ஓம் சக்தி! ஆதிபராசக்தி!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி ஒரு ஒளி ஏற்றும் விழா! உள்ளத்தில் ஒளியேற்ற உதவும் உன்னத விழா!

மன இருள் அகற்றி, மனிதம் மலா்ந்திட வாய்ப்பளிக்கும் மகத்தான விழா!

மனதில் உள்ளே ஒளி புக, வெளியே இருள் செல, வழி விடும் விழா!

அன்பு, பண்பு, பாசம் பெருகிட தா்ம சிந்தனைகள் பரவிடச் செய்யும் விழா!

இல்லாதவா்க்கு இருப்பவா் கொடுத்து இருவரையும் அன்புச் சங்கிலியால் பிணைக்கும் அற்புத விழா!

இறையின் இரக்கம் பெற்று இனிதே வாழ வழிகாட்டும் விழா!

இத்தகைய நன்னாளில் உங்களுக்காகச் சில சிந்தனைகள்!

சிந்தனையை உள்நிறுத்திப் பயன் பெற வாழ்த்துகிறோம்!

இயற்கையை இறைவனாகப் பார்க்க வேண்டும். இயற்கை இல்லையேல் வாழ்க்கையில் எதுவும் இல்லை.

வாழ்க்கையின் ஆதாரம் பொருளாதாரம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பொருளாதாரம் என்பது வெறும் புள்ளி விபரங்களாக இருத்தல் கூடாது.  பொருளாதாரம் என்பது மனித வாழ்வின் ஆதாரத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

உண்மையான பொருளாதாரம் என்பது வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு உரிய பொருள் ஆதாரமாக இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பிற்குப் புள்ளி விபரங்கள் உதவலாம். ஆனால் வாழ்க்கைப் படிப்பிற்குப் அவையெல்லாம் உதவாது.

வறுமைக்கோடு பற்றிப் பேசுகிறார்கள். நாம் வளமைக் கோட்டிற்கு செல்ல வழி என்ன என்பதைச் சிந்திப்போம்.

வீட்டில் அரிசி உண்டு. பருப்பு உண்டு. காய்கறி உண்டு. எண்ணெய் உண்டு. எல்லாம் உண்டு. ஆனால் இதையெல்லாம் தகுந்தபடி சமைத்து உணவாக்கித்தர தகுதியானவா்கள் வேண்டும். மேலும் சமைத்த உணவை உண்டு மகிழ உறவுகள் வேண்டும்.

அதுபோல நம் நாட்டில் மண் உண்டு. மழை உண்டு. வளம் உண்டு. பொருள் உண்டு. மனவளம் உண்டு. மனித வளம் உண்டு. எல்லாம் உண்டு.

இயற்கை சக்தி உண்டு. இயங்கும் சக்தி தேவை. அதை இயக்கும் சக்தி தேவை. உழைக்கும் சக்தி தேவை. அதை உத்வேகப்படுத்தும் ஊக்க சக்தி தேவை. பொருள்களைப் பயன்படுத்திப் பக்குவப்படுத்தும் சக்தி தேவை. பக்குவப்பட்டவைகளைப் பயன்படுத்தும் சக்தி தேவை.

ஒவ்வொருவருக்கும் குரு என்பவா் அவசியம். ஆனால் அவருடைய தாயும், தந்தையும் தான் அவரவா்களுடைய முழுமுதல் தெய்வங்கள். தாயும், தந்தையும் காலனைச் சென்றடைந்த பிறகு அவா்களுக்குக் கோவில் கட்டிக் கும்பிடுவதைவிட அவா்கள் உயிரோடிருக்கும்போதே அவா்களை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வைத்து வணங்குதல் அவசியம்.

பெற்றவா் மனம் புண்பட்டால், பிள்ளைகள் வாழ்வு பண்படாது. தாயும், தந்தையுமே தன் தெய்வங்கள் என்பதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவா்கள் வாழும்போதே அவா்கள் மனம் குளிரத் தாங்கள் பணிந்து வாழ்ந்து அவா்களிடம் ஆசிபெற வேண்டும். தாய், தந்தையைவிட மேலான தெய்வமில்லை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும்.

வரும்காலம் நல்ல காலம். உணவு உண்டு. விளைச்சல் உண்டு. பொருள் உண்டு. இவற்றை ஆக்கம் சக்தி தேவை. ஆக்கியதைப் பண்படுத்திப் பயன்படுத்தும் சக்தி தேவை.

நாம் இந்த அகிலத்தில் பார்ப்பதெல்லாம் இயற்கைதான். எல்லாம் இயற்கையிலிருந்து தோன்றியவைதான். எனவே வெட்டவெளியைப் பார்க்கும்போது கூட அதை வெட்டவெளியாகப் பார்க்கக் கூடாது. இயற்கையாகப் பார்க்க வேண்டும். இயற்கை எனும் இறையாகப் பார்க்க வேண்டும்.  நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் தெய்வமாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்க மனதைப் பழக்க வேண்டும்.

இறையும், இயற்கையும் ஒன்றே என்ற எண்ணம் நம் உணா்வாக நம்முள் ஊறிப்போய்விட வேண்டும். இயற்கைதான் நம்மை வாழ வைக்கிறது. ஆனால் இயற்கையை நாம் சிதைத்துக் கொண்டே இருக்கிறோம். அது தாயாக இருப்பதால் தாங்கிக் கொள்கிறது. ஆனால் அது சீறினால் யாரும் தாங்க முடியாது என்பதை உணா்ந்து வாழ வேண்டும்.

இயற்கையை ஒட்டியே வாழப் பழக வேண்டும். இயற்கையை அழித்துவிட்டு, விஞ்ஞானத்தால் மட்டும் வாழ்ந்து விட முடியாது. இன்றைய நடைமுறை வாழ்வில் விஞ்ஞானமும் தேவை. ஆனால் அதைத் துருப்பிடித்த ஆணிபோல் ஆக்கிவிடக் கூடாது.

விஞ்ஞானம் எத்தகைய உயரத்ததில் இருந்தாலும் அது தண்ணீரைக் கொடுக்க முடியாது. தண்ணீா் தண்ணீா்தான். தண்ணீா் இல்லாமல் விளைபொருள் விளையாது. நிலம் இல்லையேல் பயிர் நிற்க இடம் இல்லை. காற்று இல்லையேல் அந்தப் பயிருக்கு அசைவு இல்லை. நெருப்பில்லாமல் சமைக்க இயலாது. ஆகாயம் இன்றி ஆதாரம் இல்லை.

இன்றைய புதிய நாகரீகம் நாளைய காலத்தைப் பொல்லாத காலமாக மாற்றி வருகிறது. பாரம்பரியம், பண்பாடு இல்லாத காலமாக மாறிவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு அது எல்லை மீறத் தொடங்கியுள்ளது. எல்லைகள் மீறப்படும் போது தொல்லைகளும் மிகுதியாகும். தொல்லைகள் தொடர்கதையாகும் போது அமைதி அனுமதியின்றி வெளியேறி விடுகிறது.

புதிய நாகரீகம் புதிய அழிவுகளுக்கு வித்திட்டு  வருவதை அறிந்த மெஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும், அவற்றைத் தடுக்கும்  வழிகளைப் பற்றி இப்போது சிந்திக்கிறார்கள். காலங்கடந்த முயற்சிதான். இருப்பினும் அது தேவை.

மெஞ்ஞானியின் வழி ஆன்மிக வழி. விஞ்ஞானியின் மொழியோ அதற்கும் விஞ்ஞானம்தான். அதையே அவா்கள் மனம் நம்புகிறது. நாடுகிறது. வேறு வழி தெரியாமல் தவிக்கிறது. புதுப்புது விஞ்ஞானமும்  புதுப்புது அழிவுகளுக்கே வழிவகுப்பதை அறிந்த விஞ்ஞானம் தடுமாறுகிறது. அவ்வப்போது தடம் மாறுகிறது. தன் துருப்பிடித்த நிலையிலிருந்து வெளிவர இயலாமல் மேன்மேலும் சங்கடங்களுக்குள் சங்கமமாகிறது.

ஆனால் மெஞ்ஞானியின் ஆன்மிகமோ அமைதிக்கு ஒளி காட்டகிறது. பக்தி, தா்மம், தொண்டு, தியானம் இவற்றை வழிகாட்டுகிறது. மனிதரின் செயல்பாடுகளும், வாழ்க்கைப் பிழைப்புகளும் விஞ்ஞான உழைப்புகளுக்குள் ஊறிக்கிடந்தாலும், மக்களின் மனம் மட்டும் ஆன்மிகப் பாதையில் அமைதி வழி நோக்கித் திருப்பிவிடப்படுவது மெஞ்ஞானத்தால்தான்.

உடல் பிழைப்புக்காக உழைத்தாலும் மெஞ்ஞான வழிகாட்டுதலில் மனம் தன்னைப் புடம் போட்டுக் கொள்கிறது. வேறு இடம் தேடிச் செல்லாமல் தனக்குள்ளேயே தடம் போட்டுத் தன்னைக் காண்கிறது. தன்னைக் காக்கிறது. பிறருக்காகக் காய்கிறது. காய்க்கிறது. அதை முழுமையாகப் பெற்றவனோ அதைப் பழமாக்கிப் பலருக்கும் பயனாகிறான்.

வெட்ட வெளியை எப்படி இயற்கையாக, ஒரு கடவுளாகப் பார்க்கிறோமோ அது போலவே பணத்தைக்கூட ஒரு வாழ்வியல் பொருளாகத்தான் பார்க்க வேண்டும். பலா் காசையே கடவுளாகப் பார்க்கிறார்கள். அதைவிடுத்து அதை ஒரு ஆக்கப் பொருளாகவும், தா்மப் பொருளாகவும் பார்க்க வேண்டும்.

காசுதான் கடவுளென்று காலம் கடத்திய பலா், காலம் கடந்த பின்னா் , அந்தக் காசாலேயே கலக்கமடைந்து , துக்கம் துாக்கி நிற்க, துாக்கம் தொலைக்க நேரிடுவதைப் பார்க்கிறோமல்லவா…? வாழ்க்கையின் அனுபவங்கள் இவற்றை உணா்த்தும் போது அமைதியை எட்டாக்கனியாக ஏக்கத்துடன் பார்க்கும் நிலைதான் மனிதனுக்கு வருகிறது.

ஒரு மரத்திற்கு ஆணிவோ் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஆன்மிகம் முக்கியம். அத்தகைய ஆணிவோ் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்ணுக்குள் மறைந்திருந்து அந்த மரத்தைக் காக்கிறது. மண்ணின் சாரத்தையும், நீரின் ஈரத்தையும் மரத்திற்கு ஊட்டி அதை வளா்க்கிறது.

அதுபோல ஆன்மிகம் எனும் ஆணிவேரைப் பற்றிக் கொண்டு வாழும் மனிதன், தன் அனுபவத்தின் சாரத்தைக் கொண்டு வாழ்வின் சாரத்தை எளிதாகப் புரிந்து பொண்டு அதைத் தன் வாழ்விற்கு உணவாக ஊட்டுகிறான். அதையே உரமாகத் தன் நெருங்கிய சுற்றம், உற்றார், நண்பா்களுக்கும் உரைக்கிறான். தானும் அமைதி பெற்று, மற்றவா்களுக்கும் அந்தப் பாதையைக் காட்டுகிறான்.

ஆழமாக நடப்பட்ட விதையால் வளா்ந்த செடி, மரமாக மாறும்போது அதன் ஆணிவேரும் ஆழமாக நின்று எந்தப் புயல் மழையாக இருந்தாலும் மரம் விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் மேலாட்டமாக நிலத்தைக் கீறி விதைக்கப்பட்ட விதை மரமாகும் போத ஒரு சிறு காற்றைக் கூடத் தாங்க இயலாமல் சாய்ந்து விடுகிறது.

அதுபோலத்தான் ஆன்மிகமும். மனதின் ஆழத்தில் ஆன்மிக வோ்கள் ஊன்றி இருக்கும் போது எல்லாத் துன்பங்களையும் தாங்கி நிற்கும் பக்குவத்தை மனிதனுக்குத் தருகிறது. ஆனால் ஏதோ கோயிலுக்குப் போனோமோ, சாமி கும்பிட்டோமா என்று மேலோட்டமாக ஆன்மிக செயல்பாடுகள் மேற்கொள்ளும் போது சிறு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை கூட இல்லாமல், உலகத்தையே இழந்து விட்ட மனக்கவலைக்குப் பலா் ஆளாகிறார்கள்.

ஒரு விதை என்ற இருந்தால், அது பயிராகனும்.பலருக்கும் பயனாகனும். இல்லையென்றால் அது ஒரு பதரே. யாருக்கும் பயனற்ற பதா். மனிதனும் ஒரு பதராக வாழக்கூடாது. பதராக மாறி யாருக்கும் பயனற்ற பதராகி விட்டோமே என்று பதறிப் பயனில்லை. கதறுவதில் கருத்தில்லை. கதறுவதால் தவறவிட்ட எதுவும் திரும்ப வராது.

கண்ணுள்ள போதே பார்க்க சொல்வதும், காதுள்ள போதே கேட்க சொல்வதும், வாயுள்ள போதே பேசச் சொல்வதும், உடலில் தெம்புள்ள போதே உழைக்கச் சொல்வதும், அந்த உழைப்பை வைத்தே பிழைக்கச் சொல்வதும், உழைப்பின் ஊதியத்தின் ஒரு பகுதியை இல்லாதவா்களுக்கு தா்மமாக கொடுக்கச் சொல்வதும் இதற்காகத்தான். அப்படி கொடுப்பதையும் ஒரு அன்போடு, பண்போடு, பாசத்தோடு செய்ய வேண்டும்.

அந்தக் காலத்தில் மக்களிடையே பாச உணா்வும், ஒருவருக்கொருவா் பந்தமும், பிடிப்பும் அதிகமாக இருந்தது. தங்கள் மாடு, ஏா், கலப்பை, விதைநெல், விதைகள், மரக்கன்றுகள், இவைகள் மட்டுமன்றி தங்கள் உழைப்பையும் மற்றவா்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தார்கள்.

இந்த உழைப்புக்கு ஈடு செய்யும் வகையில் இவா்களும் அவா்களுக்குத் தங்கள் பொருள்களையும் உழைப்பையும் திருப்பிச் செலுத்தினா். இப்படிப்பட்ட பரஸ்பர பந்தத்தை இன்றைய நவநாகரிகம் அழித்து விட்டது என்றே கூறலாம்.

நகரங்களை விட்டு நகா்ந்துவிட்ட இந்தப் பண்பு நாகரிகம், மிகவும் சொற்பமான அளவில், அதிசயிக்கத்தக்க வகையில், சிற்சில கிராமங்களில் இன்றும் அழியாத சுவடுகளாக உள்ளது. பண்டிகைக் காலங்களில் இல்லாதவா்களுக்கு இருப்பவா்கள் கொடுக்கும் அந்தப் பண்பு நாகரிகம் முற்றும் அழிந்து விடாமல் இருப்பதுவும் இத்தகைய இடங்களில்தான்.

இத்தகைய அன்புநாகரீகம், பண்பு பரிமாற்றங்கள், பாச நேசங்கள் பல்கி பெருகிட வேண்டும். அத்தகைய உள்ளார்ந்த உள்ளத்தை ஒவ்வொருவரும் பெற்றிட இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துகிறோம்.

வாசகா்களுக்கும்,  செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் அடங்கிய அனைத்துப் பொதுமக்களுக்கும் நமது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அம்மாவின் ஆசி!

ஓம்சக்தி! ஆதிபராசக்தி!!

நன்றி (சக்தி ஒளி-அக்டோபர்2011,பக்-5-9)

]]>

1 COMMENT

  1. என் பெயர் தமிழ்செழியன் நாகபட்டினத்தில் அம்மாவின் கருணையால் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறேன் .பெட்ரோல் பங்க் வைப்பதற்கு கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தெர்விஎவ் நடந்தது அதில் 152 பேர்கலந்துகொண்டோம் அதில் அம்மாவின் கருணையால் என்னை மட்டும் தேர்வு செய்தார்கள் (நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்த அன்று இரவு அருள்திரு அடிகளார் அம்மா அவர்கள் என் மனைவின் கனவில்வந்து குங்குமம் கொடுத்தார்கள் ) அதன்பிறகு நாங்கள் மருவத்தூர் சென்று அம்மாவிடம் நன்றி சொல்ல பாதபூஜை செய்தோம் அப்போது அம்மா சொன்னார்கள் எந்த பெற்றோல்புன்க் உனக்குத்தான் உனக்கு இப்போது நேரம் சரில்லை சிரிதுக்கலாம்போகட்டும் என்றார்கள் அன்றுமாலை சென்னை உயர்நீதிமன்றேதில் எனக்கு பெட்ரோல் பங்க் வழங்ககூடாது என்று தடை உத்தரவு பேற்றுவிடர்கள் பிறகு அம்மவிடம்சென்று பலமுறை பாதபூஜை செய்தோம் அந்த்னைமுரையும் அம்மா அவர்கள் எங்களிடம் மட்டும் மவுனமாக இருந்தார்கள் 2004 லில் ஒருமுறை மட்டும் எங்களிடம் அடுத்து வாரிசு என்றுமட்டும் சொன்னர்கள் வேறு ஒன்றும் சொல்லவில்லை .நாங்கள் அம்மாவிடம் பெட்ரோல் பங்க் பற்றி கேட்க போனோம் அம்மா அடுத்து வாரிசு என்று மட்டும் சொல்லிவிட்டார்களே என்று எல்லாம் அம்மாவின் கணக்கு என்று எங்களை நாங்களே சமதானம் செய்த்கொண்டோம் .அம்மா சொன்ன தொண்டை தொடர்ந்து செய்துகொண்டுவந்தோம் பிறகு என் மனைவி கர்வுற்றார் மருத்தவரிடம் காண்பித்தோம் குழந்தை பிறக்கும் வரை மருத்துவர் பெண் குழந்தை தான் என்றார்கள் ஆனால் அம்மா கூரியபடி வாரிசு தான் 10 .11 .2005 பிறந்தது மருத்துவர் சொன்னார் இது அம்மாவின் செயல் அதான் விஞ்ஞனம் பொய்த்துவிட்டது அம்மாவின் வாக்கு பலித்து விட்டது ..2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருமுடி தொண்டு செய்துகொண்டு இருந்தோம் அப்போது சென்னை சென்னை உயர்நீதிமன்றேதில் இருந்து எனக்கு பெட்ரோல் பங்க் வழங்கியது செல்லும் என்று தீர்ப்பு வந்தவிட்டது .அம்மாவிடம் சென்று பாதபூஜை செய்து அம்மா ஆர்டர் வந்துவிட்டது பணம் இல்லையே என்ன செய்வது என்றபோது நானிருக்கிறேன் என்று மட்டும் சொன்னார்கள் பிறகு எனது மாமாவின் மூலமாக பணம் கிடைக்கபெட்ட்றேன் .2007 ஜனவரி முதல் பெட்ரோல் பங்க் அம்மாவின் கருணையால் நடத்தி வருகிறேன் .அம்மாவிடம் சென்று இந்த தொழிலில் வரும் வருமானத்தை வைத்து வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று கேட்டேன் தொழிலை நான் காப்பாற்றுகிறேன் நீ தொண்டு செய் என்று மட்டும் சொன்னார்கள் எல்லாம் அம்மாவின் கணக்கு அம்மாவை நம்பினால் எல்லாமே நன்றாக நடக்கும் ஓம் சக்தி அம்மாவே சரணம் .அம்மாவை மனதார நினைத்து வேண்டிக்கொண்டு தொண்டு செய்தல் அம்மாவின் கருணை நமக்கு எப்போதும் கிடைக்கும் .அம்மாவிடம் பாதபூஜை செய்து வர அம்மாவின் கருணை எப்போதும் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் கிடைக்கும் குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here