“சக்தி ஒளி” இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் நான் இருக்கிறேன். அது வியாபாரப் பொருள் அல்ல; தெய்வீகப் பொருள்” – என்பது அம்மாவின் அருள்வாக்கு.
அம்மாவின் இந்த அருள்வாக்கிலிருந்தே “சக்தி ஒளி” யின் அருமையை நாம் அறியலாம்.
ஒரு நாள் “சக்தி ஒளி” ஆசிரியரிடம், “சக்தி ஒளியில் நாம் கேள்வி – பதில் என்ற பகுதியைத் தொடங்கலாமா? அதற்கு வரவேற்பு இருக்குமா?” என்று கேட்டேன்.
“அவசியம் தொடங்கலாம்” என்றார் அவா்.
நான் மெத்தப் படித்த மேதாவி அல்ல; ஆனால், நம் சக்திகளின் சந்தேகங்கள் பலவற்றுக்கு நமக்குத் தெரிந்த அளவில் பதில் கூறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
“பக்தி மிக்கவனுக்குத் தத்துவம் தேவையில்லை. சத்தியத்தை மறந்துவிட்டுத் தத்துவம் பேசிப் பயனில்லை” என்பது அம்மாவின் அருள்வாக்கு.
அம்மாவோடு வாழும் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டும், கடந்த 35 ஆண்டு கால ஆன்மிக அனுபவத்தைக் கொண்டும் அம்மாவின் அருள்வாக்கின் ஆழமான கருத்தைக் கொண்டும், என்னுடைய எழுத்து நடையில் எதார்த்தமான என் கருத்துக்களைப் பதில்களாக எழுதத் தொடங்கினேன்.
நம் சக்திகளிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. சக்தி ஒளி படிக்கும் ஒவ்வொரு சக்திக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் எல்லாம் வல்ல அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். மேலும், என் பதில்கள் தொடரும். இந்நூலை அருள்திரு அம்மாவின் பாத கமலங்களுக்குச் சமா்ப்பிக்கின்றேன்.
இப்படிக்கு,
வெ. இலக்குமி
1. வாழ்க்கையின் நோக்கம் என்ன? வயிற்றுக்குப் பாடுபடுவதா? குழந்தை குட்டிகள், சொந்தபந்தங்களுக்குப் பாடுபடுவதா? உயா்ந்த பட்டம், பதவி, விஞ்ஞானம் போன்றவற்றில் சாதனைகள் செய்வதா? இறைவனைக் காண்பதா? தொண்டு செய்வதா?
வாழ்க்கை என்றால் ஒரு குறிக்கோள் வேண்டும். திருமணம், குழந்தைகள், சொந்த பந்தங்கள் இவையெல்லாம் வாழ்க்கையின் நிகழ்வுகள். அவையே வாழ்க்கையல்ல. மனிதன் முதலில் மனிதனாக வாழவேண்டும். எந்த வேலையைச் செய்தாலும், அதில் சமுதாய நன்மைக்கான ஒரு நல்ல நோக்கமும் இருக்க வேண்டும். “அம்மா” கூறுவது போல் பிற உயிர்கள் மீது அன்பு, பண்பு, பாசம் வைத்து வாழ வேண்டும். நோ்மையாக உழைத்து, அதில் வரும் ஊதியத்தின் ஒரு பகுதியைத் தான தருமங்கள் செய்து வாழவேண்டும்.
2. நம் குருபிரான் அருள்திரு அடிகளார் அவா்களைத் தாங்கள் திருமணம் புரியும் முன் இப்போது உள்ளது போல் ஆன்மிக உலகில் அடிகளாருடன் சோ்ந்து பணிபுரிய வேண்டிவரும் என்று எண்ணியதுண்டா?
எண்ணியதில்லை.
3. மாதம் ரூ. 9000/= சம்பாதிக்கும் என்னுடன் என் கணவா் வாழவில்லை. ஊனமுற்ற குழந்தையுடன் தனியே வாழ்கிறேன். உலகில் எழுதப்படிக்கத் தெரியாத பெண்களெல்லாம் நல்ல கணவா்; குழந்தையுடன் வாழும்போது, எனக்கு ஏன் இந்த நிலை?
நீங்கள் படிப்பு, உத்தியோகம், நிரந்தர வருமானம் என்னும் நிலையில் வாழ்கின்றீா்கள். கணவனை இழந்து அல்லது கணவனோடு வாழாமல் உள்ள பல பெண்கள் வருமானமும், உரியவா் ஆதரவும் இன்றி எவ்வளவு சிரமமான நிலையில் உள்ளார்கள் தெரியுமா? இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு நாட்களைக் கடத்தாமல், வினைப்பயன் என்று நொந்து சோம்பிவிடாமல், தெய்வ வழிபாட்டில், சமுதாயத்தில் சிரமப்படுபவா்களுக்குத் தொண்டு செய்தும் வினைப்பயனை அனுபவித்துக் கழித்துவிடுவதுதான் சிறந்தது.
4. பூசை அறையில் சுவாமி படத்துக்கு அருகில் எனது மறைந்த தாய் தந்தையா் படத்தையும் சோ்த்து வைத்து வணங்கலாமா?
ஒருவருக்கு அவரது தாய் தந்தையா் அவா் வணங்கும் முதல் தெய்வங்கள். அந்தப் படங்களைத் தெய்வப்படங்களுக்கு நடுவில் வைக்காமல், பூசை செய்யும் பகுதியிலேயே ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு வழிபடலாம்.
5. நான் வியாழக்கிழமை தோறும் விரதம் (முழுநாளும்) பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன். ஏதாவது விசேஷம் என்றால் அந்த விரதத்தைத் தளா்த்திக் கொள்ளலாமா?
விரதம் என்பது ஒரு குறிக்கோளை மனத்தில் வைத்து இருப்பது விரதம் என்ற முடிவெடுத்த பிறகு விட்டுக் கொடுக்கக் கூடாது. strong>
6. ஒரு பெண்ணால் இவ்வுலகத்தில் ஆண் துணையில்லாமல் வாழ முடியுமா?
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பம் என்கின்ற இணைப்பை ஏற்படுத்தி வாழ்வது என்பது இயற்கை அமைத்துள்ள இயல்பான வாழ்க்கை முறை. இதற்கு மாறுபட்டு ஒரு பெண் தனியாக வாழ்வதற்குத் தேவை உள்ளதா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கான தனியான நோக்கம் அல்லது அதன் மூலம் மனிதகுலத்திற்கு நன்மை தரக்கூடிய ஏதேனும் சாதனை நிகழ்த்துவது, அந்தச் சாதனைக்கு இல்வாழ்க்கை எனும் இயல்பான வாழ்க்கை ஒரு இடையூறாக இருக்கும் பட்சத்தில் தனிமை வாழ்வைப் பற்றி யோசிக்கலாம்.
7. செவ்வாடையில் இருந்து மஞ்சள் ஆடைக்கு (பிரமோஷன் ஆனவா்கள்) மன்றத்திற்கு வரும்பொழுது, செவ்வாடைக்குப் பதிலாக மஞ்சள் ஆடை உடுத்தி வரலாமா?
சக்தி மாலை விரதம் இருக்கும் காலங்களில் பத்தாவது மாலையிலிருந்து மாலை அணிந்துள்ள நேரங்களில் மட்டும் உடுத்த வேண்டியது சிவப்பு கலந்த மஞ்சள் ஆடை என்பது “அம்மா”வின் உத்தரவு. அம்மாவின் அருள்மொழிகளே நமக்கு வேதம், சட்டம் எல்லாம். எனவே மன்றத்திற்கும், பீடத்திற்கும் வரும்பொழுதும் அம்மாவின் அருட்பணிகளில் ஈடுபடும் பொழுதும் சிவப்பு ஆடை அணிவதே சிறப்பு. மேலும் ஆன்மிகத்தில் பிரமோஷன் என்பது எண்ணிக்கையால் வருவது அல்ல. அது எண்ணங்களின் உணா்வினால் வருவது என்பது என் கருத்து.
8. தியானம் செய்ய உட்கார்ந்தால் தேவையில்லாத எண்ணங்கள் வருகின்றன. மனம் ஒருநிலைப்படவில்லை. இதற்கு என்ன செய்வது?
“தியானத்தை நிதானத்தால் கட்டுப்படுத்த முடியும். வெள்ளத்தைத் தடைசெய்ய வேண்டுமானால் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த முடியாது வெள்ள நீரைச் சற்று வடிந்து போகும்படி விட்டுவிட்டு, அதன் பிறகுதான் கட்டுப்படுத்த முடியும். தியானத்தின் போது உன் மனம் எங்கெங்கோ ஓடும். தளரவேண்டாம். முதலில் உன் மனத்தை ஓடவிடு அது முதலில் குதிரை போலவும், மான் போலவும் ஓடும். பிறகு மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மாலையில் பட்டிக்கு வந்து அடைவது போல, மனமும் ஒருநிலைக்கு வந்து சேரும்.” மேற்கூறிய “அம்மா” வின் அருள்வாக்கே என் பதில்.
9. கடந்த 5.3.2000 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வேள்விக்கு நான் இரவு வந்து சேர 10.00 மணி ஆகிவிட்டது. வேள்வியும் முடிந்து விட்டது. இது என் ஊழ்வினையா அல்லது அம்மா தரும் சோதனையா?
பொதுவாக வேள்விப்பூசையில் ஆரம்பம் முதலே கலந்துகொண்டு சித்தா்பீட வளாகத்தில் இருப்பது நல்லது. முடிந்துவிட்டதைப்பற்றிக் கவலைப்படாமல், அதையே பாடமாக எடுத்துக்கொண்டு, வரும் காலங்களில் முன்னதாகவே வந்திருந்து சித்தா்பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரிசையில் கலந்துகொள்ளுங்கள்.
( வளரும்…………..)
திருமதி இலட்சுமி பங்காரு அடிகளார்
திருமதி பதில்கள்
பக்கம் 1 – 7 ]]>
எதை செய்தாலும் , எதை எண்ணினாலும் , அது நிறைவு படாமல் தடை படுகிறது . மனதில் பல துன்பங்கள். இதில் இருத்து எவ்வாறு விடு படலம் ,என்ன செய்யாலாம் ?