கனவில் கண்ட
காட்சி
நான் மருவத்தூர் சென்றவனும் அல்லன். மருவத்தூர் அன்னையின் வாரவழிபாட்டு மன்றத்தில் உறுப்பினனும் அல்லன். இதுவரை வழிபாட்டில் கலந்து கொண்டவனும் அல்லன். அப்படி இருந்த என்னைத் தஞ்சை நகருக்கு அழைத்தாள் அன்னை.
அன்று மிதமிஞ்சிய தூக்கம். நடுநிசி இருக்கும். அற்புதமான ஒரு கனவு.
எங்கள் பகுதியில் உள்ள சுந்தர காளியம்மன் ஆலயத்தில் வேப்பிலை கொண்டு தரையைச் சுத்தம் செய்கிறேன். அடிகளாரை நான் இதற்கு முன்புவரை நான் பார்த்தவன் அல்லன். ஆனாலும் அந்தக் கனவில் அன்னை ஆதிபராசக்தியாகவே விளங்கும் அடிகளார் என் கனவில் தோன்றித் தஞ்சைக்கு வா! மகனே! என்று அழைக்கிறார். மீண்டும் மீண்டும் அழைக்கிறார்.
மறுநாள் விழித்தெழுந்த பின், இது ஏதோ ஒரு கனவு. சுந்தரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று நாம் வழிபடுவதால், இப்படி ஒரு பிரமை போலும் என்று கருதிக் கொண்டு இருந்துவிட்டேன்.
மறுநாள் மனைவி பாபநாசம் சென்றது
மறுநாள் வெள்ளிக்கிழமை என் மனைவி வசந்தா திடீரென்று அருகில் உள்ள பாபநாசம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்துக்குச் சென்றுவிட்டாள்.
மருவத்தூர் அன்னையின் அருட்சிறப்பை அவள் அதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாளே தவிர மன்றத்துக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டது இல்லை. ஏதோ காந்த சக்தியால் ஈா்க்கப்பட்டது போல, அன்று பாபநாசம் சென்று மன்றத்தில் நடந்த கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டாள்.
மன்றத் தலைவா் கூறிய செய்தி
அப்போது மன்றத்தலைவா் அடிகளாரின் தஞ்சைப் பயணம் பற்றி அறிவித்தார்.
14.3.84 அன்று புதன் கிழமை பங்குனி மாதம் முதல் தேதி, அருள்திரு. அடிகளார் தஞ்சை மாவட்டத்துக்கு
ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். நமது மன்றத்துக்கும் வருகிறார்கள்.
மன்றத்தில் கலச, விளக்கு, வேள்வி பூசைகள் நடைபெற உள்ளன. அதன்படி 9 விளக்கு வைத்துப் பூசை செய்ய வேண்டும். இதுவரை ஐந்து விளக்குக்கும் பெயா் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். இன்னும் நான்கு விளக்குகள் உள்ளன. விளக்கு வேண்டுவோர் தங்கள் பெயரை முன்கூட்டியே சொல்லிப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.
என் மனைவிக்கு என்ன தோன்றியதோ! உடனே தன் பெயரைப் பதிவு செய்து விட்டாள். எங்களுக்கு விளக்கு வாங்கும் அளவு பொருளாதார வசதி இல்லை. அன்னைக்குக் கற்பூரம் வாங்கவும், பூமாலை வாங்கி வந்து அணிவிக்கவும் கூட வசதி இல்லாத நிலை. அந்த அன்னைக்கு மட்டும்தான் எங்கள் நிலைமை தெரியும்.
அந்தக் கஷ்டமான சூழ்நிலையில் ஏதோ ஒரு ஆா்வத்தில் என் மனைவி விளக்கு வாங்கிக் கொள்வதாகப் பெயரைப் பதிவு செய்துவிட்டாள்.
நான் அவளை அழைத்துக் கொண்டு வர, கபிஸ்தலத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு பாபநாசம் மன்றம் வந்தேன்.
என் மனைவி “விளக்குப் பூஜைக்குப் பெயா்ப் பதிவு செய்துவிட்டேன். அடுத்தவாரத்துக்குள் பணம் கட்டியாக வேண்டும்” என்றாள்.
இப்போது இருக்கும் நிலையில் எப்படி விளக்குக்குப் பணம் கட்ட முடியும் என்று எண்ணி நான் திகைத்தேன். மலைத்தேன். ஆனால், என் மனைவியோ, காது தோட்டை அடகு வைத்தாவது பணம் கட்டி விடலாம் எனக்கூறி தைரியம் கொடுத்தாள்.
எதிர்பாராமல் வந்த பணம்
எப்படியோ, அம்மாவிடம் வேண்டிக் கொள்! விளக்கு வாங்க ஏற்பாடு செய்வாள் என்று மனைவியிடம் கூறினேன். நான் கூறியது பொய்யாகி விடவில்லை. எதிர்பாராத வகையில் பணம் கிடைத்தது.
எங்களுக்குத் தெரிந்த
பணக்காரப் பெண்மணி ஒருவா், செல்வச் செழிப்பில் மிதப்பவா். நாங்கள் எதிர்பார்த்த பணத்துக்கும் அதிகமாக 125 ரூபாயைச் சேர்த்துத் தன் வீட்டு வேலைக்கார அம்மாளிடம் கொடுத்து, இதனை அன்பளிப்பாக வைத்துக் கொள்ளச் சொல்! என்று சொல்லிக் கொடுத்தனுப்பினார்.
அந்த வேலைக்கார அம்மாள், பணத்தை எங்களிடம் கொடுக்க, “நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தாலும், வற்புறுத்தி வைத்துவிட்டு வந்துவிடு!” என்று எஜமானியம்மாள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று சொல்லி வைத்துவிட்டுச் சென்று விட்டார்.
அன்னையின் கருணையை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து போனோம்.
தூய்மையான மனத்தோடு அம்மாவை வேண்டினால் அம்மா வலிய வந்து அருள்பாலிக்கிறாள் என்பது எவ்வளவு உண்மை!
தஞ்சையில் பெய்த பேய் மழை!
தஞ்சைக்கு வருமாறு கனவிலே அழைத்தாள் என்று சொன்னேன் அல்லவா?
அடிகளார் வருகைக்கு முன்பு தஞ்சையைச் சுற்றிலும் பேய்மழை பொழிந்து அல்லல் விளைத்தது.
“அம்மா! இந்தப் பேய்மழை நின்று உன் ஆன்மிகப் பயணம், உன் அருள் கடாட்சத்தோடு அமைய வேண்டும்” என்று வேண்டினேன். அன்னையின் பக்தா்கள் அனைவரும் வேண்டினா். மழை நின்றது.
அடிகளார் பயணம் உறுதியாகத் தெரிந்த பிறகு தஞ்சைக்கு ஓடினேன். அங்கே எனக்கு யாரும் அறிமுகம் இல்லை. எந்த மன்றத்தார் தொடா்பும் இல்லை.
அம்மா! உன்னை நம்பித்தான் புறப்படுகிறேன். என்று சொல்லிக்கொண்டு செவ்வாடை அணிந்து கொண்டு தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். பாபநாசம் மன்றத்தார் தஞ்சை வரை துணையிருந்து அழைத்துச் சென்றனா்.
ஆன்மிக ஊா்வலத்தில் கண்ட காட்சி
ஆன்மிக ஊா்வலத்தில் நான் கலந்து கொண்டேன். அந்த
ஊா்வலத்தின் அழகை, சிறப்பை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.
தஞ்சை மணிக்கூண்டு அருகேதான் அடிகளாரைக் கண்டேன்.
அடிகளார் பாலகனாய் அல்ல! பராசக்தியாகவே கண்டேன்.
நான் அதுவரை மருவத்தூர் வந்தவன் அல்ல! ஆனால் தஞ்சை மணிக்கூண்டுக்கு அருகில், கையில் தாமரை மொட்டு! முகமோ மஞ்சள் நீராடிய முகம்! முத்து முத்தாய் வோ்வை சிந்திய அந்த முகத்தில் ஒளி. என்னைக் குலுக்கியது அந்த அம்மாவுக்குத்தான் தெரியும்.
அலங்கார ரதத்தில் நான் கண்ட காட்சி என் வாழ்நாளில் மறக்க முடியாதது. எத்தனை பிறவிகள் இருக்கின்றனவோ அத்தனை பிறவிகளிலும் கிடைக்க முடியாத பாக்கியம் இது. அடிகளார் உருவத்தில் அம்மாவின் காட்சி கிடைத்தது!
அடிகளாரும், அம்மாவும் ஒன்றுதான். அதனை உணா்த்தவே அப்படி ஒரு காட்சி கிடைத்தது.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. எஸ். எஸ். மணி, கபிஸ்தலம், தஞ்சை மாவட்டம்
அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (22 -25)