இந்தத் தலைப்பைக் கண்டவுடன் பலர் முகம் சுளிப்பதைக் ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் நேர்ந்த சில தவறுகளால் சிற்றின்பம் என்பது புறக்கணிக்கப்பட்டது. ஆன்மிக முன்னேற்றத்தை விரும்பாத அஞ்ஞானிகளும், கடையர்களும் மட்டுமே ஈடுபடக்கூடிய ஒரு செயல் என்று இதனைக் கருதத் தொடங்கிவிட்டார்கள். இந்த அவலநிலை பிற இடங்களில் இருந்திருந்தால் அதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஆன்மிகம் வளர்ந்த தமிழ்நாட்டில் – நால்வரும் ஆழ்வார்களும் தோன்றிய தமிழ்நாட்டில் – இந்தத் தவறான எண்ணம் தோன்றியது மிகவும் வருந்ததக்கதாகும். இந்தத் தமிழ் நாட்டின் மிகப் பழைய சமயங்களாகிய சைவம், வைணவம் இரண்டும் பெண்ணிற்கு எல்லையற்ற ஏற்றத்தைத் தந்துள்ளன.
சைவர்கள் தாங்கள் வழிபடும் இறைவனாகிய சிவபெருமானையெ உமையொருபாகனாகக் கண்டனர். சக்தி இல்லையானால் சிவம் தொழிற்பட முடியாது. என்றும் கூறினர். ‘‘பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” – என்று பாடினார் சீவன் முத்தராகிய ஞான சம்பந்தர். திருமூலர் என்ற சித்தர்.
‘‘சத்தி என்பான் ஒரு சாதகப் பெண்பிள்ளை முந்திக்கு நாயகி என்பது அறிகிலார்” – என்று பேசுகிறார், வைணவர்களோ, ‘‘திருவுறை மார்பன்” என்றே பேசுகிறார்கள்.
‘‘அன்று ஆயர் குலக்கொடியோடு அணிமா மலர்மங்கை யொடு அன்பு அளவி” (2078) என்றும், ‘‘பார்வண்ண மங்கை பனிநன்மா மலர்க்கிழத்தி நீர்வண்ணன் மார்பகத்தில் இருக்கை முன் இணைந்து”
என்றும் பாடிச் செல்கின்றனர். இவற்றை யல்லாமல் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மகரிஷிகள், ஞானிகள், தவசிகள், உபநிடத கர்த்தாக்கள் ஆகிய பலரும் இல்வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர் என்பதையும் அறிய வேண்டும்.
எனவே, தமிழர் குடும்ப வாழ்க்கையும் சிற்றின்பமும் தம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்கு ஒரு சிறிதும் தடையாக இருந்ததாக நினைக்கவே இல்லை என்பது உறுதி. அப்படியானால் உலக வாழ்க்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே இச்சிற்றின்பத்தை வைத்துக்கொண்டு, ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முற்பட்ட நேரத்தில் இதனை ஒதுக்கித் தள்ளிவிட்டார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அப்படியும் இல்லை என்பதுதான் இதற்குhpய விடை. இறுதிவரை இம்மைக்குரிய இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு மறுமைக்குரிய சிறப்பையும் பெற்றார்கள்.
‘‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை”
என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. அப்படியானால் ஆன்மிக முன்னேற்றத்திற்கு இல்வாழ்க்கை தடை என்ற கொள்கை எப்போது வந்தது? பெண்ணுக்குரிய மதிப்பையும், உரிமையையும் தராமல், பெண் என்பவள் பாவ ஜன்மம் என்ற கருத்துடைய சமயம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் புகுந்து தமிழர்களை ஆட்கொண்ட நிலையில்தான் இத்தவறான கொள்கை பரவலாயிற்று. துறவுக்கு அளவு மீறிய மதிப்புத்தரத் தொடங்கினர் சாதாரண மனிதர்கள். துறவிகட்குக் கிடைக்கின்ற மதிப்பைப் பார்த்து அது ஏதோ உயர்ந்தது என்றும் அதன் வழியேதான் வீடுபேற்றை அடைய முடியும் என்ற எண்ணமும் வலுப்பெற்றதால் வந்த வினை இது.
இந்நிலை தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் நம் முன்னோர்கள் சிற்றின்பம், பேரின்பம் என்ற இரண்டையும் ஒருமைப்படுத்திக் கண்டனர். பேரின்பத்தை அடையச் சிற்றின்பத்தையே வழியாகக்கூடக் கொள்ளலாம் என்று கூறினர். இவ்வாறு அவர்கள் நினைத்த காரணத்தால்தான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறை அன்பில் தோய்ந்து பாடும் பொழுதுகூட அகத்துறையில் (காதல் முறையில்) பாடினர். இறைவனைக் காதலனாகக் கொண்டு தம்மைக் காதலியாகப் பாவித்துக் கொண்டு அகத்துறைப் பாடல்கள் பாடினர். அப்படியானால் காதல் பற்றி இவர்கள் என்ன நினைத்திருந்தார்கள் என்று சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா?
இக்காலத்தில் காதல் என்று கூறினவுடன் ஆண், பெண் உடலுறவு என்று பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு தவறாகப் பொருள் கொண்டால்தான் இதுபற்றிய சந்தேகங்களும் எழுந்தன. உலகில் தோன்றிய எந்த உயிரும் பால் உணர்ச்சிக்கு விலக்கில்லை. மனித உணர்ச்சிகள் அனைத்தினுள்ளும் மிக மிக வலுவானதும், எளிதில் அழிக்க முடியாததுமான உணர்வு பால் உணர்வேயாகும் என்ற இன்றைய விஞ்ஞானம் கூறுவதை நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளாகவே அறிந்திருந்தனர். ‘‘ஐந்தும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை” என்பது திருமந்திரம். அப்படியானால் வேறு வழி என்ன? இந்த பாலுணர்ச்சியை வைத்துக்கொண்டே ஏன்? இதனையே வழியாகக் கொண்டே தாம் முன்னேற வழி கண்டனர் நம்முன்னோர்.
காமம் காதல் என்பவற்றைப் பற்றி அவர்கள் அறிந்து கூறுபவற்றை முதலில் காண வேண்டும். இது வெறும் உடலுறவு அன்று என்று கண்ட அவர்கள் ஒருபடி மேலே சென்று உண்மையான காதலுக்கு உடல் தேவை இல்லை என்றுகூடக் கூறினர். அப்படியானால் காதல் என்பது என்ன? அது ஒரு மனநிலை என்று கண்டனர் பழந்தமிழர்.
‘‘காமம் காமம் என்பது காமம் அணங்கும் பிணியும் அன்று ……………………………………………………………………………………….. பாணியும் உடைத்து அது காணுகர்ப் பெறினே என்று பேசுகிறது சங்கப் பாடல்.
‘‘மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்விதலைப்படுவார்”
என்கிறது திருக்குறள். எனவே காமம் என்பது ஒருவகை மனநிலை என்றும், ஒரு சிலரே அதன் இயல்பை அறிந்தவர்கள் என்றும் நம் நூல்கள் கூறுகின்றன. சிலர் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய ஒருவகை மனநிலைதான் காமம் என்றால் இதனை எவ்வாறு அறிந்து கொள்வது.
காதலில் உயிர்நாடியான பகுதி யாது? தனக்கு என்று வேண்டாமல் அவனுக்கு என்று தன்னையே சர்வ பரித்யாகம் செய்வதே தலையாய காதல் எனப்படும். இதனாலேயே காதலர்களைப் பற்றி கூறவந்த நம் முன்னோர் இரண்டு உடல்கள், ஒரே உயிர் என்று கூறினார்கள்.
‘‘தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே” என்று பேசுகிறது திருக்கோவையார் என்ற நூல். தலையாய காதலில் இவள் அவனுக்காகத் தன்னைத் தியாகம் செய்கிறாள்; அவன் இவளுக்காகத் தியாகம் செய்கிறான். சுருங்கச் சொன்னால் ‘‘நான்” என்ற அகங்காரத்தையும் ‘‘எனது” என்ற மமகாரத்தையும் அடியோடு ஒழிக்க வழிவகுப்பது தலையாய காதலாகும்.
நான், எனது என்ற இரண்டும் ஒழிவதுதான் வீடு பேற்றுக்கு வழியாகும் என்ற கருத்தை ‘‘யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்ற குறளில் வள்ளுவர் பேசுகிறார். பேரின்பத்தை அடைய வேண்டுமானால் அகங்கார, மமகாரங்கள் அழிய வேண்டும். அவை இரண்டையும் எப்படி அழிக்க முடியும்? சிறந்த காதலில் இவை இரண்டும் தாமாகவே அழிந்துவிடும். எனவே, சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழியாக இருக்கிறது என்று கூறியதில் தவறு என்ன இருக்கிறது?
இந்த அருமைப்பாட்டை நன்கு உணர்ந்த நம் முன்னோர் ‘‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்” என்று கூறினார்கள். அதாவது இறுதிவரை இல்லறத்தில் இருந்து கொண்டே நல்ல முறையில் வாழலாம். அப்படியானால் அடுத்த உலகம் இல்லாமற் போய்விடும் என்ற அச்சம் தோன்றுகிறதா? நன்றாக ஆராய்ந்துபார்! இரண்டையுமே நீ பெற முடியும் என்ற கருத்தில் எண்ணில் (ஆராய்ந்து பார்த்தால்) ‘‘நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை” என்று பேசுகிறது தேவாரம்.
சிற்றின்பங்கூடப் பேரின்பத்திற்கு வழியாக முடியும் என்பதைக் கண்டதுடன், சிற்றின்பத்தின் உயிர்நாடி சர்வ பரித்யாகம் என்பதையும் கண்டார்கள். எனவேதான் இறைவனிடம் இடையறா அன்பு செலுத்தும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் அகத்துறையில் பாடினர். தம்மை நாயகியாகக் கருதிக்கொண்டு இறைவனை நாயகனாக நினைந்து பாடினார். தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் இந்த அற்புதத்தைக் காண முடியாது. இதனால்தான் ஒழுக்கம் பற்றிய நூலை இயற்ற வந்த திருவள்ளுவனார் ‘‘காமத்துப்பால்” என்ற ஒரு பகுதியைப்பாடித் திருக்குறளில் சேர்த்தார். ‘‘திருவாசகம்” பாடிய வாயால் மணிவாசகப் பெருமான் ‘‘திருக்கோவையார்” என்ற அகத்துறை முழுநூலைப் பாடினார். இவை ஒருபுறம் இருக்க மூன்று வயது நிரம்பிய திருஞானசம்பந்தரும், நம்மாழ்வாரும் எடுத்த எடுப்பிலேயே அகத்துறைப் பாடல்கள் பாடினர். மூன்று வயதுடைய பாலகனும் அகத்துறைப் பாடல் பாடினால் அது சரியா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அகத்துறை என்பது அகங்கார மமகாரங்களை ஒழிப்பதற்கேற்றவழி என்பதைப் புரிந்து கொண்டால் சிற்றின்பத்தின் மூலமே பேரின்பத்தை அடையலாம் என்பது விளங்கும்.
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
]]>