மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”

 

செங்கதிரும் வெண்ணிலவும் வானில் வைத்துச் சேர்த்தவொளிக் கற்றையினால் உயிர்வ ளர்ப்பாய்! பொங்கழலில் வெம்மையினைச் சேர்த்து வைத்துப் புதுமைப்பல விளைக்கின்ற அறிவும் வைத்தாய்! மங்கிவரும் இருள்வைத்தே உயிர்க்கு லத்தை மாத்துயிலில் இளைப்பாற வைப்பாய்; மற்றும் பொங்கிவரும் ஒளிவைத்து உயிர்கள் தம்மைப் பெருந்துயிலில் மீள்வித்தும் இயங்க வைப்பாய்!     (1)

ஒளிகாட்டி உயிர்க்குலத்தைக் களிப்பில் சேர்த்து உலவவிடும் பரம்பொருளே! உள்ளி ருந்து தெளிவுதரும் ஒளியாவாய்! உனைம றந்த தெளிவற்ற நெஞ்சகத்தே இருளாய் ஆவாய்! பளிங்குமளங் கொண்டதவ யோகி யர்க்குப் புருவதடு விடத்தொளியைக் காண வைப்பாய்! அளியிருந்த கருணையெலாம் கொண்ட எங்கள் அன்னைமரு வூர்பூத்த பெரிய தாயே!      (2)

சோதியென நின்றவளே! என்பார்; நின்னைச் சுடருகின்ற சூழொளியின் விளக்கே என்பார்! சாதியொடு சமயமெனும் சழக்கு விட்ட சான்றோர்க்குச் சுடரொளியாய்த் தோன்றி நிற்பாய்! வேதநெறி சமணநெறி புத்தன் சொன்ன விந்தைநெறி ஏசுநபி நெறிகட் கெல்லாம் பேதமறப் பொதுவாகப் பூத்து நின்ற பொதுப்பொருளே! ஆதிபரா சத்தி தாயே!      (3)

நீலநதிக் கரைவாழ்ந்த எகிப்து மக்கள் நெடுங்காலத்தில் எருசலத்து மக்கள் எல்லாம் ஆலையிட்ட கரும்பாகி அடிமை வாழ்வில் அவலமொடு அழுதேங்கித் தவித்த் போது சீலமுடை மோசெயும் அவரை மீட்கச் சீர்மைமிகு தெய்வத்தை இரந்த போது கோலமொடு ஒளிவடிவில் தெய்வம் காட்சி கொடுத்தகதை விவிலியத்தில் கண்ட துண்டு! (4)

பாலைவனப் பெருநிலத்தின் அரபு மக்கள் பாங்குடனே வாழவழி காட்ட வந்த கோலநபி நாயகமாம் வேந்த குக்கும் கடவுள்ஒளிக் காட்சியினைத் தந்த துண்டு பாலோடும் சிவஞானம் சேர்த்தே உண்ட பண்பான சம்பந்தர் அற்றை நாளில் நூலோர்கன் வியந்திடவே மணக்கோ லத்தில் நீண்டதொரு சோதியிலே கலந்த துண்டு!     (5)

காண்பரிய பேரொளியைக் கண்டே யன்று குருகூர்க்கு மதுரகவி வந்த துண்டு! மாண்புடைய இக்கதைகள் மாநி லத்தே மாந்தரெலாம் வியந்திங்குக் கேட்ட துண்டு. தாணிழலில் வந்தடைந்த பின்னைக் கெல்லாம் தண்ணருளைக் காட்டியருள் தாயே! நீயும் நீணிலத்தில் அன்றொருநாள் சூனாம் பேட்டில் நிகழ்த்தியவப் புதுமையினை என்ன சொல்வேன்! (6)

அன்றொருநாள் பங்காரு மகனை அவ்வூர் அடியானும் தன்னூர்க்கு அழைத்துச் சென்றான்; நின்மகனும் நீயிருக்கும் அவ்வூர்க் கோயில் நாடியுனைக் கண்டுதொழ விரும்பிச் சென்றான். புன்மாலைப் பொழுதாகி விட்ட தாலே படர்ந்தஇருள் கருவறையைச் சூழ்ந்த வேளை அன்றங்கு வந்தோர்கள் காணு மாறு அhpயதொரு பேரொளியின் பிழம்பாய் நின்றாய்! (7)

பங்காரு சித்தன்முன் ஒளியாய் நின்றாய்! பாங்குடனே வந்தவரும் காண நின்றாய்! பொங்குகடல் சென்றுவலை வீசி மீன்கள் பிடித்துண்டு வாழ்கின்ற எளியோர் தாமும் அங்கமெலாம் சிலிர்த்திடவே உழவர் தாமும் அவ்வூரின் எளிமைமிகு ஏழை தாமும் பொங்கிவளர் பேரொளியின் பிழம்புக் காட்சி பருகும்வகை கண்குளிரக் காட்டி நின்றாய்! (8)

வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டென்றே கூறிடுவர் சான்றோர்கள்! எல்லாம் வல்ல சித்தர்கணத் தலைவியென மருவூர் நின்று கூறாகிச் சமயங்கள் பலவாய்க் கொண்டும் கும்பிட்டு உய்யாமல் பொருது கொண்டும் வேறாகி வாழ்கின்ற மாந்தர் தம்மை வழிகாட்டித் தாயாகித் தாங்கி நிற்பாய்! (9)

நீயறியா ஞாலத்துப் பொருள்கள் இல்லை! நினைமுற்றும் உணர்ந்தோரும் ஞாலத் தில்லை! தாயாகி அனைவோரைத் தாங்கி நிற்கும் தண்கருணைப் பெருங்கடலே! ஞாலத் தோர்க்குத் தாய்மையொடு இறைமைநலம் காட்டு கின்ற தண்முகிலே! துயர்பலவும் நசிக்க நாளும் பாய்ந்தோடி வருவோரைத் தாளில் சேர்த்துப் பனிபோக்கும் ஒளிப்பொருளே! வாழி! வாழி! (10)

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 23-24

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here