“கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்! – என்பது அம்மாவின் அருள்வாக்கு!
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது பழமொழி”
அம்மா நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்புகளை நாம் எத்தனைபோ் பயன்படுத்துகிறோம்? எத்தனை பேர் அருள் வாக்கைக் கேட்டு அதன்படி வழி நடக்கிறோம்? நமக்கு நாமே ஒரு விநாடி சிந்தித்துப் பார்ப்போமேயானால் இந்த மானிடப் பிறவியின் பயனை அடைந்துவிடலாம்.
ஒன்றா……. இரண்டா……..!
அம்மா நமக்கு அளித்திருக்கும் வாய்ப்புகள் ஒன்றா? இரண்டா பட்டியல் போடுவதற்கு? ஆன்மிக குருவாக – சித்தராக – அவதார புருஷராக அம்மா வாழும் இந்த நூற்றாண்டில் நாமும் பிறந்து இருப்பதே பெரும் பாக்கியம்!
அன்னையின் அருள்வாக்கு
அம்மா நமக்குக் கொடுத்துள்ள அரிய பொக்கிஷம் (புதையல்) அன்னையின் அருள்வாக்கு! இந்தப் புதையல் அடங்கிய பெட்டியைத் திறந்து படித்திருக்கிறோமா….?
நம் விதியை மாற்றி எழுதுவது அம்மாவின் அருள்வாக்கு! தீராத நோயைத் தீா்த்து வைப்பது அம்மாவின் அருள்வாக்கு! ஆன்மிகத் தத்துவங்களை உலகிற்கு அளிப்பது அம்மாவின் அருள்வாக்கு!
மரணத்தின் வாயிலிருந்து மீட்பது அம்மாவின் அருள்வாக்கு! வாழ்க்கையை நெறிப்படுத்துவது அம்மாவின் அருள்வாக்கு!
பிறவிப் பயனை அடைய வழி காட்டுவது அம்மாவின் அருள்வாக்கு!
ஏவல் – பில்லி – சூனியத்தைக் கட்டுப் படுத்துவது அம்மாவின் அருள்வாக்கு!
“அன்னையின் அருள்வாக்கு” என்ற நூலை எத்தனை போ் வாங்கிப் படிக்கிறோம்? சிந்தியுங்கள்!
கருவறைப் பணி செய்யும் வாய்ப்பு
கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் மற்ற இந்துக் கோயில்களில் பெண்கள் கருவறையுள் செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கருவறையில் நிற்க முடிவதில்லை.
பெண்கள் சமத்துவம் – 33% இட ஒதுக்கீடு – பெண்ணுரிமை என்றெல்லாம் மேடை போட்டுப் பேசிப் பேசியே சுதந்திர இந்தியாவுக்கு 60 வயதாகிவிட்டது.
ஆனால், பாரதி கண்ட கனவை (பெண்ணுரிமையை) நனவாக்கித் தந்திருப்பவள் நம் அம்மா!
பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபடலாம்; கருவறையுள் தொண்டு செய்யலாம், வேள்விப் பூசைகள் செய்யலாம், கும்பாபிடேகம் நடத்தலாம் என்று கூறி வாய்ப்பு கொடுத்தாள் நம் அம்மா! பெண்களைக் கோபுரத்தில் ஏற்றிக் கும்பாபிடேகம் செய்ய வைத்தவள் இந்து மத வரலாற்றிலேயே நம் அம்மாதான்!
சாரதா அம்மையார், அன்னை தெரசா என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே பெண்கள் ஆன்மிகத்திலும், சமுதாயத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தனா். அந்தக் காலம் மாறிவிட்டது.
இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் சமுதாயத் தொண்டிலும், ஆன்மிகத் தொண்டிலும் விளம்பரம் இல்லாமல் ஈடுபட்டிருக்கிறார்கள். இதெல்லாம் யாரால் வந்தது….? நம் அம்மாவால் மட்டுமே….!
மந்திரங்கள் – அம்மா கொடுத்த புதையல்
ஒவ்வொரு தெய்வத்தையும் போற்றி வழிபடவும் – வழிபட்டுப் பலன் அடையவும் மந்திரங்கள் இருக்கின்றன. இந்த மந்திரங்கள் தெய்வங்களின் சூக்கும வடிவங்கள். மந்திர சொரூபிணி என்று தேவியைக் குறிப்பிடுவா். மந்திர வடிவாக இருப்பவள் என்பது அதன் பொருள்.
இந்த மந்திரங்களைக் குரு உபதேசம் பெற்றே படிக்க வேண்டும். இன்னார்தான் படிக்க வேண்டும்; இன்னின்னார் படிக்கக் கூடாது என்று விதிகளை எழுதி வைத்தனா். அதிலும் பெண்கள் மந்திரம் படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டனா்.
சமஸ்கிருத மொழியிலேயே பெரும்பாலான மந்திரங்கள் இருப்தால் அவற்றைப் பலரும் படித்து வழிபடுவதில்லை. அம்மா இந்த அவதார காலத்தில் தமிழில் மந்திரங்களைக் கொடுத்தது மட்டுமில்லாமல், அவற்றுக்குச் சக்தியையும் ஊட்டிக் கொடுத்திருக்கிறாள். அதனை அனுபவத்தில் புரியவும் வைத்திருக்கிறாள்.
லலிதா சகஸ்ர நாமம் கூட வாக்குத் தேவதைகளால் வெளிப்படுத்தப்பட்டவை என்பா். நமக்குக் கிடைத்த மந்திரங்களோ ஆதிபராசக்தியின் அவதார காலத்திலே கொடுக்கப்பட்டவை. உயிர் கொடுக்கப்பட்டவை. மூல மந்திரமோ அவளது திருவாயிலிருந்து வெளிப்பட்ட மந்திரம். அது அபாரமான சக்தி கொண்டது. சாதாரண படிப்பறிவு கொண்ட பாமரா் கூட தினம் தினம் உச்சரித்து அவளது அருளைப் பெறலாம்.
குருவைக் கொடுத்திருக்கிறாள்
“தாரமும் குருவும் தலைவிதி வசப்படி!” என்பது பழமொழி.
மனைவியும், குருவும் ஒருவா்க்கு அமைவது அவரவா் தலைவிதிப்படி என்பார்கள்.
குருவிற்குச் சமமான தெய்வம் இல்லை. அவா்க்குச் சமமான பதவியும் இல்லை. தெய்வத்தை அடைய – மோட்சம் பெற – குருவின் தயவு தேவை. அத்தகைய குருவை அம்மாவே நமக்குக் கொடுத்திருக்கிறாள். “உங்களுக்குத் தெய்வமாகவும், குருவாகவும் அடிகளாரைக் கொடுத்திருக்கிறேன் ” என்பது அம்மாவின் அருள்வாக்கு.
இம்மேலான குருவருளைப் பெற நாம் காட்டுக்கும் போக வேண்டியதில்லை. உடல் வருத்தித் தவம் செய்ய வேண்டியதும் இல்லை.
அம்மா நமக்கு அளித்துள்ள “குருபோற்றி 108” மந்திரங்களையும், திருவடி போற்றி 108 மந்திரங்களையும் அடிக்கடி படித்து உருவேற்றி வந்தாலே போதும். தொண்டு செய்து வந்தாலே போதும். எளிதில் அருள் பெறலாம். ஆச்சாரிய அபிமானமே போதும் என்கிறாள் அன்னை.
சந்ததியைக் காப்பாற்றுவேன்
நம் சந்ததியினா் சுகமாக இருக்க வேண்டி சொத்து சோ்க்கவும், பணம் சம்பாதிக்கவும் வாழ்நாள் எல்லாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். நம் சந்ததியைக் காப்பாற்ற அம்மா எளிய வழியைக் கூறுகிறாள்.
“எவன் ஒருவன் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து, தூய்மையோடு அமா்ந்து என்னை மன ஒருமையோடு இந்த 1008 மந்திரங்களை, 1008 நாள் தொடா்ந்து படித்து வழிபட்டு வருகிறானோ, அவனது சந்ததியினரைக் காப்பாற்றுவேன்” – என்பது அன்னையின் அருள்வாக்கு.
சக்தி கவசம்
“சக்தி கவசம்” – அம்மா கொடுத்த பாதுகாப்புக் கவசம்! இந்தக் கலியுகத்தில் எங்கே எப்போது எது நடக்குமோ….. என்று பயந்து பயந்து போக வேண்டியுள்ளது. தீவிரவாதமும், வெடிகுண்டு கலாச்சாரமும் வேகமாகப் பரவி வருகின்றன. பணக்காரா்களும், தொழிலதிபா்களும், அரசியல்வாதிகளும், குண்டு துளைக்காத வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக் கொள்கிறார்கள்.
நமக்கு ஏது அவ்வளவு வசதி…….?
அம்மா தன் பிள்ளைகளை நோய் நொடிகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றவே “சக்தி கவசம்” என்ற மந்திரங்களை வழங்கியிருக்கிறாள். எனவே, அம்மாவின் “மந்திர நூல்” நமக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பு!
மந்திரக்கூறு, சக்தி வழிபாடு என்னும் மந்திரங்கள் படிக்கப் படிக்க அளவற்ற பலன்கள் தருபவை; பல தெய்வ அனுபவங்களைத் தருபவை. இம் மந்திரங்கள் எங்கே ஒலிக்கப்படுகின்றனவோ, அந்த இடங்களின் சூழ்நிலையை மாற்றுகின்றன.
இந்த மந்திர ஒலி அலைகள் அதிர்வுகள் விண்ணிலும், மண்ணிலும் பரவிச் சில நன்மைகளை உண்டாக்குகின்றன. மனத் தூய்மையோடும், மன ஒருமையோடும் அம்மாவின் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வந்தாலே போதும்! வீட்டிலும், நாட்டிலும் அற்புதமான மாறுதல்கள் நிகழும்.
எத்தனைபோ் அன்றாடம் 1008 மந்திரங்கள் படிக்கிறோம்? சிந்தித்துப் பாருங்கள்!
பாதபூஜை வாய்ப்பு
அம்மா நமக்குக் கொடுத்திருக்கிற வாய்ப்புக்களில் பாதபூஜை செய்யும் வாய்ப்பும் ஒன்று.
“குருவின் பாதபூஜை தீா்த்தத்துக்கு ஏழு கடல்களும் சமம் ஆகாது” என்கிறது குரு கீதை. இந்தப் பாதபூஜையின் மகிமையை உணா்ந்தவா்கள் எத்தனை போ்? அனுபவித்து அறிந்தவா்களே அதன் அருமையை உணர முடியும்.
மகா பாரதத்தில் தருமா் சூதாட்டத்தில் அரசை இழந்துவிட்டபோது தமக்குப் பாதபூஜை செய்த பாண்டவா்களைக் கிருஷ்ணன் மறந்துவிடவில்லை. தனக்குப் பாதபூஜை செய்தவா்கள் மீண்டும் இராஜ்யம் பெறும்வரை அவா் ஓயவில்லை.
தொண்டு நெறி
மனிதன் மோட்சம் பெறுவதற்கு பகவத் கீதை நான்கு மார்க்கங்களைச் சொல்கிறது.
- ஞானமார்க்கம் 2. கருமயோகம் 3. ராஜயோகம் 4. பக்திமார்க்கம்
சைவசித்தாந்தம் நான்கு மார்க்கங்களைக் கூறும்
- சரியை நெறி 2. கிரியை நெறி 3. யோக நெறி 4. ஞான நெறி
இராமானுசா் சரணாகதியே சிறந்த வழி என்று போதித்தார்.
அம்மா இந்த அவதார காலத்தில் எளிய வழிகளைக் காட்டுகிறாள்.
“சக மனிதா்களுக்கு உள்ளன்போடும், உண்மையோடும் தொண்டு செய்! உன்னைக் கரையேற்றுவேன்” என்கிறாள்.
எனவே அம்மா நமக்குக் கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு கரை ஏறுவோம்.
நன்றி!
ஒம் சக்தி!
சக்தி. விஜயலட்சுமி
போர்ட் பிளேயா், அந்தமான் – 744102
]]>