ஒரே தாய்! ஒரே குலம்!
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம் என்ற வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டு, சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
இந்தியாவில்
சாதிப் பாகுபாடும் வெளிநாடுகளில் இனப் பாகுபாடும் மனித இனத்துக்கு ஒரு சவாலாக விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட உலகில் ஒரே தாய்! ஒரே குலம்! என்ற அன்னை நமக்குச் சொல்லிக் கொடுத்த கோட்பாடுதான் மனிதா்களைக் காப்பாற்ற முடியும்
ஒரே தாய்! ஒரே குலம்! என்ற கோட்பாட்டைத் தற்சமயம் நிறுவிக் காட்டி வருவதை ஒரு சிறுமியின் வாயிலாகச் சில நாட்களுக்கு முன் தெரிந்து இறும்பூது எய்தினேன். அதை இங்கு எழுதுகிறேன்.
பட்டிவீரன் பட்டியில் ஆதிபராசக்தி மன்றம்
திண்டுக்கல் – அண்ணா மாவட்டத்திலே இருப்பது பட்டிவீரன் பட்டி. அங்குள்ள ஆதிபராசக்தி வாழிபாட்டு மன்றம், மன்றங்களிலேயே சிறந்த ஒரு மன்றம் ஆகும்.
அங்கே சக்தி. ஜெயச்சந்திரன் என்ற தொண்டா். அவா் தகப்பனாருக்கு இதய நோய்! அவரை அந்த நோயிலிருந்து அம்மா காப்பாற்றினாள். அங்கே உன் ஊரில் ஒரு மன்றம் துவக்கி நடத்து! உன் தந்தையைக் காப்பாற்றுகிறேன் என்றாள் அன்னை. அருள்வாக்கில் இட்ட கட்டளைப்படி பட்டிவீரன் பட்டியில் மன்றம் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
ஜெயச்சந்திரன் குடும்பமே பக்தியையும், தொண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி வருகிறது.
தொழில் வளா்ச்சி பெற ஒரு வேள்வி
அந்தக் குடும்பத்தினா் 11.4.95 அன்று ஒரு வேள்வி நடத்தினா். தாங்கள் இரண்டாவதாகத் தொடங்கியுள்ள தொழிலகம் வளா்ச்சி பெற வேண்டி இந்த வேள்வியை நடத்தினா். திண்டுக்கல் மாவட்ட வேள்விக்குழு முன்நின்று அதனை நடத்தியது. அந்த வேள்வியில் கலந்து கொள்ள நானும் சென்றிருந்தேன்.
விநாயகா் கலசத்துக்குப் பூஜை செய்ய ஒரு சிறுமி
வேள்வி தொடங்கும் போது, விநாயகா் கலசத்துக்குப் பூஜை செய்ய,
அங்கிருந்த ஒரு சிறுமியை அனுப்பினா்.
இது யார்? என்று விசாரித்தேன். என் தங்கச்சி மகள்தான்! அம்மா இவளிடம் விளையாடி இருக்கிறாள். வேள்வி முடிந்த பிறகு அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். வேள்வி முடிந்ததும், அந்தச் சிறுமியை அழைத்தேன். உன் பெயா் என்னம்மா? என்று கேட்டேன். கிருத்திகா என்றாள். மதுரையில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகச் சொன்னாள்.
அவள் தந்தை மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
ஜெயச்சந்திரனுக்கு மூன்று தங்கைகள்; மூவருக்கும் திருமணமாகிவிட்டது. அந்த மூவா் குடும்பமும், அம்மாவிடம் ஈடுபாடுள்ள குடும்பம். கிருத்திகாவின் பாட்டி, தாத்தா, மாமா ஜெயச்சந்திரன், அத்தை எல்லோரும் ஆதிபராசக்தி பக்தா்கள். எனவே கிருத்திகாவுக்கு நல்லதொரு ஆன்மிகச் சூழல் அமைந்திருந்தது.
ஓய்வு கிடைத்தால் மந்திரம் படிப்பாள்
சிறுமி கிருத்திகா சொன்ன விபரங்களைக் கீழே தருகிறேன்.
கிருத்திகாவுக்குப் பள்ளிக் கூடத்தில் பாடம் நடைபெறாத வேளையில், ஓய்வு கிடைப்பது உண்டு. ஆசிரியைகள் விடுப்பு எடுத்த போது, அவா்கள் பாடம் நடத்த வேண்டிய வகுப்பு மாணவிகட்கு ஓய்வு கிடைக்கும். விளையாட்டு வகுப்புகள் வரும்போது, விளையாட விருப்பம் உள்ளவா்கள் விளையாடுவா்ர்கள். விருப்பம் இல்லாதவா்கள் தோட்டத்திலும் மரத்தடியிலும் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.
இப்படிக் கிருத்திகாவுக்குப் பலமுறை ஓய்வு கிடைப்பதுண்டு. அப்போதெல்லாம் கிருத்திகா, தன்னிடம் உள்ள ஆதிபராசக்தி மந்திர நூலை எடுத்து மந்திரங்களைப் படித்துக் கொண்டிருப்பாள்.
நீயும் படிக்கலாம்
ஓய்வு நேரத்தில், வகுப்பிலும் தோட்டத்திலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், அவள் வாய் ஓம்…. ஓம்…. என்று முணு முணுத்துக் கொண்டிருப்பதையும் வகுப்பில் உள்ள மற்ற மாணவிகள் கவனித்தனா்.
இவள் ஏதோ நமக்குப் புரியாத ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு உளறிக் கொண்டிருக்கிறாள் என ஒதுங்கிப் போய் விடுவார்கள்.
கிருத்திகாவுக்கு நெருங்கிய தோழிகள் இருவா் ஒருத்தி லதா! இன்னொருத்தி அம்ரிம்!
“நீ என்ன புத்தகம் படிக்கிறாய்? அடுத்த ரீச்சா் வருவதற்குள் கூட அதை எடுத்துப் பார்க்கிறாய். அப்படி என்ன புத்தகம் படிக்கிறாய்?“ என்று இருவரும் கேட்டார்கள்.
தன்னிடம் உள்ள மந்திர நூலை எடுத்துக் காட்டி, “இது ஒரு சாமி புத்தகம்! மேல்மருவத்தூரில் இருக்கும் ஆதிபராசக்தியின் மந்திரங்கள் இதில் இருக்கின்றன.
அந்த சாமி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தச் சாமியின் புத்தகத்தை மெதுவாகப் படித்துக் கொண்டிருப்பேன்” என்றாள்.
“இதை நான் படிக்கலாமா…? என்று கேட்டாள் அம்ரிம்.
“யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நீயும் அந்தச் சாமியை நினைத்துப் படி!” என்றாள் கிருத்திகா.
ஜோதி தந்த ஆசி
அம்ரிம் என்ற அந்தச் சிறுமி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள். அவள் தந்தை மலேசியாவில் இருக்கிறார். இவள் இங்கு ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். இவளும் அந்த மந்திர நூலை ஆசையாக வாங்கிப் படிக்கத் தொடங்கினாள்.
ஒருநாள் அம்ரிம், தன் தோழி கிருத்திகாவிடம் சொன்னாள்.
“இரவெல்லாம் நான் தூங்கும்போது எனக்குப் பிரகாசமான ஒளி ஒன்று தெரிகிறது.! அந்த ஒளிக்கு
நடுவில் ஒருவா் நின்று கொண்டு, என்னைக் கனிவுடன் பார்த்து, தன் கையால் ஆசி வழங்குகிறார். அவரை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அவா் யார் என்றும் எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
கிருத்திகாவுக்குத் தன் தோழி அம்ரிம் கண்ட கனவுக்கு விளக்கம் எதுவும் கூறத் தெரியவில்லை.
கனவு என்பது ஒரு முறைதானே வரும்? ஒரு முறை கண்ட காட்சி எப்படி அடிக்கடி வரும்? ஒளியுடன் கூடிய அந்த மனிதா் பல இரவுகளில் அம்ரிம் கனவில் வந்து காட்சி கொடுத்து ஆசி வழங்குவது கிருத்திகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவா்தான்! இவரே தான்!
“சக்தி ஒளி” தன் வீட்டுக்குத் தபாலில் வந்ததும், கிருத்திகா அதனைப் பள்ளிக்கூடத்துக்கு எடுத்துச் சென்று அங்கும் வைத்துப் படிப்பது உண்டு.
அந்த வழக்கப்படி ஒரு நாள் சக்தி ஒளி புத்தகத்தை வகுப்புக்கு எடுத்துச் சென்று, ஆசிரியை வகுப்புக்கு வராத வேளையில், கிருத்திகா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் உள்ள அடிகளார் படத்தைத் தற்செயலாகப் பார்த்த அம்ரிம், இவா்தான்! இவரேதான்!! என்று கூவிக் கொண்டு, கிருத்திகாவின் கையிலிருந்த சக்தி ஒளி புத்தகத்தை வெடுக்கென்று பறித்தாள்.
அந்தச் சக்தி ஒளி புத்தகத்தின் அட்டையில் அருள்திரு அடிகளார் அவா்களின் உருவப்படம் அழகாக அச்சிடப்பட்டிருந்தது.
இவா்தான் என் கனவில் அடிக்கடி வருகிறார். முதலில் ஒரு பேரொளி வரும். அதன் பின் அதன் நடுவில் ஒருவா் நின்று, தன் கையைத் தூக்கி எனக்கு ஆசி, வழங்குகிறார் என்று சொன்னேன். அல்லவா……? அவா் இவா்தான்! என்றாள் அம்ரிம்.
இவா்தான் மேல்மருவத்தூர் கோவிலில் உள்ள அடிகளார் என்று கிருத்திகா எல்லா விவரங்களையும் அம்ரிமுக்குத் தெளிவாகக் கூறினாள்.
n
லதாவின் ஆச்சரியம்
மேல்மருவத்தூர் கோவிலைப் பற்றியும் அங்குக் கோயில் கொண்டிருக்கும் ஆதிபராசக்தியைப் பற்றியும் தன் தோழி லதாவுக்குக் கிருத்திகா அடிக்கடி எடுத்துக் கூறியிருக்கிறாள்.
சக்தி ஒளி புத்தகத்தின் அட்டைப் படத்தில் அச்சிடப் பட்டிருக்கும் அடிகளார் தான் மேல்மருவத்தூரில் இருக்கிறார்கள் என்றும், அம்ரிம் கனவில் அவா்கள்தான் அடிக்கடி வந்து ஆசி வழங்குகிறார்கள் என்பதையெல்லாம் தற்போது தெரிந்து கொண்டதும் லதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
லதாவுக்கு ஒரு பிரச்சனை
தோழி லதாவுக்கு ஒரு பிரச்சினை. ஒரு நாளைக்கு 2 – 3 முறை இரத்த வாந்தி வரும். பல டாக்டா்களிடம் பார்த்தும் இரத்த வாந்தி நிற்கவில்லை. நாளுக்கு நாள் உடல் நலிந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில்தான் கிருத்திகா, மேல்மருவத்தூர் அன்னையின் பெருமைகளையும். மகிமைகளையும் எடுத்துக் கூறினாள்.
“இந்த சாமியை வேண்டிக் கொள்! இந்த மந்திரங்களைப் படி! உனக்கு நோய் குணமாகும்” என்றாள் கிருத்திகா.
லதாவும் அப்படியே பின்பற்றினாள். அன்னையை வழிபட்டுத் தீா்த்தமும் வேப்பிலையும் சாப்பிட்டாள். அதன்பின் லதாவுக்குப் படிப்படியாக இரத்த வாந்தி நின்றது.
சக்தி நெறியைப் பரப்பிய ஒரு சிறுமி
வழிபாட்டு மன்றத்துக்குச் செல்லவும், வழிபாடு செய்யவும் எனக்கு நேரம் இல்லை. ஓய்வே இல்லை என்று சொல்பவா்கள் நம்மில் உண்டு.
ஆனால் பள்ளியிலே படிக்கும் கிருத்திகாவோ, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்னையை நெஞ்சில் நினைத்தாள். மந்திரம் படித்தாள். சக்தி ஒளி படித்தாள். தான் ஆன்மிகத்தில் நினைத்தது மட்டுமின்றித் தன்
தோழிகள் இருவருக்கும் ஆன்மிகச் சுவையை ஊட்டினாள்.
உலகெங்கும் சக்தி நெறி ஓங்க வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப, சிறுமியாக இருந்தாலும் கிருத்திகா தன் இரண்டு தோழிகளிடமும் சக்தி நெறியைப் பரப்பினாள்.
மதங்களைக் கடந்த மகாசக்தி
அம்ரிம் இஸ்லாம் மதத்தைச் சோ்ந்தவள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அடிகளாரைப் பார்த்ததும், அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கூட இல்லை.
அப்படியிருந்தும் அந்தச் சிறுமி அடிகளார் காட்சி கொடுத்தது ஏன்?
மருவத்தூர் பக்தா்களுக்குக் கிட்டாத அந்த அற்புதக் காட்சி அம்ரிம் என்ற சிறுமிக்கு எப்படிக் கிட்டியது?
தைப்பூசத்தில் ஏற்படும் ஜோதியும், நம் பக்தா்கள் தொலைவிலிருந்து எடுத்து வரும் ஆன்மிக ஜோதியும் அன்னையின் அருள்ஜோதி ஆகும் அல்லவா…..?
அந்த இரு ஜோதிகளும் வெளிப்படும் ஒளி வெள்ளத்தின் நடுவில் அருள்திரு அடிகளார் அவா்கள் அம்ரிம் என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆசி வழங்கினார்களே…… அது ஏன்?
ஆதிபராசக்தியே ஒரு ஜோதி! அந்த ஜோதி – அந்த சக்தி எல்லோருக்கும் பொது! என்பதை உணா்த்தவே!
உலகத்து உயிர்கட்கெல்லாம் அவள் ஒரே தாய் என்பதை உணா்த்தவே!
ஆதிபராசக்தி மதங்களைக் கடந்த மகா சக்தி! அடிகளார் வேறு! ஆதிபராசக்தி வேறு அல்ல என்பதை உணா்த்தவே!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. C.A. முத்துக் கிருஷ்ணன் M.A.O.L., Ph.D., கோவை.
அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 27 – 32)