மிகவும் தூய்மையாக இருக்கவேண்டிய துறை. ஒழுக்கம் இதில் மிகமிக முக்கியம். மற்ற எல்லாத்துறைகளிலும் தனிப்பட்டவா்களின் ஒழுக்கத்தைப்பற்றிப் பெரிய அளவில் கவலைப்படமாட்டார்கள். அவா்களிடம் உள்ள திறமையைத்தான் பெருமையாக எடுத்துக்கொண்டு பேசுவார்கள். ஆனால் ஆன்மிகத்தில் ஒழுக்கம், சிறந்த பக்தி, சிறந்த தொண்டு, சிறந்த தர்மம் இவைகளே தனிப்பட்ட ஒருவரின் தகுதியாக இருக்கவேண்டும். எந்தக் கெட்ட பழக்கம் உள்ளவா்களாக இருந்தாலும் விரத நாட்களில் கட்டாயம் தூய்மையாக இருக்கவேண்டும். தூய்மையாக இருக்க முடியாவிட்டால் விரதம் மேற்கொள்வதில் பலனில்லை. ஒரே தெய்வத்தை வணங்க வேண்டும். பலதரப்பட்ட நம்பிக்கை மனிதனின் மனதைச் சிதறடித்துவிடும். தளா்வடையும் போது உறுதுணையாக ஒரு குரு அமையவேண்டும். குருவைத் தேர்ந்தெடுத்த பிறகு குருவிடம் குறைகாணக்கூடாது. நம்மைச் சோதிப்பதற்காக குருவின் பேச்சில், நடத்தையில் மாற்றம் தோன்றலாம். என்ன சோதனை வந்தாலும் குருவின் பாதத்தை மறக்கக் கூடாது. தெய்வத்தின் மீதும், குருவின் மீதும் நம்பிக்கை இழக்கும் பல சந்தா்ப்பங்கள் ஏற்படலாம். அப்படி ஏற்படும் சமயத்தில்தான் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சில படிகள் ஆன்மிகத்தில் முன்னேறிய நாம் அடித்தளத்திற்கு வந்துவிடுவோம். குருவிடமும், தெய்வத்திடமும் அதிகம் நெருங்காமலும், விட்டு விலகாமலும் “அனல் காய்வார் போல” நடந்து கொள்ள வேண்டும். நம்ம அம்மாதானே! என்ற நினைப்பு தோன்றினால் நாம் ஆன்மிகத்தில் சறுக்குகிறோம் என்று பொருள். ஆரவாரமற்ற, அமைதியான பக்தி தேவை. தான் செய்கின்ற தர்மத்தை எழுதிக்காட்டக் கூடாது. சொல்லிக் காட்டக்கூடாது. வலதுகை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்ய வேண்டும். வருவாயில் நம்மால் முடிந்த ஒரு பகுதியைத் தொடா்ந்து தர்மம் செய்யவேண்டும். நம் கஷ்டம் நீங்க மட்டும் தா்மம் செய்யக் கூடாது. பிறா் கஷ்டம் நீங்கவும் தா்மம் செய்யவேண்டும். நாம் பிறரிடம் சென்று நிதி திரட்டுவதற்கு முன்பு அந்தப் பணிக்கு முதலில் நம்மால் இயன்ற தொகையை முதலில் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். குடும்பச் சூழ்நிலையை அனுசரித்து ஆலயத்திற்கு வந்து தொண்டு செய்ய வேண்டும். ஆலயத்திற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆலயத்தையும், அம்மாவையும் சாதகமாக்கிக் கொண்டு வீட்டில் உள்ளவா்களுக்கு பிரச்சினை கொடுக்கக் கூடாது. பெண்கள், கணவன்மார்களை அனுசரித்தும், ஆண்கள் மனைவியரின் உணா்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தும் ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும். உங்கள் செய்கைகளின் மூலமும், பேச்சின் மூலமும் அடிகளாருக்கோ, ஆன்மிகத்திற்கோ கெட்ட பெயா் வரக்கூடாது. மனத்தூய்மை, ஐம்புலன்கள் கட்டுப்பாடு அவசியம். மௌனத்தையும், அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டும். அவசியமில்லாத பேச்சு ஆபத்தை உண்டாக்கும். நாம் நினைத்து வருவதை அம்மா அருள்வாக்கில் சொல்லவேண்டும் என்று நினைக்கக் கூடாது. அம்மா சொல்வதைத் தவறாமல் கடைப்பிடிப்பதென்றால் அருள்வாக்கு கேட்கவேண்டும். கடைப்பிடிக்க முடியாதபோது அருள்வாக்கு கேட்டு அம்மா மீது பழிபோடக் கூடாது. பிறப்பு, இறப்பு கட்டாயம் என்பது போல வாழ்க்கையில் இன்ப துன்பமும் கட்டாயம் உண்டு. வானளாவ மகிழ்ச்சி அடையும் மனம் பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்ற மோசமான உணா்வையும் சந்திக்கும். மனத்தூய்மைக்கேற்ற வாழ்க்கை அமையும். ஊழ்வினையை நாம் அனுபவித்தே தீரவேண்டும். வியாதிக்கு மருந்துபோல, மனத்தூய்மைக்கு ஆன்மிகம். வியாதி வராத உடல் எப்படி இல்லையோ அதுபோலத் துன்பத்தை உணராத மனமும் இருக்க முடியாது. ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம். இரவு, பகல் மாறி வருவது போல வந்து கொண்டும், போய்க்கொண்டும்தான் இருக்கும். ஏற்ற பாத்திரத்தைத் திறம்பட நடித்துவிட்டு வாங்கிக்கொண்டு வந்த “ரிட்டன் டிக்கெட்” படி போய்க்கொண்டே இருக்க வேண்டும். காந்தியைப் போல, இயேசுவைப் போல, புத்தரைப் போல வாழாவிட்டாலும், நாம் நாமாக வாழ்ந்து மடியவேண்டும். அதற்கு ஆன்மிகம் மட்டும்தான் இறுதிவரை துணை நிற்கும். செய்கின்ற தர்மம்தான் இறந்த பின்னும் பெயரைச் சொல்லும். செய்த நல்ல காரியங்கள் மட்டுமே நாம் யார் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தும். ஆன்மிகம் என்பது அழியாதது. ஆன்மா உடலில் உள்ளவரை வாழ்நாள் முழுவதும் தொடரும். அதற்காகவே மன்றங்கள், சக்திபீடங்கள், விழாக்கள், மாநாடுகள், சமுதாயத் தொண்டுகள், தர்மம், மௌனம், பக்தி, தியானம் என்று பல வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து ஆன்மிகம் என்ற பண்பாட்டை வளா்த்து வருகிறாள் அன்னை. இன்று தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என்று உலக அளவில் ஆன்மிகம் தழைத்து வருகின்றது. இத்தகைய அறப்பணிகளுக்கு மூலப்பொருள் அன்னை ஆதிபராசக்தி. முதற்பொருள் குருவாக வந்த அருள்திரு அடிகளார். ஆன்மிகப் பணிக்குத் துணை நிற்பவா்கள் செவ்வாடைத் தொண்டா்கள் மற்றும் பக்தா்கள். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாயிலில் அறுபதை அடையும் அருள்திரு அடிகளாருக்குத் துணையாக என்னால் இயன்ற தொண்டைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பூவாகி, காயாகி, கனியாகி அனைவருக்கும் பயன்படும் இந்த ஆன்மிகம் என்னும் பழமரம் மென்மேலும் பூத்துக்குலுங்கி பலருக்கும் பயன்படவேண்டும் என்று அன்னையை வேண்டி, இதுவரை நடந்த வரலாற்றின் ஒரு பகுதியை முடித்து, இனி வரும் எதிர்கால நிகழ்ச்சிகளை வருவேற்று, இரண்டாம் பாகத்திற்குத் தயாராவோம்! வாழ்க அன்னை புகழ்! வளா்க அடிகளார் தொண்டு! நன்றி! ஓம் சக்தி! திருமதி. இலட்சுமி பங்காரு அடிகளார் (ஒரு ஆத்மாவின் அனுபவங்கள் ,பக் 109 – 112) ]]>