நான் பள்ளிப்பாளையம் அக்கிரகாரம் மகளிர் மன்றத்தில் என்னால் முடிந்த தொண்டுகளைச் செய்து வருகிறேன். நான் கட்டிடம் கட்டும் மேஸ்திரி வேலை பார்ப்பவன். எனக்கு ஒரு மகளும், ஜந்து மகன்களும் இருக்கிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்கின்றேன்.

எங்கள் மன்றத் தலைவி சக்தி தைலாம்பாள் வெங்கடாசலம் அவா்கள் ஒருநாள் என்னிடம் “மாரிமுத்து நீதான் அம்மாவின் மன்றக் கட்டிடம் கட்டித் தரவேண்டும். கோபுர வேலையும் நீதான் செய்யப் போகிறாய்” என்றார்கள்.

நானோ, “அம்மா! நான் இதுவரையில் வீட்டுக் கட்டிடங்களைத்தான் கட்டியுள்ளேன். கோயில் கட்டுவது எனக்குத் தெரியாத ஒன்றாயிற்றே..?” என்றேன்.

“கவலைப்படாதே! ஓம் சக்தி என்று எப்போதும் உச்சரித்தபடி வேலையைச் செய். அம்மா பார்த்துக் கொள்வாள்” என்றார் அவா்.

அவ்வாறே மன்றக் கட்டிடமும், கருவறையும் கட்டி முடித்தேன். அம்மாவின் பணியைச் சிரமேற்கொண்டு தொண்டு செய்ததால் இந்த ஏழைத் தொண்டனின் குடும்பத்தில் உள்ள கவலைகளை அம்மா போக்கினாள்.
சாப்பாட்டுக் கஷ்டம், துணிமணி கஷ்டம் எல்லாவற்றையும் போக்கி நிம்மதியான வாழ்வை அளித்தாள்.

மன்றத் தலைவி அடிக்கடி அம்மாவைப் பற்றிக் கூறி என்னை எச்சரிப்பார்கள். “அம்மாவுக்கு உண்மையாகவே தொண்டு செய்து வந்தால் உயரத்தே வைப்பாள். ஏமாற்ற எண்ணினால் உயரப் பறக்கும் பட்டம் அறுந்து போனபின் பூமியில் குப்புற விழுவது போல் விழ வேண்டிய நிலை தான் ஏற்படும்” என்பார்கள். அவா்கள் அறிவுரை என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.

அம்மாவின் தொண்டா்கட்குச் சோதனை வருவது போல எனக்கும் ஒரு சோதனை வந்தது.

என் மகன் தேவராஜன் என்பவன் 4 வயதுப் பையன். குறும்புக்காரன். ஒருநாள் மற்ற பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு போக்கிரிப் பையன் என் மகனை மிகப் பலமாக அடி அடி என்று அடித்து விட்டான். இரண்டு கன்னங்களிலும் ஓங்கி அறைந்து விட்டான். பையன் அங்கேயே மயங்கி விழுந்து விட்டான்.

எனக்குச் செய்தி வந்தது. ஓடிப்போய்ப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்தப் போக்கிரிப் பையன் அடித்த அடிகளால் என் மகனுடைய கண்கள் பெரிதும் பாதிக்கப் பட்டன. அந்தக் கருவிழியின் அருகே வெண்மைப் பகுதியெல்லாம் கலங்கி விட்டது. கெட்டுப்போன ஒரு கோழி முட்டை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

உடனே ஒரு டாக்டரிடம் எடுத்துச் சென்றேன். “ கண்களை ஆபரேஷன் செய்து பார்த்தால்தான் முடியம். இனி இவன் வேலைக்குச் செல்ல முடியாது. பார்வை வரும் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டார். அந்த டாக்டா். மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் சமாளிக்கலாம். கண்ணே போனால்…?

சுமக்க முடியாத வேதனையோடு எங்கள் மன்றத் தலைவியிடம் ஓடி வந்தேன். “அம்மா! என் பையனுக்கு இப்படி ஆகி விட்டதே..? என்று
கதறி அழுதேன். நீங்கள் என்ன சொல்கிறீா்களோ அதன்படிச் செய்கிறேன். என் மகனுக்குக் கண் பார்வை வந்தாலும் சரி! போனாலும் சரி! என்ன செய்யலாம் சொல்லுங்கள்” என்று சொல்லி அழுதேன்.

என் பரிதாப நிலையைப் பார்த்த மன்றத் தலைவி “மாரிமுத்து என் கையில் ஒன்றுமில்லை. அம்மா உன்னைக் கைவிட மாட்டாள். எதற்கும் பயப்படாமல் கலச பூஜையில் வைக்கப்பட்ட கலச தீா்த்தத்தையே ஒருதுளி கண்ணில் விட்டுப் பார்க்கலாம். தலைக்குமேல் போய்விட்டது. இனிச் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? பார்வை கிடைப்பது நிச்சயமல்ல! என்று டாக்டா்களே சொல்லி விட்டார்கள். இந்த நிலையில் நமக்கு வேறு வழியில்லை. அந்தக்  கலச தீா்த்தம் தான் நமக்கு வழி!”  என்று கூறினார்கள்.

தினமும் அவன் கண்ணில் ஒருதுளி கலச தீா்த்தம் விட்டு வந்தேன். மூன்று முறைதான் அவ்வாறு செய்தேன். கலங்கிக் கிடந்த வெள்ளை விழி குணமாகி வருவது தெரிந்தது.

பையனைப் பற்றிய கவலையை அம்மாவிடம் போட்டுவிட்டுத் தொடர்ந்து அம்மாவுக்குத் தொண்டு செய்தேன். மன்றப் பணிகள் செய்தேன்.

அம்மாவின் அருளால் சில நாட்கள் கழித்து கண்கள் பழைய நிலைக்குத் திரும்பின. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையும் திரும்பிற்று.

என் மகனுக்குக் கலச தீா்த்தத்தால் வேப்பிலையால் கண்பார்வையை மீட்டுக் கொடுத்தாள் அந்த ஆதிபராசக்தி!

நன்றி

(திரு.மாரிமுத்து,பள்ளிப்பாளையம்,ஈரோடு)

(அன்னை அருளிய வேள்வி முறைகள், பக்-313-314)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here