1989 ஆம் ஆண்டு அன்று கஞ்சிகலய பாதயாத்திரை மேற்கொண்டு வந்தபோது 2-8-89 அன்று செங்கல்பட்டில் இரவு தங்கினோம். அன்று என் தொண்டையில் எரிச்சலும், வலியும் ஏற்பட்டன. அதற்கான மாத்திரை ஒன்றை விழுங்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன். 4-8-89 அன்று சித்தர்பீடத்தை வந்தடைந்தோம். தொண்டைவலி தீவிரமாயிற்று.சித்தர் பீடத்தில் இருக்கும் மருத்துவரிடம் காட்டி மாத்திரைகளை உட்கொண்டேன். 5-2-89 அன்று மருவத்தூரில் இருந்து புறப்பட்டுப் பணியில் சேர சேலம் வந்தேன். சேலம் வந்தது முதல் எச்சில் கூட விழுங்க முடியாத அளவிற்குத் தொண்டையில் வலியும், எரிச்சலும் ஏற்பட்டது. திட உணவைத் தவிர்த்து திரவ நிலையில் உள்ள உணவும், வெந்நீரும் மட்டுமே உட்கொண்டேன். நிலைமை மிகவும் மோசமாகவே 8-8-89 அன்று இதற்கான நிபுணரிடம் பரிசோதித்ததில், தொண்டையில் எச்சில் ஊறும் சுரப்பிக் குழாயில் கற்கள் இருந்ததால் இதுபோன்ற கடினமான வீக்கமிருக்கும். எக்ஸேரே எடுத்துப் பார்த்து அப்படியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம் என்றார். அன்னை சிலருக்கு, உடம்பில் ஆயுதம் படக்கூடாது, அறுவை சிகிச்சை கூடாது. என்று கூறியது உண்டு. சிலருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள். என்று உத்தவிட்டு அனுப்புவதும் உண்டு. நம் நிலைமை எப்படியோ….என்று தடுமாறினேன். 15-8-89 அன்று அன்னைக்கு அபிஷேகம் செய்யப் பதிவு செய்து வைத்திருந்தேன். அன்னையிடம் அருள்வாக்கு கேட்டுவிட்டே அறுவை சிகிச்சைக்குப் போவது என முடிவெடுத்தேன். அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு பெற்றோருடன் பெரம்பூரில் வந்து தங்கினேன். சென்னையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரிடம் ஆலோசித்தேன். எச்சில் ஊறும் குழாயில் கல் அடைத்துக் கொண்டு இருக்கிறது.அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டால் சுமார் .ரூ. 4000 செலவாகும். 10 நாட்கள் தங்கி இருக்கவேண்டும் என்றார். எப்படியும் இந்தப் பிரச்சனையை அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டுவிட்டே முடிவு செய்வோம் என்றெண்ணிக் கொண்டு 15-8-89 அபிஷேகம் முடித்துவிட்டு அருள்வாக்கு கேட்க எண்ணினேன். கிடைக்கவில்லை. ஆகவே ஆன்மிக குருவின் நல்லாசி பெற்று சிகிச்சையைத் தொடரலாம் என்று எண்ணி குருவின் தரிசனத்துக்காக காத்திருந்தோம். *அருள்திரு அம்மா கூறியது:* என் பிரச்சனையை அருள்திரு அடிகளார் அம்மா அவர்களிடம் வைத்து அம்மா! நான் என்ன செய்யட்டும்? என்று கேட்டோம். இப்போ ஒண்ணும் அதெல்லாம் வேணாம். பொறுமையாகப் பார்த்து கேட்டு அப்புறம் பண்ணிக்கலாம் என்றார்கள். இப்போதைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டோம். ஆனாலும் *பார்த்து, கேட்டு, பொறுமையாகப் பண்ணிக்கலாம்* என்கிற வாக்கியத்தின் பொருள் முழுமையாகவும், முடிவாகவும் ஏதும் புரிந்து கொள்ள முடியாதபடி மனதிற்குள் ஒரு குழப்பமாகவே இருந்தது. அன்னையின் பக்தர்களான நமக்கு நோய்,நொடி வந்தால் முதல் உதவி என்ன? அம்மாவின் கலச தீர்த்தம்! வேப்பிலை!_இவைதானே…. அதன்படி தினமும் கலசதீர்த்தமும் உட்கொண்டேன். அன்னையின் குங்குமத்தை தொண்டையில் இருந்த கட்டியின்மேல் தடவி வந்தேன். வேலைக்கும் போக ஆரம்பித்தேன். 20-8-89 அன்று அன்னையிடம் அருள்வாக்கு கேட்கும் பாக்கியம் கிடைத்தது. *அறுவை சிகிச்சை வேண்டாமடா மகனே! பொறுமையாக இரு! நான்தான் இருக்கிறேனே! பொறுத்திருடா!* என்று கூறி தொண்டையில் பாதிக்கப்பட்ட பகுதியை குறிப்பிட்டுக் காட்டி *நரம்பு படாமல் இருக்க வேண்டும். நரம்பில் பட்டுவிடக் கூடாது* என்று கூறினாள். மீண்டும் அறுவை சிகிச்சை இல்லாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் சேலம் திரும்பினேன். 28-8-89 அன்று காலை எழுந்த போது வழக்கத்திற்கு மாறாகத் தொண்டையில் உறுத்தல் அதிகமாயிற்று. நாக்கின் உட்புறத்தில் ஏதோ ஒன்று நெருடுவது போல இருந்தது. கையை விட்டுத் தொட்டுப் பார்த்ததும் அப்பொருள் உருண்டு வந்து என் கையில் விழுந்தது. அப்பொருள் கடினமானதாயும் சதைப்பிசிறுடனும், இரத்தக் கரையுடனும் பல் போன்ற அமைப்புடனும் இருந்தது. அதனை ஒரு பாட்டிலில் போட்டு சேலம் மருத்துவரிடம் காட்டினேன். அவர் இந்தக் கல்தான் அறுவைசிகிச்சை மூலம் எடுக்கப்பட வேண்டிய கல். இது எப்படி வெளியே வந்தது? அதிசயமாக இருக்கிறதே.. மொச்சைக்கொட்டை அளவு இருக்கிறதே? இதெப்படி தானாக வரமுடியும்? சரி! எப்படியோ வந்துவிட்டது…இனி என்ற? கவலையை விடுங்கள் என்றார். இந்தக் கல் வெளியே வந்தபிறகுதான் என்றால் சாதாரணமாகப் பேசவும், உண்ணவும் , விழுங்கவும் முடிந்தது. ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் *பொறுமையாகப் பார்த்துக் கேட்டு அப்புறம் பண்ணிக்கலாம்!* என்றதன் சூட்சுமம் விளங்கியது. தாயாய், தந்தையாய்,நண்பனாய், மந்திரியாய், குருவாய் எல்லாவற்றிற்கும் மேலாகத் தாங்கும் தெய்வமாய் நம் பொருட்டு நம் நன்மைக்காக எளிவந்து நம்மிடம் உலாவுகிற அன்னையாய் நமது குருபிரான் இருக்கும்போது நமக்கென்ன மனக்கவலை? என்ற நம்பிக்கை பிறக்கிறது. அம்மாவிற்கு நன்றி… சக்திஒளி ஜனவரி 90

]]>