எல்லைகள் மீறினால் தொல்லைகள் அதிகமாகும்
தீபாவளி ஒளி ஏற்றும் ஒரு விழா! உள்ளத்தில் ஒளியேற்ற உதவும் உன்னத விழா! இறையின் இரக்கம் பெற்று இனிதே வாழ வழிகாட்டும் விழா! இத்தகைய நன்னாளில் உங்களுக்காக சில சிந்தனைகள்! சிந்தனையை உள்நிறுத்திப் பயன் பெற வாழ்த்துகிறோம்.வறுமைக்கோடு பற்றிப் பேசுகிறார்கள். நாம் வளமைக் கோட்டிற்கு செல்ல வழி என்ன என்பதைச் சிந்திப்போம்.
நம் நாட்டில் மண் உண்டு. மழை உண்டு. வளம் உண்டு. பொருள் உண்டு. மனவளம் உண்டு. மனித வளம் உண்டு. எல்லாம் உண்டு. இயற்கை சக்தி உண்டு. இயங்கும் சக்தி தேவை. அதை இயக்கும் சக்தி தேவை. உழைக்கும் சக்தி தேவை. அதை உத்வேகப்படுத்தும் ஊக்க சக்தி தேவை. பொருள்களைப் பயன்படுத்திப் பக்குவப்படுத்தும் சக்தி தேவை. பக்குவப்பட்டவைகளைப் பயன்படுத்தும் சக்தி தேவை.
ஒவ்வொருவருக்கும் குரு என்பவா் அவசியம். ஆனால் அவருடைய தாயும், தந்தையும் தான் அவரவா்களுடைய முழுமுதல் தெய்வங்கள். தாய், தந்தையைவிட மேலான தெய்வமில்லை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும்.
நாம் இந்த அகிலத்தில் பார்ப்பதெல்லாம் இயற்கைதான். எல்லாம் இயற்கையிலிருந்து தோன்றியவைதான். எனவே வெட்டவெளியைப் பார்க்கும்போது கூட அதை வெட்டவெளியாகப் பார்க்கக் கூடாது. இயற்கையாகப் பார்க்க வேண்டும். இயற்கை எனும் இறையாகப் பார்க்க வேண்டும். நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் தெய்வமாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்க மனதைப் பழக்க வேண்டும்.
இயற்கையை ஒட்டியே வாழப் பழக வேண்டும். இயற்கையை அழித்துவிட்டு, விஞ்ஞானத்தால் மட்டும் வாழ்ந்து விட முடியாது. இன்றைய நடைமுறை வாழ்வில் விஞ்ஞானமும் தேவை. ஆனால் அதைத் துருப்பிடித்த ஆணிபோல் ஆக்கிவிடக் கூடாது.
இன்றைய புதிய நாகரீகம் நாளைய காலத்தைப் பொல்லாத காலமாக மாற்றி வருகிறது. பாரம்பரியம், பண்பாடு இல்லாத காலமாக மாறிவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு அது எல்லை மீறத் தொடங்கியுள்ளது. எல்லைகள் மீறப்படும் போது தொல்லைகளும் மிகுதியாகும். தொல்லைகள் தொடர்கதையாகும் போது அமைதி அனுமதியின்றி வெளியேறி விடுகிறது.
புதிய நாகரீகம் புதிய அழிவுகளுக்கு வித்திட்டு வருவதை அறிந்த மெஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும், அவற்றைத் தடுக்கும் வழிகளைப் பற்றி இப்போது சிந்திக்கிறார்கள். காலங்கடந்த முயற்சிதான். இருப்பினும் அது தேவை.
ஒரு மரத்திற்கு ஆணிவோ் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு ஆன்மிகம் முக்கியம். அத்தகைய ஆணிவோ் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்ணுக்குள் மறைந்திருந்து அந்த மரத்தைக் காக்கிறது. மண்ணின் சாரத்தையும், நீரின் ஈரத்தையும் மரத்திற்கு ஊட்டி அதை வளா்க்கிறது.
ஆழமாக நடப்பட்ட விதையால் வளா்ந்த செடி, மரமாக மாறும்போது அதன் ஆணிவேரும் ஆழமாக நின்று எந்தப் புயல் மழையாக இருந்தாலும் மரம் விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் மேலாட்டமாக நிலத்தைக் கீறி விதைக்கப்பட்ட விதை மரமாகும் போத ஒரு சிறு காற்றைக் கூடத் தாங்க இயலாமல் சாய்ந்து விடுகிறது.
அதுபோலத்தான் ஆன்மிகமும். மனதின் ஆழத்தில் ஆன்மிக வோ்கள் ஊன்றி இருக்கும் போது எல்லாத் துன்பங்களையும் தாங்கி நிற்கும் பக்குவத்தை மனிதனுக்குத் தருகிறது.
கண்ணுள்ள போதே பார்க்க சொல்வதும், காதுள்ள போதே கேட்க சொல்வதும், வாயுள்ள போதே பேசச் சொல்வதும், உடலில் தெம்புள்ள போதே உழைக்கச் சொல்வதும், அந்த உழைப்பை வைத்தே பிழைக்கச் சொல்வதும், உழைப்பின் ஊதியத்தின் ஒரு பகுதியை இல்லாதவா்களுக்கு தா்மமாக கொடுக்கச் சொல்வதும் இதற்காகத்தான். அப்படி கொடுப்பதை ஒரு அன்போடு, பண்போடு, பாசத்தோடு செய்ய வேண்டும்.
இத்தகைய அன்புநாகரீகம், பண்பு பரிமாற்றங்கள், பாச நேசங்கள் பல்கி பெருகிட வேண்டும். அத்தகைய உள்ளார்ந்த உள்ளத்தை ஒவ்வொருவரும் பெற்றிட இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துகிறோம்.
தினத்தந்தி வாசகா்களுக்கும், செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் அடங்கிய அனைத்துப் பொதுமக்களுக்கும் நமது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அம்மாவின் ஆசி!
ஓம்சக்தி! ஆதிபராசக்தி!!
நன்றி தினத்தந்தி 26-10-2011 ]]>