குருவின் பாதத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கைகளில் ஒரு கருவியாக ஒரு பாத்திரமாக நீங்கள் மாறினால் அதன் பெயர்தான் சரணாகதி. அதாவது குருவின் வார்த்தைகளைப் முழுமையாகப் பின்பற்றி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வைராக்கியத்துடன் முயற்சிப்பது. அதைவிடுத்து நான் என்னை என் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என் வேலையை நான் பார்ப்பேன்,அவர் வேலை என்னைப் பார்த்துக் கொள்வது என்பது சரணாகதியல்ல. அது சோம்பேறித்தனம். இப்போது நாம் பார்த்தவை புறத்தில் நமக்குத் தெரிகிற தடைகள்.ஆன்மீகப் பயிற்சிக்கு இடையூறு வருவது, தள்ளிப்போட நேர்வது என்பவை எல்லாம் புறத்தடைகள். இதைப்போல சாதகரின் உள்நிலையிலேயே சில தடைகள் இருக்கும்.தங்கள் எண்ணங்களின் போக்கை கூர்ந்து கவனித்து சீர்செய்து கொள்ளவேண்டும். இதைத் தான் அன்னை தன் அருள்வாக்கில், *”ஆன்மிகத் துறையில் முதிர்ச்சி இருக்க வேண்டும். அதற்குத் தன் எண்ணங்களைத் தானே முதலில் உணர வேண்டும்.”* *”ஆன்மிகத்தில் கெட்ட எண்ணங்களை விட விடத்தான் பலன் கிடைக்கும்.”* என்கிறாள் அன்னை. இல்லையென்றால் அந்தத் தடையிலேயே அந்த சாதகர் பல வருடங்கள் கூட இருப்பார். தன் உணர்வுகளை உற்றுப் பார்த்து,இதிலிருந்து விடுபட வேண்டுமென்ற தவிப்பு ஒரு சாதகருக்கு வந்து,அந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டால் அந்த இடத்தில் குருவால் உதவ முடியும்.கைகொடுத்துத் தூக்கிவிட முடியும். ஆனால் தடை ஏற்பட்டது கூடத் தெரியாமல் தேங்கிப் போய் விட்டால் அதிலிருந்து மீள நெடுங்காலமாகும். இது எப்படிப்பட்ட நிலையென்றால், உங்களுக்கு உருவாகியிருப்பது ஒரு தடை என்றே தெரியாது.அந்தத் தடையை மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். அப்படி உணரும்போது அதைத் தாண்டி வரத் தோன்றாது. உதாரணமாக காபி குடிக்கிற பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகி காபி குடிக்க மிகவும் பிடித்திருந்தால் அது ஒரு தடை என்றே உணர மாட்டீர்கள்.மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள்.அங்கேயே தடைப்பட்டு நின்று விடுவீர்கள். தானாக ஒரு பொறி வந்து,ஓர் உந்துதல் வந்து ஒரு முயற்சி வந்து மீண்டால் உண்டு. இது ஏறக்குறைய கோமாவில் கிடந்து மீள்வதைப் போலத்தான். இத்தனைநாள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றே தோன்றாது. எனவே கர்மவினை மீதுபழிபோடாதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் செயல்தான் பத்து வருடங்கள் கழித்து,இருபது வருடங்கள் கழித்து நீங்கள் என்னவாக ஆவீர்கள் என்பதை நிர்ணயிக்கும்.எனவே இடைவிடாமல் பயிற்சிகளை செய்வதன் மூலமும் தனக்குள் நிகழ்வதை உற்று கவனித்து சீர்செய்து கொள்வதன் மூலமும் ஆன்மீகப் பாதையில் தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள்… *”நீ ஆன்மிகத்தில் ஈடுபடும்போது பலர் உன்னைப் பலவிதமாகப் பேசுவர்.பல இடையூறுகள் வரும். வீட்டிலும் தொல்லைகள் வரலாம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஐம்புலன்களை அடக்கித் தியானத்தை மேற்கொண்டு முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடும்போதுதான் ஆன்மிகத்தில் முழுப்பயனையும் பெற முடியும். அவ்வாறு உனக்கு ஏற்படும் பயன்கள் உனக்கு மட்டுமின்றி உன் சந்ததிக்கும் கிடைக்கும்.”*]]>