நான் 1992 ஆம் வருடம் கருத்தரித்த சமயம்; ஒவ்வொரு நாள் இரவும் பயந்து பயந்து தூக்கம் கெட்டு, எப்போதடா விடியும் என்று இருப்பேன். ஏனெனில் படுத்துத் தூங்க ஆரம்பித்தவுடன் எங்கள் படுக்கை அறையின் ஒரு மூலையிலிருந்து ஒரு கரிய கோரமான உருவம், தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு கையில் ஈட்டி போன்ற ஆயுதத்துடன் ஓ! என்று கத்திக்கொண்டு நேராக என் வயிற்றை நோக்கி ஓடிவரும். நான் உடனே ஒம் சக்தி! ஒம் சக்தி! என்று கத்திக் கொண்டு, அம்மாவின் டாலரைக் கையில் பிடித்துக்கொண்டவுடன் அந்தத் தீய சக்தியின் ஈட்டிக்கும் என் வயிற்றுக்கும் நடுவே எங்கிருந்தோ ஒரு இரும்புத் தகடு வந்து இறங்கும். அந்த ஈட்டி அதில் பட்டு தீப்பொறி பறக்கும்.
தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அது தலையை ஆட்டிக் கொண்டு பயங்கரமாகக் கத்திக் கொண்டு ஓடிவிடும்.
ஒருமுறை இருமுறை அல்ல இப்படி எத்தனையோ முறை நடந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அம்மா வந்து என் கருவைக் காப்பாற்றியிருக்கிறாள்.
1993 மார்ச்சு மாதம் என் மகள் திவ்யா பிறந்தாள். சென்னை மயிலாப்பூா் இசபெல்லா மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பிறந்தது.
ஆபரேஷன் முடிந்து என்னைத் தனி அறை ஒன்றில் படுக்க வைத்து, மயக்கம் தெளிந்தவுடன் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
அம்மா படத்தைத் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டிருந்தேன். கண்ணை மூடினால் மஞ்சள் புடவை கட்டிய ஒரு பெண்மணி என் படுக்கைக்குப் பக்கத்திலேயே நிற்பதுபோல் இருக்கும். என்னையே உற்றுப் பார்ப்பது போல இருக்கும். திடுக்கிட்டுக் கண்
விழித்தால் ஒன்றும் இருக்காது.
நான் பயப்படுவதைப் பார்த்து, அங்குள்ள கன்னியா ஸ்திரீகள் வந்து பைபிள் வாசித்து ஜெபம் செய்வார்கள். ஆனாலும் அந்தத் தீய சக்தியின் தொல்லை தொடா்ந்து கொண்டே இருந்தது.
ஒரு வழியாக 12 நாள் கழித்து, வீட்டிற்கு வந்தவுடன் அப்பாடா…. இனிமேல் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்தால் விதி சும்மா விடவில்லை.
என் பெண் மார்ச்சு மாதம் பிறந்த சமயம், அப்போது வெயில் அதிகம் ஒரே புழுக்கமாக இருந்தது. ஜன்னல் கதவுகள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு என் தாய் வீட்டுப் படுக்கை அறையில் படுத்திருந்தேன்.
நள்ளிரவு 12 மணி இருக்கும். யாரோ என் முதுகைப் பிடித்துத் திருகுவதுபோல் இருந்தது.
திடுக்கிட்டு எழுந்து பார்க்கிறேன். என் பெண் குழந்தை படுத்திருக்கும் தொட்டில் யாரும் ஆட்டாமலேயே குடை ராட்டினம் சுற்றுவது போல வேக வேகமாகச் சுற்றியது.
நானும் என் தாயாரும் பயந்துபோய் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்று சொல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் சென்றன.
அன்று நான் மிகுந்த பயத்துடன் அம்மா! உன் படத்தைத் தொட்டிலில் வைத்திருக்கிறேன். கட்டிலில் வைத்திருக்கிறேன். பூஜை அறையிலும் உன் படம் தான் இருக்கிறது. அப்படியிருக்க ஏன் எங்களுக்கு இவ்வளவு சோதனை! என்று அழுதபடியே உறங்கி விட்டேன்.
அன்று இரவு ஒரு கனவு! அம்மா கனவில் அசரீரியாகச் சொன்னாள். “ஜன்னல் கதவுகளை மூடு! ஜன்னல் சட்டத்தில் அம்மா படத்தை எடுத்து மாட்டிவை! வேப்பிலை வை!
அடுத்த நாள் ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிட்டு, அம்மா படமும் வேப்பிலையும் வைத்தவுடன் நிம்மதியாய் உறங்கினோம். அதன்பின் தொட்டில்
சுற்றவில்லை.
உலகில் தீய சக்திகள் என உண்டா? ஏவல், பில்லி, சூனியம் என உண்டா? – எல்லாம் புரளி. இவற்றையெல்லாம் பாமர மக்கள்தான் நம்புவார்கள். படித்தவா்கள் நம்பக்கூடாது. என்று சில படிப்பாளிகள் பேசுகிறார்கள்.
எல்லாம் உண்டு என்பது என் அனுபவம்! B.A.,B.L., படித்த எனக்கே இப்படி அனுபவம்! இப்படியும் ஓா் உலகம் (Occult World) உண்டு என்பது அனுபவத்தால் அறிந்த உண்மை. அம்மாவின் திருவருளால் பாதுகாக்கப்பட்டேன் என்பதும் உண்மை. படிப்பறிவு பெரிதல்ல! பட்டறிவு தான் பெரிது!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. பாரதி, B.A., B.L., அடையாறு, சென்னை
மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்.