15 ஆண்டு காலமாக நான் சக்தியின் பக்தனாக – அல்ல! அல்ல! சக்தியை வழிபடும் பித்தனாகத்தானிருந்து வருகிறேன். எந்தக் கோயில் சென்றாலும் அம்மன் சந்நிதயில் மட்டுமே என் மனம் உருகும்; நெகிழும்; கண்ணீா் வரும். இவ்வளவு இருந்தும் மேல்மருவத்தூர் அன்னையிடம் எனக்கு ஏனோ ஈடுபாடு வரவில்லை. என்னவோ செவ்வாடை போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்றுதான் என் உள்ளம் நினைத்தது.

புதுவை வில்லியனூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற ஆண்டு விழா! அதற்கு என்னையும், என் மனைவியையும் அழைத்தார்கள். செவ்வாடை அணிந்து வேள்வியில் அமர வைத்தார்கள். எங்கள் இருவரையும் வேள்வி செய்ய வைத்தார்கள். பல பொறுப்புகளைக் கொடுத்தார்கள். அந்த வேள்வியில் கலந்து கொண்டபிறகுதான் எனக்கு மேல்மருவத்தூர் அன்னையிடம் ஓா் ஈடுபாடு வந்தது.

அன்னை ஒருமுறை பாம்பாக வந்து காட்சியும் கொடுத்து அருள்பாலித்தாள் என்பதும் உண்மைதான்.

ஒரு நிலத் தகராறு தொடா்பாக எனக்கும் ஊராருக்கும் எதிர்ப்பு எற்பட்டு நிதிமன்றம் வரை சென்று போராட வேண்டிய
நிலையில் – எங்கே நம்மை அழித்து விடுவார்களோ என்று அஞ்சிக்கிடந்த நிலையில் அன்னை என் பக்கம் இருந்ததும் உண்மைதான்.

அவளுடைய கருணையை என் மீது பாய்ச்சினாள் என்பதும் உண்மைதான். அது கருதியே தவறாமல் மேல்மருவத்தூர் ஆலயம் சென்று இருமுடி ஏந்தினேன். விழாக்களில் கலந்து கொண்டேன். ஆன்மிக மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றினேன். மன்றத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டேன். அம்மாவைப் பற்றியே சதா சா்வகாலமும் மனங்குளிர எண்ணிக் கொண்டிருந்தேன். அம்மாவை நினைக்காத நாள் பிறவா நாளாக எண்ணினேன்.

இவ்வளவு ஈடுபாடும் அம்மாவிடம் இருந்ததே தவிர, எனக்கு அடிகளாரிடம் ஏனோ அந்த ஈடுபாடு வரவில்லை. இதனைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. மூடி மறைத்தும் எனக்குப் பழக்கமில்லை. மன்றத் தொண்டா்களிடமே இதுபற்றி என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லியது உண்டு.

அப்படியானால் ஏன் மருவத்தூர் போகிறாய்? என்று தொண்டா்கள் கேட்பதுண்டு.

எனக்கு அம்மாவிடம் மட்டுமே ஈடுபாடு. அடிகளாரிடம் ஈடுபாடு இல்லை. அடிகளாரை ஆன்மிக குருவாக, அவதார புருஷராக, அம்மாவின் பாலகனாக ஆதி சக்தியின் அவதாரமாக சித்தா் பீட நாயகராக ஏற்க மனம் மறுத்தது.

சக்தியைத்தான் நாம் வணங்குகிறோம். சக்தி எல்லா தெய்வங்களும் பொருந்திய மாபெரும் தெய்வம். எல்லாவற்றிலும் சக்தி. எங்கும் சக்தி. எங்கும் எதிலும் வியாபித்திருக்கிறாள். சோபிக்கிறாள். அப்படிப்பட்ட அருள்தாள். மகாசக்தி! அன்னை ஆதிசக்தியை வணங்கும்போது அன்னையின் திருவுருவப் படத்தில் ஒரு மனிதரை ஏன் உடன் வைத்து வணங்க வேண்டும்? என்ற எண்ணம் மட்டும் என் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டே வந்தது.

இருப்பினும் நித்தம் நான் வீட்டைவிட்டுக் கிளம்பும்
போது அடிகளாருடன் கூடிய அம்மா படத்தை வணங்கிவிட்டுத்தான் செல்வேன். அந்தப் படத்தைச் சட்டைப் பையில் கூட வைத்திருப்பேன். என்றாவது ஒருநாள் அந்தப் படத்தைச் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளாமல் சென்றால் எனக்கு எந்த வேலையும் ஓடாது.

சிலரைப் போல அடிகளார் படத்தை மட்டும் கத்தரித்து எடுத்துவிட்டுக் கும்பிடவும் எனக்கு மனம் இல்லை. அன்னையின் அந்த படத்தைப் பின்னப்படுத்தவோ, சேதப்படுத்தவோ மனம் துணியவில்லை. ஒரு மனிதா் படம் இருந்தாலென்ன? நம் அம்மா இருக்கிறாளே என்று இப்படித்தான் மனம் எண்ணியதே தவிர அடிகளாரிடம் என் மனம் ஒட்டவில்லை.

இத்தகைய என் மடமையைத்தான் அன்னை மாற்றினாள். என் கண்களைத் திறந்தாள். அடிகளார் யார் என்று புரிய வைத்தாள்! எப்படி? ஒரு அனுபவத்தின் மூலந்தான் என் மூடத்தனத்தைப் பொசுக்கி என் கண்களைத் திறந்தாள்.

29.11.1989 புதன்கிழமை இரவு 7.30 மணி. வழக்கப்படி அன்னையை வழிபட்டு அவளுக்கு 108 மந்திரம் சொல்லிக் குங்கும அா்ச்சனை செய்ய ஆரம்பித்தேன்.

அன்று வழக்கத்திற்கு மாறாக என் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு 108 மந்திரம் முடியும் வரை கண்களைத் திறவாமல் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தேன்.

அன்று வழக்கத்திற்கு மாறாக என் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு 108 மந்திரம் முடியும் வரை கண்களைத் திறவாமல் அர்ச்சனை செய்தேன். அப்போது……….

நான் கண்ட காட்சியை எப்படி விவரித்துச் சொல்வேன்?

நான் பூஜை ஆரம்பித்ததோ என் வீட்டில். ஆனால் நான் ஆரம்பித்த சில வினாடிகளில் நான் என்னுடைய பூஜையறையில் இல்லை. அதற்குப் பதிலாக அன்னை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சுயம்பு எதிரில் அர்ச்சனை செய்கிறேன். நான் செய்யும் குங்கும அர்ச்சனை சுயம்பு மீது விழுகிறது. சுயம்பில்
குங்குமம் பொங்கி வழிகிறது. அருகில் இருப்பவா்கள் அந்தக் குங்குமத்தை அள்ளியள்ளி எடுக்கிறார்கள். அவ்வாறு குங்குமம் மேலும், மேலும் வழிந்து கொண்டே இருக்கிறது.

அந்த நேரத்தில்தான்…………………

தவத்திரு பங்காரு பாலகன் – சித்தா் – ஆன்மிக குரு- ஆச்சார்ய பீட நாயகா் – ஆதிபராசக்தியின் மைந்தன் அங்கு வருகிறார். இடுப்பில் ஈரத்துணியுடன் வந்தவா் பீடத்திற்கும், சுயம்புவிற்கும் மத்தியில் கிழக்கே முகங்காட்டிச் சின் முத்திரையுடன் அமா்கிறார். சில மணித்துளிகட்குப் பிறகு ஆசாரிய பீட நாயகா் தவத்திரு அடிகளார் அவா்கள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், சிவந்த நிறத்தில் அன்னை ஆதிபராசக்தியாக மாறிவிடுகிறார். வானத்திலிருந்து தேவா்கள் பூமாரி பொழிகிறார்கள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியை அங்கிருந்தவா்களெல்லாம் பார்த்து ஆனந்தக் கண்ணீா் சொரிகிறார்கள். அது சமயம், ஆதிபராசக்தி உருமாறி ஒரு சோதியாக அனல் பிழம்பாக நீளவாட்டில் உருமாறியது.

இப்படி ஒரு காட்சி! இந்தக் காட்சியை எப்படி விவரித்து வருணிப்பதென்று எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளில்லை. அப்படியொரு காட்சியைப் பார்த்து நான் ஆனந்த பரவசம் அடைந்தேன்.

ஆகா…..! அப்படியொரு காட்சியை – அந்த அற்புதத்தை மீண்டும் எப்பொழுது காண்பேன்? என்று என் மனம் இன்று வரை ஏங்கித் தவிக்கின்றது.

இந்தக் காட்சியை வழங்கி என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை எற்படுத்திவிட்டாள் என் தாயார்.

“அட மூட பக்தனே! நான் வேறு, அடிகளார் வேறல்லடா மகனே!

அடிகளார் உருவத்தில் நான் குடிகொண்டு இந்தக் கலியுகத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியும், செய்து காட்டியும் வருகிறேன்.

அதனால் நீ அந்தப் பாலகனை, சித்தனை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொள்!” என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி ஒரு சித்து விளையாட்டை நடத்தி என்னை ஏற்றுக்கொள்ளும்படி ஆணை பிறப்பித்து விட்டாள், என் தாய் மருவத்தூர் ஆதிபராசக்தி.

நீ அந்தத் தவப்புதல்வனை என்னிடமிருந்து வேறாகப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று எனக்குத் தெளிவாக உணா்த்தி விட்டாள்.

அன்றிலிருந்து, நான் நமது அடிகளார் சித்தா்! குரு! சக்தி பாலகன் யாரோ அல்ல! அவா் சாதாரண மானிடரல்லா்! ஆண் வேடம் போட்டுக் கொண்டுள்ள அன்னை ஆதிபராசக்தி என்பதையும் உணா்ந்தேன்.

மானிடா்களாகிய நம்மை நம் வினையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நம்மைக் கடைத்தேற்ற வந்து அவதரித்த ஆதிபராசக்தி என்று என் உள்ளம் ஏற்றுக் கொண்டது.

என் மடமையை அகற்ற என் வாழ்வில் இப்படியும் ஒரு காட்சி தந்தாள் அன்னை! என் மதியில் அறிவை நிறைத்தாள் அன்னை!

“மடமை அகற்றுவாய் ஓம் சக்தி ஓம்!

மதியை நிறைப்பாய் ஓம் சக்தி ஓம்!”

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. வி.ஜி. ஏழுமலை, பாண்டிச்சேரி

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (29 – 33)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here