ணியவர்கள். குறிக்கோளை அடைவதற்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்கள். குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை என்பது இடர்களைப் பற்றிக் கவலைப்படாதது. ஆங்கு பாசமும் இல்லை; பழிக்கு அஞ்சுதலும் இல்லை. குறிக்கோளை நிறைவேற்றுதலே இலக்கு. இன்பத்திலும் துன்பத்திலும், இழப்பிலும் ஈட்டத்திலும், குறைகளிலும், நிறைகளிலும், தோய்ந்து நின்று விடாமல், அன்பையும் நாட்டையுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்தல் சேக்கிழார் காட்டும் சிறப்புற்ற வாழ்க்கை, சமுதாயத்தில் சிறப்பையும் இன்ப அன்பையும் தரும் வாழ்க்கை.

மேலும், சேக்கிழார் சாதி வேற்றுமைகள் அற்ற சமுதாயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இயற்கை வழிப்பட்ட சாதிப் பிரிவுகள் அன்று இருந்தன. ஆனாலும் அவை வற்புறுத்தப் பெறவில்லை. உறவுக்குத் தடையாகவும் இல்லை. தெளிவாகச் சொன்னால் சாதி வேற்றுமைகளைப் பாராட்டாத ஓர் சமுதாய அமைப்பு அன்று இருந்தது. அங்கு ஒரே குல உணர்வுக்குத் தடையில்லை. அடுத்துச் சேக்கிழார் நமக்கு வகுத்துக் காட்டுவது சமுதாயத்தில் இருந்த வழிபடும் உரிமை. வழிபடுதல் என்பதில் புனலாட்டுதல், மலர் சொரிதல், பாடுதல், பரவுதல், ஆர்வத்துடன் அணைத்தல், உச்சி மோத்தல் ஆகிய அனைத்தும் உண்டு என்பதைச் சேக்கிழார் தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறார்.

சேக்கிழார் காட்டும் சமுதாயத்தில் பண்டைத் தமிழர் நெறியாகிய காதல் திருமணமும் இடம் பெறுகிறது. இடையில் வந்த திருமணமாம் பெற்றோர் பேசி முடிக்கும் திருமணமும் கூறப்பெறுகிறது. சமுதாயத்தில் பெண்ணின் பெருமை பொpதும் போற்றப்படுகிறது. பெண் அடிமை என்பதோ, பெண் ஆணின் உடைமை என்பதோ தமிழர் கொள்கையன்று எனச் சுட்டிக் காட்டுகிறார்.

மனித வாழ்வில் காதலைவிட நட்பே சிறந்தது. நட்பில்லா வாழ்க்கை நிலவில்லாத வானம் போன்றது. நட்பு ஓர் உயரிய வாழ்க்கை முறை எனக் காட்டுகிறார் சேக்கிழார். விருந்தோம்பலைச் சிறந்த வேள்வியாக போற்றுகிறார். வாணிகச் சிறப்பு, அரசியல் நீதி, இறை வழிபாடே வாழ்வுப் பொருள் என்பவையெல்லாம் சமுதாயத்தின் அடிப்படையெனக் காட்டுகிறார் சேக்கிழார். மதம் மக்கள் மன்றத்தைத் தழுவாதது. சமயம், மக்கள் மன்றத்தை தழுவியதாக, மனிதகுலத்தை ஆக்குவதற்காகவே தோன்றியது. மதம் உருவாக்கப்பட்டது. சமயம் பரிணாம வளர்ச்சியில் உருவானது. மதத்திற்கு பகுத்தறிவு பகையானது. சமயத்திற்கு பகுத்தறிவு உடன்பாடானது. மதம் மறுமையைப் பற்றி பேசுவது. சமயம் இம்மையையும், மறுமையையும் பேசும். மதம் ஊழ்வினையின் வலிமையை மிகுத்துக் காட்டும். சமயம் ஆள்வினையை மிகுத்துக்காட்டும். மதம் சிற்றெல்லைகளைப் படைக்கும். சமயம் எல்லைகளைக் கடந்த பொதுமையைப் படைக்கும். இத்தகு சமயமே தமிழர் சமயம். இதனையே சேக்கிழார் ‘‘செழுந்தமிழ் வழக்கு” என்கிறார்.

தெளிந்த அன்புடையார் அன்பு நெறியில் நின்று வாழ்வார். அன்பில் விளைவதே அறநெறி. அன்பும், அறமும் ஒன்றிணைந்த இருபண்புகள். அன்பு மனித குலத்தின் கற்பு, அன்புதான் சிவம், அன்பில் தோய்ந்த மனம் அறநெறியில் நிற்கும். அன்பு நெறியில் நிற்பவர் தொண்டு நெறியின் தலைப்படுவர் எனக் கோவையாகக் கூறுகிறார் சேக்கிழார்.

சேக்கிழார் சொல்லும் சேவையும் சிந்தனையைத் தருகின்றன. புத்தியைப் புதுமைப்படுத்துகின்றன. மனத்தைத் தூய்மை செய்கின்றன. அன்பினைத் தருகின்றன. உயிர்க்குலம் ஒன்றாக இணைகிறது. இதுவே சேக்கிழார் காட்டும் அறநெறி; அவரது சிந்தனையால், சொல்லால் மக்களுக்கு அவர் செய்யும் சேவையாகும்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here