ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவா்களின் அவதாரத் திருநாள் மேடை நிகழ்ச்சியில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நிறுவனத்தினா் வெளியிட்ட ”The Divine Light” புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை உங்களுக்காக இங்கே வெளியிடுகிறோம்.
1). இன்று வலிகளும் வேதனைகளும் பலமடங்கு பெருகிவிட்டன. ஊழலும் வன்முறையும் பொதுவானதாக ஆகிவிட்டது. நம்முடைய வாழ்க்கையில் எளிமையை எப்படித் திரும்பக் கொண்டு வருவது?
உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் உள்ளதே…! இன்றைய வாழ்க்கை முறை ஊழலையும் வன்முறையையும் ஊக்கப்படுத்தி, அதனால் வலிகளும் வேதனைகளும் அதிகமாகத்தான் ஆகிவிட்டது என்பதை உளமாற நீங்கள் உணரும்பொழுதே, இன்றைய வாழ்க்கை முறைகள் மனிதனுக்குத் தேவையான மனநிம்மதியை அவை கொடுக்கவில்லை. கொடுக்க முடியவில்லை என்பதையும் உறுதியாக்கி விட்டதல்லவா?
ஆடம்பரமான வாழ்க்கையே வசதியான வாழ்க்கை என்று மனம் மேன்மேலும் ஆசைப்படுவதும் இதற்குக் காரணம்தான். நமக்குள்ளேயே இருக்கின்ற பேரானந்தங்களையெல்லாம் தேடாமல் விட்டு விட்டு வெளித் தோற்றத்திற்கான வாழ்க்கையில் மயங்குவதும், அதற்காக ஏங்குவதும்தான் இதன் அடிப்படைக் காரணங்கள்.
பிறரிடம் அன்பு, பண்பு, பாசம், பிரிவு, கருணை காட்டி, தானும் உழைத்து, பிறரின் உழைப்பிற்கும் மரியாதை கொடுத்து, ஆடம்பரம், டாம்பீகம் இவற்றின் மீது ஆசையும் அக்கறையும் வைக்காமல், இயல்பான வாழ்க்கை வாழும்போது வலிகளும் வேதனைகளும் ஒரு கட்டுக்குள் இருக்கும். எளிமை தானாக வந்து சேரும்.
2).ஆன்மிகம் என்பது என்ன? ஆன்மிகப் பாதையில் செல்ல ஒருவருக்கு என்ன தேவை?
ஆன்மிகம் என்பது ஒருவா் தன்னைத்தானே அறிந்து கொள்வது, தன்னைத்தானே உணா்ந்து கொள்வது, தன்னைத்தானே புரிந்து கொள்வது. ஆன்மிகப் பாதைதான் மனிதனுக்கு மனநிம்மதி கொடுக்கும் என்பதை உணா்வதுதான் அதன் முதல் தேவை. தன் மனமே தனக்கு எதிரி என்பதை உணா்ந்து அதை ஒரு கட்டுக்குள் வைக்க ஆன்மிகம் தேவை.
ஆன்மிகப் பாதையில் செல்ல பக்தி, தொண்டு மற்றும் தா்மசிந்தனைகள் முக்கியத் தேவை. தியானம், உணவுக்கட்டுப்பாடு, உள்ளக் கட்டுப்பாடு இவைகளையும் கூடவே வளா்த்துக் கொள்வது நல்லது. அவை வளரும் பொழுது ஜம்புலனடக்கமும் எளிதாக அமையும். அது வந்து விட்டால் ஆன்மிகமும் எளிதாகிவிடும். இயல்பாக வரும்.
]]>