சென்னை – பெண்மணி சொல்லியது சில மாதங்களுக்கு முன் சென்னையைச் சோ்ந்த பெண்மணி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவா் தன் கதையைச் சொன்னார். “நான் ஆரம்பத்திலிருந்தே அம்மனைக் கும்பிடுகிறவள். அம்மன் கோயில் எதையும் விடமாட்டேன். ஏழைகளுக்கு நிறைய அன்னதானம் பண்ணுவேன். இந்த மருவத்தூர் அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். எனக்கு அடிகளார் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இங்குள்ள அம்மனிடம் மட்டும் தான் இஷ்டம். யாரோ சிலா் என் குடும்பத்துக்குச் செய்வினை வைத்து விட்டார்கள். அந்தக் கஷ்டம் நீங்கத்தான் மருவத்தூர் வந்தேன். இங்கு வந்ததும் உடனே கஷ்டம் நீங்கவில்லை. சரி! அருள்வாக்கில் விளக்கம் கேட்போம் என அருள்வாக்குக் கேட்கப் போனேன். “உனக்குச் செய்வினை வைத்திருக்கிறார்கள் மகளே! நான் பார்த்துக் கொள்கிறேன். அடிக்கடி என் சந்நிதிக்கு வந்துவிட்டுப்போ!” என்றாள் அம்மா! என் கஷ்டங்களை உடனே அம்மா நீக்கவில்லை. மறுபடி அம்மாவிடம் அருள்வாக்கு கேட்கப் போனேன். அம்மா இந்த முறை விளக்கமாகச் சொன்னாள். “முற்பிறப்பில் யார் யாருக்கு நீ கெடுதல் செய்தாயோ, அவா்களே இப்பிறப்பில் பழி வாங்கும் உணா்ச்சியோடு வந்திருக்கிறார்கள். அவா்கள் தான் உனக்குத் தொல்லை தருகிறார்கள். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். பாலகனுக்குப் பாதபூசை செய்து இனி அவனிடம் கேட்டுக் கொள்!” என்று கூறிவிட்டாள். அடிகளார்க்குப் பாத பூசை செய்த பிறகுதான் அவா் மகிமை எனக்குப் புரிந்தது. அவ்வப்போது எனக்கு மனக் குழப்பம் ஏற்படும் போதெல்லாம் அடிகளார் கனவில் வந்து தெளிவுபடுத்துவார். ஆனாலும், நான் பிற அம்மன் கோயில் போவதையும், நாடி சோதிடம் கேட்கப் போவதையும் விடவில்லை. ஒரு முறை பாத பூஜை செய்தபோது அடிகளார் கேட்டார்கள். “உனக்குச் சமயம் நோ்ந்த போதெல்லாம் கனவில் வந்து விளக்கம் சொல்வது நான்! அப்படியிருந்தும் நீ என்னை நம்பாமல் நாடி சோதிடம் பார்க்க ஓடுகிறாய் அப்படித்தானே….. சரி! அந்த நாடியில் அப்படி என்ன சொன்னான்? உனது முற்பிறவி ஒன்றை மட்டும் தானே சொன்னான். அதற்கும் முன்னால உனது இரண்டு, மூன்று பிறவிகளில் இருந்த உனது கதையை நான் சொல்லட்டுமா….. நாடியிலே இல்லாத உனது கதையைச் சொல்லட்டுமா…? என்று கேட்டதும் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போனேன். “உம்! நீ என்னையும் விடமாட்டே… எந்த அம்மனையும் விடமாட்டே…… அப்படித்தானே…… என்று அடிகளார் கேட்டார்கள். “ஏம்மா! எல்லா அம்மனாகவும் இருப்து நீதானே…” என்று கேட்டேன். “ஆமாமா… எல்லாம் நான்தான்! ஆனாலும் அந்த ஆன்மாவின் நிலை வேற! இந்த ஆன்மாவின் நிலை வேற! போ! போ! இதெல்லாம் புரிஞ்சுக்கிற சக்தி உனக்கில்லே போ! போ!” எனக் கூறி அனுப்பி விட்டார்கள். திருடனிடமும் தெய்வம் ஆன்மாவாக இருக்கிறது. கொலைகாரனிடமும் அதுவே ஆன்மாவாக இருக்கிறது. மகான்கள் உள்ளேயும் ஆன்மாவாக இருக்கிறது. அதனால் எல்லாமே ஒன்றாகி விடுமா? ஆன்ம நிலையில் எல்லாம் ஒன்று தான். ஆனால் அதன் சக்தி வெளிப்படுவதில் வேறுபாடு உண்டு. அதுபோல சிறு தெய்வங்களிடமும் ஆன்மா இருக்கிறது. ஆதிபராசக்தி அவதாரத்திடமும் ஆன்மா இருக்கிறது. எல்லாம் ஒரே பரமாத்மாவின் வெளிப்பாடுகளே! ஆனாலும் ஆத்ம சக்தி வெளிப்படுவதில் வித்தியாசம் உண்டு அல்லவா?
நன்றி!
ஓம் சக்தி!
மு. சுந்தரேசன், எம்.ஏ., எம். ஃபில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி, ஜுலை 2005, (பக்கம் 26 – 27) ]]>