ஆன்மிகம்
நம்மை நாமே செம்மைப் படுத்திக் கொள்ளவும் நெறிப்படுத்திக் கொள்ளவும் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நற் பண்புகளையும் நற்சிந்தனைகளை வளா்த்துக்கொள்ளவும், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கவும், நாம் எடுக்கும் பயிற்சி தான் ஆன்மிகம்.
சிலா் ஆன்மிகம் என்றாலே பயந்து ஒதுங்குகிறார்கள். மனச்சாட்சியை மதித்து நடப்பவா்களுக்கு ஆன்மிக ஈடுபாடு இயற்கையாகவே வந்து விடும். ஆன்மிகத்தின் வாயிலாக உள்ளத்தை எளிதில் தூய்மையடையச் செய்ய முடியும்.
“புறத்தூய்மைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அகத்தூய்மைக்கும் கொடுக்க வேண்டும்.”
இயற்கைக்கும் ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. முற்காலத்தில் நம் மூதாதையா்கள் இயற்கைத் தெய்வங்களாகிய நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் முதலியவற்றை வழிபட்டு வந்தார்கள். இயற்கையும் தன் இயல்பான நிலையில் அந்தந்தப் பருவத்திற்கேற்ப பலனைத் தந்துகொண்டிருந்தது. இந்தப் பஞ்சபூத வழிபாட்டை நாளடைவில் நாம் கொஞ்சம் கொஞ்மாகப் புறக்கணித்து விட்டோம். இயற்கையும் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி பருவத்திற்கேற்ப பலனைக் கொடுக்கத் தவறிவிட்டது.
விதி
நமது வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பது எது? நமது எண்ணங்கள். வாழ்க்கையை நிர்ணயிப்பது எது? – விதி
விதி என்றால் என்ன?
முந்தைய ஜென்மங்களில் செய்த வினைப் பயன் அல்லது நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் எனவும் நினைக்கத் தோன்றும். எல்லாம் இறைவனுடைய விருப்பத்தினால் நடக்கிறது. நாம் இறைவனுடைய கையிலே இருக்கும் ஒரு கருவியே என்னும் ஆன்மிக ஞானத்தைப் பெற்று எதையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆசை
ஆசை இருக்கத்தான் செய்யும். ஆசையில்லாதவா்கள் உலகில் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் அது பேராசையாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேராசை நாளடைவில் பொறாமையாக மாறுவதுடன் அந்தப் பொறாமையானது நம்மைப் பேரழிவுக்கே இட்டுச் செல்லும். இந்தக் காலத்தில் செல்வம் சேரச்சேர மக்களிடம் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகின்றது. வேறு எவரிடமும் இல்லாத அளவு செல்வம் சோ்க்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு விட்டது. அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். மன அமைதியும், பொருட்கள் மேல் ஆசையும் ஒன்றுக்கொன்று முரணானது.
இன்றைய சூழல்
இப்பொழுதுள்ள பரபரப்பான தேடுதல் மிகுந்துவிட்ட சூழ்நிலையில் இன்றைய நவீன வாழ்க்கையில் மக்கள் தொலைத்துவிட்ட மகத்தான விசயம் நிம்மதி. பணமிருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற இன்றைய சூழ்நிலையில் விலைகொடுத்து எதையும் பெற்று விடலாம் என்று நினைப்பது தவறு.
நிம்மதி என்ற வார்த்தையை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் சிலா் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். நிம்மதி, திருப்தி இவற்றை ரேஷன் கடைகளில் சா்க்கரை, அரிசி ஒருவருக்கு எத்தனை கிலோ என்பது போல் வினியோகித்திருந்தால் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். “நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது. பிரார்த்தனைகளையும், நம்பிக்கையையும் வளா்த்துக்கொண்டே வந்தால் துன்பங்கள் நம்மை விட்டு முழுவதுமாக விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று நிம்மதி ஏற்படும்.
பகுத்தறிவு
மனிதனுக்கு மட்டும் தான் ”பகுத்தறிவு” இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. பகுத்து அறியும் ஆற்றல் பெற்ற நாம் அன்னப் பறவையைப் போல வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உலகச் சுழற்சியில் பகலும், இரவும் மாறி மாறி வருவது இயற்கை. துன்பத்தைக் கண்டு துவழுவதும், இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதுவும் கூடாது. இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். நல்லதும், கெட்டதும் இருக்கத்தான் செய்யும். நாம் பகுத்து அறிவதன் மூலமாக அதைப் பிரித்துப் பார்த்துச் செயற்பட வேண்டும்.
எங்கே எது இல்லை. காட்டில் மட்டும் தானா முள் இருக்கிறது?
றோட்டிலும் தான் முள் இருக்கிறது?
பார்த்து நடப்பவன் காட்டில் கூட நடக்கலாம். பார்க்காமல் நடப்பவன் ரோட்டில் கூட நடக்க முடியாது. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பக்தியும் தொண்டும்
பக்தியும் தொண்டும் ஆன்மிகத்தின் இரு கண்கள். இருந்த இடத்தில் இருந்து சம்பாதிக்க முடிந்ததும் பிறருக்கு விற்க முடியாததும் பக்தி ஒன்று தான். பக்தி வளர வளர தொண்டு மனப் பான்மை தானே வந்துவிடும். தொண்டு செய்யச் செய்ய நம் ஊழ்வினை குறையும். எல்லோரும் தொண்டு செய்ய முடியுமா? முடியும்.
உடல் உழைப்பைக் கொடுக்க முடிந்தவா்கள் பிறருக்குத் தேவையான சமயங்களில் உடல் உழைப்புக்கொடுத்து உதவலாம். உடல் உழைப்பு கொடுக்க முடியாதவா்கள் நடக்கக் கூடாத நிகழ்வுகள், சோக நிகழ்வுகள் நடந்திருக்கும் நேரங்களில் ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றலாம்.
எதிர்பாராமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுப் பண உதவி தேவபை்படும்பொழுது பணஉதவி செய்ய முடிந்தவா்கள் பணம் கொடுத்து உதவி புரியலாம்.
இவ்வாறு நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்து வருவதும் தொண்டு தான். நாம் நம் சந்ததியினருக்குப் பொருட் செல்வத்தைச் சோ்த்து வைக்காவிட்டாலும் புண்ணியத்தைச் சோ்த்து வைக்கும் போது நம் ஏழு தலைமுறைகளையும் காக்கும் என்பது அம்மாவின் அருள்வாக்கு.
பெண்ணுக்கு முக்கியத்துவம்
பக்தியும், தொண்டும் மிக முக்கியம் என்பதை உணா்த்தத்தான் மேல்மருவத்தூரில் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி அன்னை அருள்திரு அடிகளார் அவா்களை ஆட்கொண்டு பெண்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உலகில் வேறெங்கும் நடைபெறாத காரியங்களையெல்லாம் மேல் மருவத்தூா் கோயிலில் நடைமுறைப்படுத்தி வருகிறாள் – எப்படி?
கோயில் கட்டி கருவறையில் சிலை நிறுவும் வரை வேலை செய்வதற்குப் பெண்களை அனுமதித்துச் சிலைக்குக் கண்திறந்ததும் பெண்களைக் கோயில் கருவறைக்குள் அனுமதிக்காத நிலையை மாற்றி அருள்திரு அம்மா அவா்கள் பெண்களைக் கோயில் கருவறைக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்ய அனுமதித்தது மட்டுமன்றி அதற்கு மேலும் சென்று வேள்வி, குடமுழுக்கு போன்ற நற்காரியங்கள் செய்யப் பயிற்சி அளித்து அதையும் பெண்களை வைத்து நடத்தியும் வருகிறார்கள். கோயிலில் அற நிலையை நிறுவி அதன் வாயிலாக கல்விப் பணி, மருத்துவப்பணி, சமுதாயப்பணி போன்றவற்றையும் செய்யச் சொல்கிறார்கள்.
பெண்களை முன்னிலைப் படுத்தி, பெண்களைக் கொண்டே ஆன்மிகத்தை வளா்த்து உலகத்தையே ஆன்மிக உலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். “ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தவளாக இருந்தால் அந்தக் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் ஆன்மிக ஈடுபாடு கொண்டவளாக அந்தக் குடும்பத்தையே கோவிலாக மாற்ற முடியும்.” என்பது அம்மாவின் கணிப்பு.
குரு
நாம் முன் பின் அறிமுகமில்லாத இடத்திற்கோ ஊருக்கோ செல்வதற்கு வழிகாட்டி (கைகாட்டி) நமக்கு எப்படி அவசியம் தேவையோ அதுபோல நமக்கு ஆன்மிக ஞானத்தை ஊட்டுவதற்கும் இறை அருள் பெறுவதற்கும் “நல்ல குரு” தேவைப்படுகிறது. குருவின் வழிகாட்டுதலினால்தான் இறைவனை எளிதில் அடைய முடியும். மேல்மருவத்தூரில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் நம் ஆதிபராசக்தி அன்னையானவள் நமக்கெல்லாம் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாக, தெய்வமாக அருள்திரு அம்மா அவா்களைத் தந்தருளி உள்ளாள்.
குருவின் வழிகாட்டுதலினால் பெறும் நன்மைகள்
1. உள்ளம் தூய்மை அடைகிறது.
2. இறைபக்தி உண்டாகிறது.
3. தா்ம சிந்தனைகள் வளா்கின்றன.
4. தொண்டு மனப்பான்மை ஏற்படுகிறது.
5. மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும்.
6. தன்னம்பிக்கை வளா்கிறது.
7. பிறரை நேசிக்க முடிகிறது.
8. மனதில் அமைதி நிலவுகிறது.
9. விட்டுக்கொடுக்கும் எண்ணம் வளா்கிறது.
10. மனம் பக்குவப்படுகிறது.
11. தீய எண்ணங்கள் அகலுகின்றன.
12. நல்லொழுக்கங்கள் வளருகின்றன.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அருள்வாக்கு
பக்தா் ஒருவா் அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்டாராம். ”அம்மா நாட்டில் இவ்வளவு அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றதே இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கின்றாயே? ஏன் அம்மா என்றாராம்”
“என்ன செய்வது மகனே! நீ கலியுகத்தில் மாட்டிக்கொண்டாய் வெயில் (அக்கிரமங்கள், அநியாயங்கள், தீவிரவாதங்கள்) கடுமையாகத்தான் இருக்கிறது. நீ என்னிடம் வந்தால் குடை தருவேன். நீ வெயில் பாதிக்காமல் நடந்து போகலாம். என்னிடம் வர விரும்பாதவனுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றாளாம்.
வெயிலைத் தணித்துக்கொள்ள குடை, தொப்பி, விசிறி, குளிர் சாதனப்பெட்டி என அவரவா் வசதிக்கேற்ப உள்ளது. அதுபோல் ஊழ்வினை தவிர்க்க தொண்டு, தா்மம், தியானம், மௌனம் எனப் பல பல வழிகள் உண்டு. பயன்படுத்திப் பலன் பெறுவது அவா் அவா் கைகளில் உள்ளது என்றார்களாம்.
எவ்வளவு ஆழமான கருத்துக்களை எளிமையாக உணா்த்தியிருக்கிறார்கள்! ”கடவுள் பருத்தியைக் கொடுத்திருக்கிறார். இதை ஆடையாக நெய்து உடுத்துக்கொள்வது நமது பொறுப்பு” என்பதை நாம் அறிவு பூா்வமாக உணரவேண்டும்.
கோயில்களில், விழாக்களில் எழுந்தருளும் தெய்வங்களாக உற்சவ மூா்த்திகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். நம் மேல்மருவத்தூா் கோயிலில் எழுந்தருளும் உற்சவ மூா்த்தியாக தெய்வ குருவாக அருள்திரு அம்மா நமக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அவா்கள் வழிகாட்டுதலின் படி நடந்து அவா்களின் அருள்வாக்குக் கேட்டு அருளாசி பெற்று வாழ்வோமாக!
”நான் பார்த்த முதல் மகான் அருள்திரு அம்மா!
நான் ஒலிக்கும் முதல் மந்திரம் அம்மாவின் மூலமந்திரம்
நான் ருசித்த முதல் கசப்பு அம்மாவின் வேப்பிலைப் பிரசாதம்.
நான் ரசித்த முதல் வாக்கு அம்மாவின் அருள்வாக்கு” !
குருவே தெய்வம்! தெய்வமே குரு!
குருவடி சரணம்! திருவடி சரணம்!
ஓம் சக்தி
நன்றி (சக்தி. விஜயகுமாரி இரத்தினசபாபதி)
(மருவூா் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலா்)
]]>