வழிபாடு என்ற வேர்ச்சொல்லிலிருந்து வழிபாடு என்னும் சொல் பிறந்தது. இச் சொல் வழியில் செல்லுதல், பின்பற்றுதல், வணக்கம், பூசை என்னும் பொருள்களைக் கொண்டது.
கடவுளையோ, உயிர் உள்ளவற்றையோ உயிர் இல்லாதவற்றையோ, வழிபாட்டுச் சொற்களைக் கொண்டு வழிபடுவதை வழிபாடு எனலாம்.
காலங்காலமாகக் கடவுள் ஒருவர் உண்டு என்று நம்பி வந்த மக்கள் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு முறையில் வழிபாடு செய்து வந்துள்ளனர். மனித குலம் தோன்றிய காலந்தொட்டுக் கடவுளை வழிபட்டு மக்கள் நன்மை பெற்றுள்ளனர்.
கடவுள் நம்பிக்கை ஏதோ வெற்று நம்பிக்கை அல்ல. அது உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கையை எப்படித் தகர்க்க முயன்றாலும், ஏதோ ஒரு வகையில் அந்த நம்பிக்கை ஒரு பகுதி மக்களை வழிநடத்திக் கொண்டு தான் உள்ளது.
கொள்கையும் – சோதனையும்
பாலில் நெய் இருக்கிறது என்று வாயால் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? அந்த நெய்யை எடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. பாலைக் காய்ச்ச வேண்டி உள்ளது. கடைய வேண்டி உள்ளது. வெண்ணெய் எடுத்தபின் பக்குவமாகக் காய்ச்ச வேண்டி உள்ளது. அதுபோலவே கடவுளைக் காணவும் அவர் அருளைப் பெறவும் உரிய சாதனங்கள் பல உள்ளன. வழிபாடு அவற்றுள் ஒன்று.
எந்த ஒரு விஞ்ஞான உண்மையை நீரூபிக்க முயன்றாலும் அதனைச் சோதனை மூலம் நிரூபிக்கிறார்கள் அல்லவா? அதுபோலவே கடவுளைக் காண்பதற்கும் சில சோதனை முறைகள் உண்டு. தியானம், தவம், யோகம் என்கிற பயிற்சிகள் உண்டு.
THEORY, PRACTICE என்னும் இரண்டும் விஞ்ஞானத்துக்கு அடிப்படை. மெய்ஞ்ஞானத்துக்கும் இவை அடிப்படை. அந்தச் சோதனைகள் ஆன்மிகப் பயிற்சிகள் எனப்படும். சாதனங்கள் எனப்படும்.
என் கண்ணுக்குக் கடவுள் தெரியவில்லையே? என் கண்ணுக்கு ஆன்மா தெரியவில்லையே என்றெல்லாம் வாதாடாதே! உண்மையிலேயே அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான பயிற்சிகளும், மனநிலையும் உனக்கு வரவேண்டும். அந்தப் பயிற்சிகளை இடைவிடாமல் செய்! என்றார்கள் பெரியோர்கள்
நான்குவகை வழிபாட்டு வடிவங்கள்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்பதனை அனுபவத்தில் புரிந்து கொண்டு, காணும் பொருள்களையெல்லாம் பரம்பொருள் வடிவாகவே பாவித்து வழிபடும் பாவனை ஒன்று உண்டு. அது மேலானது. பிரும்ம பாவனை என்று அதனைச் சொல்வார்கள். இது தான் முதன்மையான வழிபாடு.. மேலான வழிபாடு.
2. யோகப் பயிற்சி மூலமாக ஒரு குறிப்பிட்ட தெய்வ வடிவத்தை இதயத்தில் நிறுத்தி இடைவிடாமல் தியானம் செய்வது ஒரு வழிபாட்டு முறை .
3. மன ஒருமையோடு ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவத்தை எண்ணிய படி மந்திர ஜெபம் செய்வது, தோத்திரப் பாடல்களால் வழிபடுவது ஒரு வழிபாட்டு முறை.
4. ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை விக்கிரமாக வைத்தும், படமாக வைத்தும்பூசை செய்வது ஒரு வழிபாட்டு முறை.
முதலில் உள்ள இரண்டு எல்லோராலும் முடியாதவை. இறுதியில் உள்ள இரண்டும் எல்லோராலும் செய்யத்தக்கவை.
உயர்ந்த வழிபாடு
நானே அது! அதுவே நான்! தெய்வம் என்னுள்ளேயே ஆத்மாவாக உள்ளது என்ற உன்னதமான உண்மையை அனுபவ ரீதியாக எட்டிப் பிடித்துவிட்ட அத்துவைத ஞானிக்கு பூசை வேண்டாம்: விக்கிரகம் வேண்டாம்: கோயிலை வலம் வருதல் வேண்டாம் அந்த நிலையை அனுபவத்தில் எட்டிப்பிடிக்காத பாமரனுக்கு இவையெல்லாம் வேண்டும்.
அவரவர் பக்குவம்
“ஊனக் கண் கொண்டவன் விக்கிரகத்திலே தெய்வத்தைப் பார்க்கிறான். அந்தணன் ஒருவன் அதனை வேள்வித் தீயிலே பார்க்கிறான். ஞானி எல்லாப் பொருள்களிலும் தெய்வத்தைப் பார்க்கிறான்” என்று வடமொழி சுலோகம் ஒன்று கூறும்.
புற வழிபாடு
ஆன்ம பரிபக்குவம் பெறாத எல்லா மக்களுக்கும் அமைத்த வழிபாட்டு முறை பூசை முறை. இந்தப் பூசை முறையில் தான் வேறு: தெய்வம் வேறு என்ற இரட்டை மனப்பான்மை உண்டு. தனக்கு வேறாகத் தெய்வத்தை ஒரு விக்கிரகத்தில் அமைத்தோ, ஒரு எந்திரத் தகட்டில் நிறுவியோ வழிபாடு செய்வது புறவழி பாட்டு முறை. இந்தப் பூசை முறையில் சாதகன் ஒருவன் எந்தத் தெய்வத்தை வழிபடுகிறானோ அந்தத் தெய்வ உருவத்தைத் தன் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு உயிராற்றலை ஊட்ட வேண்டும். அந்த உயிராற்றலைச் சில குறிப்பிட்ட மந்திரங்களின் துணைகொண்டு எதிரே உள்ள விக்கிரகத்துக்கு ஊட்டி எழுந்தருளச் செய்ய வேண்டும். இந்தச் செயலுக்குப் ‘பிராணப் பிரதிஷ்டை’ என்று பெயர். அந்த மந்திரத்திற்குப் “பிராணப் பிரதிஷ்டா” மந்திரம் என்று பெயர்.
நித்தியம் நைமித்தியம்
இவ்வாறு நிறுவப்பட்ட தெய்வ விக்கிரகத்துக்குச் செய்யும் பூசை இரண்டு வகை. 1. நித்திய கருமம் , 2. நைமித்திக கருமம் என்பன அவை.
நாள்தோறும் செய்ய வேண்டிய பூசை நித்திய கருமம் எனப்படும். சூரியோதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்தின் போதும் சந்தியா வந்தனம் செய்வது, நாள்தோறும் இன்னின்ன வேளைகள் என்று பிரித்துக் கொண்டு பூசை செய்வது, பஞ்சமகா வேள்வி என்று அந்தக் காலப் பிராமணர்கள் செய்த பூசை இவை நித்திய பூசை எனப்படும். ஆலயங்களில் ஆறுகால பூசை என்று நாள்தோறும் நடைபெறும். இந்த ஆறுகால பூசைகள் அன்றாடம் நடைபெறுகிறதா என்று அக்கால அரசர்கள் கண்காணித்துக் கொண்டார்கள். இன்றேல் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினார்கள்.
சில குறிப்பிட்ட காலங்களில் நடத்தப்படும் பூசை நைமித்திய பூசை எனப்படும். ஒவ்வொரு கோயிலிலும் சில குறிப்பிட்ட விசேஷ நாட்களில் கொண்டாடப்படுவது உண்டு. விழாக்கள் நடைபெறுவது உண்டு. இவை நைமித்தியம் எனப்படும்.
கும்பாபிடேகம் ஏன்?
நித்திய பூசை, நைமித்திய பூசைகளில் ஏதாவது நியமம் தவறியிருக்கக்கூடும். சில நாட்களில் வழிபாடுகள் தடைப்பட்டிருக்கக்கூடும். ஊரிலோ, நாட்டிலோ, அரசியல் காரணமாகவோ பூசைகள் விடப்பட்டிருக்கலாம். அப்படி நடைபெற்றால் கோயிலில் தெய்வ சாந்நித்தியம் குறைந்து போகும் என்பதற்காக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயிலுக்குக் கும்பாபிடேகம் செய்து நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்பது விதி.
இஷ்ட தெய்வம்
ஒவ்வொரு சாதகனும் தனக்கு விருப்பமான ஒரு தெய்வ வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்குரிய நியமங்களோடு பூசித்து வருதல் வேண்டும். இவ்வாறு இவன் வாழ்நாள் முழுதும் தேர்ந்தெடுக்கும் தெய்வமே இவனுக்கு இஷ்ட தெய்வம், சிலருக்கு முருகன்!சிலருக்கு விநாயகர்! சிலருக்கு அன்னை! சிலருக்கு விஷ்ணு ! சிலருக்கு சிவன்!
ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு இஷ்ட தெய்வம் என ஒன்று இருந்தாலும் பூசையறையில் ஜந்துவகைத் தெய்வத் திருமேனிகளை வைத்துப் பூசை செய்யும் மரபு ஒரு காலத்தில் இருந்தது. சூரியன், கணேசன், சக்தி, சிவன், விஷ்ணு என்ற ஜந்துக்கும் பூசை செய்யும் வழக்கம் இருந்தது. இன்று அரசியல் சண்டைபோல அந்தக் காலத்தில் சமயச் சண்டைகள் ஏற்பட்டதால் இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிற்று.
சங்கல்பம்
ஒவ்வொரு பூசையின் போது அந்தத் தெய்வத்துக்குரிய மூல மந்திரத்தைச் சொல்லி, பூசைக்கான நோக்கத்தைச் சொல்லிப் பூசை செய்வது வழக்கம். இதற்குச் சங்கல்பம் என்று பெயர். ஓம் சக்தியே இந்த நட்சத்திரம் நலம்பெற ஓம் சக்தியே! இன்னார் குடும்பம் நலம்பெற வளம் பெற ஓம் சக்தியே! என்று சொல்லி விட்டு நாம் அர்ச்சனை செய்கிறோம் அல்லவா? இதற்குச் ‘சங்கல்பம்’ என்று பெயர்.
இந்த விக்கிரகத்தில் எழுந்தருள்க என்று வேண்டிக் கொண்டு தெய்வ விக்கிரகத்தைப் பூசிப்பது ‘பிராணப் பிரதிஷ்டை’ கூறினோம்.
உபசாரங்கள்
அதன்பின் மானிட பாவனையோடு அத் தெய்வத்திற்கு உபசாரம் செய்ய வேண்டும் என்பது பூசை விதி. பொதுவாக 16 உபசாரங்கள் செய்வது வழக்கம். அவை
1. ஆசனம் அளித்தல்
2. வரவேற்று முகமன் கூறல்
3. திருவடிகட்குத் தண்ணீர் ஊற்றி நீராட்டுதல்
4. மலர்கள், சந்தனம் போன்றவற்றை அர்க்கியம் கொடுத்தல்
5&6. வாய்பூசத் தண்ணீர் கொடுத்தல்- இரு முறை
7. தயிர், பால், தேன் முதலிய அளித்தல்
8. நீராட்டுதல்
9. ஆடை உடுத்தல்
10. ஆபரணங்களை அணிவித்தல்
11.வாசனைப் பொருள்களை அளித்தல்
12. மலர்களால் அர்ச்சித்தல்
13. ஊதுபக்தி காட்டுதல்
14. விளக்கொளி காட்டுதல்
15. நைவேத்தியம் படைத்தல்
16. வந்தனை செய்து விடை கொடுத்து அனுப்புதல் முதலியன.
இவற்றில் சிலவற்றைக் குறைத்துக் கொண்டும் செய்வதுண்டு. 10 உபசாரம், 5 உபசாரம் செய்வதுண்டு. வீட்டில் நடக்கும் பூசைகளில் ஜந்து உபசாரம் செய்யப்பட வேண்டும். அவை
1. கந்தம் 2. புஷ்பம் 3. தூபம் 4. தீபம் 5. நைவேத்தியம் என்பன. இவை பஞ்ச உபசாரங்கள்.
ஒவ்வொரு உபசாரத்திற்கும் குறிப்பிட்ட மந்திரங்கள் உண்டு.
திரவிய சுத்தி
வழிபடுகிறவன் முதலில் தன்னை உள்ளும் புறமும் சுத்தப்படுத்திக் கொண்டு வழிபட வேண்டும். அதன் பின் பூசைப் பொருள்களை மந்திரங்கள் சொல்லித் தூய்மைப்படுத்த வேண்டும்.
வழிபடுகின்ற சாதகன் முன்னேறி வரவொட்டாதபடி தீய சக்திகள் சில சூழ்ந்து கொண்டு இடையூறு விளைவிக்கக் கூடும். நாம் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிப்பது அதற்காகத்தான் மற்றவர்கள் ‘அஸ்திர பீஜ’ மந்திரங்களைச் சொல்லி அவற்றைவிரட்டிவிடுவார்கள்.உள்ளங்கையில் ‘பட்’ டென்று இரண்டு முறை விரல்களால் அடித்து இரண்டு முறை தலையைச் சுற்றி காண்பிப்பர். இடது காலால் மூன்று முறை தரையைத் தட்டுவார்கள்.
பூத சுத்தி
சில மந்திரங்களை உச்சரித்து பிராணாயாமம் செய்து கொள்வார்கள். இதன் மூலம் உடம்பையும் சுத்தப்படுத்திக் கொள்வார்கள். பூத சுத்தி என்று அதற்குப் பெயர்.
நியாசம்
அதன் பிறகு ‘நியாசம் ‘ என்ற சடங்கு செய்வார்கள். விரல் நுனிகளாலும், வலது உள்ளங்கையாலும் உடம்பின் பல்வேறு பகுதிகளை சில மந்திரங்கள் சொல்லித் தொடுவது நியாசம் ஆகும். பூத சுத்தி முடிந்த பிறகு இவ்வாறு நியாசம் செய்வதால் அவன் உடம்பு தெய்வ உடம்பாக மாறுகிறது என்று பொருள். அங்க நியாசம், கர நியாசம், என இரண்டு நியாசங்கள் உண்டு. எங்கெங்கே என்னென்ன மந்திரம் சொல்லி நியாசம் பண்ண வேண்டும் என்ற விதி உண்டு.
வழிபாட்டில் கொஞ்ச நேரம் தியானம், ஜெபம் இருக்க வேண்டும் என்றவிதி உண்டு.
பூசைகளின் ரகசியம்
“எல்லாம் வல்ல பரம்பொருள் அனைத்து உயிர்களிலும் உள்ளது. நம் இதயத்தேயும் உள்ளது. தான் வேறு கடவுள் வேறு என்று இரண்டாகப் பார்க்கும் சாதனை, அவனே கடவுள் கடவுள் ;அவனே என்கிற அத்துவைத நிலைக்கு கொண்டு வருவதே பூசையினால் ஏற்படக் கூடிய பலனாகும். எங்கோ இருக்கிறான் என்பவனைத் தன் இதய கமலத்துக்குள் கண்டு அந்தச் சக்தியை வெளிக்கொண்டு வந்து, பூசை செய்யும் விக்கிரகத்திலோ எந்திரத்திலோ எழுந்தருளச் செய்து, அவனைப் பூசித்து மீண்டும் அவனை இதய கமலத்திலே கொண்டு போய் அமர்த்துவது தான் பூஜையின் உள்ளார்ந்த ரகசியம் என்பார்.
உருவ வழிபாடு அருவவழிபாடு
எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு உருவம் என ஒன்றில்லை என்பது உண்மைதான் அருவமாக எண்ணி வழிபட எல்லோராலும் முடியாது. பாமர மக்களால் முடியாது. பக்குவம் பெற்றவர்களால் மட்டுமே முடியும்.எத்தனைபேர் அத்தகைய பக்குவம் உள்ளவர்கள்? எனவே தான் உருவ வழிபாட்டை நம்மக்கு ஞானிகள் வலியுறுத்தினர். உருவமற்ற கடவுள் நிர்க்குணம்! உருவம் கொண்ட கடவுள் சகுணம். முன்னது நிட்களம் என்பர். பின்னது சகளம் என்பர்.
கடவுளை ஓர் உருவம் அமைத்து வழிபாட்டில் ஈடுபடும் போது மனம் குறிப்பிட்ட அந்த ஓர் உருவத்தில் ஆழ்ந்து ஈடுபட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு உருவத்தில் மனம் லயிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மனம் தீவிரமாக ஒன்றிவிடும். அந்த நிலையில் இவனே அந்தத் தெய்வ மயமாக மாறிவிடுகிறான்.
மனம் ஒருமுகப்பட வேண்டும்
மனம் ஒருமுகப்படவில்லையேல் கண் ஒன்று பார்க்கிறது; காதொன்று கேட்கிறது; வாய் ஒன்று முணுமுணுக்கிறது. மனம் எங்கோ அலைபாய்கிறது. உருவ வழிபாட்டிலேயே இந்த நிலை என்றால் எத்தனைபேர் உருவமற்ற நிலையில் கடவுளை வழிபட்டுப் பயன்பெற முடியும்?!
தியான சுலோகங்கள்
பூசையில் தியானம் ஒரு முக்கிய அங்கம். தியானத்தில் குறிப்பிட்ட தெய்வ உருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தித் தியானம் செய்ய வேண்டும். அதற்காகவே தெய்வ வடிவங்கட்கான தியான சுலோகங்கள் உள்ளன.
தெய்வ வடிவங்கள்
ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனி வடிவங்கள் உள்ளன.அதற்கென்றே தியான சுலோகங்கள் உள்ளன. எல்லாம் ஆதிபராசக்தியின் அம்சங்கள் தான் என்றாலும் ஒவ்வொரு வடிவத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, அபிராமி, சரஸ்வதி, மகாலட்சுமி, புவனேஸ்வரி, வாலை, லலிதை, எனப் பல வடிவங்கள் உண்டு.
ஞானிகள் கண்டவை
இந்தத் தெய்வ வடிவங்களை பார்த்தவர்கள் யார்? இவர்களாகக் கற்பித்துக் கொண்டார்களா? என்றால் இல்லை.
காலந்தோறும் உபாசனை செய்த சாதகர்க்கும், யோகிகட்கும், சித்தர்கட்கும், ஞானிகட்கும் காட்சியில் கிடைத்த வடிவங்களே இந்தத் தெய்வ வடிவங்கள் . கனவில் கண்ட தெய்வ தரிசனங்கள் உண்டு. தியானத்தில் கிடைத்த காட்சிகள் உண்டு. நேரிலும் கிடைத்த காட்சிகள் உண்டு.
அவரவர்கள் தாம் கண்ட தெய்வ வடிவங்களையே தியான சுலோகமாக அமைத்து, “நீங்களும் வழிபட்டுப் பலன் பெறுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
இவற்றிலிருந்து நுட்பமும் நோக்கமும் உண்மையும் தெரிந்து கொள்ளாத வெள்ளைக்காரன் இந்துக்களுக்கு எத்தனை சாமி என்று கேலி பேசினான். விக்கிரக வழிபாட்டைப் புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்தான். கொஞ்ச நஞ்சம் ஆங்கிலம் கற்ற நம் நாட்டு படிப்பாளியும் கிண்டல் செய்கிறான்.
அன்னை சொன்னது
“எல்லோர்க்கும் பகுத்தறிவு கொடுத்திருக்கிறேன். எல்லோரும் பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நீ கல்லைத்தான் கும்பிடுகிறாய். அப்படிக் கும்பிட்டதற்காகவும் நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” – அன்னை அருள்வாக்கில் அருளியது உண்டு.
‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் – என்றார் கவிஞர் ஒருவர்.
வழிபாட்டில் இந்தப் பாவனை எல்லாம் தேவைதானா? பூத சுத்தி, நியாசம், ஜெபம், பிராணாயாமல் தியானம் என்பனவற்றால் பயன் உண்டா? இவற்றிலெல்லாம் உண்மையில் அர்த்தங்கள் உள்ளனவா என்று சிலர் நினைக்கக் கூடும்.
பகவான் இராமகிருஷ்ணர் அனுபவம்
இந்தப் பயிற்சிகளெல்லாம் பொருளற்றவை அல்ல. ஆன்மிக சாதனைகட்கு மிகவும் உதவியாக இருப்பன. இதனை இராம கிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு உணர்த்துகின்றது.
கடவுளைக் காண வேண்டும் என்று தாகத்தோடு பகவான் இராமகிருஷ்ணர் தாந்திரிக நூல்கள் சொல்லியபடி வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு பூஜை செய்து வந்தார். அப்படிச் செய்யும் போது தன்னைச் சுற்றி நெருப்பு வளையம் ஒன்று தோன்றியதையும் தன் உடம்பிலிருந்து கன்னங்கரேலென்று ஓர் உருவம் புறப்பட்டு வெளியேறிச் சென்றதையும் கண்டாராம். அந்தக் கருப்பு உருவம் தான் பாவ புருஷன்!பூத சுத்தியினால் உடம்பு தெய்வ உடம்பாக மாறுகிறது என்று உணர்ந்து கொண்டாராம்.
எனவே, அன்னையின் பக்தர்கள் அன்னையின் அருள்வாக்குகளைப் போற்றி, அவள் அருளியுள்ள வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி- ஏன்? ஏதற்கு? என்று ஆராய்ந்து பார்க்காமல் – மனம் ஒன்றி- வழிபாடு செய்து அவள் திருவருள் நிழலில் திளைத்துப் பேரின்பம் பெற முயல வேண்டும்.
அன்னை குருவாக வந்துள்ள பொற்காலம் இது! உள்ளத்தைத் தூய்மையாக்கிக் கொண்டு, வார வழிபாட்டு மன்றத்தில் இணைந்து வழிபட்டும் தொண்டு செய்தும் அவள் திருவடி நிழலில் இடம்பிடித்துக் கொள்ளுங்கள்!!
ஓம் சக்தி
நன்றி
சக்தி ஒளி 1991 பெப்ரவரி
பக்கம் 50-56.
]]>