அவா் ஒரு இளைஞா், திருமணமே வேண்டாம் என்று இருந்தவா், அண்ணன் தம்பிகள் உண்டு. தமக்கைத் தங்கைகள் உண்டு. வயதான தாயார் உண்டு. வெளிநாடு சென்று ஓரிரண்டு வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்து, தேவையான பணத்தைத் தாயாரிடம் கொடுத்துவிட்டு,
சந்நியாசியாகப் போய்விடுவது என்பது அவா் திட்டம். நம் அம்மா கோயிலுக்கு வருவார். தொண்டு செய்வார் அந்த இளைஞா்.
மகன் சந்நியாசியாகப் போய்விடுவது எந்தத் தாய்க்குத்தான் பிடிக்கும்? அந்த இளைஞரின் தாயார், திருமணம் செய்து கொள்ள மகனை வற்புறுத்திக் கொண்டே வந்தார். மகன் மசியவில்லை. அவருடைய தாயார் நம் அன்னையின் சித்தா் பீடத்துக்கு வந்தார். அவருக்குத் தெரிந்திருந்த ஒரே வழி “தன் மகனுக்குத் திருமணம் நடக்க வேண்டிக் கொண்டு அங்கவலம் வருவதுதான் தன் தள்ளாத வயதில் நம் அன்னையின் சித்தா் பீடத்தில் அங்கவலம் வந்தார். தன் மகனோடு அருள்திரு அம்மா அவா்களை அருள் கூடத்தில் தரிசனம் செய்தார். அருள்திரு. அம்மா அவா்கள், “உன் மகனுக்குத் திருமணம் வருது நல்ல மருமகளா உனக்கு வருது படிச்ச பொண்ணா, உத்தியோகம் பாக்குற பொண்ணா வருது கல்யாணம் பண்ணி வச்சுரு சொந்தத்திலேயே பொண்ணு வருது கவலைப்படாதே என்றார்கள். சந்நியாசியாகப் போக விருப்பம் கொண்டிருந்த இளைஞா் திகைத்துப் போயிருக்கிறார். தன் விருப்பத்தை அருள்திரு அம்மா அவா்களிடம் சொல்ல யத்தனித்து “அம்மா……..” என்று இழுக்கிறார்.
அம்மா அதுவரை எதுவும் சொல்லவில்லை. “எல்லாம் தெரியும்….. நீ கல்யாணம் பண்ணிக்கோ” என்று கண்டிப்புடன் கூறி விடை தருகிறார்கள்.
ஒரு தாயின் தவிப்பு உலகத் தாய்க்குத் தெரியாதா? அந்தத் தாய் வாய் திறந்து கேட்காமலே, நினைத்த வரத்தை அருள்திரு. அம்மா அவா்கள் திருவாய் மலர்ந்து அருளிவிட்டார்கள்.
தினம் தினம் சித்தா்களும், தெய்வங்களும் நடமாடும் திருத்தலம். தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் “ஓம் சக்தி பராசக்தி” என்று சொல்லிக் கொண்டு உருக்கமாக நடக்கிற திருத்தலம். தினம் தினம் நூற்றுக்கணக்கான பக்தா்கள் “ஓம் சக்தி! பராசக்தி!”
என்று சொல்லிக் கொண்டு உறுதியான பக்தியோடு அங்கவலம் வருகின்ற திருத்தலம். இருபத்தோரு சித்தா்கள் இன்பமயமாக உயிரோட்டமாக உடலோடு ஜீவசமாதியாகி உயிர்ப்பை ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்கிற திருத்தலம். ஆதிபராசக்தியின் அவதாரம் அருள்திரு அம்மா அவா்கள் தினம்தோறும் திருப்பாதம் பதித்து நடமாடுகிற திருத்தலம். ஆண்டுக்கு ஒருமுறை ஆதிபராசக்தியே அருள்திரு அம்மா அவா்களின் திருமேனியில் அருள்கொண்டு இறங்கி நமக்காக நம் பாவங்களை ஏற்றுக் கொண்ட மேல்மருவத்தூர்ப் புண்ணிய பூமியைப் புனிதமாக்கி, பூமாதேவியின் பாரங்களைத் தான் ஏற்றுக்கொண்டு, ஆடிப்பூரத்தை அனுசரித்து, ஆண்டுக்கு ஒருமுறை அங்கவலம் வருகின்ற திருத்தலம். அந்தத் திருத்தலத்தில் மகனுக்குத் திருமணமாக வேண்டி, அந்த மகனின் சந்நியாசம் போகிற சிந்தனையை மாற்றி வைக்க வேண்டி அந்த இளைஞரின் வயதான தாய் செய்த அங்கப் பிரதட்சனை மகிமை, அருள்திரு அம்மா அவா்களின் கருணையின் பெருமை, அந்த இளைஞனுக்குத் திருமணம் தேவையா, சந்நியாசம் தேவையா என்று எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அருள்திரு அம்மாவின் தீட்சண்யம் எல்லாம் சோ்ந்து, திருமணத்துக்கான உத்தரவு கிடைத்தது.
தாய்க்குச் சந்தோஷம். இளைஞருக்கு அருள்திரு அம்மா அவா்களின் உத்தரவை மீற முடியாத கட்டுப்பாடு. உடலால் பெற்றெடுத்த தாயின் விருப்பததை எப்படியாவது அவரைச் சமாதானம் செய்து விடலாம் என்று இருந்த இளைஞரின் உறுதி, உலகத்துக்கே தாயாக வந்திருக்கும் அருள்திரு. அம்மா அவா்களின் உத்தரவுக்கு முன்னால் பொடிப்பொடியானது. அருள்திரு. அம்மா அவா்களிடம் ஒரு பிள்ளையின் உரிமையோடு, ஆசையோடு, அறியாமையோடு, “அம்மா திருமணத்துக்கு அம்மா வரணும்மா” என்று விண்ணப்பித்தார் அந்த இளைஞா். திருமணம் கை கூடி வருமுன்னே அருள்திரு அம்மாவுக்கு அழைப்பு.
“வருவேன் போ” என்பது அருள்திரு அம்மாவின் பதில்.
அந்த வயதான தாயும், அந்த இளைஞரும் வீட்டுக்கு வந்தார்கள். வந்த சில நாட்களில் மிக நெருங்கிய அக்காமுறை கொண்ட உறவினா்கள் அவா்களின் வீடுதேடி வருகிறார்கள். தங்கள் மகளை அந்த இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பி வந்திருந்தார்கள். பெண் படித்த பெண். நெருங்கிய உறவுக்காரப்பெண். வங்கியில் உத்தியோகம் பார்க்கிற பெண் இந்த இளைஞரின் தாயாருக்கு மனதுக்குப் பிடித்த பெண், அருள்திரு அம்மா சொன்னது போலவே எல்லாத் தகுதிகளும் அமைந்த பெண். திருமணம் ஏற்பாடாகியது. அந்த இளைஞா் பத்திரிகை எடுத்துக்கொண்டு வந்து அருள்திரு அம்மா அவா்களிடம் சமா்ப்பித்துவிட்டு வேண்டுகிறார். “அம்மா திருமணத்துக்கு வரவேண்டும்” அருள்திரு அம்மா அவா்களும் சொல்லுகிறார்கள். “நெனச்சா வருவேன். போய் வா”
அந்த இளைஞரின் திருமணத்தன்று அருள்திரு அம்மா அவா்கள் நெல்லை மாவட்டச் சுற்றுப் பயணம் செல்ல ஏற்கனவே திட்டம் இடப்பட்டு இருந்தது. அருள்திரு அம்மாவைத் திருமணத்துக்கு அழைத்த இளைஞா் தஞ்சாவூரை அடுத்த கரந்தை என்ற ஊரைச் சேர்ந்தவா். அழைத்த அழைப்புக்கு அருள்திரு அம்மா அவா்கள் சம்பிரதாயமாகப் பதில் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது என்று அந்த இளைஞா் நினைத்துக் கொண்டார்.
அவருடைய திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. திருமணத்துக்கு முதல்நாள் திருமணப் பந்தல் அலங்காரம் நடந்து கொண்டிருக்கிறது. கரந்தை மன்றத் தொண்டா்களும் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில்……….
ஒரு பெரியவா் சாலையைக் கடந்து பந்தலை நோக்கி வருகிறார். அருள்திரு. அம்மா அவா்களின் தந்தையார் திரு. கோபால நாயக்கரைப் போன்ற சாயல் கொண்டிருந்தார். ஒரு பெரிய வெள்ளை
வேட்டியை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டு, அதையே உடம்புக்கு மேலே சுற்றிக்கொண்டு இருக்கிறார். கையில் ஒரு கோல் ஏந்தி வருகிறார். நம் இளைஞரும் அவரைப் பார்க்கிறார். வந்த பெரியவா் இளைஞரை நோக்கி வருகிறார். இளைஞா் அவரை வணங்குகிறார். கைகூப்பி வணங்கி நின்ற நம் இளைஞரை நோக்கி வருகிறார். இளைஞா் அவரை வணங்குகிறார். கைகூப்பி வணங்கி நின்ற இளைஞரைப் பார்த்து, வந்த பெரியவா் சொல்கிறார். “கணேச மூர்த்தி உன் கல்யாணத்துக்குத்தான் வந்தேன். ஒளிமயமான எதிர்காலம் உனக்கு இருக்கு நீ நல்லா இருப்பே!……. உனக்கு என் ஆசிர்வாதம்” என்றார்.
அந்த இளைஞா் பெயா் கணேசன். வந்த பெரியவா் முற்றிலும் புதியவா். அறிமுகமே இல்லாதவா். எப்படித் தன் பெயரை அவ்வளவு சரியாக “கணேசமூா்த்தி” என்று அழைத்தார்? எப்படித் தான்தான் மாப்பிள்ளை என்று அறிந்து கொண்டார்? நாம் திருமணப் பத்திரிகையை இவருக்கு அனுப்பக் கூட இல்லையே! என்று கரந்தை கணேசன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்த பெரியவா் ஒரு கேள்வி கேட்டார். “கணேசமூா்த்தி நான் வந்தபோது நீ கும்பிடு போட்டாயே, கழுதைக்குக் காயஸ்திரம் கட்டி அதற்குக் கும்பிடு போட்டால், போட்ட கும்பிடு கழுதைக்கா? காயஸ்திரத்துக்கா?” என்று கேட்டார்.
சக்தி கணேசமூா்த்தி “புரியலையே சாமி” என்றார்.
“கழுதை என்பது இந்த உடம்பு. காயஸ்திரம் என்றால் இந்த உடுப்பு (ஆடை) நீ போட்ட கும்பிடு கழுதைக்கா? காயஸ்திரத்துக்கா? என்று திரும்பவும் கேட்டார்.
“தெரியலையே சாமி” என்றார் சக்தி கணேசன்.
“அப்படியா? யோசித்துக் கொண்டே இரு. இந்தா வா்றேன்” சொல்லிக் கொண்டே சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்து விட்டார் அந்தப் பெரியவா். என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார் சக்தி.
கணேசன்.
அருள்திரு அம்மாவின் தந்தைபோல் தோற்றம். அறிமுகமே இல்லாத அவா் தன்னை கணேசமூா்த்தி என்று அழைத்த அழைப்பு, மறைபொருள்போல, மறைபொருளாக அவா் பேசிய வார்த்தைகள் என்று ஒரு சில நொடிகளில் கூட்டிக் கழித்துப் பார்த்து, “இது அம்மாவாக இருக்குமோ” என்று கணித்துப் பார்ப்பதற்கு முன்னா் வந்த பெரியவா், கண் முன்னே சாலையைக் கடந்தார். கண் பார்த்திருக்கப் பார்த்திருக்க கண் முன்னே காணாமல் மறைந்தார். ஆகா அருள்திரு. அம்மாவே தான்
“நெனச்சா வருவேன்” என்று அருள் கூடத்துக்குள் இருந்து கொண்டு அருள்திரு அம்மா சொன்ன வார்த்தைகள், அம்மா அவா்கள் வரவேண்டும் என்று ஆசையாக அழைத்த அப்பாவித்தனம். தான் ஏற்பாடு செய்து தந்த திருமணத்துக்குத் தானே போய் ஆசிர்வதிக்க வேண்டும் என்ற தாய் உள்ளம். அருள்திரு அம்மாவே தன் தந்தையார் சாயலில் தன்னை மறைத்துக் கொண்டு சக்தி கணேசன் வீட்டுக்குத் திருமணச் சந்தா்ப்பத்தில் போய் ஆசி தந்த கருணை, நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த உருவத்தில் வரக் கூடிய சக்தி பெற்ற அம்மாதான் கணேசன் வீட்டுக்குத் திருமணம் விசாரிக்கவும், வாழ்த்துச் சொல்லவும் “நெனச்சிருக்காங்க……….. வந்திருக்காங்க……….” இது 1980 களில் நடந்தது.
தொடரும்……………….
நன்றி
ஓம் சக்தி
பேராசிரியா் சக்தி. த. சோமசுந்தரம், பூம்புகார்
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
நன்றாக உள்ளது.இந்நிகழ்ச்சியை பகிர்ந்ததர்காக ரொம்ப நன்றி