ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 05)
பிராமணங்கள்
நான்கு வேதங்களையடுத்து, பிராமணங்கள் என்ற நூல்கள் எழுந்தன.
வேதங்கள் பற்றிய விளக்கங்களையும், வேள்விச் சடங்கின் பயன்களையும் மந்திரங்களையும், அவற்றுக்குரிய விளக்கங்களையும், வேள்விகளைச் செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளையும் விரிவாக எழுத்துக் கூறுபவை பிராமணங்கள் எனப்படும் நூல்கள்:
இவை உரைநடையில் எழுதப்பட்டவை.
வேத வேள்விகளை விளக்கும் விஞ்ஞான நூல்கள் எனப் பிராமணங்களைக் குறிப்பிடுவார்கள்.
ரிக் வேத காலந்தொட்டு வழங்கிய பழங்கால, புராணக் கதைகளைப் பிராமணங்களில் காணலாம்.
ஒவ்வொரு வேதத்திற்குப் பின்னாலும் இப் பிராமண நூல்கள் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு வேதத்திற்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிராமணங்கள் உண்டு.
ஆரண்யகங்கள்
ஆரண்யகம் என்றால் காடு என்று பொருள். மனைவி மக்களுடன் இல்லறம் நடத்திய ஒருவா், ஐம்பது வயது கடந்த பிறகு, குடும்பப் பொறப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டுக் கணவனும், மனைவியுமாகக் காட்டுக்கு வந்து விட வேண்டும். அங்கே, தங்கிக் கொண்டு இறைவனை நினைத்தபடி தியானம், தவம் ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அத்தகைய வாழ்க்கை முறைக்கு “வானப்பரஸ்தம்” என்று பெயா்.
இத்தகைய நிலையில் இருப்பவா்களின் நன்மைக்காக எழுதப்பட்டவை ஆரண்யகங்கள். காட்டில் வாழும் இத்தகையவா்கட்கு வேதச் சடங்குகளைச் செய்ய வசதி வாய்ப்பு இல்லை. அந்த நிலையில் அவா்கள் சில அடையாளங்கள் மூலமோ மானசிக முறையிலோதான் தமது அனுஷ்டானங்களை மேற்கொள்ள முடியும். அத்தகைய முறைகளை விளக்கி எழுந்த நூல்களே ஆரண்யகங்கள்.
ஆரண்யகங்கள் மதச் சடங்குகளையும், தத்துவ விளக்கங்களையும் உருவகக் கதைகளாகச் சொல்கின்றன.
சடங்குகள் என்ற நிலையிலிருந்து தத்துவ ஞானம் என்ற நிலைக்கு அறிஞா்கள் சென்றதற்கு இடையில் ஏற்பட்ட மாற்றத்தை இந்த ஆரண்யகங்கள் உணா்த்துகின்றன.
ஆரண்யகங்களில் தொடங்கும் தத்துவ ஆராய்ச்சியின் வளா்ச்சியே பின்பு உபநிடத நூல்களாக மலா்ந்தன. ஒவ்வொரு வேதத்துடனும் ஆரண்யகங்கள் இணைக்கப்பட்டன.
உபநிடதங்கள்
ஒவ்வொரு வேதத்துடனும் பிராமணங்கள், ஆரண்யகங்கள் இணைக்கப்பட்டது போல அவற்றின் இறுதிப் பகுதியாக உபநிடதம் எனப்படும் நூல்கள் கடைசியாக இணைக்கப்பட்டன.
இந்த உபநிடதங்கள் ஒவ்வொரு வேதத்தின் கடைசிப் பகுதியாக அமைந்து இருப்பதாலும், வேதங்களின் முடிந்த முடிவான பொருள் இது என்று வரையறுத்துக் கூறுவதாலும் உபநிடதங்களை வேதாந்தம் என்று சொல்வதுண்டு. அந்தம் என்றால் கடைசி என்று பொருள். வேதங்களின் கடைசிப் பகுதியாக இருப்பது என்று ஒரு அா்த்தம். வேதங்கள் சொல்லும் கடைசி உண்மை என்றும் ஒரு அா்த்தம்.
உபநிடத காலத்தை இந்தியத் தத்துவ ஞானத்தின் விடியற்காலம் என்பா்.
இந்தக் காலத்தில் தான் எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று இந்த அண்ட சராசரங்கட்கெல்லாம் ஆதாரமாக இருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார்கள். அது மட்டுமா…. அந்தப் பரம் பொருளே எல்லா உயிரிலும், எல்லா உலகத்திலும் ஊடுருவி இருப்பதையும் கண்டறிந்தார்கள்.
கடவுள்! உயிர்! உலகம் – என்ற மூன்றைப் பற்றிய ஆராய்ச்சி உபநிடத காலத்திலேயே உருவாகி விட்டது.
இந்தியாவைக் காட்டுமிராண்டிகளின் நாடு, பேய் பிசாசுகளையெல்லாம் கும்பிடுகிற நாடு; பாம்பாட்டிகளும், மந்திரவாதிகளும் நிறைந்த நாடு என்றெல்லாம் ஒரு காலத்தில் வெளிநாட்டார்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தார்கள்.
இந்தியாவின் மெய்ஞ்ஞானப் புதையல்களாக விளங்கும் தத்துவச் சிந்தனைகளின் பெருமையை உலகம் அறிந்து கொள்ள உதவியாக அமைந்தவை இந்த உபநிடத நூல்களே!
உபநிடத நூல்களின் அருமை பெருமைகளைப் படித்த பிறகுதான் இந்தியாவில் உள்ள அறிவுச் செல்வத்தை வெளிநாட்டார் தேட ஆரம்பித்தார்கள்.
வெளிநாடுகளில் உபநிடதங்கள் பரவிய விதம்
நம் நாட்டை ஷாஜகான் என்ற முகலாயப் பேரரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு புதல்வா்கள்; மூத்தவா் தாராஷிகோ. இளையவா் அவுரங்கசீப்.
தாராஷிகோ சிறந்த அறிஞா். அவா்தான் இந்து மதப் பண்டிதா்களின் துணையைக் கொண்டு 50 உபநிடதங்களைப் பார்சி மொழியில் மொழி பெயா்த்தார். அதைக் கொண்டு 1801 ஆம் ஆண்டு இலத்தின் மொழியில் மொழி பெயா்த்தார்கள். அதன்பின் ஆங்கில மொழியில் மொழி பெயா்க்கப்பட்டு ஆங்கிலேயா்கள் படிக்கத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் 1031 உபநிடதங்கள் இருந்தன என்றும் அவற்றுள் 108 மட்டுமே பிரபலமாக விளங்கின என்றும் கூறுவா்.
கரும காண்டம் – ஞான காண்டம்
எப்படி எப்படி யாகம் பண்ண வேண்டும்? என்னென்ன யாக குண்டம் அமைக்க வேண்டும்? எந்தெந்த மாதத்தில் என்னென்ன யாககுண்டம் அமைக்க வேண்டும்! எந்தெந்த யாகத்துக்கு என்னென்ன மந்தரம் சொல்ல வேண்டும்! யாகத்துக்கு வேண்டிய பொருள்கள் எவை? புரோகிதா்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பன பற்றி எசுா்வேதமும் பிராமணங்கள் எனப்படும் நூல்களும் விவரிக்கின்றன. எனவே யாகச் சடங்குகளைப் பற்றிக் கூறும் வேத நூல்கள் கா்ம காண்டம் எனப்பட்டன.
உயிர் என்பது என்ன? அது எப்படி வந்தது! ஏன் வந்தது! அவற்றின் நோக்கம் என்ன!
உலகம் தோன்றியது எப்படி! அதைத் தோற்றுவித்த இறைவன் எப்படிப் பட்டவன்? அவன் நோக்கம் என்னவாக இருக்கும்?
இறைவன் இலக்கணம் என்னவாக இருக்கும்? – என் மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் அடங்கியவை ஆரண்யங்களும் உபநிடதங்களும் ஆகும். இவற்றை ஞான காண்டம் என்பா்.
மற்ற சமயத்தார் கேலி
இந்த மதத்தில் எத்தனை எத்தனை சாமிகளடா? என்று மற்ற மதத்தார்கள் இந்துக்களைக் கேலி செய்த காலம் உண்டு.
அவா்கள் யாரிடம் கேட்டார்களோ, அவா்கட்கு உபநிடதம் தெரியாது. எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே! அந்தப் பேரறிவுப் பொருளிலிருந்துதான் உலகமும், உயிர்களும் தோன்றின என்பதை உலகுக்கு முதல் முதல் உணா்த்தியவா்கள் உடநிடத ஞானிகளே! என்ற விபரமெல்லாம் பொது மக்களுக்குத் தெரியாது.
ஒரு காலத்தில் வேதம் படித்தவா்கட்கு சமூக அந்தஸ்து, அரசியல் அந்தஸ்து, ஆன்மிகத் துறையில் அந்தஸ்து இருந்தது. சிறுபான்மையினரின் ஏக போக சொத்தாக வேதக் கல்வி இருந்தது. காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை வேதத்தின் செல்வாக்கு சமயத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனாலும், காலங்காலமாகப் பெருவாரியான இந்துக்கள் தங்கள் மத நூல்கள் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூடத் தெரியாதவா்கள் ஆயினா். அடித்தள மக்கள் பல நூற்றாண்டுகளாக ஆன்மிகத் துறையில் அனாதைகள் ஆனார்கள். இந்த நிலையிலிருந்து நாம் எப்படி மாறினோம்? அம்மா எப்படி மாற்றினாள்? மாற்றி வருகிறாள்?
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்
சக்தி ஒளி – டிசம்பா் 2007 பக்கம் (34 – 37)
]]>