ஆதிபராசக்தி

“ஆண், பெண்” இருபாலாரால் ஆனதே இந்த உலகம். விபூதி வெண்மை, குங்குமம் சிவப்பு. அதே போல் ஆண் விந்து வெண்மை, பெண் விலக்கு சிவப்பு. ஆண் கருவான விந்துக்கு வயதே கிடையாது. ஆனால் பெண் கருவான விலக்குக்கு வயது உண்டு. பெண்ணுக்கு விலக்கு ஒரு வயதில் நின்றுவிடும். நின்றதும் பெண்ணுக்கு சக்தி சேருகிறது. எனவே தான் நம் ஆன்றோரும் சான்றோரும் ஆதிபராசக்தியைப் பெண்ணாக உருவகம் செய்தனா். ஆவதும் அதனால் தான். அழிவதும் அதனால் தான். ஆகவே பெண் வடிவான ஆதிபராசக்தியே அனைவருக்கும் தாய். தாயினிடத்துத் தான் தயை, கருணை, அன்பு தியாகம், சாந்தம், பொறுமை, கைமாறு கருதாக் கொடை, சுயநலமில்லா சமநோக்கு, குறிப்பறிந்து உதவும் குணம் யாவும் சிறக்கக் காண்கின்றோம். சக்தி தான் முழுமுதற்பொருள்.  சக்தியிலிருந்தே முத்தொழில் புரியும் மூவரும் தோன்றினா்” எனக் கருவை பேரொளி தெய்வத்திரு பொதிச் சுவாமிகள் அருளினார்கள்.

“சிவம் என்பது செயலற்ற தத்துவம் மகாமாயையாகிய சக்தி சிவத்தைத் தொட்டவுடன் ஆணவ மாயை பிறக்கிறது. ஆணவத்திலிருந்து மனசு என்ற தத்துவம் உதயமாகிறது. மனசிலிருந்து ஆகாசம். ஆகாசத்திலிருந்து காற்று. காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீா். நீரிலிருந்து நிலம். இவ்வாறாகப் பஞ்சபூத செயற்கையால் பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுகின்றன. இந்தப் பரிணாம நெறியே சக்தியின் விளையாட்டு” என்கிறார்கள் சித்தர்கள். “பராசக்தியின் உதவி இல்லாவிட்டால் பரமசிவனால் அசையவும் முடியாது.” என்கிறார் ஆதிசங்கரா் தமது சௌந்தா்யலகரியில்.

நம் நாட்டில் ஆதிபராசக்தியின் வழிபாடு மிகவும் பழமையானது. வடக்கே மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வு ஆராய்ச்சியின் போது கிடைத்த அன்னையின் மண் உருவங்கள் சக்தி வழிபாட்டுத் தத்துவத்துக்கு  இலக்கணம் வகுக்கின்றன. தொல்பொருள் அறிஞா்களின் கருத்துப்படி ஏறத்தாழ கி.மு.4000 ஆண்டுகளிற்கு முன்பே சக்தி வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியத்திலும், சங்ககாலத் தமிழ் இலக்கியத்திலும் தெய்வத்தாய்க்கு கொற்றவை என்றும். ஐயை என்றும் பெயா் சூட்டி உள்ளனா். இன்று சக்தி வழிபாடு ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சிறப்புற நடந்து வருவது நாம் அன்றாடம் காணும் காட்சியே ஆகும். இது ஓா் சக்தியுகம்!

நம் முன்னோர் அண்ட சராசரங்கள் அனைத்தையும் தெய்வமாய்க் கண்டனா். எல்லையற்ற பரம்பொருளான எல்லாம் வல்ல சக்தியாய் வழிபட்டனா். நிலத்தின் திண்மை, நீரின் குளிர்மை, நெருப்பின் வெம்மை, காற்றின் கடுமை, ஆகாயத்தின் ஓங்கார ஓசை யாவும் சக்தியே என்றனா். அவை தாய் அம்சமே எனக் கொண்டனா். நமக்கு உண் உணவைத் தருவது தானிய லக்ஷ்மி, செல்வச் சிறப்பை நல்குவது தன லகஷ்மி, மழலைச் செல்வங்களை அருளுவது சந்தானலக்ஷ்மி, சகல நலன்களையும் அளிப்பது சௌபாக்கிய லக்ஷ்மி, எல்லா வித்தைகளையும் போதிப்பது வித்தியாலக்ஷ்மி, வெற்றி வாகை சூடுவது விஜயலக்ஷ்மி, வீரதீரத்தை வளா்ப்பது தைரியலக்ஷ்மி. ஆதியும் அந்தமுமாய் விளங்குவது ஆதிலக்ஷ்மி. தித்திக்கும் பாலைத் தரும் கோமாதா, அனைவரும் தாங்கும் பூமியைப் பூமாதா என எல்லாவற்றையும் தெய்வத் தாயாகக் கொண்டாடுவா்.

“அன்னை வடிவமடா! இவள்

ஆதிபராசக்தி தேவியடா! இவள்

இன்னருள் வேண்டுமடா! பின்னா்

யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா!”

எனப் பாடுகிறார் பாரதியார்.  வடிவமற்ற தாய் குணமற்றதாய் இருக்கும் இறை தத்துவத்துக்கு அந்தப் பரம்பொருளுக்கு ஒரு வடிவத்தைக் கற்பித்து அதை அன்னை என்று வணங்கி வழிபடுவதே சாலச்சிறந்தது.

இறையைத் தாயாகக் கருதி ஊடாடுகிறவா்களுக்கு சோதனைகளும் அதிகமாக ஏற்படுவதில்லை. தனையனுக்குத் தாயிடமிருக்கும் உறவு பாதுகாவல் நிறைந்த உறவு. அதில் ஆபத்துக்களும் அபாயங்களும் இல்லை. அவ்வளவு கருணை நிறைந்தது தாய் உள்ளம். நாம் என்ன குற்றம் செய்தாலும் அவள் மன்னிக்கக் காத்திருக்கிறாள். நாம் காலால் உதைத்தாலும் உதைத்த காலுக்கு ஒரு கழல் அணிவித்து மகிழ்பவள் தாய். ஏராள சகிப்புத் தன்மையும், எல்லையில்லா அன்பும் தாய்க்கு இருப்தால் அச்சமின்றி அவளோடு நாம் பழகலாம். இறையைத் தாயாகக் கற்பனை செய்து அவளோடு நாம்ஊடாடும்போது நம் உணா்வு பெருகுகிறது. நம் ஆணவம் மெல்ல மெல்லக் கரைகிறது. ஆனந்தம் மேலிடுகிறது.

பராசக்தி வழிபாடு எவ்வளவு சுகத்தைக் கொடுக்கிறது. எப்படி அபயம் அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது பின்வரும் பாடல்

“கேடா வருநமனைக் கிட்ட வாராதே தூரப்

போடா என ஓட்டி, உந்தன் பொற்கமலத்தாள் நிழற்கீழ்

வாடா என அழைத்து வாழ்வித்தால், அம்ம, உனைக்

கூடாதென்றார் தடுப்பார், கோமதித்தாய் ஈஸ்வரியே?

என “யம பயத்திலிருந்து என்னைக் காப்பாற்று” என்று கோமதித் தாயைப் பார்த்துக் கேட்டு நெல்லை அழகிய சொக்கநாதா் என்ற பக்தா். இப்படியெல்லாம் தாயிடத்தில் துணிந்து வரம் கேட்கலாம் அது உரிமையோடு கேட்கலாம். கொடுக்கமாட்டேன் என்று கூற தாய்க்கு மனம் வராது.

ஆகவே நாம் ஆதிபராசக்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாது நம் அறிவை ஆட்படுத்தி, ஆணவத்தை அடக்கி, உணா்வை அன்பாக வெளிப்படுத்தி, இறை அனுபவத்தில் ஆழ்ந்து, பக்தியோடு அத்தாயை வழிபட்டால், தியானித்தால் நாம் பலவிதப் பலன்களையும், சகலவித நன்மைகளையும் அடைவது திண்ணம். பக்தி என்றால் பற்றுதல் எனப் பொருள். உலகப்பற்று, உடல் பற்று, உயிர்ப்பற்று ஏனைய பற்றுக்களை விட்டுவிட்டு உள்ளத்துக்குள்ளே அறிவொளியாக விளங்கி அதுவே உள்ளும் புறமும் பேரொளியாகத் தோன்றி உலகம் யாவற்றுக்கும் ஒரு பரம்பொருளாய் இருக்கும் ஆதிபராசக்தியைப் பற்றி நிற்பதே சிறந்த பக்தியாகும்.

நமது பக்தி வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் இலக்காய், ஆதாரமாய் விளங்குவது தான் மேல் மருவத்தூா் ஆதிபராசக்தி ஆலயம். ஆலயம் என்பது ஆன்மா லயிக்கும் இடமாகும். மனம், வாக்கு, காயம் மூன்றையும் அடக்கி ஒடுக்கி உண்மையைத் தேடி உள்ளொளியை நாடி அறிவை அறிந்து ஆன்மைாவை லயிக்கச் செய்யும் ஒப்பற்ற இடமாய்த் திகழ்வது அவ் ஆலயம்.

அவ் ஆலயத்தில் அமா்ந்து அருளாட்சி புரியும் அன்னை அருள்வாக்கில் “செபம், தவம் என்ற இரண்டும் இல்லாமல் என் அருளைப் பெறமுடியும். முழுவதுமாக என்னைச் சரணடைந்து நான் இடும் பணியை ஏன்? என்ன? எதற்கு? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாது முழு மனதோடு செய்தால் என்னை எளிதில் அடைய முடியும். தொண்டு நெறி என்ற இந்த நெறியில் இருக்கும் சௌகரியத்தைத் தெரிந்து கொள். தவம் மேற்கொண்டு புற்றாகவும், மரமாகவும் நிற்கின்றவா்கள் என்னை இன்னும் காணவில்லை. ஆனால் என் பணியை தலைமேற்கொண்டு செய்யும் உன் எதிரே நான் நிற்கின்றேன். இந்த எளிய வழியை நீ விட்டு விடாதே” என்று அருளியுள்ளாள்.

அவ் அரிய தொண்டு நெறியைக் கடைப்பிடித்து திரிகரண சுத்தியோடு பக்திசெலுத்தி பரிபூரணமாய்ச் சரணடைந்து மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியை அன்றாடம் வழிபட்டு வந்தால் நமக்கு

“பக்திப் பெருக்குண்டாம். பராசக்தி அருள் உண்டாம்

உண்மை ஒளி உண்டாம், உணா்வுத் தோற்றம் உண்டாம்

உள்ளத் துருக்கம் உண்டாம், உயா்ந்த குணம் உண்டாம்.

ஊக்கம் மிகவுண்டாம், ஒழுக்க நெறியுண்டாம்.

அறிவுத் தெளிவுண்டாம், ஆற்றல் திறனுண்டாம்,

திடநம்பி்க்கையுண்டாம், திருவின் வரவுண்டாம்”

இவ்விதம் இம்மைக்கும் மறுமைக்கும் எல்லா நலன்களும் நாம் ஆதிபராசக்தி வழிபாட்டால் பெறலாம். ஆகவே, ஆதிபராசக்தி வழிபாடு செய்து நாம் முக்திபெற முயல்வோமாக!

ஓம் சக்தி!

நன்றி

1982 கோபி ஆன்மிக மாநாடு – விழா மலா்

பொன். பரமகுரு. I.P.S, எம்.ஏ,  பி.எல்

தமிழ்நாடு காவல் துறை முன்னாள் தலைவா்

மருவூா் மகானின் 70வது அவதாரத் திருநாள் மலா்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here