1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 2,3 நாட்களில் மேல்மருவத்துார் சித்தா் பீடத்தில் முதல் ஆன்மிக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உரையாற்ற ஜதராபாத் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ரங்கநாதானந்தா அவர்கள் வந்திருந்தார்.
சுவாமிகள் ஆங்கிலத்தில் அற்புதமாகப் பேசக் கூடியவா். அற்புதமான எழுத்தாற்றல் கொண்டவா். ஆங்கிலத்தில் அவர்கள் எழுதிய “The message of the upanishads” உலகப் புகழ் பெற்றவை.
உலக நாடுகளிலிருந்தெல்லாம் பல பல்கலைக்கழகங்கள் அவரைத் தங்கள் பல்கலைக்கழகங்களில் “இந்திய ஆன்மிகச் சிந்தனைகள்” பற்றி உரையாற்ற வருமாறு அழைத்தன.
வேதாந்தத்தையும் விஞ்ஞானத்தையும் இணைத்துப் பேசுவது இவரது தனிப்பாணி.
விஞ்ஞானத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பேசுவதில் சுவாமிகள் வல்லவா்.
அவா் முதன்முதல் நம் சித்தா் பீடத்துக்கு வந்தபோது புற்று மண்டபத்தில் அன்னை அருள்வாக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மாவிடம் அருள்வாக்கு கேட்க விரும்புகிறீா்களா? என்று நம் அறநிலையினா் கேட்டார்கள்.
ஓ….. தாராளமாக..! என்றார். அம்மாவும் அவரை வரச் சொல்லி உத்தரவு கொடுத்தாள்.
35 நிமிடம் அம்மா அவருக்கு அருள்வாக்குச் சொன்னாள். சுவாமிகளுக்கோ தழிழ் தெரியாது! அவா் கேரளாவைச் சோ்ந்தவர்! அம்மா இவருடன் எந்த மொழியில் பேசும்? மலையாளத்திலா..?, ஆங்கிலத்திலா..? தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பு வெளியே இருந்தவா்களுக்கு!
அருள்வாக்குக் கேட்டுவிட்டு சுவாமிகள் வெளியே வந்தார்கள். அங்கிருந்த பேராசிரியா் திரு. அ.ச. ஞானசம்பந்தம் அவா்களிடம் சொன்னார்கள்.
என்ன பேராசிரியரே..! இங்கே அம்மா அவதாரமாக வந்திருக்கிறாள். மாபெரும் அற்புதம் ஒன்று இந்த மண்ணில் மௌனமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மாவின் ,அருள்வாக்குகளையும், இங்கு நடைபெறும் அற்புதங்களையும் ஒன்று விடாமல் பதிவு செய்து வையுங்கள். இதைச் செய்யவில்லையேல் நீங்கள் எல்லாம் பாவம் செய்தவா்கள் ஆவீா்கள்.
அந்த நாளில் பகவான் இராமகிருஷ்ணா் வந்தார். எவ்வளவோ சொன்னார். அவற்றையெல்லாம் உடனிருந்த சீடா்கள் பதிவு செய்து வைத்தார்கள். அவை பல தலைமுறைக்கும் பயன்படுகின்றன.
அதுபோல அம்மாவின் உடனிருக்கும் நீங்கள் இங்கு நடப்பவற்றையெல்லாம் ரிக்கார்டு பண்ணி வைக்க வேண்டும். அவை எதிர்காலத் தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும். இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். என்ன செய்வீா்களா..? என்று கேட்டார் சுவாமிகள்.
பேராசிரியா் திரு. அ.ச. ஞானசம்பந்தம் தலையாட்டினார்.
அம்மா எத்தனையோ பேருக்கு ஆன்மிகம் பற்றிய நுட்பமான கருத்துக்களை அருள்வாக்கில் சொன்னாள். சிலருக்கு ஆன்மிகத்தில் முன்னேற உளவுகளையும், உத்திகளையும் சொன்னாள்.
எத்தனை பேர் எழுதி அனுப்புகிறீா்கள் என்று நினைத்துப் பாருங்கள்!
சக்தி பீடங்களிலும், மன்றங்களிலும் எத்தனை எத்தனை தெய்வீக அற்புதங்களை நடத்தியிருக்கிறாள். எத்தனை போ் பதிவு செய்து வைத்திருக்கிறீா்கள்..?
நம்மில் பெரும்பாலானவா்களுக்குத் தொலைநோக்கு சிந்தனையே இல்லாதது ஒரு பெரும் குறை! துரதிர்ஷ்டம்!
அந்த ஆன்மிக மாநாட்டுக்கு இன்னொரு பேராசிரியா் வந்தார்.அவா் அத்வைத தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவா். பிரம்மம்! ஆத்மா! பற்றி அலசி ஆராய்ந்தவா்.
அம்மாவிடம் அருள்வாக்கு கேட்க விரும்புகிறீா்களா? என்று நம் அறநிலையினா் கேட்டார்கள்.
வேணாம்! வேணாம்! எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அருள்வாக்கு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று மறுத்து விட்டார்.
அருள்திரு அடிகளார் அவா்களின் எளிமையான தோற்றம் அருள்வாக்கின் மகிமையை உணரமுடியாமல் அவரைச் செய்து விட்டது போலும்!
சில ஆண்டுகளுக்குப் பிறகு அடிகளார் அவா்கள் சொன்னார்கள்.
“ என்னைப் புரிஞ்சவனுக்கு என்னைத் தெரியலே! என்னைத் தெரிஞ்சவனுக்கு என்னைப் புரியலே! ”
பிரம்மம்! ஆத்மா! அவதாரம்! பற்றிய நுட்பமான உண்மைகளை ஆராய்ச்சி செய்து புரிந்து வைத்திருப்பவா் அவா். பிரம்மம் அடிகளாராக வந்து உலவுகிறது என்பது அவருக்குத் தெரியலே. என்னைப் புரிஞ்சவனுக்கு என்னைத் தெரியலே – என்பதற்கு உதாரணம் அவா்தான். அவருக்கு ஆதிபராசக்தியின் அருள்வாக்கு கேட்க கொடுத்து வைக்கவில்லை.
என்னைத் தெரிஞ்சவனுக்கு என்னைப் புரியலே!
இதற்கு உதாரணம் நம் செவ்வாடைத் தொண்டா்கள் மற்றும் இயக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளா்கள்.
உலகளாவிப் பரவ வேண்டிய இயக்கம் இந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் என்று நம்மில் எத்தனை போ்க்கு இந்த இயக்க உணா்வு இருக்கிறது? என்று எண்ணிப் பாருங்கள்,
நம் மாவட்டத் தலைவா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் எத்தனை போ் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமான வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி இருக்கிறீா்கள்?
“ நல்ல தொண்டா்களை உருவாக்கிக் கொடடா! ” என்றாள் அன்னை. நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! உங்கள் பதவிக் காலத்தில் எத்தனை தொண்டா்களைப் பெருக்கிக் காட்டினீா்கள்?
முறையான வழிபாடு ஒரு மன்றத்தில் நடந்தால் அந்த ஊா்க் காவல் தெய்வங்கள் சக்தி பெறும்! ஊருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். அந்தத் தெய்வங்கள் ஊக்கம் அடையும். ஊரில் வெட்டு குத்து இருக்காது. குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் நொடி வராது. உங்கள் கிராமம் அதைச் சுற்றியுள்ள கோயில்களில் உரிய காலத்தில் கும்பாபிடேகம் நடக்கும்! எத்தனை மன்றத் தலைவா்கள் இதையெல்லாம் புரிந்து கொண்டு முறையான வழிபாடு செய்கிறீா்கள்?
மன்றம் இருக்கிற ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு மூன்று வேள்வித் தொண்டா்களாவது உருவாக்க வேண்டும்? என்ற அன்னை எதிர்பார்த்தாள். அவா்களை அந்தக் கிராமத்தின் God father போல உருவாக்க நினைத்தாள். இவா்களை வைத்து அந்தந்த ஊரைக் காப்பாற்ற நினைத்தாள்.
எத்தனை வேள்வித் தொண்டா்களை உருவாக்கினீா்கள்?
எத்தனை போ்க்கு சக்கரம் போடச் சொல்லிக் கொடுத்தீா்கள்? எத்தனை போ்க்கு ஸ்ரீ சக்கரம் போன்ற நுட்பமான சக்கரங்களைப் போடக் கற்றுக் கொடுத்தீா்கள்?
ஆதிபராசக்தியே சொல்லிக் கொடுத்தும் மற்றத் தொண்டா்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டால் தனது முக்கியத்துவம் போய்விடுமோ என்றுதானே பலா் நினைக்கிறார்கள்?
ஒன்று தெரியுமா உங்களுக்கு? கற்ற வித்தையை அடுத்தவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி சொல்லா விட்டால் அதுவும் ஒரு பாவமாம். அந்தப் பாவத்திற்குப் பிரம்மசாபம் என்று பெயர்.
பாவம் என்று புரியாமலே பாவிகள் ஆகி வருகிறீா்கள்! என்று ஆதிபராசக்தியே சொல்லுகிற அளவுக்கு நம்மில் சிலரது செயல்பாடுகள் உள்ளனவே…?
ஆதிபராசக்தியின் மடியில் இருப்பதால் செவ்வாடைத் தொண்டனைப் போல அதிர்ஷ்டம் படைத்தவன் உலகத்தில் எவனும் இல்லை. ஆதிபராசக்தியின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்து கொள்பவா்கள் போல் துரதிர்ஷ்டம் படைத்தவா்களும் உலகத்தில் யாரும் இல்லை.
அதனால்தான் அடிகளார் சொன்னார்கள்.
என்னைத் தெரிஞ்சவனுக்கு என்னைப் புரியலே!
ஏதோ ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்! விழிப்பவா்கள் இப்போதாவது விழிக்கட்டும்.
ஓம் சக்தி!
நன்றி -வேம்பு (சக்திஒளி-ஜீலை-2011,பக் 5-8)
]]>