ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 08) ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1,86,326 மைல், இந்த வேகத்தில் ஒளிக்கதிர்கள் பரவெளியில் பரவுகின்றன. ஏறத்தாழ மூன்று லட்சம் கிலோ மீட்டா் வேத்தில் அந்த ஒளி பாய்கிறது. அந்தத் தூரத்தை இத்தனை மைல் என்றோ, இத்தனை கிலோ மீட்டா் என்றோ கூறுவது கஷ்டம். எனவே வானவியல் நிபுணா்கள் ஒளியாண்டு தூரம் எனக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். ஒரு ஒளியாண்டுக் கணக்குப்படி தூரத்தைக் கணக்கிட்டால் சுமார் ஒன்பது லட்சத்து நாற்பத்தாறாயிரத்து எண்பது கோடி கிலோ மீட்டா் என்று கணக்கு வருகிறது. (9460800000000 கி. மீ) பூமிக்கும் அதற்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கும் இடையில் 4, 3 ஒளியாண்டு தூரம் இருக்குமாம்! இத்தகைய நட்சத்திரங்கள் லட்சக கணக்கில் இருக்கின்றனவாம். இந்த அண்டங்களின் வடிவம் எப்படி இருக்கும்? – நீள் வட்டமாக இருக்கும் – ஒழுங்கற்ற வடிவமாக இருக்கும். – சுருள் வடிவில் (Spiral) இருக்கும் என்கிறார்கள். அண்டம் என்றால் முட்டை என்று பொருள். அண்டங்கள் முட்டை வடிவில் இருப்பதாக சாத்திரங்கள் சொல்கின்றன. நாம் வசிக்கும் அண்டத்தில் ஒரு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்கிறார்கள். இதுபோல எட்டு மில்லியனுக்கும் மேலான அண்டங்கள் உள்ளனவாம். இத்தகைய அண்டம் ஒவ்வொன்றிலும் சுமார் 14,000 கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றனவாம். சூரியக் குடும்பம் நமது பூமிக்கு ஒரு சூரியன், ஒரு சந்திரன், இத்தனை நட்சத்திரங்கள் என இருப்பது போல, பிரபஞ்சத்தில் பல சூரியக் குடும்பங்கள் இருக்கின்றனவாம். சூரியன் நமது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. அது பூமியைப் போல 1, 300,000 மடங்கு பெரியது. சூரியனைச் சுற்றி எட்டு கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் என மொத்தமாகச் சோ்த்துச் சொல்கிறோம். வேறு சில கிரகங்களும் உள்ளன என்கிறார்கள். அடுத்த 30 லட்சம் வருடங்களில் சூரியனில் உள்ள எரி பொருள் முழுக்கத் தீா்ந்து போகும். அந்நிலையில் வெள்ளையாக குள்ளவடிவ நட்சத்திரமாக அது மாறிவிடுமாம். அடுத்த 20 லட்சம் ஆண்டுகளில் சக்தி முழுவதையும் இழந்த சூரியன் கறுப்பாக மாறிவிடுமாம். காற்று மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் கவசம் – போர்வை காற்று மண்டலம். சூரிய வெப்பத்தையும், அதன் ஒளியையும் மிதப்படுத்தி அனுப்பி வைப்பதில் காற்று மண்டலத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள ஓசோன் படலம் (OZONE) சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி உலகின் உயிரினங்கள் அழியாமல் பாதுகாத்து வந்தது. எத்தனை அண்டங்கள்! எத்தனை தூரம்! எத்தனை வயது! ஏன்? எதற்கு இப்படி படைக்கப்பட்டன…? எல்லாவற்றையும் கடந்த ஒரு பேரறிவுப் பொருள் இத்தனை விசித்திரங்களையும் ஜால வித்தை போலச் செய்து வருகிறது. எனவே, நமது, மனம், வாக்குக்கு அப்பாற்பட்ட அந்தப் பேரறிவுப் பொருளை “எல்லாம் கடந்தது” என்கிறோம். அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாத – வாக்கு – மனம் கடந்த ஒன்றாக அந்தப் பேரறிவுப் பொருள் இருப்பதால் கடவுள் என்கிறோம். எல்லாவற்றுக்கும் உள்ளிருந்து இயக்குவது எல்லாவற்றையும் கடந்து நிற்கிற அந்தப் பேரறிவுப் பொருள் – பரம்பொருள் ஒவ்வொன்றின் உள்ளிருந்தும் இயக்குகிறது. அணு முதல் அண்டம் வரை அதன் இயக்கத்தை எண்ணிப் பாருங்கள்! எறும்பு முதல் யானை வரை சிறு செடியிலிருந்து ஆலமரம் வரை கடவுளின் சக்தி வியாபித்திருக்கிறது. மனிதனையே எடுத்துக் கொள்ளுங்களேன்…. மனிதன் தோன்றி 37 லட்சம் ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். மனித உடலமைப்பையே சிந்தித்துப் பாருங்களேன்…. “நமது மனித உடம்பில் 600 தசை நார்கள்; 1000 மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்கள்; 550 இரத்த நாளங்கள், 16 சதுர அடிப் பரப்புடைய தோல், 15 லட்சம் வியா்வைக் கோளங்கள், மூச்சுப் பையில் தேன் கூடு போன்ற 70 கோடி கண்ணறைகள் 3 x 1012 நரம்புக் கண்ணறைகள், 30 லட்சம் வெள்ளை அணுக்கள், 18 x 1013 சிவப்பு அணுக்கள், 21/2 லட்சம் தலை மயிர்கள் ஆகியன உள்ளன. அது மட்டுமா….? 70 ஆண்டுகளில் நமது இதயம் 250 கோடி தடவை துடிக்கின்றது. 5,00,000 டன் இரத்தத்தை வெளியேற்றி உடம்பைப் பரவச் செய்கின்றது. நாள்தோறும் 36 அவுன்சு உமிழ்நீா் சுரந்து விழுங்கப் படுகிறது. 120 முதல் 140 அவுன்சுவரை வயிற்றில் ஜீரண நீா் ஊறி உணவைச் செறிப்பித்துக் கிருமிகளைக் கொல்கிறது. (LOVIS LEGOEN) – இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்து இவற்றையெல்லாம் நடத்தும் ஒரு சக்தி – பேரறிவுப் பொருளாகத்தானே இருக்க வேண்டும்? அதனால்தான் கடவுள் எல்லாம் கடந்த நிலையிலும் இருக்கிறார். எல்லாவற்றுக்குள்ளே இருந்தும் இயக்குகிறார் என்ற கருதிக் கடவுள் என்ற பெயரை வைத்தார்கள். அம்மா ஒரு பக்தரிடம் கேட்டாளாம்! “இந்த மனிதப் பிறவியைக் கொடுத்திருக்கிறேனே… அதற்காகவாவது ஒரு நாளாவது நன்றி சொல்லி இருக்கிறாயாடா மகனே!” என்றாளாம். பரம்பொருளின் கடந்தநிலை; உள்ளிருந்து இயக்கும் நிலை இரண்டையும் பார்த்தோம். அடுத்து மேலும் சிலவற்றைப் பார்ப்போம். நன்றி! ஓம் சக்தி! சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி – மார்ச் 2008 பக்கம் (34 – 37) ]]>