2-4-82 அன்று நடந்த ஆன்மிக, மாநாட்டில் ஐதராபாத் இராமகிருஷ்ண மடாலயத் தலைவர் சுவாமி, அரங்கநாதானந்தா அவர்கள் ஆற்றிய வழித்துணைப் பேருரையின் தமிழாக்கம்
”விஞ்ஞானத்தால் புளூட்டோனியம்என்ற மூலப்பொருளின் இயல்பை மாற்றி வேறொன்றாக ஆக்க முடியும். ஆனால் அதே விஞ்ஞானம் மனிதனுடைய மனத்தில் மறைந்து உறைகின்ற தீமையை மாற்ற வலுவிழந்து நிற்கின்றது.” என்று கூறினார் மாபெரும் விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டீன். இன்று நாளும் வளர்த்தோங்கும் குற்றங்கள், முதிரா இளைஞர் செய்யும் தவறுகள், பாலுணர்ச்சித் தவறுகள், போதைப் பொருள்களின் வளர்ச்சி என்பவற்றால் நரம்புக் கோளாறுகளும் மனநிலைக் கோளாறுகளும் தற்கொலைகளும் மலிந்து வருகின்றன. இம்மலிவு விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத் துறையிலும் மேலோங்கி விளங்கும் நாடுகளில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இம்மட்டோடு நில்லாமல், பொருளாதார நிலையில் வளர்ந்து வரும் நாடுகளையும், மெதுவாக இக்கொடுமைகள் பற்றத் தொடங்கி விட்டன. இதற்குரிய அடிப்படையான காரணம் மேலை நாட்டு விஞ்ஞான வளர்ச்சியின் மேல்கொண்ட அபார மதிப்பேயாகும். வேறுவகையாகக் கூறுமிடத்து அறிவை நாடி மனிதன் செய்யும் முயற்சிகளே அவனுடைய வளர்ச்சி தன்னிறைவு, முன்னேற்றம் என்ற வடிவங்களில் மனிதனை எதிர்நோக்கும் பிரச்சினைககளாக மாறிவிட்டன. பர்ட்ராண்ட் ரசல் (Bertrand Russel) என்ற பெரியார். தம்முடைய ‘‘சமுதாயத்தின் மேல் விஞ்ஞானத்தின் தாக்கம்” (பக் 120-21) என்ற நூலில், ‘‘வழிகளை ஆராய்கின்றதில் மனிதனுக்குள்ள ஆற்றலுக்கும், முடிவுகளில் மனிதனுடைய முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகின்ற இயல்புக்கும் இடையே நடைபெறும் போட்டியின் நடுவே நாம் இருக்கின்றோம். மனிதன் அறிவு துறையில் முன்னேறியது போல ஞானத் துறையிலும் முன்னேறினாலொழிய அவனுடைய அறிவு வளர்ச்சி அவனுடைய துயரத்தை மிகுதிப் படுத்துவதற்கே பயன்படும்” என்று குறிக்கின்றார்.
இந்த நவீன யுகத்தை ‘‘விஞ்ஞான யுகம்” என்று கூறுகிறார்கள். இந்த விஞ்ஞான யுகத்திற்கு முற்பட்ட காலத்தில் அஞ்ஞானம், மூட நம்பிக்கை, அச்சம், என்பவை மனிதனிடம் தலைதூக்கி நின்றன. ‘‘அறிவு, அச்சத்தை அழிக்கின்றது” என்பது நவீன விஞ்ஞானத்தின் பிரசித்தி பெற்ற கூப்பாடாக இருக்கின்றது. சென்ற நான்கு நூற்றாண்டுகளில் புற உலகத்தைப் பற்றி ஆராய்கின்ற பூத விஞ்ஞானத்தின் பல துறைகள், பரிசோதிக்கக் கூடியதும், பிறருக்கு அறிவுறுத்தக் கூடியதும், நிரூபிக்கப்பட்டதுமான பல பகுதிகளைக் கண்டு சேகரித்து வைத்துள்ளன. நவீன பூத விஞ்ஞானத்தின் சிறப்பாக இருக்கின்ற சுதந்திரமான ஆராய்ச்சியே இற்றை நாளில் விஞ்ஞானம் சாதித்துள்ள செயல்களை கண்டுபிடிப்பதற்குரிய மூல உந்துதலாகும். சுதந்திரமான இந்த ஆராயும் அறிவு தூய விஞ்ஞானத்தில் (Pure Science) சத்தியத்தின் வடிவை அறிய உதவிற்று. அதேபோல மனிதனுடைய துயரச்சுமையை குறைப்பதற்கு, பயன் விஞ்ஞானத்திலும் (Appilled Science) இது உதவ முன் வந்தது.
பெரிதும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இக்காலத்தில் தோன்றியுள்ள மன, சமுதாயக் கோளாறுகளும் இவற்றின் பயனாக எதிர்நோக்கி நிற்கும் சமுதாயப் பேரழிவும் சேர்ந்து விஞ்ஞானத்தையே வெறுக்கின்ற ஒரு மனநிலையை இந்நாடுகளில் உண்டாக்கி உள்ளன. தொழில்நுட்பத் துறை அல்லது அதீதமான தொழில்நுட்பப் பகுதி என்பவற்றைப் பொறுத்தமட்டில் இந்த வெறுப்புணர்ச்சி ஓரளவு நியாயமானதாகக் கூட இருக்கலாம். ஆனால், தூய விஞ்ஞானத்தைப் பொறுத்தமட்டில் இவ் வெறுப்புணர்ச்சி பரவுமேயானால் அது பெரிய துரதிர்ஷ்டமாகும். தூய விஞ்ஞானம் என்பது சத்திய சோதனையிலும் மானிட நலத்திலும் நாட்டம் கொண்டதாகலின் மனிதனுடைய மிக உயர்ந்த குறிக்கோள் முயற்சியாக அது என்றுமே இருந்து வரும்.
புறத்தே காணப்படும் இயற்கையின் புறப்பகுதிகளைப் பற்றியே சுற்றிவந்து ஆராய்கிறது விஞ்ஞானம். வாழ்க்கையின் புறத்தே உள்ள பௌதிக சூழ்நிலையைப் பற்றி ஆராய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தூய விஞ்ஞானம் என்பது மனிதனின் உள்ளே உறைகின்ற அக உலகத்தையும் ஆராய முற்பட வேண்டும். இன்றைய நிலையில் துரதிர்ஷ்ட வசமாகப் புற உலகைப் பற்றி ஆராய்கின்ற விஞ்ஞானம் அக உலகை ஆராய்கின்ற விஞ்ஞானத்தை விட்டு மிக நெடுந்தூரம் சென்று விட்டது. இதன் பயனாகப் புற உலக விஞ்ஞானத்தின் எதிரே அப்பாவி மனிதன் பரிதாபத்துக்குரியவனாகவும், நிலைபேறில்லாதவனாகவும் காட்சியளிக்கின்றான். மேலும், அவனுடைய புவியீர்ப்பு மையம் அவனுள் இல்லாமல் அவனுக்கு அப்பாற்பட்டே விழுகிறது.
இதனால் விஞ்ஞானமும் ஏன்? அவனே கூட அவனை ஒரு அஃறிணைப் பொருளாகக் கருதி நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பூத விஞ்ஞானம் மிகப் பழங்காலத்தில் அவனைப் பற்றியிருந்த பல்வேறு அச்சங்கள் – முடிவெடுப்பதில் தயக்கம் என்பவற்றிலிருந்து அவனை விடுதலை செய்தது உண்மையென்றாலும், இதற்கு மாறாக அவனுடைய அகவுலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாததனால் ஏற்படும் பல்வேறு வகையான அச்சங்கள் உறுதியின்மை ஆகியவற்றில் அவனைக் கொண்டு தள்ளிவிட்டன. இயற்கையின் புறத்தைப் பற்றி ஆராயும் அறிவு எவ்வாறு விஞ்ஞானம் என்று கூறப்படுகிறதோ அதேபோல இயற்கையின் பரிணாமத் தத்துவத்தின் விளைவாக உள்ள மனிதனின் அகத்தைப் பற்றி ஆராயும் ஆராய்ச்சியும் விஞ்ஞானம் என்றே அறியப்பட வேண்டும். விஞ்ஞானம் என்பது குறிப்பிட்ட சில மெய்ம்மைகளோடு (Facts) கட்டப்பட்டுள்ளது என்று நினைப்பது தவறு. து.ஆர்தர் தாம்ஸன் என்ற பிரசித்தி பெற்ற விலங்கியல் நிபுணர் தம்முடைய ‘விஞ்ஞானத்திற்கு ஒரு முன்னுரை” (Home University Library Edu. Page: 58) என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.‘‘விஞ்ஞானம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மெய்ம்மைகளின் (Facts) தொகுப்பு அன்று. அறிவோடு சார்ந்த மனப்பாங்கேயாகும். எந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சி முறையோடும் விசாரணை முறையோடும் அது இணைக்கப்பட்டிருக்கவில்லை. மனப்பூர்வமாக ஆராய்ந்து செல்லும் அறிவு. சான்றுகளோடு கூடிய முடிவுகள் எதிர்ப்படும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்குவது இல்லை. ஒரு தொழிலதிபர் புதிய ஒரு பிரச்சனையை அணுகும் முறையிலும், ஒரு வழக்கறிஞர் சான்றுகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் போடுவதிலும், ஓர் அரசியல்வாதி குறிப்பிட்ட சட்டத்தை இயற்றச் செய்யும் முயற்சியிலும் விஞ்ஞான முறை என்பது பற்றிய ஒரு சில நுணுக்கங்களைக் காணமுடிகிறது.
எனவே, விஞ்ஞானம் என்பது மெய்ம்மைகளின் குறிப்பிட்ட தொகுப்புக்களின் வரிசை முறையோடு இணைக்கப்படவில்லை என்பதை அறிய வேண்டும். இதன் எதிராக விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் அதாவது பௌதிகம், வேதியியல், தாவர இயல், விலங்கியல் ஆகிய துறைகளில் மெய்ம்மை வரிசை குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பதைக் காணலாம். இத்துறைகள் ஓர் எல்லைக்குட்பட்ட அளவுடையவை என்பதையும், மெய்ஞ்ஞானம் என்பது எல்லையில்லாத ஒன்றை நோக்கிச் செல்வது என்பதையும் அறிய வேண்டும். விஞ்ஞானத்தின் இப்பல்வேறு துறைகளும் வெவ்வேறு பகுதிகள் பற்றி ஆராயத் தொடங்கி நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் அவற்றின் எல்லையைத் தாண்டி, இயற்கையின் புறப்பகுதியை ஆராய்கின்ற பொது விஞ்ஞான ஆராய்ச்சியுள் இணைந்துவிடக் காண்கிறோம். அதேபோல ஓர் அனுபவத்தின் புறப்பகுதி, பொறி புலன்களின் எல்லைக்குட்பட்ட அனுபவப் பகுதி என்பவற்றைத் தாண்டி, இயற்கையின் அகப்பகுதியை ஆராய முற்படுவதே ஆன்மிக விஞ்ஞான ஆராய்ச்சி என்று சொல்லப்படும்.
சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னா இந்தியாவில் தோற்றி வளர்க்கப்பட்ட இந்த எண்ண ஓட்டம் உபநிடதங்கள், கீதை என்பவற்றின் துணையால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்ததைக் காணலாம். பௌதிகப் புறப்பகுதி விஞ்ஞானம்; ஆன்மிக அகப்பகுதி விஞ்ஞானம் என்ற இரண்டையும் ஒருங்கிணைத்துக் காண்பதே வேதாந்தத் தத்துவம் ஆகும். ‘‘பௌதிக உலகம் அவ்வுலகிடை உள்ள பூத உடம்பு, (ஷேத்திரம்) என்பவற்றோடு இவற்றை அறிகின்ற ஆற்றலுடைய அறிபவனையும் (ஷேத்திரக்ஞன்) சேர்த்து அறிவதே உண்மையான ஞானம் ஆகும்” என்று கீதையில் (13:2) கிருஷ்ணன் பேசுகிறான்.
முழுமை பெற்றதும், உண்மையானதும் ஆகிய இந்த ஞானத்தைப் பற்றித்தான் பர்ட்ராண்ட் ரசல் முன்னர் எடுத்துக்காட்டப்பட்ட வாக்கியத்தில் குறிப்பிடுகின்றார். அறிவின் வளர்ச்சியில் இந்த ஞான வளர்ச்சி நிறைந்து நின்றால் ஒழிய மனிதனுடைய அறிவு வளர்ச்சி துயரத்தில்தான் சென்று முடியும்.
இந்த ஆன்மிக விஞ்ஞான ஆராய்ச்சி புறத்தேயல்லாமல் அகத்தே நிகழ்கின்றது. ஆதலின் இந்த ஆன்மிக விஞ்ஞானம் என்பது வாழ்வின் பொருள், மதிப்புகள் (Values) என்பவை பற்றியதாகும். மதிப்புகள் என்பவை, பூத விஞ்ஞானத்தின் மூலம் கற்கப்படுகின்ற பூத இயற்கையிலிருந்து வருவது அல்ல. பூத விஞ்ஞானம் தொழில் நுட்பத்தால் ஆக்கும் இயந்திரங்களாலும் மதிப்புகள் வருவதல்ல. அவை மனித ஆன்மாவின் ஆழத்திலிருந்து வருபவையாகும். இதுபற்றி பர்ட்ராண்ட் ரஸ்ஸல் ‘‘சமுதாயத்தில் விஞ்ஞானத்தாக்கம்” (Impact of Science on Socioty – P.71) என்ற நூலில் கடுமையாகப் பேசுகிறார்.
‘‘இயந்திரத்தை, பூஜிப்பதற்குரிய பொருளாகக் கருதுவது சாத்தானின் புதிய வடிவைத் தொழுவதாகும். அந்த வழிபாடே இக்காலப் பில்லி சூனியப் பயிற்சியாகும். வேறு எவை எவை இயந்திர சாதனத்தால் தோற்றுவிக்கப்பட்டாலும் மதிப்புகள் அவ்வாறு தோன்றுவதில்லை. இதனை அரசியல் தத்துவவாதிகள் ஒரு நாளும் மறக்கக்கூடாது” மதிப்புகள் என்பவை இயந்திர சாதனத்தால் ஆவதில்லை. ஆதலால் அதைப் பூத விஞ்ஞானத்தின் புறப் பகுதியிலிருந்தும் பெறமுடிவதில்லை. எனவே அவை ஆன்மிகம் பற்றிய தாய் மனித இயல்பின் ஆழத்தில் சென்று தேட வேண்டியவையாய் உள்ளன. மதிப்புகள் பற்றிய தத்துவம் மனிதத் தத்துவத்தின் நீள, அகல முழுமையினின்றும் பெற வேண்டியவை ஆகும்.
மேலை நாட்டு விஞ்ஞானம் மதிப்புக்கள் பற்றிய விஞ்ஞானத்தை வளர்க்க் முடியவில்லை. மனித மனத்தின் ஆழத்தை ஆயும் மனத்துவ இயலைத் தோற்றி வளர்த்த பிராய்டு (Freud) போன்றவர்களும் மன ஆழத்தில் பால் உணர்வு, ஹிம்சை, அதிகாரப் பசி என்பவை மட்டும் இருப்பதாகக் கண்டு அவற்றை வெளிப்படுத்தினர். இதற்குரிய காரணமும் உண்டு. இவர்கள் உலகாயதக் கொள்கையின் அடியாகப் பிறந்து பிடிவாதமான வாதங்களை (Dogma) விஞ்ஞான ஆராய்ச்சியிலும் புகவிட்டதால் இந்நிலை தோன்றிற்று. இந்தப் பிடிவாத வாதங்கள் மேலைநாட்டு விஞ்ஞானிகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டதற்கும் ஒரு காரணம் உண்டு. பிடிவாத வாதங்கள் நிறைந்ததும் சகிப்புத் தன்மை இல்லாததுமான மேலை நாட்டு சமய சம்பிரதாயங்கள் மேல் இந்த விஞ்ஞானிகள் கொண்ட எதிர்ப் புணர்ச்சியே இக்காரணமாகும். மேலைநாட்டுச் சமய சம்பிரதாயங்கள் விஞ்ஞான, ஆன்மிக அடிப்படையில் தோன்றாமல் இன வேறுபாட்டின் அடிப்படையில் பிறந்தன. இதன் காரணமாகவே இந்தச் சம்பிரதாயங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியையும் சத்திய சோதனையையும் வளரவிடாமல் முற்றிலும் அடக்கி நலிவு செய்தன. இதே சம்பிரதாயங்கள் அந்தச் சமயத்தின் பல்வேறு கிளைகளையும் உலகின் பிறசமயங்களையும் வளர விடாமல் தடுத்தன.
நல்ல வேளையாக இந்தத் துரதிர்ஷ்டவசமான அனுபவம் மேலைநாடுகட்கு மட்டும் உரியதாக இருந்ததே தவிரப் பிற பகுதிகளை இது தாக்கவில்லை. இந்திய நாட்டை பொறுத்தவரை அதனுடைய மிகப் பழைய வரலாற்றுக் காலம் முதல், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனநிலையையும் சகிப்புத் தன்மையையும் அது வளர்த்து வந்துள்ளது. இந்த இரண்டு பண்புகளும் பூத விஞ்ஞானத் துறைக்குள்ளும், ஒரே சமயத்தின் உட்கிளைகட்குள்ளும், மாறுபட்ட சமயங்களிலுள்ளும் புகுந்து பயன்பட்டன. மேலைநாட்டை பொறுத்தவரை ஒரு தொற்று நோய் என்று கூறக்கூடிய முறையில் முரண்பாடுகளின் இடையே ஒற்றுமையைக் காண முற்படாத மனப்பாங்கு வளர்ந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் முரண்பாட்டைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அமைந்திருந்தது. முரண்பாடுகள் என்பவற்றை இந்த நாட்டார் இரட்டைகள் என்று கூறினர். நம்பிக்கை – அறிவுவாதம்; சமயம் – சமயமின்மை சமயம் – விஞ்ஞானம்; மனம் – ஜடப்பொருள்; இயற்கை – இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பவையே முரண்கள் எனப்படும் இரட்டைகள்.
இந்திய நாட்டில் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் புகுந்து வளரப் பேருதவி புரிந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் தம்முடைய ‘‘இந்தியாவைக் கண்டு பிடித்தல்” (Discovery of India) பகச் (626-27) என்ற நூலில் விஞ்ஞானம் மேலை நாடுகளைவிட இந்தியாவில் மிக எளிதாக வளர முடியும் என்று கூறுகிறார். இதற்குரிய காரணத்தை விளக்கும் முறையில் இந்நாட்டைப் பொறுத்தவரை எந்த விஞ்ஞானத்தையும் வரவேற்று உபசரிக்கும் தேசியப் பண்பாடுதான் இதற்குரிய காரணம் என்றுங் கூறுகிறார்.
‘‘மேலைநாடுகளைப் பொறுத்தமட்டில் விஞ்ஞானம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதும் அங்குள்ளவர் அனைவரும் அதற்குத் தம் மரியாதையைச் செலுத்துகின்றனர் என்பதும் உண்மைதான்.” என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை விஞ்ஞான மனப்பான்மையைப் பெறவில்லை.
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 7 (1982) பக்கம்: 15-19
]]>