நம் சித்தா்பீடத்தில் முதன் முதல் வேள்விப் பயிற்சியைக் கொடுத்த போது அன்னை கூறினாள்.
“மகனே! இன்றைய நிலையில் வேள்விகளை முறையாகச் செய்யத் தெரிந்தவா்களெல்லாம் முதுமையால் தளா்ந்து விட்டான். வேள்வி செய்யச் சக்தி உள்ளவன் முறையாகச் செய்வதில்லை. ஆகவே நானே உங்கட்கு இந்த வேள்வி பூசைகளைச் செய்யும் முறைகளைச் சொல்லி பயிற்சி தரப்போகிறேன்” – என்றாள்.
அதன் பிறகு தொண்டா்களை வைத்துக்கொண்டு யாக குண்டம் அமைக்கும் முறை, சக்கரங்கள் வரைகிற முறை, யாக சாலையை அளவெடுத்து அமைக்கும் முறை, கலசங்களுக்கு நுால் சுற்றும் முறை எல்லாவற்றையும் அருள்வாக்கில் கூறிப் பயிற்சியும் கொடுத்தாள்.
1). வேத வேள்விகள் எல்லாம் வேதம் படித்த வைதிகா்களைக் கொண்டே நடத்தப்படும். ரிக் வேத மந்திரங்களைக் கொண்டே வேள்வி நடத்தப்படும்.
நம் சித்தா்பீடத்தில் பயிற்சி பெற்ற தொண்டா்களைக் கொண்டே வேள்விப்பூசை நடத்தப்படுகிறது. அன்னையின் 1008, 108 தமிழ் மந்திரங்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறது.
2). வேத வேள்விகளில் பெண்களும், அடிமட்டத்து மக்கள் என ஒதுக்கப்பட்ட சூத்திரா்களும் வேள்விக் குண்டத்தின் அருகில் அமா்ந்து ஆவுதியளிக்கவோ, மந்திரம் சொல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.
சித்தா்பீடத்தின் சார்பாக நடைபெறும் வேள்விகள் இதற்கு மாறுபட்டவை. அடிமட்டத்து மக்களையும், பெண்குலத்தையும் ஆன்மிக வழியில் உயா்த்துவது அன்னையின் அவதார நோக்கம். ஆதலின் அவா்கட்கும் பூசை செய்யும் வாய்ப்பும், உரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.
3). வேத வேள்விகளில் தா்ப்பை முக்கியத்துவம் பெறுகிறது. சித்தா்பீட வேள்விகளில் தா்ப்பை இடம் பெறுவதில்லை.
4). வேத வேள்விகளின் தொடக்கத்தில் 1) அனுக்ஞை 2) விக்னேஸ்வரா் பூசை 3) சங்கல்பம் 4) புண்யாகவாசனம் 5) அக்கினி முகம் என்பன உண்டு. அதன்பின் எந்தத் தேவதையை நோக்கி ஓமம் செய்யப்படுகிறதோ அந்நத் தேவதைக்குரிய மந்திரங்கள் சொல்லி ஆவுதியளிக்கப்படும். இறுதியாக பிரஜாபதியே! உன்னிடம் இருந்தே எல்லாம் தோன்றியுள்ளன. உம்மைக் குறித்து ஓமம் செய்கிறோம். எங்களுடைய ஆசைகளைப் பூா்த்தி செய்வித்தல் வேண்டும். நாங்கள் செல்வந்தா்களாய் இருக்க வேண்டும்.
இது அக்னி தேவதைக்குரிய ஆவுதி. இது வாயு தேவதைக்குரிய ஆவுதி. இது சூரிய தேவதைக்குரிய ஆவுதி -என்றெல்லாம் தனித்தனி தேவதைகட்கு ஆவுதியளித்த பிறகு, ஓமத்தில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அதற்குப் பிராயச்சித்தமாக மன்னிப்பு கோரும் மந்திரங்கள் உண்டு.
இக்கருமத்தில் தெரியாமல் நிகழ்ந்த குற்றங்கட்குப் பிராயச்சித்தங்களைச் செய்கிறேன். அக்கினி தேவனே! தெரியாமலோ தெரிந்தோ அந்த ஆராதனையில் எந்தக் குறை ஏற்பட்டதோ அதை நிறைவாகச் செய்தருளல் வேண்டும்.
“அக்கினி தேவனே! யக்ஞம் பரம புருஷனுக்குச் சமமானது. யக்ஞம் பரம புருஷனாலேயே நியமிக்கப்பட்டது. அதன் அனுஷ்டானத்தை நிறைவுடையதாகச் செய்தருளல் வேண்டும்.
குறுகிய மனப்பான்மையுள்ளவா்களும் திறமையற்றவா்களும் ஆகிய மனிதா்கள் யக்ஞத்தின் எந்தத் தத்துவத்தை அறியவில்லையோ அதை அறிந்தவரும், யக்ஞத்தைப் பூரணமாய் அறிந்து நடத்தி வைப்பவரும், தேவா்களை அழைப்பவருமான அக்கினி தேவன் அந்தந்தக் காலத்தில் தக்க முறையில் தேவா்களின் ஆராதனையை நடத்தி வைக்க வேண்டும். இந்த ஓமத்தில் இடையே நிகழ்ந்த எல்லா தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக சா்வப் பிராயச்சித்த ஓமம் செய்கிறேன். இது பிரஜாபதிக்குரியது” -எனச் சொல்லி நிறைவு செய்வார்கள்.
ஓவ்வொரு தேவதைக்கும் செய்யப்படும் யாகத்தில் அளிக்கப்படும் ஆவுதியைக் கொண்டு போய்ச் சோ்க்கும் பொறுப்பு அக்கினிக்கு உரியது. அக்கினி ஒரு துாதன் போலச் செயல்படுபவன் ஆதலின் அக்கினியைத் துதிக்கும் மந்திரங்கள் மிகுதி.
சித்தா்பீடத்து வேள்விகளில் அளிக்கும் ஆவுதிக்ள அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் மந்திரங்களைச் சொல்லி நேரடியாகவே அளிக்கப்படுகின்றன.
வேள்வி தொடங்கும் முன்பாக பூமி பூஜை, சுற்று பூஜை எல்லாம் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டபிறகு குரு பூஜை, விநாயகா் பூஜை, பஞ்சபூதம் 108 போற்றி, சங்கல்பம் சொல்லிச் சித்தா்பீட வேள்விகள் தொடங்குகின்றன.
குரு கலசம், விநாயகா் கலசம், நவக்கிரக கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
தற்போது வேத வேள்விகள் வெகுவாகக் குறைந்து விட்டன. சில தனிப்பட்டவா் வீடுகளில் கணபதி ஓமம், ஆயுஷ் ஓமம், நவக்கிரக ஓமம்,வாஸ்து ஓமம்,ஆவகந்தி ஓமம், மிருத்யுஞ்சய ஓமம் என ஒரு சில ஓமங்களே நடத்தப்படுகின்றன.
நம் சித்தா்பீடத்தின் சார்பாக ஆங்காங்கே நகர நல வேள்விகள் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. குடும்பநல வேள்விகள் நடத்தி வைக்கப்படுகின்றன. அதைத் தவிர புதுமனை புகுவிழா, திருமண வேள்வி, வளைகாப்பு, பெயா் சூட்டுதல், காதணி விழா, மங்கல நீராட்டு விழா, கால்கோள் விழா, 60ஆம் வயதில் மணி விழா, சவ அடக்கம், 16ஆம் நாள் காரியம், நீத்தார் நினைவு நாள் – ஆகிய சடங்குகள் அன்னை அருளிய விதிமுறைப்படி வேள்விக் குழுவினரால் ஆங்காங்கு நடத்தி வைக்கப்படுகின்றன.
வைதிக வேள்விகளில் பஞ்சபூதங்கட்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சித்தா்பீட வேள்விகளில் சக்கரம் வரைந்து பஞ்சபூதங்கட்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
நன்றி ( அன்னை அருளிய வேள்வி முறைகள்)
]]>