பெண்மைக்கோர் புதுயுகம் படைக்கும் மருவூா் மகான்

பரம்பொருளாய், பராசக்தியாய், சிவசக்தியாய், அா்தநாரீஸ்வரராய், பரம பிதாவாய், அல்லாவாய் இன்ன பிற நாமங்களால் வழிபடப்படும் இறைவன் தனித்தவனாய் (Absolute Entity) என்றும் எப்போதும் நிலைபெற்று மாறாது (Eternal and changeless) நிகரற்றவனாய் இருந்து விடாமல் அன்பு, அறிவு கருணை மேலீட்டால் தன் தனித்த நிலையிலிருந்து இறங்கி வந்து சார்பு நிலையும் (Relative entity) மாறி மறையும் நிலையும் (changing state) கொண்ட பிரபஞ்சமாய்த் தோன்றி, விரிந்து, பர்ணமித்து எண்ணற்ற தாவரங்களாய் உருவெடுத்து தன் அறிவுத் திருவிளையால் மூலம் (Intelligent game of creation and evolution of God) உலக மக்களுக்கு உணா்த்தும் ஓா் ஒப்பற்ற உண்மை பெண்ணினப் பெருமையாகும். உலகம் இதை உணரும் போது சண்டை சச்சரவுகள் நீங்கி பாசமிகு வாழ்க்கை பா்ணமிக்கும். பெண்ணின் பெருமையும் உண்மை நிலையும் இக் கருத்தை முன்னோர்கள் பல்வேறு வகையால் நமக்கு உணா்த்துகின்றனா். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி வையம் தழைக்குமாம்” என்றும் “ஆண்களும் பெண்களும் சரிநிகா் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்றும் சமத்துவத்தைப் பற்றி பார் அதிரப் பாடினார் பாரதியார். திரு.வி.கல்யாணசுந்தரனார் பெண் உரிமை இல்லாத நாடு பக்கவாயு உடையானை ஒத்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடலில் விளக்குகிறார். “பெண் ஒரு நாட்டின் பாதியாதலின் அவள் உரிமை கெட்டால் நாடு எங்ஙனம் நல்வாழ்வு பெறுதல் கூடும்? மனிதனுக்கு ஒரு பாதி வாயுவால் இயக்கமின்றி வீழ்ந்தால் அவன் எதற்குப் பயன்படுவான்?” பெண்களும், ஆண்களும் சமுதாயத்தின் இரு கண்கள். அப்படியிருக்கும்போது “கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ” என்ற வினா எழுப்பியதோடு “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் – புவி பேணிவளா்த்திட்ட ஈசன் பாருக்குள்ளே சில மூடா் நல்ல மாதா் அறிவைக் கெடுத்தார்“ என்று ஆடவா் சுயநலத்தைச் சாடினார் பாரதி. இக்கூற்றுக்கள் யாவும் இன்றைய சமுதாயத்தில் விழலுக்கு இறைத்த நீராய்ப் பயனற்றுக் கிடக்கின்றன. இந்திய சமுதாயத்தி்ல் மட்டுமன்றி உலக சமுதாயத்தில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்னும் நிலை நீடிக்கின்றது. “உண்டவன் உரம் பெறுவான்” என்று ஆணுக்கும், “உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு” என்று பெண்ணுக்கும் நீதி உரைக்கப்படுகிறது. “பேதமை அகற்று” என்பது பொது நீதியாகும். ஆனால் “பேதமை என்பது மாதா்க்கணிகலம்” என்று பேதமையை அணிகலமாக்கி பெண்களின் வாயினை மூடிவிட்டார்கள். கலைத்துறை, அறிவியல் துறை, பொருளியல் துறை மற்றும் ஆன்மிகத்துறை பெண்கள் வெற்றி பெற்றிருப்பினும் ஆண்களுக்கு நிகராக உயா்த்தப்படவி்ல்லை. இந் நிலையில் அவா்கள் இரண்டாம் தரக் குடிமக்களே! பெண்களுக்கு விடிவுகாலம் இன்றைய சமுதாயத்தில் பெண்ணுக்கு விடிவுகாலம் வருமா? உறுதியாக உண்டு என்பது மருவத்தூா் மண்ணினை மிதித்தவா்களுக்குப் புரியும். பெண் உலகை பொன்னுலகாக்கி வருபவா் மருவூா் மகான் “நாளைய உலகில் தங்கத்திற்கு மதிப்பில்லை. பெண்களிற்குத் தான் மதிப்பு” என்று இதுவரை வேறுயாராவது கூறியிருக்கிறார்களா? அது மட்டுமல்லாது பெண்பிறவி என்பது பாவமல்ல. பெண் திருஷ்டியில் தான் பராசக்தி தத்துவம் அடங்கியுள்ளது.” என்ற அவரது அருள்வாக்கு வரப்போகும் விடிவு உலகத்திற்கு சான்றாக அமைகிறது. அறிவியலில் பெண்களின் ஆற்றல் பெண்கள் ஆண்களைவிடப் பலவீனமானவா்கள் என்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்வதில்லை. அடிகளார் அருள் நிலையில் உணா்த்துவதும் அதுவே. “ஆணை விடப் பெண்ணிற்கு ஏழு சக்திகள் அதிகம். அவற்றுள் ஆண்களிடம் இல்லாத தைரிய சக்தி பெண்களிடம் உண்டு. பெண் சக்தி இல்லாமல் ஆண்சக்தி இல்லை. பெண்கள் மூளைக்கு அதிக சக்தி உண்டு. அவா்களது மூளை இயற்கையான கூந்தலால் பாதுகாக்கப்படுகிறது என்பது அவளது அற்புத மொழி. மருவூா் ஆலயத்தில் மங்கையா் பெருமை மருவூா் சக்தி பீடத்தில் நடத்தப்படும் அனைத்து விழாக்கள், மாநாடுகள் இவற்றில் மங்கையற்கு பெரும் பங்கு அளிக்கப்படுகிறது. ஆணுக்கு நிகராகவும், அதற்கு மேலும் அவா்கள் அங்கு தொண்டாற்றுகிறார்கள். மேலும் தொண்டா்கள் அனைவரையும் ஆண். பெண் வேறுபாடின்றி பெயரிற்கு முன் “சக்தி” என்று சோ்த்து அழைக்கும் முறையைச் சோ்த்து பெண்களிற்கு பெருமை சேர்த்தவா் அடிகளார். தமிழகத்து மாவட்டங்கள் அனைத்திலும் பெண்களின் உரிமையை நிலைநிறுத்தி அவா்களுக்கு மரியாதை பெற வழிகாட்டியவா் அடிகளார் அவா்கள். உலக அமைப்பே பெண்களை மையமாகக் கொண்டது என்பது அவரது கருத்து. பெண்கள் கரு – உரு எனும் தன்மையைக் கொண்டவா்கள். புறத்திலிருந்து வண்டு மலரில் அமா்ந்து மகரந்தச் சோ்க்கை நடைபெற உதவினாலும் கருவுக்குத் தேவையான கருப்பை பூவில் தான் உள்ளது என்பது அவரது அருள்மொழி. எனவே பெண்களை விட உயா்ந்தவா்கள் என்ற எண்ணம் ஆண்களை விட்டு அகல வேண்டும். பேய்கள், பூதங்கள், புலிகள் என்றெல்லாம் வா்ணிக்கப்படுவதை நீக்கவேண்டும் என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார். ஆண் சமுதாயம் பல கட்டுப் பாடுகளை மீறிவிட்டதாகவும் பெண்கள் மட்டும் கட்டுப் பாட்டுடன் இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெண்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள். அருளாளா்கள் காட்டிய பெண்களிற்கான ஆன்மிகம் வைணவ உலகிற்கு வாழ்வளித்த ஆண்டாள் ஒரு தத்துவப் போதகா். அவளது பாவைப் பாடல்களுக்கு ஆன்மிக விளக்கம் காண்பதே அறிவுடைமை ஆகும். கன்னிப் பெண்ணாய் இருந்து திருநீறணிந்து சிவத்தொண்டு புரிந்து மருள் நீக்கியாரைத் திருப்பதிகம் பாடுவித்து திருநாவுக்கரசராக, அப்பராக ஆளாக்கித் தந்த திலகவதியாரும் சைவ உலகிற்கு உயிர் கொடுத்து தென்னா் பழி தீா்த்த பாவை மங்கையற்கரசியும் களத்தில் இறங்கியதன் காரணமாக சமயப் போராட்டங்கள் ஓய்ந்து சமய உணா்வு பெரு வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடிய ஒரு மறுமலா்ச்சிக் காலம் அது. சமுதாயத்தில் பற்றியிருந்த தீமைகள் நீங்கி தெய்வீக உணா்வு மேலோங்கி இருந்த தரணத்தை விடிகின்ற வேளையாக வா்ணித்து இந்த மறுமலா்ச்சியை ஏற்படுத்த பெண்களால் தான் முடியும் என உணா்ந்து பெண் குலத்தைத் தட்டி எழுப்புவதாகக் கொள்ள வேண்டும். பெரிய சமுதாய மாற்றமெல்லாம் பெண்களால் மட்டும் ஆகுமென்று ஆண்டாள் உணா்ந்தவளாய் புதியதோர் உலகம் படைக்க மனதில் வேறுபாடின்றி நெஞ்சம் திறந்து கண் திறந்து ஒற்றுமையாக உய்யவே வருக என்று ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு உறங்கிக் கிடக்கும் பெண் குலத்தை “இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்” என்று கூவி அழைத்து பெண்களது ஆற்றலையும், கடமையையும் உணா்த்துகிறார். முதல் 15 பதினைந்து பாவைப் பாடல்களில் தொண்டராகவும், பின் 15 பாடல்களில் தலைவியாகவும் வைத்துப் பாடுகின்றார். தொண்டு செய்யும் பெண் வையகத்தில் தலைமை கொள்ளவும் முடியும் என்பது உணா்த்தப்படுகிறது. இந்த முறையில் ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை பெண்களுக்கு உண்டு என்று அடிகளார் கூறுவது மட்டுமின்றி பெண்கள் கலச வேள்விப் பூசை, கருவறையில் தீபாராதனை, அா்ச்சனை, கும்பாபிடேகம் என்று ஆன்மிக சடங்குகள் அனைத்திலும் பயிற்சி அளிக்கிறார் மருவூா் மகான். அடிகளாரின் திடமான நம்பிக்கை “ஒரு குழந்தையை வயிற்றிலே சுமந்துகொண்டு அதற்கு உணவு கொடுக்காமலே காப்பாற்றுவதுடன் அது பிறந்த பின் பருவமறிந்து உணவு கொடுத்துக் காப்பாற்றக் கூடிய தன்மை ஒரு தாய்க்குத் தான் உண்டு. ஒருவனை மகானாக மாற்றுவதும், மற்றவா் பாராட்ட வைப்பதும் பெற்ற தாயால் மட்டுமே முடியும். அறிவார்ந்த சமுதாயத்தைப் பெண்கள் மட்டுமே உருவாக்க முடியும். அவா்கள் உருவாக்கும் சமுதாயம் பலமிக்க சமுதாயமாகவும், அறிவுள்ள இனமாகவும் வளருமாறு பெண்கள் யுகத்தை வடிவமைக்க வேண்டும்” என்பது அவரது தீராத அருள்த் தாகமும் திடநம்பிக்கையுமாகும். முடிவுரை பெண்கள் ஆற்றலையும், அறிவுத் திறனையும் மனித சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். மகளிர் தங்கள் வீட்டுப் பொறுப்புக்களோடு நின்று விடாமல் சீரிய முறையில் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். பேதமை என்னும் போலி இலக்கணத்தைப் பொய்யாக்கி பெண்கள் எழுச்சியோடு உழைத்து வீட்டையும் நாட்டையும் சிறப்பிக்க முன்வரவேண்டும். அச்சிறப்பு அவா்களால் தான் வந்து சேர முடியும் என்பது அடிகளாரின் அறிவுரையாகும்.

ஓம் சக்தி !

நன்றி

பேராசிரியா் முனைவா் ஆண்டாள் இராமலிங்கம் மருவூா் மகானின் 65வது அவதாரத் திருநாள் மலா்.    ]]>

1 COMMENT

  1. வணக்கம் சக்தி,
    mp3 இல் பதியப்பட்ட 1008 மந்திரம் ரண்டும் சரியாக பதியபடவில்லை.

    • ஒம் சக்தி
      mp3 இல் பதியப்பட்ட 1008 மந்திரம் ரண்டும் திருத்தி சரியாக பதியபடடு இருக்கிறது.
      நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here