இறைவன் இருக்கிறான்
முதலில் மனிதனுடைய நிறைவு பற்றிக் கூறிவிட்டு அடுத்தபடியாக மனித ஒருமைப்பாடு பற்றிப் பேச விழைகின்றேன். ‘‘மனிதன் சமுதாயப் பிராணி” எப்பொழுதும் ஒன்றை எதிர்நோக்கி ஏங்குவது அவனது இயல்பு. சிக்மண்ட் ப்ராய்ட் போன்ற மனத்துவ வாதிகள் சமயம் என்பது ‘‘மனப் பிராந்தி” என்று கூறினாலும், ஒயிட்ஹெட் போன்ற தத்துவவாதிகள் ‘‘மனிதன் தனிமையில் செய்வது தான்” சமயம் என்று கூறினாலும் ஒவ்வொரு மனிதனின் அகமனத்தின் ஆழத்துள் இறைவனைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. வில்லியம் ப்ரௌன் போன்ற மனத்துவவாதிகள் இதுபற்றிப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து ஒவ்வொரு மனிதனுடைய அகமனத்தின் ஆழத்தில் கடவுள் பற்றிய ஏக்கம் இருப்பதைக் கண்டு கூறியுள்ளார். மனிதன் அளவுக்குட்பட்டவன் எனவே அளவற்ற ஒன்றை அடைய அவன் விரும்புகிறான். காலத்தால் அவன் கட்டுண்டாலும் காலங்கடந்த நித்தியத்துவத்தை அவன் விழைகின்றான், அவன் மானிடன், தேவ நிலையை நாடுகிறான். அவன் முடிவுடையவன் என்றாலும் ஆன்மிக மதிப்பீடுகளில் (Spiritual Values) அவன் முடிவிலா நித்தியத்துவத்தை ஏற்றுக்கொள்கிறான்.
இன்று நம்முடைய சமுதாயத்தில் ஆன்மிக மதிப்பீடுகளை மறுபடியும் உயிர் பெற்றெழச் செய்வது பற்றி இன்று இந்த மாநாட்டில் நாம் சிந்திக்க வேண்டும் மனிதன் இறைவனிடம் ஒன்றவே விழைகிறான். இதற்குப் பதிலாக உலகாயதம், மானிடம் (Humanism) போன்ற பிற தத்தவங்களையும், குறிக்கோள்களையும் ஏற்றதால் அவை இதற்கு ஈடு செய்ய முடியாத சாதாரணங்களாக உள்ளன. இவை அனைத்தும் மனிதனுடைய அகமனத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. மனிதனுக்குக் கடவுள் தேவைப்படுகிறார்; கடவுளுக்கு மனிதன் தேவைப்படுகிறான். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். எனவே அவன் அவருக்காகவே வாழ்கிறான். விவிலிய நூலில் தோற்றம் (Genesis) என்ற பகுதி (4:26) மனிதனுடைய புனிதத்தன்மை பற்றியும் படைப்பின் காரணம் பற்றியும் தெளிவாகக் கூறுகிறது. நாம் கடவுளால் கடவுளுக்காகவே படைக்கப்பட்டதால் கடவுளை விட்டு நீங்கி இருக்க முடியாது.
எல்லா நிலையிலும் ஆன்மிக மதிப்பீடுகள் புகுத்தப்பட வேண்டும் ஆன்மிக மதிப்பீடுகளைப் புகட்ட வீடே சிறந்த இடம் என நான் நம்புகிறேன்.
இலஞ்சம் ஒழுக்க மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்பவை பற்றிய பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் எதிர்க்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகட்கு வகுக்கப்படும் பாடத்திட்டங்களிலேயே நேர்மை, தாணயம், சத்தியம் என்பவை பற்றி அறிந்துகொள்ளக்கூடிய முறையில் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். கதைகளின் மூலம் இவற்றைக் கூறுவது சிறந்ததாகும். நல்லொழுக்கம் போதிக்கும் வகுப்புக்களில் ஒழுக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தையின் மனத்தில் பதியும்படியாக வலியுறுத்தக்கூடிய கதைகளை அதிகமாக எழுத வேண்டும். இந்த வழியை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். இதனுடைய பயனை உடனடியாய் பார்க்க முடியாது என்றாலும், நாளாவட்டத்தில் அது பயன்பெறும்.
இதற்கு அடுத்தபடியில் புகட்டுவது என்பது பள்ளிக்கூடங்களிலும், இளைஞர் மன்றங்களிலும் ஆகும். சிறுசிறு மன்றங்களைத் தோற்றுவித்து – அவற்றில் உறுப்பினராகச் சேரும் இளைஞர்கள் சில நல்லொழுக்க விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு பிறகு உறுப்பினராகச் சேர வேண்டும். சமுதாயத்திலுள்ள குழந்தைகள், இளைஞர்கள் என்பவர்களைப் பற்றியே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கவனமும் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் செலுத்தப்பட வேண்டும். இவற்றை நம்முடைய கோயில்களிலும், மசூதிகளிலும், மாதா கோயில்களிலும் உள்ள பூசாரிகள் ஆன்மிகத்தின் உயர்வையும் நல்லொழுக்கத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்பவர்களாக இருத்தல் வேண்டும். கிறித்து பெருமான் இந்த உலகில் வாழ்ந்தபோது – இதனைத்தான் செய்திருந்தார். மிக எளிய உண்மைகளை மிக எளிய வழிகளில் – மிக எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மிக உயர்ந்த நல்லொழுக்க உபதேசம் கிறித்து பெருமானின் மலைமேல் பொழிவு (Sermon on the mount) ஆகும். நல்ல ஆன்மிகத்தையும் நல்லொழுக்கத்தையும் மேற்கொண்டு உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கக் கல்வியைப் பயன்படுத்த வேண்டும். வீட்டில்தான் குழந்தை கடவுளிடம் பக்தி செலுத்தவும், மதிப்பு வைக்கவும் பழகிக் கொள்கிறது. எனவே சமுதாயத்திலும் குறிப்பாக பெற்றோர்கள், இளைஞர்கள் என்பவர்களிடம் ஆன்மிக மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.
நல்லொழுக்க மதிப்பீடுகள்
இன்றைய நிலையில் நல்லொழுக்க மதிப்பீடுகளில் நம்பிக்கை மிகவும் குறைந்து விட்டது. லஞ்சம் என்பது முடி முதல் அடிவரை நிறைந்துள்ளது. மேசைக்கு அடியில் நீட்டப்படும் லஞ்சத்தால் எதனையும் பெறவும், எதனையும் சாதித்துக் கொள்ளவும் முடிகிறது. நல்லொழுக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கி, அவ்வழுகல் வேகமாகப் பரவி வருகிறது. இன்றையச் சமுதாயம் முற்றிலும் அழுகிக் கெட்டுவிடாமல் தடைப்படுத்தப்பட வேண்டுமானால் நல்லொழுக்கத்தில் தோன்றியுள்ள இந்த அழுகலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான பிரச்சனை, நல் ஒழுக்க மதிப்பீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி அடையத் தொடங்குவது தான் மனிதப் பண்பாட்டில் தோன்றியுள்ள வீழ்ச்சி இலஞ்சம், கற்பழிப்பு, வேசித்தன்மை ஆகிய இவற்றில் மட்டும் அல்லாமல் இந்த வீழ்ச்சி, நுண்மையான பல வடிவங்களையும் மேற்கொண்டுள்ளது. ஏழைகள் சுரண்டப்படுகின்றார்கள். சாதிப்போராட்டம் தலைதூக்கி நிற்கின்றது! சில பகுதிகளில் தனியே நடப்பதுகூட ஆபத்தாக உள்ளது. தம்முடைய தாய் நாட்டிற்கு என்ன நேர்ந்துவிட்டது? அச்சமற்ற தைரியத்தோடு தலைநிமிர்ந்து நின்ற நாம், இன்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம்.
நிறைவை நோக்கி
நம்மோடு வாழும் அண்டை அயலார்க்குச் செய்யும் உதவியில் நிறைவு காண முடியும் என்பதற்கு மனத் தூய்மையோடு உதவும் (சமாரிட்டன்) கதையே தக்க உதாரணம் ஆகும். இந்தச் சமாரிட்டன் நன்கு அடிப்பட்ட மனிதனிடம் சென்று, எந்த இடத்தில் அவனுக்கு உதவி தேவையோ, அங்கே சென்று உதவினான். ஒரு மனிதனுக்கு எங்கே எப்பொழுது உதவி தேவையோ, அங்கே சென்று உதவுவதுதான் நல்லொழுக்க, ஆன்மிக நிறையாகும். நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு எது தேவை என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும். அடுத்து லூக் – 10:93 என்ற பகுதியில் விவிலிய நூல் ‘‘ஏகபெருமான், அவனைப் பார்த்தார்” என்று பேசுகிறது. மக்களுக்குத் தேவை ஏற்படும் போது – அவர்களிடம் செல்வது மட்டும் அன்று; அவர்கட்கு எது தேவை என்பதை அறியும் அறிவும் அவர்களைப் புரிந்துகொள்ளும் பார்வையும் தேவை. இன்றையச் சமுதாயத்தின் தேவைகளான பசி, வறுமை, அநீதி ஒடுக்கப்படல் ஆகியவற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தப்படியாக நல்ல சமாரிட்டனிடம் பரிவுணர்ச்சி (Compassion) இருந்தது என்று விவிலியம் பேசுகிறது. பரிவுணர்ச்சி இருந்தாலொழிய நாம் நிறைவை அடைய முடியாது. மக்களுக்குத் தேவையான போது அவர்களிடம் செல்வது மட்டும் போதாது. அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்வது மட்டும் போதாது.
எல்லையற்ற பரிவுணர்ச்சி வேண்டும். பரிவுணர்ச்சி என்பது நாம் காட்டும் அன்பு நமக்கேத் துன்பம் செய்கின்ற அளவுக்குப் பரிவு காட்டுவது ஆகும். இன்று நமக்குத் தேவையான அன்பு என்பது, மேலோட்டமாகக் காட்டப்படும் அன்பு அன்று, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காட்டப்படும் அன்பு அன்று எங்கே தியாகம் இல்லையோ, எங்கே நாம் காட்டும் அன்பு நமக்கு வலியை உண்டாக்கவில்லையோ, அங்கே அந்த அன்பு மேலோட்டமாகக் காட்டப்படும் அன்பேயாகும். பரிவுணர்ச்சி என்பது நமக்கே ஊறு விளைவிக்கின்ற அன்பாகும். அந்த அன்பைச் செலுத்துவதின் மூலம் நாம் துன்பம் அடைய வேண்டும். ஏசு பெருமான், சிலுவையில் இதனைச் செய்து காட்டினார். அன்பைப் பற்றி அவர் வாயால் பேசவில்லை; வாழ்ந்து காட்டினார். அன்பைப் பற்றி அவர் உபதேசம் செய்யவில்லை; நடைமுறையில் செய்து காட்டினார். உணர்ச்சி வசப்பட்டோ, பிறர் அறியும் முறையிலோ தம் அன்பைக் காட்டாமல் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்கின்ற அளவுக்கு அன்பைக் காட்டினார்.
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 29-33
]]>