“அன்னை எழுதிய பாடல்”
நான் யார்?
திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தில் வசிக்கின்ற எனக்கு இப்போது வயது 56. எனது 54 வயது முடியும் வரை நான் ஒரு நாத்திகன்.
கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் என்பதில்லையே! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். அதனை வணங்குபவன் அயோக்கியன் என்று பேசி வந்தவன். ஆனால் இன்று…………………
“ஆடையின்றிப் பிறந்த மனிதன்
இங்கே இருக்கின்றான் – மருவூா்
அன்னையின்றிப் பிறந்த மனிதன்
எங்கே இருக்கின்றான்?”
என்று கவிதை பாடி இந்த மனித குலத்தைக் கேள்வி கேட்கிறேன்.
ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்களை மனப்பூா்வமாகக் குருவாக ஏற்று வழிபட்டு வருகிறேன்.
அருள்வாக்கு
17.05.85ல் அபிடேகம் செய்யப் பதிவு செய்தேன். அபிடேகம் முடிந்து “அம்மா” வைக் கண்குளிரத் தரிசித்துவிட்டு வந்தேன்.
அன்று எங்கள் ஊா் மன்றத் தலைவரும் என்னுடன் மேல்மருவத்தூா் வந்திருந்தார். காலை 10.00 மணி அளவில் நானும் மன்றத் தலைவரும் அருள்திரு அடிகளார் அவா்களிடம் ஆலயத் திருப்பணிக்காக ரூ.100/= நன்கொடை கொடுக்க அடிகளார் அவா்களைச் சந்தித்தேன். பணத்தையும் எலுமிச்சம் பழத்தையும் வாங்கி மேசை மீது வைத்துவிட்டுச் சுமார் 20 நிமிடம்
உரையாடினார். அந்தச் சம்பவம் என்றும் மறக்க முடியாத ஒன்று.
மறுநாள் 18.05.1985ல் அருள்வாக்கில் அம்மா அவா்கள், “மகனே! உனக்கு ஒரு சோதனையைக் கொடுக்கப் போகிறேன். அதை நீ சந்தித்துத் தான் ஆகவேண்டும். உயிருக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். உன் குடும்பப்பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு நீ தொண்டு செய்து வா! உன் மகனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு என்ன வேண்டும்? என்று என்னிடம் கேட்டார்கள்.
“அம்மா! தங்கள் அருளும் கருணையும் எனக்கு வேண்டும்” என்று கேட்டேன்.
“இன்று முதல் என் அருளும் கருணையும் கொஞ்சம் கொஞ்சமாக உனக்குக் கிடைக்கும் போய்வா மகனே!” என்று அருள்வாக்கு அளித்தார்கள்.
மன அமைதியுடன் வீடு திரும்பினேன்.
சோதனை வந்தது.
நான் அருள்வாக்கு கேட்டதிலிருந்து மன்ற வழிபாட்டின்போது, மன்ற உறுப்பினா்களிடம் “அம்மா எனக்குச் சோதனை தரப்போகிறார்கள்“ என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லி வந்தேன்.
அருள்வாக்கு கேட்ட தேதி 18.05.85
சோதனை வந்த தேதி 6.6.85
அன்று மதியம் 1.00 மணி அளவில் எனது வீட்டின் வடபுறம் உள்ள சந்தில் சிறுநீா் கழிக்கச் சென்றேன். அப்போது பக்கத்தில் இருந்த குட்டிச் சுவா் இடிந்து என்மீது விழுந்தது.
எனது வலது காலும், இடது கையும் முறிந்து விட்டது.
தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வலது கால் இடது கை இரண்டிலும் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு, 15 நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு வந்து 30 நாட்கள் படுக்கையில் இருந்து வந்தேன்.
அம்மா மீது நான் கொஞ்சம் கூடக் கோபித்துக்
கொள்ளவில்லை. மாறாக, அம்மாவின் அருள்வாக்கு 15 நாட்களில் பலித்து விட்டதே! சொன்னபடி நடந்துவிட்டதே என்று மனமாரச் சந்தோஷப்பட்டேன். காரணம்? தான் சொன்னபடியே அம்மா சோதனையைக் கொடுத்து விட்டாள்.
எனவே, தான் சொன்னபடி அருளும் கருணையும் இனிக் கொடுக்கப்போகிறாள் என்று முழுமையாக நினைத்து நம்பி மகிழ்ச்சியுடன் இருந்தேன். அருளும் வந்தது.
5.7.85 ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணி இருக்கும். என் படுக்கையிலிருந்து 10 அடி தூரத்தில் சிவப்பு நிற விடி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
எனக்கு இந்தச் சோதனை நடந்த பிறகு, ஒரு வேண்டுதல் பாடல் இயற்றி, தினசரி அந்தப் பாடலைப் படுக்கையிலிருந்து கொண்டே பாடிக்கொண்டிருப்பது வழக்கம். அந்தப் பாடல் இது!
எத்தனைப் பொழுதுதான் இப்படிக் கிடப்பதோ
எனையாளும் மருவூா் அரசி?
தத்தித் தவழாமல் தளிர்நடை போட்டுன்னை
தரிசிக்க வருவதெப்போ?
நித்தமும் கனவினில் வந்தாளும் தேவியே
நின்றுநான் தொழுவ தெப்போ?
சத்தான கால்பெற்று சரணம் என வலம்வரவே
சிங்காரி கருணை புரிவாய்!
வெள்ளியும் ஞாயிறும் அள்ளிஉன் மடிவைத்து
ஆராரோ பாட வேண்டும்!
பள்ளிசெல்லும் பிள்ளைபோல் துள்ளிவரும் காளைபோல்
மன்றம்வரச் செய்ய வேண்டும்
முள்ளில் ஒரு பாய்விரித் தென்னை அதில் வைப்பதோ
முதல்விஉனக் கென்ன மனமோ?
அல்லலுறும் பிள்ளைஎனை ஆனந்த நடமாட
அருள்புரிக மருவூா் அம்மா!
இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு கண்ணீா் விட்டபடியே படுத்திருந்தேன். வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்தில்
இருந்தார்கள்.
நான் அழுதுகொண்டே என் எதிர்ப்புறத்தில் உள்ள சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஒரு நாகம் படிமெடுத்து ஆடுவது போல ஒரு காட்சி அந்தச் சுவரில் தெரிந்தது. அதைப் பார்த்தக் கொண்டே இருந்தேன். அந்தக் காட்சி மறைந்து யாரோ எழுதுவது போல் தெரிந்தது. உற்றுக் கவனித்தேன்.
“அன்னைவழி நல்லவழி” என்று சிவப்பு மையினால் எழுதப்பட்டது தெளிவாகவே தெரிந்தது.
எனது படுக்கையில் இருந்த பேனாவையும், அங்குக் கிடந்த பாழைய டைரியையும் எடுத்துச் சிரமப்பட்டு எழுந்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நான் எழுத முற்படும்வரை அந்த வரிகள் அப்படியே சுவரில் இருந்தன. அதை எழுதி முடித்ததும் அடுத்த வார்த்தைகள் வந்தன. வரிகள் தொடா்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட நான் மிகவேகமாக எல்லா வரிகளையும் எழுதினேன்
உறங்கிக்கொண்டிருந்த என் மனைவி எழுந்து வந்து, என்ன உட்கார்ந்து இருக்கிறீா்கள்? என்றதும் சுவரில் எழுத்துக்கள் நின்றுவிட்டன. என் மனைவி மீது எனக்குக் கோபம் வந்தது. இன்னும் எத்தனை வரிகளை அம்மா எழுதியிருக்குமோ என்ற கவலையுடன் நடந்ததைக் கூறிவிட்டுப் படுத்து விட்டேன்.
படுத்த பின்னும் அந்தச் சுவரை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். அதன் பிறகு ஒன்றும் எழுதப்படவி்ல்லை. நானும் என்னை அறியாமல் கண்ணயா்ந்து விட்டேன்
காலையில் எழுந்து அந்த வரிகளை வரிசைப்படுத்தி எழுதினேன். இரண்டு வரிகள் குறைந்தன. அந்தக் கடைசி இரண்டு வரிகளை நானே எழுதி நிறைவு செய்தேன்.
ஆலயப் புலவா் மா. சொக்கலிங்கனார் அவா்கள், இந்தப் பாடலைப் படித்துப் பார்க்கும் சந்தா்ப்பம் வந்தது.
என்னால் எழுதப்பட்ட கடைசி இரண்டு வரிகளில் ஒரு
சொற்பிழையைக் கண்டார். மங்களம் என்ற சொல்லை மங்கலம் என்று திருத்திக் கொடுத்தார். இந்த ஒரு பிழையும் பிள்ளையாகிய நான் எழுதியதால் ஏற்பட்டது.
இருப்பினும், அம்மா எழுதிய பாடலை முடிக்கும் அருள்தனை எனக்களித்து, எனக்கு ஆணவம் வரக்கூடாது என்பதற்காக அதில் ஒரு பிழையையும் ஏற்பட வைத்தது அம்மாவின் கருணையேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்…?
இதோ…….
அன்னை எழுதிய அந்தப் பாடல்………
அன்னை வழி நல்லவழி அன்புவழி செல்லும்வழி
அனைவரும் வருக! வருக!
ஆன்மிக நெறியின் வழி அருள்வாக்கில் சொன்னவழி
அன்பா்களே வருக! வருக!
போனவழி தீயவழி போதும் இனி அந்த வழி
புதியவழி காண வருக!
ஆனவழி காட்டிடும் ஓா் அன்னையவள் ஆதிபரா
சக்திவழி காண வருக!
தாயொன்று குலமொன்று தாரணியும் பொதுவென்று
தத்துவம் கேட்க வருக!
சாதிமதம் ஏதென்று சன்மார்க்க நெறியொன்று
தந்தவளைப் போற்ற வருக!
மருவூரில் குடிகொண்டு மண்டலமே ஆளும் அவள்
மகிமையை உணர வருக!
மனமார அனுதினமும் அவள்பாதம் நீதொழுது
மங்கல வாழ்வு பெறுக!
கடைசி இரண்டு வரிகள் தவிர ஏனைய வரிகள் அன்னையின் அருளால் வெளிப்பட்ட பாடல் வரிகள்.
நன்றி.
ஓம் சக்தி!
செந்துறை அன்பா்
1986 ஆம் ஆண்டு சக்தி ஒளியில் வெளிவந்த கட்டுரை, விளக்கு – 5 சுடா் – 6
சக்தி ஒளி – ஏப்ரல் 2008