சுட்டெரிக்கும் கத்தரி வெயில்; என் அலுவலக அறையோ மேல் மாடியில்; எழுது! எழுது என்று அம்மா சொன்னார்களே…… என்ன எழுதுவது? சக்தி ஒளிக்கு என்ன எழுதுவது? என்று எண்ணிய போது “வெயிலே” முன் வந்து நின்றது.
நிழல் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். நிழல் தரும் மரம் பல இடங்களில் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
நம் அன்னையைக் கூட, “ஓம் கோடையைத் தணிக்கும் குளிர் தரு போற்றி ஓம்” – என்று தானே 1008 போற்றி மலா்களில் வழிபட்டு மகிழ்கிறோம்.
ஒரு பக்தா் அம்மாவிடம் அருள் வாக்கில் கேட்டாராம்
“அம்மா! நாட்டில் இவ்வளவு அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றனவே…. இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறாயே…………” என்று முறையிட்டாராம்.
அது கேட்டு அம்மா சொன்னாளாம். என்ன செய்வது மகனே!…………… நீ கலியுகத்தில் வந்து மாட்டிக் கொண்டாய். வெயில் கடுமையாத் தான் இருக்கிறது! என்னிடம் வந்தால் குடை தருவேன்; நீ வெயிலில் பாதிக்காமல் நடந்து போகலாம் என்று சொல்லிவிட்டு, என்னிடம் வருகிறவனுக்கு மட்டும் நான் குடையைத் தரலாம். என்னிடம் வரவே விரும்பாதவனுக்கு நான் என்ன செய்ய முடியும்? – என்றார்களாம்.
கலியுகக் கேடுகள் – தீவிர வாதங்கள் – அக்கிரமங்கள் – அதன் பாதிப்புகட்குக் கடும் வெயிலை அம்மா உவமையாகக் கூறியுள்ளார்கள்.
இவற்றைத் தணிக்க வேண்டுமானால் ஆன்மிகம் என்ற தண்ணீா் தேவை.
அம்மாவை முழுமையாக நம்பி அவளிடம் சரணாகதி அடைந்து அவள் காட்டும் வழிமுறைகளின் படி நடக்க வேண்டும்.
ஓரளவிற்கு சக்தி ஒளி படித்துப் படித்து ஊழ்வினை பற்றிக் கற்றுக் கொண்டதாலோ என்னவோ, இப்போதெல்லாம் நம் சக்திகளில் பலா், தங்கள் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிக் கூறும் போது, “ஏதோ என் ஊழ்வினை! இப்படிப் படுத்துது!…….. உம்……….. என்ன செய்யறது! என்று புலம்புவதைக் கேட்கிறோம்.
முன்பெல்லாம் ஒரு கஷ்டம் வந்தால் அன்னையைத் திட்டியவா்கள் கூட, இப்பொழுது தங்கள் வினையை நொந்து கொள்ளும் அளவிற்குத் தேறிவிட்டார்கள்.
ஆனால் இது போதுமா………..?
இதற்கு மேலும் நாம் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்றே அன்னை எதிர்பார்க்கிறாள்.
இதோ! எடுத்துக்காட்டாக இந்த அருள் வாக்கைக் கேளுங்கள்.
“ஊழ்வினை! ஊழ்வினை என்றே புலம்பிக் கொண்டிராமல், அந்த ஊழ்வினையையும் தகா்த்தெறியும் ஆற்றல், ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை உணர வேண்டும்” – என்று குரு வடிவாக வந்த நம் மருவூா் தெய்வம் வழி காட்டுகிறது. ஊக்கப்படுத்துகிறது.
வெயில் தணிக்க குடை, தொப்பி, விசிறி, குளிர்சாதனக் கருவி என அவரவா் வசதிக்கேற்ப உண்டு. அது போலவே ஊழ்வினை தணிக்க பக்தி, தொண்டு, தா்மம், தியானம், மௌனம் எனப் பலப்பல வழிகள் உண்டு. பயன்படுத்திப் பலன் பெறுவது அவரவா் கையில் உள்ளது.
உங்கள் பார்வைக்குச் சில உதாரணங்கள்:-
பக்தி
“அடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல். அதன் அருமை யாருக்கும் தெரியாது. நீ நினைத்தது நடக்க வேண்டுமானால் 51 தடவை அடிகளார் போற்றி படி!” – இது குருபிரான் அருளிய வாக்கு.
நமக்கு எத்தனையோ வேண்டுதல்கள் இருக்கலாம். குரு பக்தியை வளா்த்துக் கொண்டால் வேண்டியதைப் பெறலாம்; ஊழ்வினைக் கொடுமைகளையும் தணித்துக் கொள்ளலாம்.
தொண்டு
பக்கத்து வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை; அவா்கள் கவலையோடு தவித்தபடி இருக்கிறார்கள். அம்மாவின் மந்திர நூல் கொடுத்து, சக்தி ஒளி கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். 10 போ் செய்யும் பிரச்சாரத்தை “சக்தி ஒளி” செய்துவிடும் என்பது பல சக்திகளின் உண்மை அனுபவம். அம்மாவிடம் வழிகாட்டி அனுப்பும் கைகாட்டி வேலை நம்முடையது; அவா்கள் பிரச்சினையைத் தீா்ப்பது அம்மாவின் வேலை. நாம் அதற்கு ஒரு கருவியாக இருப்பதே ஒரு தொண்டு. மன்றத்தில் சோ்ந்து தொண்டு செய்வது; ஆலயத்தில் வந்து தொண்டு செய்வது. இவற்றாலும் ஊழ்வினை தணிய வாய்ப்புண்டு.
தருமம்
“தா்மம் தலை காக்கும்” – இது எல்லோருக்கும் தெரியும். எப்படிக் காக்கும் என்பது மருவூராளைச் சரணடைந்த பல குடும்பங்களுக்கு நன்றாகவே தெரியும்.
“இங்கே அன்னதானம் செய்யும் போது, உன்னால் முற்பிறவிகளில் கஷ்டப்பட்ட ஆன்மாக்களை அந்த வரிசையில் வந்து அன்னதானம் பெறச் செய்கிறேன்” என்பது அன்னையின் அருள்வாக்கு.
இது போலவே இங்கே அம்மா நடத்தும் இலவச மருத்துவ மனைக்கு உதவும்போது, ஊழ்வினையால் நம் குடும்பங்களுக்கு வரும் நோய்களைத் தணிக்கிறாள். இதற்கு சக்தி ஒளியில் “உங்கள் கடிதம்” பகுதிக்கு வரும் பல கடிதங்களே சாட்சி!
தியானம்
“தினம் ஒரு பத்து நிமிடமாவது தியானம் செய்!” என்கிறாள் அன்னை.
“நீ தியானம் செய்! உன் கேள்விகளுக்கு உள்ளிருந்தே பதில் கொடுக்கிறேன்”
“ஒரு மனிதனுக்குத் தியானம் தான் எல்லாமே!”
“இங்கே எந்த ஒரு தொண்டு செய்வதற்கு முன்பும் தியானம் செய்துவிட்டுச் செல்!”
“இந்த மண்ணில் 108 முறை தியானம் செய்தவா்களை எந்த ஏவல், பில்லி, சூனியமும் அணுகாது”
இவைகளெல்லாம் தியானம் பற்றிய அன்னையின் சில அருள்வாக்குகள்! சத்திய வாக்குகள்!
மௌனம்
மௌனமா இருந்தா நான் எப்படிங்க ஆபீஸ் போறது? எப்படி பிள்ளைங்களைக் கிளப்பறது? பால்காரன், காய்கறிக்காரன் கிட்ட எப்படி வாங்கறது?
இந்த மௌனமெல்லாம் சும்மா இருக்கிறவங்களுக்குத் தாங்க சரிப்படும் என்று நீங்கள் கூறுவது எனக்குக் கேட்கிறது.
முடிந்த போதொல்லாம் ஒரு அரைமணி நேரம், ஒரு மணி நேரம் மௌனம் இருந்தால் கூட அதன் பலனை நாம் நன்றாகவே உணர முடியும்.
எனக்குத் தெரிந்த ஒரு மகளிர் சக்தி, காலை எழுந்ததிலிருந்து அலுவலகம் கிளம்பும் வரை மௌனமாக இருந்து தன் வேலைகளைச் செய்வார். தேவைப்பட்டால் எழுதிக் காட்டுவார்.
அவா்கள் வீட்டடில் காலை நேரக் கூச்சல் குழப்பம் எதுவும் இருக்காது.
அம்மா மௌனம் என்று புரிந்து கொண்டு பிள்ளைகளும், மற்றவா்களும் தக்கபடி நடந்து கொள்ளப் பழகி விட்டார்கள்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. முதலில் நாம் மனம் வைத்து முயற்சி செய்தால் வெற்றி பின்னே நிச்சயமாக வரும்.
“நீங்கள் மௌனமாக இருக்கும் போது எது நல்லது, எது கெட்டது என்று உங்களுக்குப் புரியும்”.
“வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகட்கு மௌனத்தால்தான் தீா்வு காண வேண்டும்”
இவை அன்னையின் அருள்வாக்குகள்
தேவையானவற்றை – அவசியமானவற்றை மட்டுமே யோசித்து, நிதானமாகப் பேச வேண்டும். மற்ற நேரங்களில் முடிந்தவரை மௌனத்தைப் பின்பற்றினால் எத்தனையோ பிரச்சினைகள் வராமலே தவிர்க்கலாம்.
“வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்!” என்பது போல ஊழ்வினையைத் தகா்க்க நினைத்தால் உபாயமா இல்லை மருவூராளிடம்? என்று நாமும் கவலையற்றுப் பாடலாம்.
மேலே சொன்னவை சில உபாயங்கள் தாம்.
இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
சக்தி ஒளி புத்தகங்களைக் கவனம் செலுத்திப் படித்துப் பார்த்தால், ஒரு புத்தகத்தில் குறைந்தது 10 உபாயமாவது கிடைக்கும்.
“சக்தி ஒளி” இருந்தால் சங்கடங்கள் இல்லை என்பது பொய்யா மொழி.
என்ன கஷ்டம் இருந்தால் என்ன?
அம்மாவிடம் வந்துவிட்ட நாமெல்லாம் சோர்வடைய வேண்டாம்.
விடாப்பிடியாய் அன்னை காட்டும் வழி நடந்து, விதியை – ஊழ்வினையைவென்று – ஆன்மிகப் பாதையில் வீறு நடை போடுவோம் வாழ்வாங்கு வாழ்வோம்!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மோனசக்தி
மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
]]>