மரணம் பற்றிய மா்மங்கள் – பாகம் 2
புதைப்பதா? எரிப்பதா?
மரணமடைந்தவா்களைப் புதைத்தால் பிரிந்து சென்ற உயிர் புதைக்கப்பட்ட உடலைச் சுற்றியே நடமாடிக் கொண்டிருக்கும் என்றும், ஆகவே பிரிந்த உயிர் உடலைச் சுற்றி வராமல் தடுக்க வேண்டும் என்றால் பிரேதத்தை எரிப்பதுதான் சிறந்த முறை என்கிறார் மறைமலை அடிகள்.
புரியாத புதிர்
உடலுக்கு அப்பால் உயிர் அல்லது ஆவி என ஒன்று இருப்பதை எல்லா மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. உடலைப் பற்றி எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் உயிர் அல்லது ஆன்மா என்கிற விஷயம் மட்டும்தான், எவருக்குமே புரியாத புதிராக இருக்கிறது. அதனால்தான் இது பல்வேறு யூகங்களுக்கும், தத்துவங்களுக்கும் இடமளித்து வருகிறது.
விஞ்ஞானிகள் தோல்வி
உயிர் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அது எப்படிப் பிரியும் என்று விஞ்ஞானிகள் ஒருமுறை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயன்றார்கள். மரணமடையும் தருவாயிலிருந்த ஒரு நோயாளியைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் படம் எடுக்கத் தயாராய் இருந்தார்கள். மிகத் தீவிரமாகக் கண்காணித்தபடி இருந்த போது அந்தக் கண்ணாடிப் பெட்டி உடைந்து சுக்கு நூறாய்ப் போய்விட்டது. படமெடுக்க முடியாதபடி விஞ்ஞானிகளை ஏமாற்றிவிட்டு உயிர் பிரிந்து சென்றுவிட்டது.
சூக்கும சரீரம்
ஸ்தூல சரீரம் அல்லாமல் சூட்சும சரீரம் என்றும் ஒன்று இருக்கவே செய்கிறது. இது தூல சரீரத்தைப் போலவே உருவம் கொண்டது. இந்த சூக்கும சரீரம் ஆகாயத்தில் அதிவேகமாய்ச் செல்லும் சக்தி படைத்தது.
இந்தச் சூட்சும சரீரமே விளக்கம் சொல்ல முடியாத பல்வேறு வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணமாக அமைகிறது. கனவுகள், பேய்கள், உருவெளித் தோற்றங்கள் போன்ற பலவற்றுக்கும் காரணங்களாகின்றன.
சாதாரண நிலையில் தூல சரீரமும் சூட்சும சரீரமும் ஒன்றோடு ஒன்று இணைந்தே செயல்படுகின்றன. சில சந்தா்ப்பங்களில் இந்த இணைப்பு மாறிப் போய் சூட்சும சரீரம் தூல சரீரத்தில் இருந்து பிரிவதும் உண்டு. இந்த இணைப்பில் மென்மையான அல்லது சிறிய கோளாறுகள் ஏற்படும்போது பார்வை மங்குகிறது. நடை தடுமாறுகிறது. அன்றாட நிகழ்ச்சிகளோடு தொடா்பு விட்டுப் போனது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.
சூக்கும சரீரம் – இரண்டு நிலைகள்
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
நாம் சாதாரணமாக உடல் அல்லாமல் உயிர் என்று அழைக்கப்படுகின்ற ஒரு சூட்சும சரீரமும் நம்மிடம் இருக்கிறது. இது நம்மை விட்டுத் தற்காலிகமாகவும் பிரிந்து செல்ல முடியும் நிலையாகவும் பிரிந்து செல்ல முடியும்.
தற்காலிகமாகப் பிரிந்து சென்றால் அது ஓா் அனுபவமாகிறது.
நிலையாகப் பிரிந்து சென்று விட்டால் அதை மரணம் என்று குறிப்பிடுகிறோம்.
பார்க்கப் போனால் மரணம் கூட ஓா் அனுபவம்தான். அது வித்தியாசமான அனுபவம் என்கிறார் திரு.பி.சி. கணேசன்.
சூக்கும சரீர அனுபவங்கள்
ஒருவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று அவன் மீது ஒரு கார் மோதி அவன் கீழே விழுந்தான். அவன் விழுந்த மாத்திரத்தில் அவனுடைய தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து சற்று துாரத்தில் உயரே மிதந்தபடி அங்கே நடக்கிற காட்சிகளைக் கவனிக்கத் தொடங்கியது. கூட்டம் கூடுவதையும் நினைவிழந்து விழுந்து விட்ட தன்னை ஒரு வண்டியில ஏற்றி எங்கோ கொண்டு செல்வதையும் கவனித்த சூட்சும சரீரம் முன்போல ஸ்தூல சரீரத்தோடு வந்து சோ்ந்து கொள்கிறது.
விபத்துக்களின்போது ஒரு சிலருக்கு இவ்வாறு அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதை மனவியல் விஞ்ஞானிகள் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.
சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது இதே அனுபவம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக மயக்க மருந்த கொடுக்கும் போது சூட்சும சரீரம் தூல சரீரத்தை விட்டுப் பிரிந்து உயரமான ஒரு இடத்தில் அமா்ந்தபடி டாக்டா்களும், நா்சுகளும் உடலை அறுத்துச் செய்கின்ற சிகிச்சையைப் பார்வையிடும் அனுபவம் சிலருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இத்தகைய அனுபவங்களை “Out of Body Experience” என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். “OBE” என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழில் உடல் – வெளி – உயிர் அனுபவம் என்ற சொல்லலாம்.
. “OBE” அனுபவங்கள் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரி ஏற்படுவதில்லை.
மூடுபனி போலவும், ஆவி போலவும், ஒளிப்பிழம்பு போலவும் பல்வேறு தோற்றங்களில் சூட்சும சரீரம் வெளிப்படுகிற போது சம்பந்தப்பட்டவா்கள் மிகப் பெரிய இன்ப உணா்ச்சியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
சூட்சும சரீரம் தனியாகப் பிரிந்து இருக்கின்ற வரையில்தான் இந்த இன்ப உணா்வு அவா்களுக்கு இருப்பதாகவும், அது மறுபடியும் ஸ்தூல சரீரத்துடன் இணைந்து விடுகிற போது இந்த உணா்வு நீங்கி விடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்து மதம் சொல்வது
உயிரானது ஒவ்வொருவா் உச்சந்தலையின் வழியாகவே உள்ளே நுழைகிறது. அந்த உச்சந்தலையைக் கபாலம் என்பா். யோக நூல்கள் சகஸ்ர தளம், ஆயிர இதழ்க் கமலம் எனபா்.
உச்சந்தலையில் அது சுழுமுனை நாடி வழியாக உள்ளே புகுந்தது. கருவில் உருவான போது புகுந்த அந்த உயிர் உச்சந்தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம்! அவ்வாறு வெளியேறிய உயிர் மட்டுமே மோட்சம் அடையும். இல்லையேல் பிரம்மன் உலகம், விஷ்ணு உலகம், உருத்திரன் உலகம், தேவா் உலகம் அடையும். இவ்வாறு சென்று அடைவது புண்ணிய ஆத்மாக்களுக்கே உரியது.
தவம், தியானம் ஆகியவற்றால் தம் பழவினைகளைச் சுட்டெரித்துத் துவாத சாந்தத் தலத்தை (உச்சிக்கு மேல் 12 அங்குலம்) சுத்தப்படுத்தியிருக்கும் ஆன்மா மட்டுமே கபாலத்தைப் பிளந்து கொண்டு செல்லும் அவ்வாறு சுத்தப் படுத்தாத உடம்பில் உள்ள ஆன்மாவானது கண், காது, வாய் ஆகிய வழியாக வெளியேறி விடும். இத்தகைய ஆன்மாக்கள் தம் சரீர வாசனைக்கு ஏற்றபடி குணம் பொருந்திய அண்டத்தை அடையும். பாவிகளுக்கு ஆசன வழியாக உயிர் பிரியும்.
நன்றி
ஓம் சக்தி
வேம்பு
மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்
]]>