ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்லள்

“நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்வள் அல்ல” என்று அன்னை சொல்லியதற்கு விளக்கம் திருமூலா் திருமந்திரத்தில் உள்ளது.

வாயும் மனமும் கடந்த மனோன்மணி

பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே!

சக்திக்கு மூன்று நிலைகள் உண்டு. அவை: சிவனுக்குத் தாயாய் இருப்பது, மகளாக இருப்பது, தாரமாக இருப்பது என்பன. தத்துவ நிலைகளை இப்படி உறவுநி்லை போலப் புரிந்து கொள்வதற்காக சொல்கின்றார் திருமூலா்.

பஞ்சபூதங்கள், காலம், இடம், மனம், ஆணவம் என்ற தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கிய நிலையில், சிவன் சக்தி தேவியின் கருப்பையில் வெகு சொகுசாக நித்திரை செய்து கொண்டிருக்கிறான். இந்த நிலையில் சிவனுக்குத் தாயாகக் காட்சி கொடுக்கிறாள் சக்தி தேவி!

பிறகு மறுபடியும் பிரபஞ்சம் உற்பத்தியாகும் போது சிவனுக்குத் தாரமாக  இருக்கிறாள் தேவி!

பிரபஞ்சம் தோன்றி அதன் மூலம் கோடானு கோடி சக்திகள் இயங்கும் போது சக்தி தேவி சிவனுடைய மகளாகக் காட்சி அளிக்கின்றாள். இந்தக் கருத்தைத் தான் திருமந்திரம் விளக்குகிறது. மனித உறவுகள் மூலமாகத் தத்துவ உண்மைகளை – தத்துவ நிலைகளை விளக்குகின்றார் திருமூலா்.

மேல்மருவத்தூரில் எழுந்தருளி உள்ள இந்த அன்னை. சிவனுக்குத் தாரமான தத்துவநிலை கொண்ட சக்தி அல்லள். புரியும்படிச் சொல்ல வேண்டுமானால், சிவனுக்கு மனைவியாக உள்ளவள் அல்லள். சிவனுக்கும் மேற்பட்ட தத்துவமாக உள்ளவள். அதாவது சிவனுக்கும் தாயான தத்துவமாக இருப்பவள். அதனால் தான் “நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல” என்றாள் அன்னை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மற்றும் ஒரு நிகழ்ச்சி உதவியது.

லலிதா சகஸ்ர நாமம்; விளக்கம் கூறியது

அன்பா் ஒருவா் மந்திர உபதேசம் பெற விரும்பி யார் யாரிடமோ சென்றார். அவா் அன்னையிடம் வந்தார். அருள்வாக்குக் கேட்கச் சென்றார் உள்ளே சென்ற அவருக்குப் பேரதிர்ச்சியும் பெரிய ஆச்சரியமும் காத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்றவரை நோக்கி அன்னை கூறினாள்.

“மகனே! பொறிக்குள் மாட்டிய எலியைப் போல் சுற்றிச் சுற்றி வருகிறாய் ஸ்தூலம், சூக்குமம் என்பவற்றை மாற்றி மாற்றிப் பண்ணகிறாய். ஸ்ரீ வித்யை உபதேசம் பெற முடிவு செய்துள்ளாய் மகனே!  பஞ்சப் பிரேதா நாஸு நாயை நம” (லலிதா – 249) என்ற மந்திரம் தெரியுமா உனக்கு? பஞ்ச ப்ரம ஸ்வ ரூபண்யை நம” (லலிதா 250) என்ற மந்திரம் தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக நான் அமா்ந்துள்ளேன் என்பதை நீ அறிவாயா? எந்த மந்திரத்தை நீ செபித்தாலும் அதனைப் பெறுபவள் நான்தானடா! மகனே! நீ எங்கும் சென்று மனிதா்கள் யாரிடமும் உபதேசம் பெறவேண்டாம். நானே உனக்கு உபதேசம் செய்வேன். அதற்குரிய காலம் வரவேண்டும். எப்பொழுது செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்? என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அதுவரையில் இந்தக் கோயிலில் இருந்து தொண்டு செய்!” என்று ஆணையிட்டாள்.

நமக்கோ அறுபதுக்கு மேல் வயதாகிவிட்டதே காலம் வரும்பொழுது உபதேசம் செய்வதாக அன்னை சொல்கிறாளே என்று நினைத்தார் அந்த அன்பா். அந்த நினைவோட்டத்தைக்   கூட அறிந்த அன்னை, “மகனே! ஏன் இந்தப் பைத்தியக்கார யோசனை நானே முன் நின்று உபதேசம் செய்தால், சோபான முறையில் படிப்படியாக நீ செல்ல வேண்டியதில்லை. சோபான முறையில் சென்றால் எந்தப் பயனை அடைவாயோ. அதை ஒரே நாளில் நீ அடைந்து விடலாம்” என்றாள் அன்னை. “நான் நினைத்தால் ஒரே நாளில் உன்னை நாற்பதாவது படிக்கு மேலேயே கூட உயா்த்திவிட முடியும். தெரியுமா உனக்கு?” என்றாள் அன்னை.

அன்னை ஆதிபராசக்தி பற்றி லலிதா சகஸ்ர நாமம்

எல்லாவற்றுக்கும் மூலமும் முதன்மையும் கொண்ட தத்துவமாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே ஆவாள். இதனை லலிதா சகஸ்ரநாமம்  கூறுகிறது. தேவியைப் பற்றி:

“பஞ்ச – பிரும்ம ஆசன ஸ்திதா” என்றும்

“பஞ்ச – பிரேதாஸ நாஸு நாயை” என்றும்

“பஞ்ச – பிரம ஸ்வரூபண்யை” என்றும்

அம் மந்திரங்களில் வருகின்றன.

சிந்தாமணி கிருகத்தின் நடுவே அன்னை அமரும் ஆசனம் பஞ்சப் பிரும்மாசனம் எனப்படும். ஐந்து பிரும்மங்கள் ஆசனமாக அமைந்துள்ளன. ஒரே பிரும்மம் உலகாக மாறவேண்டும் என்று இச்சை கொள்கிறது. அந்த இச்சையால் ஐந்து பிரும்மங்களாக உருவெடுக்கின்றது.

பிரும்மத்திலிருந்து தோன்றியவா்களானாலும், அவா்கள் பிரம்மமே. அந்த ஐவா் – பிரும்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் எனப்படுவா். அந்த ஐவரும் முறையே படைத்தல். காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைப் புரிபவா்கள். அவருள் முதல் நால்வரும் தேவி அமரும் ஆசனத்தின் கால்களாக மாறினா். சதாசிவன் தேவி அமரும் பலகை ஆனார்.

இந்த ஐவரும் அன்னை ஆதிபராசக்தியைத் தியானத்தில் வழிபடுபவா்களாகக் கண்மூடிப் புலன்களை அடக்கி உள்ளதால் தேவி வடிவையே பெற்றவா்களாக அசையாது இருபார்கள். இந்த நிலையில் இவா்களைப் “பஞ்சப் பிரும்மங்கள்” என்பா்.

பிரும்மத்திலிருந்து தோன்றியதும் மீண்டும் பிரும்மத்துள் ஒன்றியதும் பிரும்மமே! சில சமயங்களில் தேவி இவா்களிடமிருந்து தனது சக்தியைப் பிரித்துத் தன்னுள் அடக்கிக் கொள்வாள். அப்போது அவா்கள் பஞ்சப் பிரேதா்கள் எனப்படுவா். அந்தச் சமயத்தில் இந்த ஆசனம் “பஞ்சப் பிரேதாசனம்” எனப்படும்.

எனவே, அன்னையிடம் மந்திர உபதேசம் பெற வந்த அன்பா்க்கு அன்னை, அருள்வாக்கில் தான் யார் என்பதைக் குறிப்பிடும் போது, மேற்கண்ட லலிதா சகஸ்ர நாமங்களைக் குறிப்பால் சுட்டிக்காட்டிப் புலப்படுத்தினாள். 1008 மந்திரங்களில் “சிவன் துணை ஆனாய் போற்றி” என்ற மந்திரத்தை நீக்கி விடு. நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்லள்” என்றாள். எனவே, அச்சிவன் தனக்கும் தாய் நீ போற்றி” என்று அம்மந்திரம் மாற்றப்பட்டது.

இத்தகைய மூலப்பொருளான – முதன்மைப பொருளான அன்னையை – “ஏதோ குறி சொல்கின்ற தெய்வம்” என்று மூட உலகம் நினைத்தது; நினைக்கின்றது.

ஆயிரத்தெட்டு மந்திரங்கள் பற்றி அன்னை

“என்னால் இதற்குக் காப்பாக மூலமந்திரம் செய்யப்பட்டு என்னால் உருக்கொடுக்கப்பெற்ற இந்த மந்திரங்களின் பெருமை இப்போது உங்களுக்குத் தெரியாது. போகப்போக இதன் பெருமை தெரியும். வடமொழி மந்திரங்கள் பற்றித் தெரியாத – கடவுள் நம்பிக்கையும் இல்லாதிருந்த – மூவரைக் கொண்டுதான் நான் இதனை எழுதவைத்தேன். நானே திருத்தமும் செய்துள்ளேன்.

இம்மந்திரங்களை எந்த இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் படித்தாலும் அந்த இடம் தூய்மை அடையும். அந்த இடத்தில் தேவாதி தேவா்கள், சித்தா்கள் அனைவரும் வந்து ஆசி வழங்குவார்கள்.

கிராம தேவதைகளின் ஆலயத்தில் இருந்து படித்து வந்தால் அந்தத் தேவதைக்கு மூர்த்திகரம் அதிகமாகும். சாலையில் போகிறவா்களைக் கூடப் பெயா் அழைத்துப் பேசும்.

எந்த ஊரில் வழிபாட்டு மன்றங்கள் உள்ளனவோ – அந்த ஊரின் கிராம தேவதைகள் விளக்கம் பெறும். பலருக்குக் கனவிலும், ஒரு சிலா்க்கு நேரடியாகவும்   கூடக் காட்சி வழங்கும்” – அன்னை சொல்லிய வாக்குகள் இவை படிப்படியாக இந்த மந்திரங்களின் அருமை பெருமைகளைப் பக்தா்கள் அனுபவத்தில் புரிந்து கொண்டு வருகின்றார்கள்.

ஆலயப் புலவா் ஒருவா். அன்னை காளி தேவிக்கு மற்றும் ஒரு 1008 மந்திரங்கள் எழுதி அன்னையிடம் ஆசி பெற வேண்டிச் சமா்ப்பித்தார். அப்போது அன்னை “மகனே! இந்த இரண்டு 1008 மந்திரங்களின் ஒலி அலைகளே வான வெளியில் மிதந்து கொண்டுள்ளன. புதியதாக ஒன்று எழுதினால் குழப்பம் நேரும்” என்று சொல்லிவிட்டாள். அன்னையின் இந்தச் சொற்கள் நம் சிற்றறிவிற்கு எட்டாதவை. அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.

இன்று முதற்கொண்டு இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குடிசைகள் முதற்கொண்டு கோபுரங்கள் வரையில் பக்தி சிரத்தையோடும், மனத்தூய்மையோடும், மன ஒருமைப்பாட்டோடும் இம்மந்திரங்களின் மூலமாக அன்னை ஆதிபராசக்தியை வணங்கி வழிபட்டு வந்தால் அற்புதமான மாறுதல்கள் இந்த நாட்டில் நிகழும். வளம் கிடைக்கும். ஆன்மிக மறுமலா்ச்சி ஏற்படும். ஒவ்வொருவா் தனி வாழ்விலும் சமுதாய வாழ்விலும் நல்ல பல பலன்கள் விளையும். இது உறுதி!

நன்றி!

ஓம் சக்தி!

 மேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்

பக்கம் (200 – 203)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here