அன்னையின் அருள்வாக்கு
“எனக்கு உருவம் கிடையாது. என்னுடைய தோற்றங்கள் அணு! சோதி! குழந்தை! பாம்பு! விளக்கின் சுடா்! சித்தா்! முதலியன ஆகும்.” என்பது அன்னையின் அருள்வாக்கு.
விளக்கின் சுடராகவும், சோதியாகவும் அன்னை ஆதிபராசக்தி இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்ல பரம்பொருளை ஒளிவடிவாகக் கொண்டு பல மதங்கள் போற்றுகின்றன.
சித்தா் பீடத்தின் சார்பில் கலச விளக்கு வேள்விப் பூசை
அம்மாவின் ஆணைப்படி சித்தா் பீடத்தில் எல்லா விழாக்களிலும், மன்ற விழாக்களிலும் சித்தா் பீடத்தில் அம்மா அருளிய முறைப்படி நாடெங்கும் கலச விளக்கு வேள்விப் பூசை நடத்தப்படுகிறது. அம்மாவின் 1008, 108 தமிழ் மந்திரங்களைச் சொல்லி இவ் வேள்விப் பூசை நடைபெறுகிறது.
வினைப் பாரத்தால் துன்புற்று வரும் பக்தா்களிடம் கலசமோ, விளக்கோ வாங்கிச் சென்று தினமும் பூசை செய்து வருமாறு அவ்வப்போது அம்மா சொல்லி வருகிறாள்.
காலங்காலமாக விளக்கேற்றி வைத்துத் தெய்வங்களை வழிபடும் வழக்கம் இருந்துவருகிறது.
இந்த விளக்குப் பூசையின் அடிப்படைத் தத்துவம், பூசை முறை, அதன் அவசியம் பற்றி நமது மகளிர் தெரிந்து கொண்டு வழிபடுவது மேலும் நன்மை தரும்.
விளக்கையே தெய்வமாகக் கருதி வழிபடுவது தமிழா் பண்பாடு. எட்டு வகை மங்கலப் பொருள்களில் விளக்கும் ஒன்று.
திருமணமாகிப் புதுக் குடித்தனம் செய்ய போகும், பெண்ணுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் விளக்கு முக்கியமானது. திருமணத்தின்போது மணமக்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்து வலம் வருவது வழக்கம்.
திருவிளக்கில் லட்சுமி தேவியே விளங்குவதாக நம்பிக்கை! விளக்கை ஏற்றாமல் எந்தப் பூசையும், மங்கல காரியமும் தொடங்குவது இல்லை.
“அக்கினியைத் துதிக்கின்றேன்.” – என்று வேதம் தொடங்குகின்றது. சூரிய தேவனை ஒளியே என்று காயத்திரி மந்திரம் கூறுகின்றது. தீப மங்கல நமோ! நம! என்று முருகனைப் போற்றுகிறார் அருணகிரி நாதா். “அஞ்ஞானத்தை அகற்றும் தீபம்! என்று லலிதா சகஸ்ர நாமம் தேவியைக் குறிப்பிடும். ஆயா் குலத்தில் தோன்றிய மணி விளக்கு! என்று ஆண்டாள் கண்ணனைப் போற்றுகின்றாள்.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவா் தாமே” – 1818
என்று திருமூலா் திருமந்திரம் விளக்கு வழிபாட்டைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
திருவிளக்கின் தத்துவம்
குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம்.
விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.
குத்து விளக்கும் பெண்மையும்
குத்து விளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களைக் குறிக்கும் என்பது சிலா் கூறும் விளக்கம். அவை: 1. அன்பு 2. மன உறுதி 3. நிதானம் 4. சமயோசித புத்தி 5. சகிப்புத் தன்மை ஆகியன.
விளக்கிற்கு ஏற்ற எண்ணெய்
- பசு நெய் – லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.
- நல்லெண்ணெய் – சனியால் பீடிக்கப்பட்டோருக்குப் பரிகாரமாக அமையும். லட்சுமி அருள் கிட்டும்.
- தேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும். கணவன் மனைவியரிடையே பாசத்தை உண்டாக்கும். பழம்பாவங்கள் நீங்கும்.
- இலுப்பை எண்ணெய் – எல்லாப் பாவங்களும் போகும். மோட்சம் கிட்டும். நல்ல ஞானம் வரும். பிறவி நீங்கும்.
- விளக்கு எண்ணெய் – தெய்வ அருள், புகழ், சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவற்றை அதிகரிக்கச் செய்யும்.
- வேப்ப எண்ணெய் – குல தெய்வத்தின் அருள் கிட்டும்.
- முக்மூட்டு எண்ணெய் – நெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் – ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வர செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும், இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
விலக்க வேண்டியவை
கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் முதலியனவை கூடாது.
விளக்கு ஏற்ற வேண்டிய திசைகள்
- கிழக்குத் திசை நோக்கி விளக்கேற்றுவது சிறப்பு, துன்பங்கள் நீங்கும், கிரகங்கட்கு மகிழ்ச்சி ஏற்படும்.
- மேற்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும். சனி கிரகத்திற்கு உவப்பு ஏற்படும், பகை நீங்கும்.
- வடக்குத் திசை நோக்கி விளக்கேற்றி வந்தால் திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்புத் தடை நீங்கும்.
- தெற்குத் திசை நோக்கி எப்போதும் விளக்கேற்றக் கூடாது. அதனால் தீமைகளே ஏற்படும்.
விளக்குக்கு ஆசனம்
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்ச லோகம் முதலியவற்றாலான ஒரு தாம்பாளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினாலான பலகையின் மீதாவது வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றும் நேரம்
காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சா்வ மங்களயோகத்தைத் தரும்.
மாலை 6.00 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலையில் விளக்கேற்றும் போது உடல், மனம் சுத்தத்துடன் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்ட பிறகே விளக்கேற்ற வேண்டும்.
மாலையில் விளக்கேற்றும் போது, வாசலில் தண்ணீா் தெளித்துக் கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லைப் புறக் கதவைச் சாத்தி விட வேண்டும்.
விளக்கேற்றும்போது, விளக்கிற்குப் பால், கல்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் கிட்டும்.
எரியும் விளக்கைத் தூண்டும் முறை
விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த விளக்குக்குரிய தேவதை ஆவாகனமாகி விடுவதால், விளக்கு எரியும்போது அதன் திரியில் சிட்டத்தைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. திரியைப் பெரிதாக்கி வெளிச்சத்தைக் கூட்டலாம்.
நேரம் ஆக, ஆக விக்கின் ஒளி மங்கிக் கொண்டேவந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியில் அருகே புதுத்திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்துவிட வேண்டும்.
விளக்கைக் குளிர வைக்கும் முறை
விளக்கேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து விளக்கு தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனா். அது தவறு! விளக்கு ஏற்றியதிலிருந்து அதனைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை வாயால் ஊதியோ, வெறுங்கையாலோ அணைக்கக் கூடாது. விளக்கைக் குளிர வைக்க வேண்டுமானால் திரியில் அடிப்பகுதியை பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடா் சிறிது சிறிதாகக் குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து விளக்கு குளிரும்.
எலுமிச்சம்பழ விளக்கு
எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்துவிட்டு, அதன் தோலை விளக்குகளாக்கி அதில் நெய் விட்டு ராகு நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது உண்டு. இதனால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
விளக்கின் திரி
- பருத்திப் பஞ்சினால் ஆன திரி நல்லவை அனைத்தும் செய்யும்.
- இலவம் பஞ்சினால் திரிக்கப்பட்ட திரி சகல பாக்கியங்களையும் தரும்.
- தாமரைத் தண்டின் நூலால் திரிக்கப்பட்ட திரியானது முற்பிறவியில் செய்த பாவத்தைப் போக்கும். செல்வம் நிலைத்து நிற்கும்.
- வாழைத் தண்டின் நாரினால் உருவாக்கப்பட்ட திரியைப் பயன்படுத்துவதால் குழந்தைச் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் குடும்பசாபம் முதலியவை நீங்கிச் சாந்தி உண்டாக்கும். குலதெய்வக் குறைபாடு நீங்கும்.
- வெள்ளை எருக்கன் பட்டையில் திரித்த திரியால் பெருத்த செல்வம் தரும். பேய் பிடித்தவர்கட்கு அதன் தொல்லைகள் நீங்கும்.
- புது மஞ்சள் சேலைத் துண்டால் செய்யப்பட்ட திரி – அம்மன் அருள் கிட்டும். வியாதிகள் குணமாகும் காற்றுச் சேட்டைகள் நீங்கும்.
- சிவப்பு நிறச் சேலைத் துண்டினால் திரிக்கப்பட் திரி திருமணத் தடை நீங்கும். மலட்டுத் தன்மை நீங்கும். பிசாசுத் தொல்லை செய்வினை தோஷங்கள் விலகும்.
- பன்னீா் விட்டுக் காயவைத்த புது வெள்ளைத் துணியினால் திரிக்கப்பட்ட திரி – உத்தம பலன்கள் அத்தனையும் கிடைக்கும்.
- விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்
- வெள்ளிக் கிழமை r
- கார்த்திகை, திருவாதிரை, பூரம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள்
- பௌர்ணமி
- அமாவாசை
- சதுர்த்தி திதி
- பஞ்சமி திதி
- ஏகாதசி திதி
- நவராத்திரி
- சிவராத்திரி
10. ஆடிச் செவ்வாய்
11. ஆடி வெள்ளி
12. தைச் செவ்வாய்
13. தை வெள்ளி
ஆகிய நாட்கள் பூஜைக்கு ஏற்ற நாட்கள்
வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூட்டுவழிபாடாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.
விளக்கு பூஜையில் கவனிக்க வேண்டியவை
- விளக்கு பூஜையில், விளக்கிற்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் தாலியிலும், தரை உச்சி வடுகிலும் வைத்துவர அவா்களது கணவா்கள் நலமுடன் வாழ்வார்கள்
- திருவிளக்குப் பூஜை செய்யும் போது குத்து விளக்கைத் தலை வாழை இலை மீது வைத்துப் பூசை செய்ய வேண்டும். அதனால் அந்தக் குடும்பம் வாழையடி வாழையாகச் செழிப்புற்று ஓங்கும்.
- விளக்கின் சுடா் நிதானமாக எரிய வேண்டும். நடுங்கக் கூடாது. புகையக் கூடாது. மெல்லத் தணிந்து அடங்கக் கூடாது.
- விளக்கில் குளம் போல எண்ணையை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும்.
- விளக்கின் சுடரில் மகாலட்சுமி நிறைந்து நிலைத்து, நிற்கின்ற காரணத்தால், அச்சுடரைக் கையாலும், கையால் வீசிய காற்றாலும், வாயால் ஊதியும் குளிர வைப்பது குற்றமாகும்.
- அதிகாலையில் எழுந்ததும் பூஜை அறையில் குத்துவிளக்கு, அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும்.
- விளக்கு என்பது லட்சுமி வாசம் செய்யும் இடம். அது மங்கலச் சின்னம். உங்கள் வீடு பிரகாசமாக இருக்க வேண்டின் எப்போதும் விளக்கும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அடுப்பேற்று முன்பாக
சுமங்கலிப் பெண்கள் காலையில் குறித்துவிட்டு, காமாட்சி விளக்கேற்றியோ, ஓம் சக்தி விளக்கேற்றியோ வழிபட்டு, அதிலிருக்கும் தீப ஒளியைக் கொண்டு அடுப்பேற்றி வர சகல நன்மைகள் ஏற்படும்.
விளக்கேற்றியவுடன் செய்யக் கூடாதவை
- விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
- வீட்டைப் பெருக்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது.
- விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
- விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
- விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
- விளக்கேற்றி விட்டு உடனே தலை குளிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு செய்தால் வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள். அதனால் தரித்திரமே குடிபுகும்.
விளக்குப் பூசை பற்றிப் புராணங்கள் சொல்வன, காலம் காலமாக நம்பிக்கையாக இருப்பன. சாத்திரங்களில் கூறப்படுவன இவை!
நன்றி!
ஓம் சக்தி!
மனித நேய மாமணி மருவூர் மகானின்
69 வது அவதாரத்திருநாள் மலா் 2009
சக்தி அபிராமி
சென்னை
]]>