உலக அனுபவம், மனிதனின் இயக்கம், மரணத்திற்கு அப்பால்,பிறப்பிற்கு முன்,மரணத்தை வென்ற நிலை,போன்ற யாவும் ஆன்மிகக் கல்வியில் அடங்கும். பயத்தை நீக்குதல், உணவுக்கட்டுப்பாடு,பேச்சுக்கட்டுப்பாடு இக்கல்வியில் அடக்கம். ஆன்மிகக் கல்வியால் மனம் தூய்மையடையும்.மனம் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். மனம் விரிவடையும்.உலக விரிவு தெரியும்.உலக விரிவு தெரிந்ததும் உயிர் விரிவு தெரியும். சமத்துவ உணர்வு வரும்.சாந்தம் உண்டாகும். உடல் நோய்கள் குறையும்.நோய்கள் வராது.எல்லாவற்றிலும் தெளிவு வரும். வாழ்வின் இரகசியம், வாழ்வின் முக்கியத்துவம், வாழ்வின் புனிதம், வாழ்வின் நிலைகள்,வாழ்வின் விளக்கம் யாவும் இக்கல்வியில் விளக்கப்படும். ஆன்மிகக் கல்வி மனிதனை மிருக நிலையில் இருந்து மீட்டு, மனிதனை மனிதனாக்கிப் பிறகு அவனை தேவனாக்குகிறது் மனிதனைப் பூரணத்துவம் பெற வைப்பதே ஆன்மிகக் கல்வியின் நோக்கம். ஆரவார உணர்வுகளை நீக்குதல், ஆவேச உணர்வுகளை நீக்குதல், மௌன நிலையை வருவித்தல் எல்லாவற்றையும் பூரணமாக உணரும் ஆற்றலைப் பெருக்குதல், நிதானத்தைப் பெருக்குதல், நிம்மதியை வருவித்தல் ஆகிய யாவும் ஆன்மிகக் கல்வியில் இடம்பெறும். ஆன்மிகக் கல்வி குடும்பக் கல்வியாக மாறவேண்டும். அதன் மூலம் குடும்பம் பெருமை அடையும். ஆன்மிகம் சாதி, மதம், இனம், நாடு, என்னும் விதிகளுக்கு அப்பாற்பட்டது. ஆன்மிகம் வாழ்வோடு ஒன்றியது. இரண்டறக் கலந்திருப்பது. மனிதன் ஆன்மிகத்தை விட்டு நகர்வதால்தான் பல தொல்லைகளுக்கு ஆளாகிறான். ஆன்மிகக் கல்விக்கு சாதகக் கல்வி என்று பெயர். ஆன்மிகம் எல்லா நாட்டிற்கும், எல்லாக் காலத்திற்கும் பொதுவானது. உலகம் இன்று அறிவியலையும், ஆன்மிகத்தையும் ஒப்புமை செய்து பார்க்கிறது.இவ்வுலகம் எல்லாம் பரத்தில் அடங்கும். இகத்திலிருந்து பரத்தை அடைவது ஆன்மிகம்.அறிவியல் வளர்ந்து வருவது. ஆன்மிகம் பூரணமானது. ஆன்மிகம் யாருக்கும் சிரமம் தராது. ஆனால் அறிவியல் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது, அழிவிற்கும் பயன்படுகிறது. ஆன்மிகம் சத்திய சோதனைகளையும், ஒழுக்கத்தையும் உள்முகமான பயணத்தைப் பற்றியும் பேசுகிறது. சலனமற்ற நிலையில் இருந்தால் நூல்களின் உதவி இல்லாமலேயே ஆன்மிகத்தில் தெளிவாக முன்னேறலாம். சக்தி ஒளி 2000.

]]>