மனிதகுல ஒருமைப்பாட்டிற்கும், நிறைவுக்கும் வழிகாண ஆன்மிக மாநாடு

அன்னை ஆதிபராசக்தியின் ஆணையின் வண்ணம் அவளுடைய சன்னிதியில் 2,3-4-1982 வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும் ஆன்மிக மாநாடு ஒன்று மேல்மருவத்தூரில் கூறிற்று. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு திரு.சி.சுப்பிரமணியம் அவர்களை அன்னை பணித்தாள். ஹைதராபாத் இராமகிருஷ்ண மடாலயத்தின் தலைவர் சுவாமி அரங்கனாதானந்தா அவர்கள் இத்துறையில் பெருத்த அனுபவம் உடையவர் ஆகலின் அவருடைய உதவியுடன் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் இதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு மிகக்குறுகிய காலத்தில் சிறந்த முறையில் நிறைவேற்றி வைத்தார். ஒன்பது அறிஞர்கள் இம்மாநாட்டில் தத்தம் கட்டுரைகளைப் படித்தனர். இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த எழுபது அறிஞர்கள் இதில் பங்கு கொண்டனர்.

திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் மாநாட்டின் கருத்தை விளக்கி வரவேற்புரை நிகழ்த்தினார். சுவாமி அரங்கனாதானந்தாவின் முக்கிய உரையுடன் மாநாடு 2-4-82 அன்று தொடங்கியது. பார்வையாளர்களாக நானூறுபேர் கலந்துகொண்டு அறிஞர்களின் உரையாடலைக் கேட்டுப் பயன் பெற்றனர். சுவாமிகளின் தொடக்க உரையின் பின்னர் ஒன்பது அறிஞர்கள் தத்தம் கட்டுரைகளைப் படித்தனர். இக்கட்டுரைகள் அனைத்தும் அச்சிடப்பட்டு அனைவருக்கும் முதலிலேயே வழங்கப்பெற்றன.

இந்தியாவில் வழங்கிவரும் சமயங்கள் அனைத்தின் அடிப்படையில் நின்று அவர்கள் சமயக் கொள்கைகளை விளக்காமல் அச்சமயம் மானிட ஒருமைப்பாட்டிற்கும் நிறைவுக்கும் என்ன வழியைக் கூறுகிறது என்ற அடிப்படையில் கட்டுரைகள் எழுதப் பெற்றிருந்தன. கட்டுரையாளர்கள் தத்தம் துறைகளில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் அறிஞர்கள். இத்தகைய அறிஞர்கள் பலரும் இப்புது முயற்சியில் ஈடுபட்டு, அழிவை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் இன்றைய உலகைத் தடுத்து நிறுத்தி ஆன்மிக வழியில் திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இதில் ஈடுபட்டனர். ‘‘வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம் பொருளே நின் விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை….” என்ற தாயுமானப் பெருந்தகையின் வாக்கை நிரூபிப்பது போல் இவர்கள் அனைவரும் பேசினர்.

அத்வைதக் கோட்பாட்டின் அடிப்படையில் மனித ஒருமைப்பாட்டிற்கு வழி என்ன என்று Dr.T.M.P மகாதேவன் பேசினார். விசிட்டாத்வைத அடிப்படையில் Dr.R.N.சம்பந்தும், புத்தமத அடிப்படையில் Dr.A.தியாகராஜனும், இஸ்லாம் சமய அடிப்படையில் ஜனாப் அப்துல் வஹாபும், துவைத அடிப்படையில் Dr.நாகராஸராவும், சைவசித்தாந்த அடிப்படையில் Dr.V.A.தேவசேனாபதியும் சித்தர்கள் சமய அடிப்படையில் திரு. அ.ச.ஞானசம்பந்தனும் தத்தம் கட்டுரைகளைப் படித்தனர். கிறித்துவ சமய அடிப்படையில் தென்பகுதிப் பேராயச் ரெவரண்ட் சுந்தரம் கிளார்க்கும் சைவ சமய அடிப்படையில் திரு.S.ஸ்ரீபாலும் கட்டுரைகள் அனுப்பி இருந்தனர். ஆனால் இருவரும் வர இயலாமையின் அவர்களுடைய கட்டுரைகளைப் பிறர் படித்தனர்.

இவற்றையல்லாமல் திரு.R.R.திவாகர், Dr.V.K.R.V.ராவ் Dr.P.V.வர்த்தக் ஆகியோரும் கட்டுரைகள் அனுப்பி இருந்தனர். தமிழர் அல்லாத பிறமொழியாளர் பலரும் கலந்து கொண்ட காரணத்தால் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. மாநாட்டில் வந்து சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும் என்று வந்தவர்கள் சிலருக்கு ஆங்கிலம் தெரியாதாகையால் சில தொல்லைகள் நேர்ந்தன. ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் முக்கிய விருந்தினர்கள் ஆகையால் அவர்கள் வசதியைக் கருதி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கட்டுரைகள் படித்தவர்கள் போக பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் நாற்பதுபேர் வரை உரையாடலில் கலந்து கொண்டு தத்தம் கருத்தைத் தெரிவித்தனர். முதல்நாள் (2-4-82) காலை முழுவதும் கட்டுரை படிப்பதற்கே செலவழிக்கப் பெற்றது. அன்று மாலை மூன்று மணி அளவில் கூட்டம் மறுபடியும் தொடங்கிற்று. பார்வையாளர்கள் ஒவ்வொருவராகத் தத்தம் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு கட்டுரை பற்றியும், பலவற்றைச் சேர்த்தும் பார்வையாளர்கள் தம் கருத்துப் பரிமாறலுக்கு நிலைக்களமாகக் கொண்டு பேசினர். இரண்டாவது நாள் (3-4-82) காலை முழுவதும் இந்தக் கலந்து உரையாடலுக்கே செலவழிக்கப் பெற்றது. அன்று மாலை 4 மணி அளவில் கூட்டம் கூடியவுடன் பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் கூடினர். திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் இம்மாநாடு எவ்வாறு அன்னையின் ஆணையின் போரில் கூட்டப் பெற்றது என்பது பற்றித் தமிழில் விரிவான உரை ஒன்றை ஆற்றினார்கள். அவர்களை அடுத்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜனாப்.மு.மு.இஸ்மாயில் அவர்கள் இரண்டு நாள் நடைபெற்ற கட்டுரை, உரையாடல் என்பவற்றை அடியொற்றி இம் மாநாட்டின் சாரம் என்ன என்பதைப் பற்றியும் தமிழில் ஓர் விளக்க உரையாற்றினார்கள்.

இவர்கள் இருவரையும் அடுத்து சுவாமி அரங்கனாதானந்தா அவர்கள் தமக்கே உரிய முறையில் தொகுப்புரை ஒன்றை வழங்கினார்கள். அந்த ஆங்கில உரையைத் தமிழில் ஓர் அன்பர் மொழிபெயர்த்து உடனுக்கு உடன் பேசினார். சுவாமி அவர்களை அடுத்து அன்னையின் பக்தர்களாகிய திருவாளர்கள் நரசிம்மன், ஊ.கணேசன் ஆகியோர் பேசினர். இரவு 9 மணி அளவில் கூட்டம் இனிது நிறைவேறியது.

இம்மாநாட்டில் படிக்கப் பெற்ற கட்டுரைகள் சிலவற்றின் தமிழாக்கம் இந்த இதழ் முதல் தொடர்ந்து வருகிறது. முக்கியமாக இஸ்லாம், ஜைனம் பௌத்தம், கிறித்துவம் என்ற சமயங்களின் அடிப்படையில் வந்த கட்டுரைகளை வரிசையாகத் தர முயன்றுள்ளோம். இவற்றின் மூலம் ஆங்கிலத்தில் இருப்பினும் இங்குத் தமிழில் தரப்பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் காண விரும்புபவர்கள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி ரூ.5/- அனுப்பினால் சாதாரணத் தபாலில் மாநாட்டுக் கட்டுரை மலர் அனுப்பப்பெறும்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 10-13

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here