ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 10) மூலப்பொருள் – முதற்பொருள் n“என்னிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றன. என்னுள் அடங்கியே எல்லாம் உள்ளன. என்னிடமே எல்லாம் திரும்புகின்றன. நானே என்றும் உள்ள பிரம்மம்” – என்கிறது கைவல்ய உபநிடதம். விதை முந்தியா? மரம் முந்தியா? கோழி முந்தியா? முட்டை முந்தியா? ஆண் முந்தியா? பெண் முந்தியா? என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. நடக்கின்றன. எல்லாவற்றுக்குமே முந்தியது இறைமை! அதுவே முதல் வித்து! தனி வித்து. அது கருதியே நம்மாழ்வார் “முதல் தனிவித்து” என்று இறைமையைக் குறிப்பிடுகிறார். “சிலந்தியிலிருந்து நூல் வருவது போல, தீயிலிருந்து பொறிகள் வருவன போல, மூலமான ஒன்றிலிருந்து உலகமும் பிற பொருள்களும் தோன்றின. அந்த மூலமான ஒன்றினைத்தான் உண்மைக்கெல்லாம் உண்மை என்கிறோம்” என்கிறது பிருகதாரண்ய உபநிடதம். “தனி முதலாக உள்ள பிரம்மம் தன்னிலிருந்து தன்னையே வெளிக்கொண்டு வந்து எல்லாப் பொருள்களையும் படைக்கிறது. எல்லாவற்றிலும் தானேயாகி எங்கும் நிறைந்து நிற்கும் இப்பரம்பொருளைத்தான் உண்மை, சத்தியம் என்கின்றனா் ஞானிகள்” என்கிறது தைத்திரிய உபநிடதம். “பிறவாதே தோன்றிய பெம்மான்” என்கிறார் நாவுக்கரசா். “பிறப்போடு இறப்பென்றும் இல்லாதான் காண்” என்கிறார் நாவுக்கரசா். “முடிவிலா முதலே” என்கிறது திருவாசகம். “ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி” என்கிறார் மாணிக்கவாசகா். “பிறவாத பெருமை உடையது பிரம்மம்” என்கிறார் யக்ஞ வலிகியா், “அந்தமில் ஆதியம் பகவன்” என்கிறார் நம்மாழ்வார். எப்படி எல்லாம் உண்டாயின? மிகமிக நுட்பமான ஒரு பொருளிலிருந்து இந்தப் பருப்பொருட்கள் யாவும் எப்படி உண்டாயின? –    இந்தக் கேள்விக்கு உபநிடதம் சொல்கிற பதில் இது! –    “மிக மிக நுட்பமான ஆலம் விதையிலிருந்து கிளைகளும், இலைகளும், விழுதுகளும் கொண்ட பிரும்மாண்டமான ஆலமரம் எப்படி உண்டாகிறது? அதைப் போல  மிகமிக நுட்பமான பிரம்மத்திலிருந்து பருப்பொருள்களால் ஆன இந்த உலகம் தோன்றியது.” எல்லாவற்றிலும் மறைந்திருப்பது எப்படி? மிக மிக நுட்பாமான பிரம்மம் உலகம் முழுவதும் மறைந்திருப்பது எப்படி? உபநிடதம் தரும் பதில் இது! “தண்ணீரில் கரைந்த உப்பின் உருவம் உன் கண்களுக்குத் தெரிகிறதா? என்றாலும் அதன் இயல்பு தண்ணீா் முழுவதிலும் அடங்கியிருக்கிறது அல்லவா! அதுபோலவே பிரம்மம் உலகெங்கும் மறைந்து உள்ளது.” “எங்கேடா நீ கும்பிடும் நாராயணன்”? என்று  இரணியன் கேட்டபோது, பிரகலாதன் சொன்னான். “எங்கே என்று எப்படிக் குறிப்பிட்டுக் காட்டுவது? அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்.” பரம்பொருளுக்கு உருவம் உண்டா? உருவம் இல்லாதது எதுவோ அது அருவம். காற்று உருவம் இல்லாத அருவம். இருட்டு உருவம் இல்லாத அருவம். ஒளி உருவம் இல்லாத அதுவம். வெளி உருவம் அற்ற அருவம். பிரம்மம் உருவம் உடையதா? உருவம் அற்றதா? என்பது கேள்வி. “பிரம்மத்திற்கு கண்களோ காதுகளோ கிடையாது. அது எங்கும் நிறைந்தது. ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டது.” என்கிறது உபநிடதம். எனக்கு உருவம் கிடையாது. அணு! ஜோதி! விளக்கின் சுடா்! பாம்பு! குழந்தை! சித்தா்! என்பன என் தோற்றங்கள் – என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. பரம்பொருள் எப்போதும் அருவமாகவே இருக்கும். அது நினைக்கிறபோது நினைத்த உருவம் எடுக்கும். எந்தத் தெய்வத்தை ஒருவன் வணங்கித் தியானிக்கிறானோ அந்த உருவில் தோன்றி அருள் செய்யும். பரம்பொருளின் இயல்புகள் பலவற்றில் இது ஒன்று. இது புரியாத மூடா்கள்தான் மதவெறி காரணமாக அடித்துக் கொள்கின்றன. “நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்” என்கிறார் நம்மாழ்வார். “அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!” என்கிறது தேவாரம். “இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒண்ணாதே!” என்கிறார் திருநாவுக்கரசா். “ஒரு நாமம் ஓா் உருவம் ஒன்றுமிலார்க்கு. ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டோமோ” என்கிறார் மாணிக்க வாசகா். பரம்பொருள் ஆணா! பெண்ணா? பரம்பொருள் ஆணும் அன்று! பெண்ணும் அன்று! அலியும் அன்று! அது ஒரு சக்தி. மகா சக்தி. காந்தம் ஆணா? பெண்ணா? அணுசக்தி ஆணா? பெண்ணா? உயிர் ஆணா? பெண்ணா? கடவுளுக்கு இலக்கணம் வரைவது கடவுளையே மறுப்பதாகும். (To define God is to deny God) என்கிறார் தத்துவ அறிஞா் ஒருவா். ஒரு கடலையில் இரண்டு பருப்புகள் இருப்துபோல, ஆதிப் பரம்பொருள் ஆணாகவும், பெண்ணாகவும் தன்னைப் பிரித்துக் கொண்டது. ஆயினும், இரண்டையும் பிரிக்காமல் சோ்த்தே உபாசிக்க வேண்டும், வழிபட வேண்டும் என்கிறது பிருகதாரண்ய உபநிடதம். “ஆணாகிப் பெண்ணாகிய வடிவம் தோன்றும் அடியவா்க்கு ஆரமுதம் ஆகித் தோன்றும்” என்பார் திருநாவுக்கரசா். ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லது அலியும் அல்லன் – என்கிறார் நம்மாழ்வார். சமயமெல்லாம் சக்தியுண்டு சிவமும் உண்டு. சண்டாளா் விரித்தல்லோ தள்ளினார்கள் என்று சீறுகிறார் கம்பளிச் சித்தா். எல்லா உயிர்களிலும் பரம்பொருள் “எள்ளிலே எண்ணெய்போல, பாலிலே நெய் போல, ஆற்றுப் படுக்கையிலே ஊற்றுபோல, விறகிலே தீயைப் போல் உயிர்களிலே இறைவன் வசிக்கின்றான்” என்கிறது சுவேதாஸ்வர உபநிடதம். தேவா்கள், நீா், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள், அற்பமான உயிரினங்கள், முட்டையிலிருந்து பறப்பவை, கருப்பையிலிருந்த பிறப்பவை, வியா்வையிலிருந்து தோன்றுபவை, மண்ணிலிருந்து முளைப்பவை, குதிரைகள், யானைகள், பசுக்கள், பறவைகள், மனிதா்கள், ஊா்வன, நடப்பன, மூச்சுவிடுவன – இவை அனைத்துமாக இருப்பது பிரம்மம் – என்கிறது ஒரு உபநிடதம். வேற்றுமையில் ஒற்றுமை “வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் ஆதாரமாய் நிற்பது ஒரே பொருளான பிரம்மமே என்பதையும், அதுவே மெய்ப்பொருள் என்பதையும் உள்ளத் தூய்மையால் ஆழ்ந்து சிந்தித்து உணரவேண்டும். அவ்வாறு உணராதவன் பிறப்பு, இறப்பு என்கிற சம்சாரச் சுழிலிருந்து தப்ப முடியாது” என்கிறது கட உபநிடதம். மெய்ஞ்ஞானத்தின் அடிப்படை இறைமைதான் எல்லாப் பொருள்களாகவும், எல்லா உயிர்களாகவும் விளங்குகிறது. இந்தப் பேருண்மையை உணா்வதே மெய்ஞ்ஞானத்துக்கு அடிப்படை. “எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பவன் எதையும் வெறுப்பதில்லை” என்கிறது ஈசா உபநிடதம். இவையெல்லாம் உபநிடதங்கள் கூறும் சான்றுகள். இன்னும் ஆழமாகப் பார்த்தால் அது ஆராய்ச்சிக் கட்டுரைபோல வந்துவிடும். எனவே, அடுத்து ஆன்மாவுக்கும் பரம்பொருளுக்கும் இருக்கும் தொடா்பைப் பார்ப்போம்.   நன்றி! ஓம் சக்தி! சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி – மே 2008 பக்கம் (41 – 44)      ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here